அதிகாரம் 110 - குறிப்பறிதல்


திருக்குறள்
காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 110
குறிப்பறிதல்

1091. பார்வையிலே நோய் கொடுத்தாய்
கன்னி இளமானே!
 
"ஏண்டா ஒரு மாதிரி இருக்கே?" என்றான் சபேசன்.

"ஒண்ணுமில்லையே!" என்றான் நடராஜன்.

"சும்மா மழுப்பாதேடா! அந்தப் பொண்ணைப் பாத்ததிலேந்துதானே இப்படி இருக்கே?"

"தப்பு. அந்தப் பொண்ணைப் பாத்ததிலேந்து. இல்ல. அந்தப் பொண்ணு என்னைப் பாத்ததிலேந்து!"

"ரெண்டும் ஒண்ணுதானேடா?"

"எப்படி ஒண்ணாகும்? நாம எவ்வளவோ பெண்களை சைட் அடிக்கிறோம். பல பேரு நம்பளைத் திருப்பி பாக்கக் கூட மாட்டாங்க!"

"ஆனா அவ உன்னைப் பாத்துட்டாளாக்கும்?"

"பாக்கறதுன்னு சாதாரணமா சொல்ல முடியாதுடா அதை. ஒரு பெண்ணோட பார்வை ஈட்டி மாதிரி, அம்பு மாதிரி, வாள் மாதிரின்னெல்லாம் இலக்கியத்தில எழுதுவாங்க. அப்பல்லாம் அதைப் படிச்சு சிரிச்சுருக்கேன். ஆனா அந்தப் பொண்ணு என்னைப் பாத்ததும் உடம்பே ஒரு மாதிரி ஆயிடுச்சு. அன்னிலேந்து இன்னும் உடம்பு ஏதோ ஜுரம் வந்த மாதிரிதான் இருக்கு" என்றான் நடராஜன்

"அப்ப, அவளை மறுபடியும் போய்ப் பாத்துப் பேச வேண்டியதுதானே?"

"பயமா இருக்குடா. அவ ஒரு தடவை என்னைப் பார்த்ததே என்னை என்னவோ செய்யுது. மறுபடி ஒரு தடவை நான் அவளோட பார்வையைச் சந்திச்சா என்ன ஆகுமோ!" 

"போடா..." என்றான் சபேசன் எரிச்சலுடன்.

சற்று தூரம் நண்பர்கள் பேசாமல் நடந்து சென்றனர்.

வழியில் ஒரு இடத்தில் ஒரு பாம்புப் பிடாரன் கையில் ஒரு பாம்பைப் பிடித்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான்.

அவனைத் தாண்டிச் சென்றதும் "பாம்பையெல்லாம் பிடிச்சுக்கிட்டுப் போய் அவங்க என்ன செய்வாங்க தெரியுமா?" என்றான் சபேசன்.

"வித்தை காட்டுவாங்க" என்றான் நடராஜன்.

"அது விஷம் இல்லாத பாம்பை வச்சு. விஷமுள்ள பாம்பா இருந்தா?"

"என்ன செய்வாங்க?"

"அதோட பல்லிலேந்து விஷத்தை எடுத்து வித்துடுவாங்க" என்றான் சபேசன்

"வித்துடுவாங்களா? யாருக்கு?"

"யாருக்குன்னு எனக்கு சரியாத் தெரியாது. ஆனா பாம்போட விஷத்தை எடுத்து பாம்புக்கடிக்கு விஷமுறிவு மருந்து தயார் செய்வாங்கன்னு தெரியும்."

"விஷத்திலேந்து விஷமுறிவு மருந்து தயாரிப்பாங்களா? ஆச்சரியமா இருக்கே!" என்றான் நடராஜன்.

"ஆமாம். இயற்கையிலே எல்லாமே அப்படித்தான். விஷத்தை முறிக்க விஷத்தைத்தான் பயன்படுத்தணும்!"

"அப்ப, நீ சொன்னது சரிதான். நான் இப்பவே அவளைப் போய்ப் பாக்கணும்!" என்றான் நடராஜன்.

"பாக்கணுமா? எதுக்கு?"

"அதாவது அவ மறுபடி என்னைப் பாக்கணும். அவ பார்வையாலே ஏற்பட்ட நோயை அவளோட இன்னொரு பார்வைதான் தீர்க்க முடியும்!"

சபேசனின் பதிலை எதிர்பார்க்காமல் நடராஜன் வேறு திசையில் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

குறள் 1091
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

பொருள்:
மை தீட்டிய இவள் கண்களில் இரண்டு வகைப் பார்வைகள் உள்ளன. ஒருவகைப் பார்வை நோயைக் கொடுக்கும். இன்னொரு வகைப் பார்வை அந்த நோயைத் தீர்க்கும் மருந்தாக இருக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

1092. பார்வை ஒன்றே போதுமே!

''என்னைத் தொட்டுச் சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்!''

"எவ்வளவு அருமையா எழுதி இருக்காரு கவிஞர்! கண்ணதாசன்னா கண்ணதாசன்தான்!' என்றான் லிங்கம்.

''சும்மா அளக்காதே! இதில என்ன புரிஞ்சுது உனக்கு?'' என்றாள் சுமதி.

''என்ன அப்படிச் சொல்ற? உன் கண்கள் என்னைத் தொடுது, ஆனா உன் கைகள் என்னைத் தொடலியேன்னு ஏக்கமா இருக்கு! இதான் அர்த்தம்!''

''பரவாயில்லையே! அர்த்தம் புரியாமலியே அளக்கறியோன்னு நினைச்சேன்'' என்றாள் சுமதி.

'அப்ப, என் ஏக்கத்தைப் போக்குவியா?'' என்றான் லிங்கம்.

''அது முடியாதுடா கண்ணா!'

''ஏன் கண்ணு?''

''அந்தப் பாட்டில அடுத்த வரியிலியே அதுக்கு பதில் இருக்கு!''

''அப்படியா? அடுத்த வரில என்ன வருது?'' என்று மனதுக்குள் பாட்டைச் சொல்லிப் பார்த்த லிங்கம், ''முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம்.  ஓ! அதான் காரணமா?'' என்றான்.

சுமதி ஆமோதிப்பது போல் தலையாட்டினாள்.

''ஏன் கஷ்டப்பட்டு முள் மேல நிக்கற? என்ன செய்யணும்னு அடுத்த வரியிலியே சொல்லியிருக்காரே கவிஞர்?''

அடுத்த வரி என்ன என்று சுமதி யோசிப்பதற்குள், ''முத்துச் சரமே வா எந்தன் பக்கம்!'' என்றபடியே அவள் கையைப் பிடிக்கப் போனான் லிங்கம்.

சட்டென்று பின் வாங்கிய சுமதி, ''இங்க பாரு. தொட முயற்சி பண்ணினா, நீ என்னை மறந்துட வேண்டியதுதான்'' என்றாள் கோபத்துடன்.

அவள் திடீர் கோபத்தால் அதிர்ச்சி அடைந்த லிங்கம், ''சும்மா கையைத் தொட வந்ததுக்கு இப்படி எகிறிக் குதிக்கிற! எனக்கும் ரோஷம் இருக்கு. இனிமே நான் உன்னைப் பாக்க வர மாட்டேன்'' என்று சொல்லி விட்டுக் கோபமாகக் கிளம்பினான்.

