"எது எத்தனை நாள் ஆச்சு?" என்றாள் மாலினி.
"நான் அவர்கிட்ட கோவிச்சுக்கிட்டு வந்து?"
"ஏண்டி, இதையெல்லாம் நான் கணக்கு வச்சுக்கணுமா? சண்டை போட்டுக்கிட்டு வந்த உனக்குத் தெரியாது?"
"அதுக்குப் பேர் சண்டை இல்ல. ஒரு பிணக்கு. அவ்வளவுதான்."
"அன்னிக்கு நீதான் சொன்னே, சண்டை போட்டுக்கிட்டு வந்துட்டேன்னு!"
"சரி. கோவத்தில சொல்லி இருப்பேன். என்னிக்கு அது?"
"முந்தா நாள்."
"முந்தா நாளா? அஞ்சாறு நாள் ஆயிருக்கும்னு நெனச்சேன்!"
"நெனப்ப! அது சரி. எதுக்கு இந்த நாள் கணக்கு இப்ப?"
"இன்னிக்கு சனிக்கிழமை. அவர் ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போவாரு. அங்க போய் அவரைப் பாத்துப் பேசலாம்னு பாக்கறேன்!"
"ஏண்டி, அன்னிக்கு என்னமோ, அவரா வந்து உங்கிட்ட பேசினாதான் அவரோட பேசுவேன்னு வீராப்பா சொன்ன. இப்ப, நீயே வலுவில போய்ப் பேசறேன்னு சொல்ற!"
"காதல்ல கௌரவம் பாக்கக் கூடாது!"
"இந்தத் தத்துவம் எல்லாம் வேண்டாம். சண்டை போட்டுட்ட. ஆனா, அவரைப் பிரிஞ்சு ரெண்டு நாள் கூட இருக்க முடியல. உன்னால அவரைப் பாக்காம ஒரு நாள் கூட இருக்க முடியாதுன்னு தெரிஞ்சும், ஏன் அவரோட சண்டை போட்ட?" என்றாள் மாலினி.
தோழியின் கேள்விக்கு லதாவிடம் பதில் இல்லை.
கற்பியல்
No comments:
Post a Comment