காமத்துப்பால்
கற்பியல்
"என்ன செய்யறது மல்லிகா? வியாபார விஷயமாப் போனா, வேலை முடிஞ்சப்புறம்தானே திரும்ப முடியும்?" என்றான் குமரன்.
"வரத்துக்கு லேட்டாகும்னா, லெட்டர் போட்டிருக்கலாம் இல்ல? வீட்டில ஒருத்தி காத்துக்கிட்டிருக்காங்கற நினைப்பே உங்களுக்கு இல்லையா?"
"வேலை மும்முரத்தில எதுவுமே செய்ய முடியல. போஸ்ட் ஆஃபீசுக்குப் போய், இன்லாண்ட் லெட்டர் வாங்கக் கூட நேரம் இல்ல. நான் தங்கி இருந்த ஓட்டல்லேந்து போஸ்ட் ஆபீஸ் ரொம்ப தூரம் வேற!"
"இந்த நொண்டிச் சாக்கெல்லாம் வேண்டாம். இன்லாண்ட் லெட்டர் எல்லாம் பெட்டிக் கடையிலேயே விப்பாங்களே! பத்து பைசா அதிகம் கொடுத்து வாங்கணும். அவ்வளவுதானே? உங்களுக்கு என் மேல கொஞ்சமாவது அக்கறை இருந்தா, எப்படியாவது லெட்டர் போட்டிருப்பீங்க!"
"ஐயோ, மல்லிகா! உனக்கு எப்படிப் புரிய வைக்கறதுன்னே தெரியலியே! தினமுமே, இன்னிக்கு வேலை முடிஞ்சுடும், ராத்திரியே ஊருக்குக் கிளம்பிடலாம்னுதான் நினைப்பேன். இப்படியே தள்ளிப் போய், பத்து நாள் ஆயிடுச்சு."
"பத்து நாள் ஆயிடுச்சு இல்ல? இன்னும் ரெண்டு நாள் ஆனா, பரவாயில்ல."
"அப்படின்னா?"
"ரெண்டு நாளைக்கு என் பக்கதிலேயே வராதீங்க!"
"ரெண்டு நாளா? ஓ, அதுவா? அது எப்படி? நான் கிளம்பறத்துக்கு முதல் நாள்தானே தலைக்குக் குளிச்ச?"
"அதுவும் இல்ல, இதுவும் இல்ல. நீங்க பத்து நாள் என்னைத் தவிக்க வச்சதுக்காக, உங்களுக்கு நான் கொடுக்கற தண்டனை இது!"
"என்ன மல்லிகா இது? சின்னக் குழந்தை மாதிரி!" என்றபடியே, மல்லிகாவின் அருகில் வந்தான் குமரன்.
"வராதீங்கன்னா, வராதீங்க! அவ்வளவுதான்!" என்றாள் மல்லிகா.
அவள் முகத்தில் பொங்கிய கோபத்தைக் கண்டு, குமரன் கொஞ்சம் பயந்து விட்டான்.
"சரி" என்றான் பலவீனமாக.
குமரன் முன்னறையில் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, பின்பக்கமாக வந்து அவன் கழுத்தைத் தன் கைகளால் சுற்றி வளைத்தாள் மல்லிகா.
"அப்பா! கோபம் தீர்ந்து போச்சா? பயந்துட்டேன்!" என்றான் குமரன், மகிழ்ச்சியுடன்.
"கோபமெல்லாம் எதுவும் இல்ல. நான் பத்து நாளா உங்களைப் பிரிஞ்ச தவிச்ச மாதிரி, நீங்களும் தவிக்கறதைக் கொஞ்சநேரம் பாக்கணும்னு ஆசைப்பட்டேன். அவ்வளவுதான். நீங்க என் பக்கத்தில வர முடியாம தவிக்கறதைப் பாக்கறப்ப, எனக்கே பாவமா இருந்தது. அதனாலதான், ரெண்டு நாள்ங்கறதை ரெண்டு மணி நேரமாக் குறைச்சுட்டேன்!" என்றாள் மல்லிகா, சிரித்தபடி.
"அப்படியா?" என்றாள் பாக்கவி மகிழ்ச்சியுடன். "நல்லவேளை! எங்கே அவன் பேசாமலே இருந்துடுவானோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். என் வயத்தில பாலை வார்த்த!"
"ஆனா ஒண்ணு. ஆண்களுக்கு ஈகோ அதிகம். அவங்க இறங்கி வந்ததாக் காட்டிக்க மாட்டாங்க. அதனால, அவன் கூப்பிட்டு நீ போன மாதிரி இருக்கக் கூடாது. நீ தற்செயலா பார்க்குக்குப் போன மாதிரியும், எதிர்பார்க்காம அவனைச் சந்திச்ச மாதிரியும் இயல்பாப் பேசணும். அவன் உன்னை வரச் சொல்லி எங்கிட்ட சொல்லி அனுப்பினதாலதான், நீ வந்தேன்னு காட்டிக்கக் கூடாது!" என்றாள் லதா.