சுமதி அதிர்ச்சியுடன் நின்றாள்.

ரு வாரத்துக்குப் பிறகு ஒரு நாள் லிங்கம் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரில் சில பெண்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர். எதிர்ச் சாரியில் நடந்து வந்து கொண்டிருந்த லிங்கம் அவர்களை கவனிக்கவில்லை. அவர்களைக் கடந்து செல்லும்போதுதான் ஏதோ உள்ளுணர்வு தோன்றி சட்டென்று திரும்பிப் பார்த்தான்.

அவர்களில் சுமதியும் இருந்ததை அப்போதுதான் கவனித்தான். அவன் பார்த்த நேரத்தில் அவளும் அவனைக் கடைக் கண்ணால் ஒரு கணம் பார்த்து விட்டுப் பிறகு முகத்தைத் திருப்பிக் கொண்டாள். லிங்கத்தின் உடலில் சுரீரென்று ஒரு உணர்வு பரவியது.

''என்னைப் பாக்கவே மாட்டேன்ன. அப்புறம் அதுக்கு வந்திருக்க?'' என்றாள் சுமதி.

''நீதான் வரச் சொன்ன!''

''நான் வரச் சொன்னேனா? இது என்ன புதுக் கதை?''

''காலையில தெருவில போகச்சே என்னைப் பாக்கல?''

''தெருவில நடந்து போறப்ப, எதுத்தாப்பில நடந்து வரவங்களைப் பாக்காம இருக்க முடியுமா?''

''அப்படியா பாத்த நீ? ஒரு நொடியே பாத்தாலும், கடைக்கண்ணால பாத்தாலும், ஆளை அப்படியே அடிச்சுத் தூக்கிட்டுப் போற பார்வை இல்ல அது! அதான் ஓடி வந்துட்டேன்!  இன்னொரு விஷயமும் புரிஞ்சுது.''

''என்ன?''

''உன்னைத் தொட்டா ஒரு சிலிர்ப்பு வரும்னு நினைச்சுதான் அன்னிக்கு உன்னைத் தொட முயற்சி செஞ்சேன். ஆனா உன் பார்வைல கிடைக்கற சந்தோஷமே இவ்வளவு இருக்கே! தொடறதையெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் வச்சுக்கலாம்னு முடிவு செஞ்சுட்டேன்!''

''போய்யா!'' என்றாள் சுமதி.

''முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம்'' என்று பாடினான் லிங்கம்.

'அடுத்த வரிக்குப் போயிடப் போற, ஜாக்கிரதை!'' என்றாள் சுமதி.
 
குறள் 1092
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

பொருள்:
கண்களால் என்னை நோக்கிக் களவு கொள்ளும் அந்தச் சுருங்கிய பார்வை காமத்தில் பாதியை விடப்பெரியது.


1093. வேருக்கு நீர்!

ரகு பேருந்துக்காக நின்று கொண்டிருந்தபோது அதை கவனித்தான் - சாலையில் எதிர்ப்புறத்தில் நின்று கொண்டிருந்த மல்லிகா அவனை உற்றுப் பார்ப்பதை!

மல்லிகா அவன் ஊர்ப் பெண்தான். ஆனால் இருவருக்கும் இடையே பரிச்சயம் ஏற்பட்டதில்லை. 

மல்லிகா தன்னைப் பார்த்ததாக தான் நினைத்தது சரிதானா என்ற சந்தேகம் ரகுவுக்கு முதலில் எழுந்தது. அவள் தன்னைப் பார்த்ததைத் தான் கவனித்து விட்டதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வேறு எங்கோ பார்ப்பது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டான் ரகு .

அவன் வேறுபுறம் பார்த்துக் கொண்டிருந்தபோது அவள் அவனைத்தான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். வேறுபுறம் பார்த்துக் கொண்டிருந்தாலும் தை உணர்வது ரகுவுக்கு ஒன்றும் சிரமமாக இல்லை.

அவள் தன்னைப் பார்க்க்கிறாள் என்பதை உறுதி செய்து கொண்டதும், ஓரிரு நிமிடங்கள் கழித்து ரகு சட்டென்று திரும்பி அவளைப் பார்த்தான்.

அவன் பார்வை தன்மீது விழுந்ததும், அவள் சட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள். அதன் பிறகு அவன் செல்ல வேண்டிய பஸ் வந்து அவன் அதில் ஏறிச் சென்றது வரை அவள் தலை நிமிர்ந்து அவனைப் பார்க்கவில்லை.

டந்ததைத் தன் நண்பன் குணசேகரனிடம் விவரித்த ரகு, "நான் அவளைப் பார்த்ததும் அவ தலையைக் குனிஞ்சசுக்கிட்டா. அப்புறம் என்னை நிமிர்ந்து பாக்கவே இல்ல. இதுக்கு என்ன அர்த்தம்? அவளுக்கு என்னைப் பிடிக்கலையா?" என்றான்.

"மழை வரும் போல இருக்கே!" என்றான் குணசேகரன். அவன் இதைச் சொல்லி முடித்ததுமே சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது.

"நான் என்ன கேக்கறேன், நீ என்ன சொல்ற?" என்றான் ரகு, தன் குரலில் எரிச்சலை வெளிப்படுத்தியபடி.

"கொஞ்ச நேரம் மழையை வேடிக்கை பாக்கலாமே!"

"டேய், நாம என்ன சின்னக் குழந்தைகளா?"

"வாசல்ல இருக்கற அந்த செடியைப் பாரேன்!" என்றான் குணசேகரன்.

"அதுக்கு என்ன?"

" செடி மேல மழை விழுந்ததும் அதோட மேல் பகுதியில இருக்கற இலைகள் வளையுது பாரு."

"ஆமாம். அதுக்கென்ன?"

"மழை பெய்யும்போது செடி தலை குனியறதால, அதோட தலையில் பட்ட தண்ணி வேர்ப்பகுதியில போய் விழுது. அதனால வேர்ல நீர் பாஞ்சு செடி நல்லா வளரும்!" என்று சொல்லிச் சிரித்தான் குணசேகரன்.

"அப்படின்னா...?" என்றான் ரகு குழப்பத்துடன்.

"அட முட்டாளே! நீ பாக்கறப்ப அவ தலை குனிஞ்சான்னா, உன் பார்வை மூலமா தன் மேல பாயற அன்பை அவ தன் மனசுக்குள்ள வாங்கிக்கிட்டு அவளுக்கு உன் மேல இருக்கற அன்பை அவ இன்னும் வளத்துக்கறான்னு அர்த்தம்!" என்றான் குணசேகரன்.

குறள் 1093
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

பொருள்:
அவள் என்னைப் பார்த்தாள். ஆனால் நான் அவளைப் பார்த்ததும் தலை குனிந்து கொண்டாள். அது அவள் என் மேல் கொண்ட அன்புக்கு அவள் ஊற்றும் நீர்.      
1094. பெண் பார்த்த மாப்பிள்ளை!
 
பெண் பார்ப்பது என்ற சம்பிரதாயத்தில் ராமுவுக்கு விருப்பமில்லை. ஆயினும் அவன் பெற்றோர்களும், பெண் வீட்டாரும் அந்த முறையைப் பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்தியதால் அவன் அதற்கு ஒப்புக் கொண்டான்.

