Saturday, December 9, 2023

1289. நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்!

"என்னைக் காதலிச்சுத்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டே? ஆனா ஏன் கல்யாணம் ஆனதிலேந்து ஒரு மாதிரியாவே இருக்க?" என்றான் கார்த்திக், மலரிடம்.

"ஒண்ணுமில்லையே!" என்றாள் மலர். அப்படிச் சொல்லும்போதே அவளிடம் ஒரு பதட்டம் தெரிந்தது.

"எனக்குத் தெரியும்!" என்ற கார்த்திக், அவள் காதருகில் குனிந்து, "முதலிரவு தள்ளிப் போய்க்கிட்டே இருக்கேன்னுதானே?" என்றான் சிரித்துக் கொண்டே.

"சீச்சீ!" என்றாள் மலர், இன்னும் அதிகப் பதட்டத்துடன்.

"இந்தப் பெரியவங்க இப்படித்தான். நாள் நட்சத்திரம்னு பார்த்து நாம ஒண்ணு சேரறதைத் தள்ளிப் போட்டுக்கிட்டே இருப்பாங்க. அதான் இப்ப தேதி குறிச்சுட்டாங்களே! இன்னும் ரெண்டு நாள்தானே இருக்கு!" என்றான் கார்த்திக்.

"போன வாரம் முழுக்க டல்லா இருந்த. இப்ப முதல் இரவு முடிஞ்சப்புறம் நாலு நாளா எவ்வளவு உற்சாகமா இருக்க! நான் சொன்னபடி முதல் இரவு தள்ளிப் போகுதேங்கற கவலையினாலதானே முதல்ல டல்லா இருந்தே?" என்றான் கார்த்திக்.

மலர் பதில் சொல்லவில்லை.

சமீபத்தில்தான் திருமணமாகி இருந்த அவள் தோழி வாணி அவள் கணவன் முதல் இரவின்போது அவளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதையும் அதற்குப் பிறகும் அவளுடைய உணர்வுகளை மதிக்காமல் தொடர்ந்து அவ்வாறே நடந்து கொள்வதாகவும், ஏன் திருமணம் செய்து கொண்டோம் என்று வருந்துவதாகவும் மலரிடம் சொல்லி இருந்தாள்.

அத்துடன், "என்னோட தோழிகள் சில பேருக்கும் இதே அனுபவம்தான். எல்லா ஆம்பளைங்களும் இப்படித்தான் இருப்பாங்க போலருக்கு!" என்று வாணி கூறியதால், தன் கணவனும் அப்படி இருப்பானோ என்ற பதட்டத்தில் தான் இருந்ததையும், கார்த்திக்கின் மென்மையான அணுகுமுறையால் அந்தப் பதட்டம் நீங்கி உற்சாகமாக இருப்பதையும் மலர் கார்த்திக்கிடம் கூறவில்லை."

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1288
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

பொருள்:
காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.

1288. மன்னிக்க முடியாதுதான், ஆயினும்...

 அஸ்வின் அப்படிச் செய்வான் என்று அனுபமா எதிர்பார்க்கவில்லை.

அஸ்வினும் அனுபமாவும் காதலர்கள் என்பது அனுபமாவின் தோழிகளுக்குத் தெரியும்.

அப்படி இருக்கும்போது அனுபமாவை அவள் தோழிகள் முன்னிலையில் அஸ்வின் கேலி செய்தது அனுபமாவை அதிர்ச்சி அடையச் செய்தது.

அனுபமா கிராமத்துப் பெண்ணாம். அவளுக்கு நாகரீகமான பழக்கங்கள் கிடையாதாம். ஓட்டலில் ஸ்பூனால் சாப்பிடும்போது தன் உடைகளில் சிந்திக் கொள்வாளாம். ஸ்பூனால் சாப்பிடத் தெரியாதவள் கையால் சாப்பிட  வேண்டியதுதானே, ஏன் ஸ்பூனால் சாப்பிட முயற்சி செய்து தன் உடைகளைப் பாழாக்கிக் கொள்ள வேண்டும்? கல்யாணத்துக்குப் பிறகு துணிகளி கறைகளைப் போக்கும் சோப்புத் தூள் வாங்கவே அவன் சம்பளத்தில் பாதி போய் விடுமாம்.

அஸ்வின் பேசியதைக் கேட்கக் கேட்க அனுபமாவின் அவமான உணர்வு பீறிட்டு வந்தது. அஸ்வின் பேச்சைக் கேட்டுத் தோழிகள் சிரித்தது அவள் அவமான உணர்வை இன்னும் அதிகமாக்கியது.

