நாகராஜன் பிரேமா தம்பதி 60 வயதுக்கு மேலானவர்கள். அவர்களுடைய இரண்டு மகன்களும், ஒரு மகளும் வெளிநாடுகளில் வசித்து வந்தனர்.
மதனும், திவ்யாவும் அந்த வீட்டுக்குக் குடி வந்து ஒரு வாரம்தான் ஆகியிருக்கும். கீழ் வீட்டிலிருந்து, நாகராஜனும், பிரேமாவும் உரத்த குரலில் வாக்குவாதம் செய்து கொள்வது கேட்டது.
"இப்படியா எல்லாருக்கும் கேக்கும்படியா சண்டை போடுவாங்க?" என்றாள் திவ்யா.
"இந்த வயசில, இவங்களுக்குள்ள எதுக்கு இவ்வளவு பெரிசா சத்தம் போட்டுக்கற அளவுக்கு சண்டை வரணும்?" என்றான் மதன்.
சற்று நேரத்தில் வாக்குவாதம் முடிந்து விட்டது போல் தோன்றியது.
ஆனால். பத்து நாட்களுக்குப் பிறகு, மீண்டும் ஒரு வாக்குவாதம் நிகழ்ந்தது. அவர்கள் பேசிக் கொண்டதில் சில வார்த்தைகள் இவர்கள் காதுகளில் விழுந்தன.
"கல்யாணம் ஆகி இவ்வளவு நாள்ள, என்னிக்கு நீ என் பேச்சைக் கேட்டிருக்க?" என்றார் நாகராஜன்.
"சும்மா சொல்லாதீங்க. இவ்வளவு வருஷமா, நான் உங்க பேச்சைத்தான் கேட்டுக்கிட்டிருக்கேன். ஒரு மாறுதலுக்கு, இப்ப என் பேச்சை நீங்க கேளுங்க!" என்றாள் பிரேமா.
"என்ன இந்தப் பெரிசுங்க இப்படி சண்டை போடுதுங்க?" என்றாள் திவ்யா.
"நல்லவேளை, நாம இவங்க மாதிரி இல்ல!" என்றான் மதன்.
ஆனால், மதன் கூறியது தவறு என்று சில மாதங்களில் நிரூபணமாகியது.
ஒருநாள் காலையில், மதனுக்கும் திவ்யாவுக்கும் இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டு, மதன் கோபித்துக் கொண்டு, காலை உணவு உண்ணாமலும், மதிய உணவை எடுத்துக் கொள்ளாமலும் அலுவலகத்துக்குச் சென்று விட்டான்.
அன்று பிற்பகல், பிரேமா மாடி ஏறி திவ்யாவின் வீட்டுக்கு வந்தாள்.
"என்ன திவ்யா, எப்படி இருக்க?" என்றாள் பிரேமா.
"வாங்கம்மா. உக்காருங்க!" என்றாள் திவ்யா.
"என்ன, அழுதிருக்க போலிருக்கே! புருஷன்காரன் சண்டை போட்டுட்டு, உங்கிட்ட கோவிச்சுக்கிட்டு, சாப்பிடாம, சாப்பாடு எடுத்துக்காம போனா வருத்தமாத்தான் இருக்கும்!"
"அதெல்லாம் ஒண்ணும் இல்லையே!" என்றாள் திவ்யா.
"நீங்க காலையில சண்டை போட்டுக்கிட்டது எனக்குக் கேட்டது. எங்களை மாதிரி நீங்க இரைஞ்சு பேசி சண்டை போட்டுக்காட்டாலும், நீங்க பேசிக்கிட்டது கொஞ்சம் கொஞ்சம் என் காதில விழுந்தது. எப்பவும் கையில லஞ்ச் பாக்சோட ஆஃபீசுக்குப் போற உன் புருஷன், இன்னிக்கு அது இல்லாம போனதையும் கவனிச்சேன்!"
பிரேமா இதைச் சொல்லி முடிப்பதற்குள், திவ்யா அவள் கைகளைப் பற்றிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். "சின்ன விஷயம்தான் ஆன்ட்டி. அதுக்காக என்மேல கோவிச்சுக்கிட்டு, டிஃபனும் சாப்பிடாம, லஞ்ச்சும் எடுத்துக்காம போயிட்டாரு!" என்றாள் திவ்யா அழுகையினூடே.
"திருமண வாழ்க்கையில, கணவன் மனைவிக்குள்ள இது மாதிரி சண்டை வரது இயல்பானதுதான். நாங்க அடிக்கடி சண்டை போட்டுக்கறதை நியாயப்படுத்தறதுக்காக இதைச் சொல்லல. நீ நினைச்சுப் பாத்தா, உங்க அப்பா அம்மா சண்டை போட்டுக்கிட்ட சம்பவங்கள் உனக்கு ஞாபகம் வரும். கணவன் மனைவிக்குள்ள சண்டை வரது நல்லது. ஏன் தெரியுமா?" என்றாள் பிரேமா.
"ஏன் ஆன்ட்டி?"
"சண்டை வந்தாதான், அன்பு அதிகமாகும். நான் சொல்றது உனக்கு வேடிக்கையா இருக்கலாம். ஆனா, கொஞ்ச நாள்ள நீயே புரிஞ்சுப்ப. ஏன், இன்னிக்கு சாயந்திரம் உன் புருஷன் வீட்டுக்கு வந்தப்புறம் கூட இதை நீ புரிஞ்சுக்கலாம்! அதுக்கப்பறம், 'சண்டை வந்தா நல்லதுதானே, அப்புறம் அன்பு அதிகமாகுமே!'ன்னு உனக்குத் தோணும். நாங்க விரும்பினா, சண்டை போட்டுக்காம இருக்க முடியும். ஆனா, சின்னச் சின்ன சண்டைக்கு அப்புறம், அன்பு அதிகமாகிறதைப் பாத்துத்தான், நாங்க சண்டையைத் தவிர்க்கறது இல்ல!"
அன்று மாலை, மதன் அலுவலகத்திலிருந்து வந்தபோது, திவ்யாவுக்குப் பிடித்த முந்திரி பர்பி வாங்கிக் கொண்டு வந்தான். "ஒரு கடையிலதான் இது ரொம்ப நல்லா இருக்கும். அது ரொம்ப தூரம். ஆஃபீஸ் முடிஞ்சதும், அங்கே போய் வாங்கிக்கிட்டு வந்தேன்- உனக்காகத்தான்!" என்றான் மதன்.
அன்று இரவு, திவ்யா மதனின் அணைப்பில் இருந்தபோது, ஊடலுக்குப் பின் வந்த அந்த அணைப்பில் அவளுக்கு ஒரு கூடுதல் சுகம் தெரிந்தது.
பிரேமா ஆன்ட்டி சொன்னது சரிதான் என்று நினைத்துக் கொண்டாள் திவ்யா.
கற்பியல்
No comments:
Post a Comment