பெண் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவள். கிராமங்களில் சில சம்பிரதாயங்கள் இன்னும் பின்பற்றப்பட்டு வருவதை ராமு உணர்ந்திருந்தான். 

ஆனால் பெண் பார்க்கும் படலம் எப்படி இருக்கும் என்பது அவனுக்குத் தெரியவில்லை.  ஒருவேளை பழைய திரைப்படங்களில் இருப்பது போல் இருக்குமோ?

அவர்கள் பெண் வீட்டை அடைந்தபோது, வீட்டில் ஏராளமானோர் இருந்தனர். பெண்ணின் உறவினர்கள் யார், ஊர்க்காரர்கள் யார் என்று தெரியவில்லை. பெண்ணின் பெற்றோர், பெண்ணின் தம்பி ஆகியோர் மட்டும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். 

பெண்ணின் பெயர் காமு என்பது மட்டும் அவனுக்குத் தெரியும். ராமு-காமு பெயர்ப் பொருத்தம் இருப்பதாக முதன் முதலில் பெண்ணின் பெயரைக் கேட்டபோது ராமுவுக்குத் தோன்றியது.

இரண்டுமே முழுப் பெயர்கள் இல்லை என்று தெரிந்தாலும்,  இருவருமே முழுப் பெயர் மூலம் குறிப்பிடப்படாமல், சுருக்கப் பெயர் மூலம் குறிப்பிடப்படுவது இன்னொரு ஒற்றுமை என்றும் நினைத்துக் கொண்டான். இதெல்லாம் அசட்டுத்தனம் என்ற எண்ணம் மனதின் இன்னொரு பகுதியில் எழுந்தது. 

சில நிமிடங்கள் ஆரம்ப உரையாடலுக்குப் பிறகு பெண்ணை அழைத்து வந்தனர். கையில் காப்பி டம்ளர்கள் நிறைந்த தட்டுடன் வந்த காமு ராமுவுக்கும், அவன் பெற்றோர்களுக்கும் காப்பி தம்ளர்களைக் கொடுத்து விட்டுத் தன் அம்மா அருகில் போய் நின்று கொண்டாள். ராமுவின் அம்மா 'உக்காரும்மா' என்று சொன்ன பின் கீழே உட்கார்ந்து கொண்டாள். 

அதற்குப் பிறகு ராமுவின் பெற்றோரும், காமுவின் பெற்றோரும் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். இருவரும் தங்கள் குடும்பப் பின்னணி, உறவினர்கள்  விவரங்கள் ஆகியவற்றைப் பரிமாறிக் கொண்டனர். 

ராமுவுக்குச் சங்கடமாக இருந்தது. அவ்வப்போது காமுவின் முகத்தைப் பார்த்தான். தொடர்ந்து அவள் முகத்தைப் பார்க்க அவனுக்குத் தயக்கமாக இருந்தது. 

இருவரின் பெற்றோர்களும் தங்கள் பேச்சுக்கிடையே அவ்வப்போது திரும்பி இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் காமு மட்டும் இவனைப் பார்க்காமல் குனிந்து தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

திடீரென்று ராமுவின் அம்மா காமுவைப் பார்த்து, "ஏம்மா, ஒரு பாட்டுப் பாடேன்!" என்றாள்.

தனக்குப் பாடத் தெரியாது என்று சொல்வது போல் பக்கவாட்டில் தலையாட்டினாள் காமு. 

காமுவின் பெற்றோர் சற்றுக் கவலையுடன் ராமுவின் அம்மாவைப்  பார்த்தனர், பாடத் தெரியவில்லை என்பதற்காகப் பெண்ணை நிராகரித்து விடுவார்களோ என்று கவலைப்படுவது போல்!

ராமு தொண்டையைச் செருமிக் கொண்டு, "நான் ஒரு பாட்டுப் பாடட்டுமா?' என்றான், காமுவின் தந்தையைப் பார்த்து. 

அவர் தயக்கத்துடன் ராமுவின் அம்மாவைப் பார்க்க, ராமுவின் அம்மா அவனைப் பார்த்து முறைக்க, காமுவின் தோழிகள் சிலர், "பாடுங்க மாப்பிள்ளை சார்!" என்று சிரித்தபடியே அவனை உற்சாகப்படுத்தினர். 

ராமுவின் அம்மா அரை மனதுடன் தலையாட்ட, ராமு பாட ஆரம்பித்தான்:

"நேற்று வரை நீ யாரோ நான் யாரோ?
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ?"

அவன் பாடி முடிக்கும் வரை  மௌனம் நிலவியது. அவன் பாடி முடித்ததும் பலத்த கரவொலி எழுந்தது.

காமுவின் தோழி ஒருத்தி "மாப்பிள்ளை பாட்டு மூலமா தன் முடிவையும் சொல்லிட்டார்!" என்றாள் உரக்க. 

முதலிரவின்போது காமுவிடம் ராமு கேட்ட முதல் கேள்வி இதுதான்: "உன்னைப் பெண் பாக்க வந்தப்ப நான் பாடின பாட்டைப் பத்தி என்ன நினைச்சே?" 

"ம்..எனக்குப் பாடத் தெரியாதுன்னு நான் சொன்னப்பறம் எல்லாருக்குமே கொஞ்சம் சங்கடமா இருந்திருக்கும். அந்த மூடைமாத்தறதுக்காகப் பாடினீங்கன்னு மொதல்ல தோணிச்சு..." என்றாள்  காமு.

"அப்புறம் என்ன தோணிச்சு?"

"நீங்க ஜெமினி கணேசன் பாட்டைப் பாடினதும் நீங்க உங்களை ஒரு காதல் மன்னன்னு காட்டிக்க விரும்பறீங்களோன்னு தோணிச்சு..."

"அடிப்பாவி!" என்றான் ராமு.

"ஆனா பாட்டை முழுசாக் கேட்டப்பறம், வேற ஒண்ணு தோணிச்சு!"  

"என்ன தோணிச்சு?"

"நீங்க என்னைப்  பாத்தப்ப, நான் உங்களைப் பாக்காத மாதிரி தரையைப் பாத்துக்கிட்டிருந்தேன். ஆனா நீங்க என்னைப் பாக்காதப்ப, நான் திருட்டுத்தனமா உங்களைப் பாத்துக்கிட்டிருந்தேன். இதைத் தெரிஞ்சுக்கிட்டுத்தான் நீங்க அந்தப் பாட்டைப் பாடினீங்கன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன்!" என்றாள் காமு. 

"அந்தப் பாட்டில அப்படி இருக்கா என்ன?" என்றான் ராமு.

"வேணும்னே அந்தப் பாட்டைப் பாடிட்டு, இப்ப தெரியாத மாதிரி கேக்கறீங்க! என்னோட திருட்டுத்தனத்தை விடப்  பெரிய திருட்டுத்தனமா இருக்கே உங்களோடது!" என்றாள் காமு.

"பாட்டில இருக்கற அந்த வரிகளை நீ பாடிக் காட்டினாத்தான் நீ சொல்றதை  நான் ஒத்துப்பேன்."

"எனக்குத்தான் பாடத் தெரியாதுன்னு சொன்னேனே!"

"பரவாயில்ல. நீ என்ன பாட்டுப் போட்டியிலயா பாடப் போற? எனக்குத்தானே பாடிக் காட்டப்போற?" என்று ராமு சொல்லி முடிக்கும் முன்பே காமு பாட ஆரம்பித்து விட்டாள்.

"உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே!"

"அட இவ்வளவு அருமையாப் பாடற. ஆனா, அன்னிக்கு பாடத் தெரியாதுன்னுட்ட. இது மாதிரி இன்னும் எவ்வளவு திருட்டுத்தனம் வச்சிருக்க?" என்றான் ராமு.

"ம்? இன்னிக்குத்தானே நம்ப வாழ்க்கை ஆரம்பிச்சிருக்கு. போகப் போகப் புரிஞ்சுப்பீங்க!" என்றாள் காமு சிரித்தபடி. 

குறள் 1094
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

பொருள்:
நான் அவளைப் பார்க்கும்போது அவள் குனிந்து கீழே பார்த்துக் கொண்டிருப்பாள். நான் அவளைப் பார்க்காதபோது அவள் என்னைப் பார்த்து விட்டுத் தனக்குள் இலேசாகச் சிரித்துக் கொள்வாள்.    

1095. கண்ணில் ஒரு சுருக்கம் 

"என்னடி ஒரு கண் மட்டும் சுருங்கின மாதிரி இருக்கு?" என்றாள் ராணி, மகளைப் பார்த்து.

"இல்லியே!" என்றாள் மேகலை.

"இல்ல. ரெண்டு நாளாவே உன் கண் அப்படித்தான் இருக்கு. உனக்குக் கண்ணில வலியோ, கண் சுருங்கற மாதிரியோ எதுவும் தெரியலையா?" 

"இல்லம்மா! எனக்கு ஒண்ணும் தெரியல. நீயா ஏதாவது நினைச்சுக்காதே!" என்றாள் மேகலை தாயிடம்.

"எதுக்கும் நந்தியாவட்டைப் பூவை கண்ணில பிழிஞ்சுக்க. ஏதாவது பிரச்னை இருந்தாலும் உடனே சரியாயிடும்!" என்றாள் ராணி விடாமல்.

"சரிம்மா!" என்று மேகலை சொல்லிக் கொண்டிருந்தபோதே அவள் தோழி துளசி வந்தாள்.

"அம்மா! நான் துளசியோட வெளியில போயிட்டு வரேன்!" என்று கிளம்பினாள்  மேகலை.

"பாத்துடி! வெய்யில் பட்டு கண் இன்னும் மோசமாப் போயிடப் போகுது!" என்று எச்சரித்தாள் ராணி.

"அதான் கண்ணுக்கு எதுவுமே இல்லைன்னு சொல்றேனே!" என்று எரிச்சலுடன் பதிலளித்து விட்டு மேகலை கிளம்பினாள்.

வெளியில் வந்ததும், "கண்ணுக்கு என்னடி?" என்றாள் துளசி.

"ஒண்ணுமில்ல. எங்கம்மா ஏதாவது சொல்லிக்கிட்டிருப்பாங்க!" என்றாள் மேகலை.

மேகலையின் முகத்தைக் கையால் பிடித்துத் திருப்பி அவள் கண்களைப் பார்த்த துளசி, "ஆமாம். இடது கண் கொஞ்சம் சுருங்கின மாதிரிதான் இருக்கு!" என்றாள்.

"ஏண்டி, என் கண்ணில ஏதாவது பிரச்னை இருந்தா எனக்குத் தெரியாதா? எங்கம்மா மாதிரி நீயும் ஆரம்பிச்சுடாதே!" என்றாள்  மேகலை. 

தோழிகள் சற்று நேரம் தோப்பு, தோட்டம், ஆற்றங்கரை என்று சுற்றி விட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்தனர்.

சற்று நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று மேகலை "ஒரு நிமிஷம் இரு, வந்துடறேன்" என்று சொல்லி விட்டு எழுந்து நின்றாள். 

ஐந்து நிமிடங்கள் கழித்து தோழி எங்கே போயிருக்கிறாள் என்று பார்க்க எண்ணி துளசியும் எழுந்து சென்றாள்.  

ஆற்றங்கரையை ஒட்டிய சாலையோரம் மேகலை நிற்பது தெரிந்ததும், அவளை நோக்கிச் சென்றாள் துளசி. 

துளசி தன் பின்னால் வந்து நிற்பதை கவனிக்காமல் மேகலை சாலையின் எதிர்ப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே ஒரு இளைஞன் சாலையை ஒட்டி இருந்த நிலத்தில் நின்று கொண்டு ஒரு முதியவருடன் பேசிக் கொண்டிருந்தான்.

துளசி மெலிதாகத் தொண்டையைக் கனைத்தாள்.

மேகலை திடுக்கிட்டுத் திரும்பி, "நீதானா?" என்றாள்.

"நான்தான்! நீ உன் ஆளைத் திருட்டுத்தனமாப் பாக்கறதை வேற யாராவது கண்டு பிடிச்சுட்டாங்களோன்னு பயந்துட்டியா?" என்றாள்  துளசி குறும்பாகச் சிரித்தபடி.

"என்னடி உளர்ற?"

"அதோ எதுத்தாப்பில நின்னு அந்தப் பெரியவர்கிட்ட பேசிக்கிட்டிருக்காரே, அவருதானே உன் ஆளு? ஏண்டி, உன்னோட நெருக்கமாப் பழகற எனக்கு இது தெரியாதா?" என்றாள் துளசி தன் கையால் எதிர்ப்புறம் இருந்த இளைஞனைச் சுட்டிக் காட்டி.

"கையைக் கீழ போடுடி! யாராவது பாத்தா ஏதாவது நினைச்சுப்பாங்க" என்று அவள் கையைக் கீழே இறக்கினாள் மேகலை. 

"நீ அவரைப் பாக்கறது அவருக்குத் தெரியக் கூடாதுங்கறதுக்காகத்தானே வெய்யிலுக்காகக் கண்ணைச் சுருக்கிக்கிற மாதிரி ஒரு கண்ணை இடுக்கிக்கிட்டு அவரைப் பாக்கற? அடிக்கடி இப்படிப் பாத்தா கண்ணு சுருங்காம என்ன செய்யும்?" என்றாள் துளசி.

குறள் 1095
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

பொருள்:
அவள் என்னை நேராகப் பார்க்காவிட்டாலும் ஒரு கண்ணைச் சுருக்கிக் கொண்டு பார்ப்பது போல் என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்வாள்.

1096. 'சுருக்' என்று தைத்த பேச்சு!

இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்திரன் அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது, அவன் ஒரு பட்டதாரி என்பதை அறிந்து மற்ற ஊழியர்களுக்கு வியப்பு ஏற்பட்டது.

ஏனெனில், எழுதுபொருட்கள் விநியோகத்  தொழிலில் ஈடுபட்டு வந்த அந்தச் சிறிய நிறுவனத்தின் ஊழியர்களில் பெரும்பாலோர் பள்ளிப் படிப்பையே முடிக்காதவர்கள். பள்ளி இறுதித் தேர்வை முடித்தவர்களே இரண்டு பேர்தான்!

நிறுவனத்தின் மேலாளர் கூட ஒன்பதாம் வகுப்பைத் தாண்டாதவர்தான். முதலாளியின் உறவினர் என்பதால் அவருக்கு அந்தப் பொறுப்பு கிடைத்தது.