விருட்டென்று அங்கிருந்து வெளியேறி விட்டாள் அனுபமா. தான் அதிகமாகப் பேசி விட்டோமோ என்று நினைத்து அஸ்வின், "சாரி! சும்மா விளையாட்டுக்காகத்தான் சொன்னேன்" என்று கூறியதைக் கூட அனுபமா காதில் போட்டுக் கொள்ளவில்லை.

த்து நாட்களுக்குப் பிறகு தனிமையில் அஸ்வினின் மார்பில் தன் தலையைச் சாய்த்தபடி நின்றிருந்தாள் அனுபமா.

"நல்லவேளை! அன்னிக்கு நீ கோவிச்சுக்கிட்டுப் போனதைப் பாத்தா நீ எங்கிட்ட திரும்பி வர மாட்டியோன்னு பயந்துட்டேன்!" என்றான் அஸ்வின், அவள் தலைமுடியைக் கோதியபடி.

'நீ அப்படிப் பேசினதை என்னால மன்னிக்கவே முடியாது.ஆனாலும் என்ன செய்யறது? உன் மார்பில என் தலையை சாய்ச்சுக்கிட்டு இருக்கறப்ப கிடைக்கிற சுகத்தை என்னால மறக்க முடியலியே!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் அனுபமா. 

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1288
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.

பொருள்:
கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்‌மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.

1287. எத்தனை நாள் ஆயிற்று?

 "எத்தனை நாள் ஆச்சு?" என்றாள் லதா.

"எது எத்தனை நாள் ஆச்சு?" என்றாள் மாலினி.

"நான் அவர்கிட்ட கோவிச்சுக்கிட்டு வந்து?"

"ஏண்டி, இதையெல்லாம் நான் கணக்கு வச்சுக்கணுமா? சண்டை போட்டுக்கிட்டு வந்த உனக்குத் தெரியாது?"

"அதுக்குப் பேர் சண்டை இல்ல. ஒரு பிணக்கு. அவ்வளவுதான்."

"அன்னிக்கு நீதான் சொன்னே, சண்டை போட்டுக்கிட்டு வந்துட்டேனு!"

"சரி. கோவத்தில சொல்லி இருப்பேன். என்னிக்கு அது?"

"முந்தா நாள்."

"முந்தா நாளா? அஞ்சாறு நாள் ஆயிருக்கும்னு நெனச்சேன்!"

"நெனப்ப! அது சரி. எதுக்கு இந்த நாள் கணக்கு இப்ப?"

"இன்னிக்கு சனிக்கிழமை. அவர் ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போவாரு. அங்க போய் அவரைப் பாத்துப் பேசலாம் பாக்கறேன்!"

"ஏண்டி, அன்னிக்கு என்னமோ அவரா வந்து உங்கிட்ட பேசினாதான் அவரோட பேசுவேன்னு வீராப்பா பேசின. இப்ப நீயே வலுவில  போய்ப் பேசறேன்னு சொல்ற!"

"காதல்ல கௌரவம் பாக்கக் கூடாது!"

"இந்தத் தத்துவம் எல்லாம் வேண்டாம். சண்டை போட்டுட்ட. ஆனா அவரைப் பிரிஞ்சு ரெண்டு நாள் கூட இருக்க முடியல. உன்னால அவரைப் பாக்காம ஒரு நாள் கூட இருக்க முடியாதுன்னு தெரிஞ்சும் ஏன் அவரோட சண்டை போட்ட?" என்றாள் மாலினி.

தோழியின் கேள்விக்கு லதாவிடம் பதில் இல்லை.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1287
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

பொருள்:
வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?.

Thursday, December 7, 2023

1286. குறை ஒன்று இல்லை (பல உண்டு!)

"என்கிட்ட உனக்குப் பிடிச்சது என்னென்ன சொல்லு பாக்கலாம்!" என்றான் கோவிந்த்.

"உங்கிட்ட  எனக்கு எல்லாமே பிடிக்கும். எதைன்னு சொல்றது?" என்றாள் சுகன்யா.

"பொதுவாச் சொன்னா எப்படி? குறிப்பா சிலதையாவது சொல்லு."

"நீ நல்லா டிரஸ் பண்ணிக்கிற. இனிமையாப் பேசற. கோபப்படறதே இல்லை. சிகரெட், குடி மாதிரி கெட்ட பழக்கங்கள் இல்லை. உன் அம்மா மேல ரொம்ப அன்பு வச்சிருக்க."

"அடேயப்பா! எங்கிட்ட இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கறது எனக்கே தெரியாதே!" என்றான் கோவிந்த் சிரித்தபடி.