"பாவம்! படிச்சிருந்தும் நல்ல வேலை கிடைக்கல போல இருக்கு! அதனாலதான் இந்த சின்ன கம்பெனியில குறைஞ்ச சம்பளத்தில் வேலைக்கு சேந்திருக்கான்!" என்று சந்திரனைப் பற்றிப் பலர் நினைத்தனர். உண்மையும் அதுதான்!

சந்திரனின் கல்வியறிவினாலும், அவனுடைய இயல்பான புத்திசாலித்தனத்தாலும், வேலையில் அவன் காட்டிய ஆர்வத்தினாலும் அவனால் அந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் சில முன்னேற்றங்களைக்  கொண்டு வர முடிந்தது. இது நிறுவனத்தின் வியாபார வளர்ச்சிக்கும் உதவியது.

தன சக ஊழியர்களிடம் இனிமையாகப் பழகியதும், வேலையில் அவன் அவர்களுக்கு உதவியதும் அவன் மீது மற்றவர்களுக்கு மதிப்பம் அன்பும் ஏற்படச் செய்தது. ஆயினும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரோ, மேலாளரோ நிறுவனத்தின் வளர்ச்சிக்கான அவனுடைய பங்களிப்பைக் கண்டு கொண்டதாகக் கூடக் காட்டிக் கொள்ளவில்லை.

லுவலகம் தொடர்பான கடிதப் போக்குவரத்தைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சந்திரனுடையது. ஸ்டெனோ சியாமளாவை அழைத்து அவன் கடிதங்களை டிக்டேட் செய்வான். அவள் கடிதங்களை டைப் அடித்து அவன் மேஜை மீது வைத்து விட்டுப் போவாள்.

சியாமளாவிடம் சந்திரனுக்கு ஒரு ஈடுபாடு இருந்தது. ஆனால் அவள் அவனைப் பார்த்துப் புன்னகை கூடச் செய்ததில்லை. அவன் கடிதங்களை டிக்டேட் செய்யும்போது தலை குனிந்து அவன் சொல்வதைச் சுருக்கெழுத்தில் எழுதிக் கொண்டிருப்பாள். 

டைப் செய்யப்பட்ட கடிதங்களை அவன் மேஜை மீது வைத்து விட்டுப் போகும்போது கூட அவன் முகத்தைப் பார்க்க மாட்டாள். அவன் "தாங்க்ஸ்" என்று சொல்வதைக் கூடக் காதில் போட்டுக் கொள்ளாதவ போல் சென்று விடுவாள்.

சியாமளாவுக்குத் தன் மீது இருப்பது அலட்சியமா, வெறுப்பா என்று சந்திரனுக்குப் புரியவில்லை. அதற்குக் காரணமும் புரியவில்லை. தான் அவளை விரும்புவதை அவளிடம் சொன்னால் என்ன என்று யோசித்தான். அடுத்த முறை அவளுக்குக் கடிதம் டிக்டேட் செய்யும்போது அவளுக்கு மட்டும் கேட்கும்படி 'ஐ லவ் யூ' என்று சொல்ல முடிவு செய்தான்.

ஆனால் அதற்குள் வேறொரு சம்பவம் நடந்து விட்டது.

லுவலக லஞ்ச் அறையில் சியாமளாவும் லதா என்ற இன்னொரு பெண்ணும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். "நம்ம சந்திரன் சார் ரொம்ப புத்திசாலி, இல்ல?" என்றாள் லதா.

அப்போது அந்தப் பக்கம் போய்க் கொண்டிருந்த சந்திரனின் காதில் அது விழுந்தது.  இதற்கு சியாமளா என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று கேட்க எண்ணி அறை வாசலில் மறைவாக நின்றான் சந்திரன்.

"என்னைப் பொத்தவரையில முட்டாளா இருந்தாக் கூடப் பரவாயில்ல, முயற்சி செய்யாதவரா இருக்கக் கூடாது. அவர் ஒரு சோம்பேறி!" என்றாள் சியாமளா.

அடிபட்டவனாக சந்திரன் அங்கிருந்து நகர்ந்தபோது சியாமளா திரும்பி அவனைப் பார்த்தது போல் இருந்தது.

'நான் நின்றிருந்ததை முன்பே பார்த்து விட்டு வேண்டுமென்றுதான் அப்படிச் சொல்லி இருப்பாளா? அப்படியென்றால் என் மீது அவளுக்கு இருக்கும் வெறுப்பு எனக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னாளா?'

சந்திரனுக்குப் புரியவில்லை.

அதற்குப் பிறகு அவன் அவளுக்கு டிக்டேஷன் கொடுத்தபோது அவள் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை.

சந்திரன் மனம் உடைந்து போனான்.

சில நாட்கள் கழித்து ஒருநாள் சியாமளா டைப் அடித்த கடிதங்களை அவன் மேஜை மீது வைத்து விட்டுப் போனபோது அவனைப் பார்த்து இலேசாகச் சிரித்தது போல் இருந்தது.

உண்மையாகவே சிரித்தாளா அல்லது தன் பிரமையா என்று யோசித்தபடி சந்திரன் டைப் அடித்த கடிதங்களை எடுத்துப் பார்த்தான்.

மேலே இருந்த கடிதத்துடன் ஒரு பத்திரிகை விளம்பர கட்டிங் குண்டூசியால் இணைக்கப்பட்டிருந்தது.

எழுது பொருட்கள் விநியோகத் தொழில் ஈடுபட்டிருந்த ஒரு மிகப் பெரிய அகில இந்திய நிறுவனத்துக்கு கிளை மேலாளர் தேவை என்ற விளம்பரம் அது!

ஓ! அப்படியானால், என்னை சோம்பேறி, முயற்சி இல்லாதவன் என்றெல்லாம் சொன்னது நான் ஒரு நல்ல நிறுவனத்தில் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற அக்கறையினால்தானா? அப்படியானால், அவளுக்கு என்மீது இருப்பது அன்புதான், வெறுப்பு இல்லை!'

சியாமளாவின் இருக்கையின் பக்கம் பார்வையைத் திருப்பினான் சந்திரன். அவள் திரும்பி அவனைப் பார்த்துச் சிரித்தபடியே கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள்.

குறள் 1096
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.

பொருள்:
வெளித்தோற்றத்துக்கு அவள் பகைவர் போல் அன்பில்லாத சொற்களைப் பேசுவது போல் தோன்றினாலும், அவை மனதில் பகை இல்லாதவரின் சொற்கள் என்பது விரைவில் தெரிய வரும்.

1097. அவளே என் காதலி!

"கோ எஜுகேஷன் காலேஜில படிக்கவே கூடாதுடா!" என்றான் தினேஷ்.

"டேய்!  மென்ஸ் காலேஜில படிக்கறவங்கள்ளாம் நம்மைப் பாத்துப் பொறாமைப் படறாங்க. நீ என்னடான்னா இப்படிச் சொல்றியே!" என்றான் முருகன்.

"பின்ன என்னடா? ஒரு பொண்ணைக் காதலிக்க முடியல. அஞ்சு நிமிஷத்தில் காலேஜ் பூரா  தெரிஞ்சுடுது!"

" அடப்பாவி! நீ ஒரு பொண்ணைக் காதலிக்கறியா? உன்னோட நெருக்கமாப்  பழகற எனக்கே இந்த விஷயம் இப்ப நீ சொன்னப்பறம்தான்  தெரியுது. இந்த லட்சணத்தில காலேஜ் பூரா தெரிஞ்சுடுதுன்னு குறைப்பட்டுக்கற? யாருடா அந்தப் பொண்ணு?" என்றான் முருகன். 