"ஏண்டி, தினம் உன் காதலனைச் சந்திச்சுட்டு வந்தப்புறம் ஏதாவது புலம்பிக்கிட்டே இருக்கே?" என்றாள் நளினி.

"அவன்கிட்ட இருக்கற குறைகளை யார்கிட்டயாவது சொல்லணும் போல இருக்கு. என்னோட நெருங்கிய தோழியான உங்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவேன்?"

"எல்லார்கிட்டேயும் ஏதாவது குறைகள் இருக்கத்தான் செய்யும்."

"ஆனா அவன்கிட்ட நிறையக் குறைகள் இருக்கு."

"அப்படி என்ன குறைகள்?"

"சில சமயம் என்னைப் பாக்க வரேன்னு சொல்லிட்டு வரதில்ல. கேட்டா ஏதாவது பொய்யான காரணம் சொல்றான். அவன் படிப்புக்கு இன்னும் நல்ல வேலை கிடைக்கும். ஆனா இப்ப இருக்கற வேலையே திருப்தியா இருக்குன்னு சொல்றான். முன்னேறணுங்கற ஆசை வேண்டாம்? அப்புறம், எப்பவும் தன்னோட அம்மாவைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கா. என் மேல அக்கறை காட்டறதில்ல. நான் புதுசா ஒரு டிரஸ் போட்டுக்கிட்டு வந்தா அதைக் கூட கவனிக்கிறதில்ல. அப்புறம்..."

"சரி. இதையெல்லாம் அவன்கிட்டயே கேட்டுட வேண்டியதுதானே?"

"என்னவோ தெரியலடி. அவனோட இருக்கறப்ப இதெல்லாம் எதுவுமே என் ஞாபகத்துக்கு வரதில்ல" என்றாள் சுகன்யா, சற்றே கூச்சத்துடன்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1286
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

பொருள்:
அவரைக் காணும்போது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபோது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.

Sunday, December 3, 2023

1285. குற்றப் பத்திரிகை!

கிருத்திகா மேஜை மீது ஒரு தாளை வைத்து மும்முரமாக ஏதோ எழுதிக் கொண்டிருந்தபோது, பின்னால் யாரோ நின்று கொண்டு பார்ப்பதாக உணர்ந்து ஒரு கையால் தான் எழுதியதை மூடிக் கொண்டு திரும்பிப் பார்த்தாள்.

பின்னால் நின்று கொண்டிருந்த அவள் தோழி கனகா சிரித்துக் கொண்டே, "நீ எழுதிக்கிட்டிருந்த காதல் கடிதத்தைப் பார்த்துட்டேன்" என்றாள்.

"இது காதல் கடிதம் இல்லை. அதனால நீ பார்த்ததா சொன்னது பொய்! எங்கே பாத்திருப்பியோன்னு நினைச்சேன், நல்லவேளை நீ பாக்கல."

"சரிடி. நான் பொய்தான் சொன்னேன். நீதான் நான் பாக்கறதுக்குள்ள மூடிட்டியே! சரி, சொல்லு. என்ன அது?"

"அது ஒரு லிஸ்ட்!" என்றாள் கிருத்திகா.

"லிஸ்டா? என்ன லிஸ்ட்? மளிகை சாமான் லிஸ்டா? அப்படி இருந்தா அதை மறைச்சிருக்க மாட்டியே!"

"சுதாகர்கிட்ட எனக்கு நிறையக் குற்றம் குறைகள் இருக்கு. இன்னிக்கு சாயந்திரம் அவரைச் சந்திக்கறப்ப இதையெல்லாம் அவர்கிட்ட சொல்லப் போறேன். ஞாபகமா எல்லாத்தையும் சொல்லணுங்கறதுக்காகத்தான் எல்லாத்தையும் எழுதி வைக்கறேன்."

"ஓ, குற்றப் பத்திரிகையா? என்னென்ன குற்றம்? ஒண்ணு ரெண்டு சொல்லேன்!"

"அதெல்லாம் நான் அவர்கிட்ட எதிர்பார்த்து அவர் செய்யாத விஷயங்கள். அதையெல்லாம் உங்கிட்ட சொல்ல முடியாது" என்றாள் கிருத்திகா.

மாலையில் சுதாகரைச் சந்தித்து இரண்டு மணி நேரம் பேசி விட்டு வீட்டுக்குத் திரும்பும்போதுதான், காலையில் தான் எழுதி வைத்திருந்த பட்டியலிலிருந்து ஒரு குறையைக் கூட அவனிடம் சொல்லவில்லை என்பது கிருத்திகாவுக்கு நினைவு வந்தது.

காமத்துப்பால்
கற்பியல்றை
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1285
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.

பொருள்:
மை தீட்டும் நேரத்தில் தீட்டு்கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...