"இன்னும் அவகிட்டேந்து எனக்கு சரியான பதிலே கிடைக்கல. அப்புறம்தானே அது காதலாகும்? அப்ப காலேஜ் பூராத் தெரிஞ்சுடுமே! அதைச் சொன்னேன்."

"அது சரி. பொண்ணு யாருன்னு சொல்லலியே?" என்றான் முருகன் விடாமல்.

'பூங்கோதை!" என்றான் தினேஷ். 

"பெயர்ப் பொருத்தமே இல்லையே! நீ இந்திப் பேரு வச்சுக்கிட்டிருக்க. அவ தமிழ்ப் பேரு வச்சுக்கிட்டிருக்கா. எப்படி ஒத்துப் போகும்?"

"அப்ப நீ வள்ளின்னு பேரு இருக்கற பொண்ணைத்தான் கல்யாணம்  பண்ணிப்பியா? அவகிட்டேந்து சிக்னல் கிடைக்கலியேன்னு நான் கவலையில இருக்கேன். நீ வேற பெயர்ப் பொருத்தம், ஜாதகப் பொருத்தம்னு எரிச்சலைக் கிளப்பாதே!" என்றான் தினேஷ் எரிச்சலுடன்.

ல்லூரி வளாகத்தில், பூங்கோதை தன் தோழிகள் இருவருடன் நடந்து சென்று கொண்டிருந்ததை தினேஷ் பார்த்தான். அவள் தோழிகளிடமிருந்து பிரிந்து தனியாகப் போனால் அவளுடன் பேசச் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நினைத்து தினேஷ் அவர்களுக்குப் பின்னால் கொஞ்சம் இடைவெளி விட்டு நடந்து போனான்.

அவனைத் திரும்பிப் பார்த்த பெண்களில் ஒருத்தி சற்று உரத்த குரலில், "டீ!நமக்குப் பின்னால ஒத்தன் வராண்டி. நாம மூணு பேர்ல யாரைக் குறி வச்சிருக்கான்னு தெரியலியே!" என்றாள் கேலியான குரலில். பிறகு பூங்கோதையைப் பார்த்து, "ஏண்டி, உன் ஆளா அவன்?" என்றாள்.

"என் ஆள்னா எனக்கு முன்னால நடந்து போவாண்டி. பின்னால வர மாட்டான்!" என்றாள் பூங்கோதை. பின்னால் நடந்து வரும் அவனுக்குக் கேட்க வேண்டும் என்பதற்காகவே அவள் குரலை உயர்த்திப் பேசியது போல் இருந்தது. அவள் சொன்னதைக் கேட்டு மற்ற இருவரும் கொல்லென்று சிரித்தனர். 

தினேஷ் அடிபட்டவனாக வேகமாக நடந்து அவர்களைக் கடந்து சென்றான். 

"நீ சொன்னபடி முன்னாடி போறாண்டி!" என்றாள் தோழிகளில் ஒருத்தி. 

"பரவாயில்லையே! நீ சொன்னபடி நடந்துக்குவான் போலருக்கே!" என்றாள் இன்னொருத்தி.

"முதல்ல கீழ விழாம நடக்கட்டும். போற வேகத்தைப் பாத்தா தடுக்கி விழுந்துடுவான் போலருக்கு. ஏற்கெனவே புல் தடுக்கி பயில்வான் மாதிரி ஒல்லியா இருக்கான்!" என்றாள் பூங்கோதை. 

தினேஷுக்கு அந்த இடத்தை விட்டு அகன்று விட்டால் போதும் போல் இருந்தது. 

ன்னொரு நாள் கல்லூரி வளாகத்துக்குள் தினேஷ் நடந்து சென்றபோது தற்செயலாக பூங்கோதை வேறு சில தோழிகளுடன் அவனுக்கு எதிரே நடந்து வந்தாள். 

தினேஷ் அவள் முகத்தைப் பார்த்தான். அவளும் அவனைப் பார்த்தாள். ஆனால் அந்தப் பார்வை கோபமான பார்வை போல் இருந்தது. 

 'சரிதான், இவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை போலிருக்கிறது' என்று நினைத்துக் கொண்டான் தினேஷ். மிகுந்த ஏமாற்றமாக இருந்தாலும், இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டான். 

து நடந்து சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் பூங்கோதை முருகனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை தினேஷ் பார்த்தான். முதலில் அது அவனுக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், பூங்கோதை தன்னை விரும்பவில்லை என்றபோது, அவள் யாரை விரும்பினால் என்ன என்று உடனே தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டான். 

தினேஷைப் பார்த்ததும் பூங்கோதை முருகனுடன் பேசிக் கொண்டிருந்ததை நிறுத்தி விட்டு அங்கிருந்து அகன்று விட்டாள்.

"கங்கிராட்ஸ்டா முருகா!" என்றான் தினேஷ், முருகன் அருகில் சென்றதும்.

"நான்தான் உனக்கு கங்கிராசுலேஷன்ஸ் சொல்லணும்!" என்றான் முருகன் சிரித்தபடி.

"என்ன சொல்ற நீ?"

"பூங்கோதை இத்தனை நேரமும் எங்கிட்ட உன்னைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருந்தா. உன் நல்ல குணத்தையும், அடக்கத்தையும் பத்தி அப்படிப் புகழ்ந்து பேசினா!"

"உண்மையாவா? அவ என்னைப் பத்திக் கேலியாப் பேசினது, என்னை முறைச்சுப் பாத்ததெல்லாம் பாத்தா அவளுக்கு என்னைப் பிடிக்கலியோன்னு நினைச்சேன்!" என்றான் தினேஷ் மகிழ்ச்சி கலந்த வியப்புடன்.

"உன்னைத் தனியா சந்திக்க அவளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கலியாம்.  தோழிகளோட இருக்கறப்ப உன்னைச் சீண்டிப் பாத்திருக்கா. நீ அவகிட்ட சண்டை போடுவேன்னு எதிர்பாத்திருக்கா. நீ எந்த ரியாக்‌ஷனும் காட்டாம பேசாம இருந்ததால உன் மேல கோபமாக் கூட இருந்திருக்கா. நீ அவ கிட்ட பேசுவேன்னு எதிர்பாத்து, நீ பேசாததால உன்னைப் பத்தி எங்கிட்ட வந்து புலம்பறா!" என்றான் முருகன்.

தினேஷ் வேகமாக நடந்தான்.

"எங்கடா போற?" என்றான் முருகன். 

"கொஞ்சம் முன்னாலதான் போய்க்கிட்டிருக்கா. அவ தோழிகள் யாராவது அவளோட சேரரதுக்கு முன்ன அவகிட்ட போய்ப் பேசணும்!" என்று சொன்னபடியே நடையை எட்டிப் போட்டான்  தினேஷ்.

குறள் 1097
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

பொருள்:
பகை உணர்வு இல்லாத கடும் சொற்களும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும், வெளிப்பார்வைக்கு அயலார் போல் காட்டிக்கொண்டு மனதுக்குள் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிகளாகும்.

1098. சிக்னல் கிடைக்குமா?

ரகுராமன் பல்லாவரம் ரயில் நிலையத்தில்தான் அவளைப் பார்த்தான். முதலில் பார்த்தது எப்போது என்பது அவனுக்குச் சரியாகத் தெரியவில்லை.

இரண்டு மூன்று முறை பார்த்த பிறகுதான் அவள் தன் கவனத்துக்கு வந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

பல்லாவரத்தில் வசிக்கும் அவன் கிண்டியில் தான் வேலை செய்யும் அலுவலகத்துக்குச் செல்வதற்காக, தினமும் காலை எட்டரை மணிக்கு பல்லாவரம் ரயில் நிலையத்துக்கு வருவான். 

ரயில் நிலையத்தில் தினமும் எத்தனையோ முகங்கள் தென்படும். அவற்றில் சிலவற்றை அவன் பலமுறை பார்த்திருக்கிறான். அவனைப் போல் அந்த ரயில் நிலையத்துக்கு தினமும் கிட்டத்தட்ட அதே நேரத்தில் வரும் பலரின் முகங்கள் அவை. ஆனால் பார்த்த முகம் என்பதற்கு மேல் அந்த முகங்கள் பற்றி வேறு எந்த சிந்தனையும் அவன் மனதில் ஏற்பட்டதில்லை.

ஆனால், எதனாலோ அந்தப் பெண்ணின் முகத்தை இரண்டு மூன்று முறை பார்த்ததும், அவள் மீது அவனுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதாகத் தோன்றியது.

அவன் வழக்கமாக நிற்கும் இடத்துக்குச் சற்றுத் தள்ளித்தான் பெண்கள் பெட்டி இருக்கும். அவள் பெண்கள் பெட்டியில்தான் ஏறுவாள். அவன் நிற்கும் இடத்திலிருந்து சுமார் பத்து அடி தள்ளித்தான் அவள் நிற்பாள். இன்னும் பல பெண்களும் அங்கே நின்று கொண்டிருப்பார்கள். 

'அவளை மட்டும் நான் ஏன் குறிப்பாக கவனித்தேன்?' என்று அவன் தன்னையே கேட்டுக் கொண்டான்.

அவன் ரயில் நிலையத்துக்கு வருவதற்கு முன்பே அவள் வந்து நின்றிருப்பாள். 

குராமன் அந்தப் பெண்ணை கவனிக்க ஆரம்பித்துச் சில நாட்கள் ஆகி விட்டன. அவள் மீது தனக்கு ஏற்பட்டிருப்பது காதல்தான் என்ற முடிவுக்கு அவன் வந்து விட்டான்.

ஆனால் அவள் அவனை கவனித்தாளா என்று தெரியவில்லை. ரயில் நிலையத்துக்கு வந்தது முதல், ரயில் வந்து அதில் ஏறும் வரை, தான் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்குத் தெரியுமா என்று அவன் யோசித்தான். 

அவளிடம் சென்று பேசிப் பார்க்கலாமா என்று சில சமயம் தோன்றும். ஆனால், பொது இடத்தில், அதுவும் பெண்கள் கூடி இருக்கும் இடத்தில், அவளிடம் சென்று ஏதாவது பேசி, அதனால் ஏதாவது விபரீதம் ஏற்பட்டு விடுமோ என்று பயந்தான்.

அவள் தன் முகத்தைப் பார்த்தாளா என்பது கூடத் தெரியவில்லையே!

அன்று ரயில் வந்து நின்றதும், அதில் ஏறும் வரை வழக்கம் போல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பெண்கள் பெட்டியில் ஏறுவதற்கு முன் அவள் அவன் பக்கம் திரும்பினாள். அவள் தன் முகத்தைப் பார்த்ததாகவும், தன்னைப் பார்த்துப் புன்னகை செய்தது போலவும் அவனுக்குத் தோன்றியது. ஆனால் இது உண்மையா, தன்னுடைய கற்பனையா என்று அவனுக்குப் புரியவில்லை.

டுத்த நாள் ரகுராமன் ரயில் நிலையத்துக்கு வந்தபோது அவளைக் காணவில்லை. 'இன்று அவள் வரவில்லையா, அல்லது தாமதமாக வருகிறாளா?' என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

தனக்கு அருகில் எதோ அசைவு ஏற்பட்டதை உணர்ந்த அவன், எதோ ஒரு உள்ளுணர்வில் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தபோது, அவள் அவன் அருகில் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான்!

ரகுராமனுக்கு உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததுபோல் இருந்தது.

எப்போதும் பெண்கள் பெட்டி நிற்கும் இடத்தில் நிற்பவள் இன்று தன் அருகில் வந்து நிற்கிறாள் என்ற உண்மையை உணரவே அவனுக்குச் சில வினாடிகள் பிடித்தன. புன்னகை செய்ய வேண்டும் என்ற உணர்வு கூட வராமல் அவள் முகத்தைப் பார்த்தான் 

அவள் அவனை நேரே பார்த்துப் புன்னகை செய்தாள்.

ரயில் வந்ததும், அவன் ஏறிய பெட்டியிலே அவளும் ஏறிக் கொண்டாள்.

குறள் 1098
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

பொருள்:
நான் பார்க்கும்போது, என்னை அன்புடன் பார்த்துச் சிரிப்பாள். அசையும் மெல்லிய இயல்பு கொண்ட அவளிடம் அப்பொழுது ஒரு அழகு தோன்றும்.

1099.  நிச்சயதார்த்தம் 

"நாளைக்கு எனக்கு நிச்சயதார்த்தண்டி. மறந்துடாதே!" என்றாள் ரேணுகா.

"மறக்கறதாவது? நீ எப்பவுமே மறக்க முடியாத அளவுக்கு நாளைக்கு உன்னைக் கலாய்க்கறதுக்குத் திட்டமெல்லாம் தயாரா வச்சிருக்கேன்! இவளை ஏன் கூப்பிட்டோம்னு நீ அழப் போற பாரு!" என்றாள் நிகிதா.

றுநாள் நிச்சயதார்த்தத்தின் போது, நிகிதா தான் சொன்னபடியே, தன் தோழி ரேணுகாவை ஏகமாக கலாட்டா செய்தாலும், ரேணுகாவுக்கு அது ஒரு உற்சாகமான அனுபவமாகவே இருந்தது.

நிச்சயதார்த்தத்துக்கு வந்திருந்த தன் அலுவலக நண்பர்களை நிகிதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் ரேணுகா. அவர்களில் பலர் திருமணமானவர்கள். திருமணம் ஆகாதவர்கள் இரண்டு பேர்தான் - சினேஹா, முகேஷ்.

சினேஹாவிடம் மட்டும் நிகிதா அதிகம் பழகியதை ரேணுகா கவனித்தாள். முகேஷ் தனியாக ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தான். பொதுவாக எல்லோரிடமும் நன்றாகப் பழகும் நிகிதா தனியாக உட்கார்ந்திருந்த முகேஷிடம் சற்றுப் பேசிக் கொண்டிருந்தால், அவன் தனிமையாக உணர்ந்திருக்க மாட்டானே என்று நிகிதாவுக்குத் தோன்றியது.

சில வாரங்களுக்குப் பிறகு நிகிதாவுக்கும், முகேஷுக்கும் திருமணம் நிச்சயம் ஆகியிருப்பதாக அறிந்து ரேணுகா ஆச்சரியப்பட்டாள்.

"எப்போடீ நிச்சயமாச்சு?" என்று நிகிதாவிடம் கேட்டாள் ரேணுகா.

:"கல்யாணம் நிச்சயமானது இப்பதான்..." என்று இழுத்தாள் நிகிதா.

"அப்படீன்னா?" என்றாள் ரேணுகா.

"நாங்க ரொம்ப நாளாப் பழகிக்கிட்டிருக்கோம்!" என்றாள் நிகிதா.

"அடிப்பாவி! ரொம்ப நாளாக் காதலிக்கிறீங்களா? எங்கிட்ட சொல்லவே இல்லையே!" என்ற ரேணுகா, சட்டென்று நினைவு வந்தவளாக, "ஆமாம், என் நிச்சயதார்த்தத்தில உன்னை நான் முகேஷுக்கு அறிமுகப் படுத்தினேன். அப்ப நீங்க ரெண்டு பேரும் முன்னாடியே அறிமுகமானவங்க மாதிரி காட்டிக்கல. அதோட ரெண்டு பேரும் பேசிக்கக் கூட இல்ல. சம்பந்தம் இல்லாதவங்க மாதிரி ஒதுங்கி இருந்தீங்க?" என்றாள்.

"பின்னே, எல்லார் முன்னேயும் நாங்க காதலர்கள்னு காமிச்சுக்கணும்னு சொல்றியா?" என்றாள் நிகிதா.

குறள் 1099
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

பொருள்:
பொது இடத்தில் ஒருவரை ஒருவர் அந்நியர் போல் பார்ப்பது காதலர்களுக்கே உரித்தான இயல்பாகும்.

1100. அவளும் நோக்கினாள்!  

பெண் பார்த்து முடிந்ததும், மாப்பிள்ளை வீட்டார் கிளம்ப யத்தனித்தபோது, பெண்ணின் தாய் கௌரி தன் கணவன் பசுபதி அருகில் வந்து அவர் காதில் ரகசியமாக ஏதோ சொன்னாள்.

பசுபதி சற்றுத் தயங்கி விட்டு, பையனின் தந்தை ராமசாமியைப் பார்த்து, "நீங்க தப்பா நினைக்கலேன்னா, எங்க பொண்ணு கலா உங்க பையன்கிட்ட தனியாப் பேசணும்னு நினைக்கறா!" என்றார்.

"இதென்ன புது வழக்கமா இருக்கு? நாங்க கேள்விப்பட்டதில்லையே இப்படி?" என்றாள் பையனின் அக்கா சுமதி.  

பையனின் தாய் சுந்தரி தன் பெண்ணை முறைத்துப் பார்த்து விட்டுக் கணவனின் முகத்தைப் பார்த்தாள்.

மனைவியிடம் சம்மதம் கேட்பது போல் அவளைப் பார்த்து முக ஜாடை செய்த ராமசாமி, மனைவி அரைச் சம்மதத்துடன் தலையாட்டியதும், பசுபதியைப் பார்த்து, "அதுக்கென்ன பேசட்டுமே!" என்றார். 

பிறகு பெண்ணின் பெற்றோர் எதோ தப்பு செய்து விட்டதைப் போல் சங்கடப்பட்டுக் கொண்டிருப்பதை கவனித்த ராமசாமி, அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, "இது நம்ப காலம் இல்லையே! 1970ஆம் வருஷம். சந்திரனுக்கே ராக்கெட் விட்டுட்டாங்க. இப்பல்லாம் கல்யாணத்துக்கு முன்னால பையனும் பெண்ணும் பேசிப் புரிஞ்சுக்கணும்னு நினைக்கறது சகஜம்தானே!  இதோ இருக்காளே என் பொண்ணு சுமதி, அவளுக்குப் போன வருஷம்தான் கல்யாணமாச்சு. தன்னைப் பெண் பாக்க வந்தப்ப, தான் இப்படிக் கேக்காம விட்டுட்டமேங்கற குறையிலதான் இது வழக்கமில்லையேன்னு சொல்லியிருக்கா. நீங்க ஒண்ணும் தப்பா எடுத்துக்காதீங்க!" என்று சொல்லி விட்டுத் தன் பெண் சுமதியைப் பார்த்துச் சிரிக்க, அவள் அவரை முறைத்தாள். 

க்கத்தில் இருந்த அறைக்குக் கலா முதலில் செல்ல, பிறகு சேகர் சென்றான். அந்த அறை மற்றவர்கள் அமர்ந்திருந்த முன்னறைக்குப் பின்னால் அமைந்திருந்ததால் இவர்களை யாரும் பார்க்க முடியாது. இவர்கள் பேசுவதும் யாருக்கும் கேட்காது. 

அந்த அறையில் நாற்காலி ஏதும் இல்லை. கலா சுவர் ஓரத்தில் போய் நிற்க, அவளுக்கு எதிரில் போய் நின்றான் சேகர்.

பெண் பார்க்கும் படலத்தின்போது குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்த கலா இப்போது தலை நிமிர்ந்து அவன் முகத்தை நேரே பார்த்தாள். சற்று நேரம் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். சேகருக்கு அவள் தன்னை அப்படிப் பார்த்தது சங்கடமாக இருந்தாலும், அவனும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்கள் கழித்து, "சரி. வாங்க போகலாம்!" என்றாள் கலா.  

"என்ன கலா? எங்கிட்ட எதோ பேசணும்னு சொல்லி இங்க அழைச்சுக்கிட்டு வந்துட்டு, சும்மா ரெண்டு நிமிஷம் பாத்துக்கிட்டே இருந்துட்டு போகலாங்கற?" என்றான் சேகர் வியப்புடன். 

"எல்லார் முன்னாலயும் உங்க முகத்தை சரியா பாக்க முடியல. உங்களை நேருக்கு நேரா பாக்கணுங்கறதுக்காகத்தான் உங்ககிட்ட தனியா பேசணும்னு சொன்னேன். கொஞ்ச நேரம் உங்களை நேருக்கு நேராப் பாத்ததிலேயே உங்ககிட்ட பேசி உங்களைப் புரிஞ்சுகிட்ட திருப்தி கிடைச்சுடுச்சு எனக்கு!" என்று சொல்லிச் சிரித்த கலா, "ஆமாம். நீங்களும் எதுவும் பேசலியே? இப்ப ஏதாவது கேக்கணுமா?" என்றாள்.

"வேண்டாம்! எனக்கும் உன்னை மாதிரிதான் தோணுது. உள்ள வரப்ப, உன்கிட்ட தனியாப் பேசணுங்கற ஆசையிலதான் வந்தேன். ஆனா உன்னைப் பாத்துக்கிட்டே இருந்ததில அந்த ஆசையெல்லாம் அடங்கிப் போயிடுச்சு!" என்று சொல்லிச் சிரித்தான் சேகர்.

சிரித்தபடியே சேர்ந்து நடந்து வந்த இருவரையும், இருவரின் பெற்றோர்களும் வியப்புடனும், மகிழ்ச்சியுடனும் பார்த்தனர். 

குறள் 1100
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல
பொருள்:
காதலர்கள் ஒருவர் கண்ணால் மற்றவர் கண்ணை நோக்கி ஒன்று பட்ட உணர்வு கொண்டு விட்டால், அதற்குப் பிறகு வாயால் பேசிக்கொள்ளும் சொற்களுக்கு ஒரு பயனும் (தேவையும்) இல்லை.


                 அறத்துப்பால்                                                             பொருட்பால்   

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...