"ஓகே! சாரோட ஈகோவைத் திருப்திப்படுத்தற மாதிரியே நடந்துக்கறேன்!" என்றாள் பார்கவி, உற்சாகத்துடன்.
'முட்டாள் பெண்ணே! காதலனோட சண்டை போட்டுட்டு, நாலஞ்சு நாளா அவனைப் பார்க்காம, பேசாம தவிச்சுக்கிட்டிருந்த. அவனும் ஜம்பமா, நீ இறங்கி வந்தாதான் ஆச்சுன்னு பிடிவாதமா இருந்தான். ஊடல் அளவுக்கு மீறிப் போச்சுன்னா, நிரந்தரப் பிரிவில கொண்டு விடும்னு உங்க ரெண்டு பேருக்கும் புரியல. அதனால, அவன் வரச் சொன்னதா உங்கிட்ட சொல்லியும், நீ வரச் சொன்னதா அவன்கிட்ட சொல்லியும், ஒரு டிராமா போட்டு, உங்க ஊடலை நான் முடிச்சு வைக்க வேண்டி இருக்கு!' என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள் லதா.
உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.
"ஒண்ணுமில்லையே!" என்றாள் நளினி.
"ஒண்ணுமில்லேன்னு உன் வாய்தான் சொல்லுது. உன் முகம் ஏதோ இருக்குன்னு இல்ல சொல்லுது?" என்ற ருக்மிணி, "கண்டுபிடிச்சுட்டேன். தினமும் காலேஜ் விடற நேரத்தில, காலேஜுக்கு வெளியில பைக்கை வச்சுக்கிட்டுக் காத்துக்கிட்டிருந்து, நீ வெளியில வந்ததும், உன்னை பைக்ல வச்சு அழைச்சுக்கிட்டுப் போவாரே உன் ஆளு, அவர் ரெண்டு நாளா வரலை போலருக்கு? என்ன ஆச்சு? எங்கேயாவது ஊருக்குப் போயிருக்காரா?" என்றாள்
இதைக் கேட்டதும், நளினியின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
"என்னடி ஆச்சு?" என்றாள் ருக்மிணி, பதட்டத்துடன்.
"சின்ன விஷயம். ஒரு விவாதத்தில ஆரம்பிச்சு, பெரிசாப் போயிடுச்சு. இனிமே உன் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன்னுட்டுப் போயிட்டாரு. சொன்னபடியே, ரெண்டு நாளா வரலை. நிரந்தரமா என்னை ஒதுக்கிட்டாரோன்னு பயமா இருக்கு" என்று நளினி கண்ணீருக்கிடையில் கூறிக் கொண்டிருந்தபோதே, "உன் ஆளுக்கு நூறு வயசுடி. நீ அவரைப் பத்தி சொல்லிக்கிட்டு இருக்கறப்பவே அவர் வந்துட்டாரு பாரு!" என்றாள் ருக்மிணி, சிரித்தபடி.
நளினி திரும்பிப் பார்த்தாள். கல்லூரியின் வெளிக்கதவுக்கு அருகே, மணிகண்டன் பைக்குடன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.
"பைடி! நாளுக்குப் பார்க்கலாம்!" என்றபடியே வெளியே விரைந்தாள் நளினி.
எதுவும் பேசாமல். மணிகண்டனின் பைக்கின் பின்னால் அமர்ந்து கொண்டாள் நளினி.
பைக் சற்று தூரம் சென்றதும், "ஏன் ரெண்டு நாளா வரலை? அன்னிக்கு என் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன்னு சொல்லிட்டுப் போனதால. ரொம்ப பயந்துட்டேன்!" என்றாள் நளின்.
"ஏற்கெனவே நான் கோவிச்சுக்கிட்டு ரெண்டு நாள் வராம இருந்தது உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்தி இருக்கும். உன்னை மேற்கொண்டு வருத்தப்பட வைக்கக் கூடாதுன்னு இன்னிக்கு ஓடி வந்துட்டேன். இன்னிக்கு நாம ஒரு சினிமாவுக்குப் போகப் போறோம்" என்றான் மணிகண்டன்.
"என்ன சினிமா?"
"சினிமா எதுவா இருந்தா என்ன? பாக்ஸ்ல டிக்கட் வாங்கி இருக்கேன். அங்கே ரெண்டரை மணி நேரம் நாம மட்டும் தனியா இருக்கப் போறோம்!" என்று மணிகண்டன் கூறியபோது, அவன் முகத்தில் எத்தகைய குறும்பு உணர்ச்சி இருந்திருக்கும் என்பதை நளினியால் பைக்கின் பின்னால் அமர்ந்தபடியே காண முடிந்தது.
"என்னடி, ரெண்டு நாளா முரளிஉன்னைப் பாக்கவே வரல? " என்றாள் கற்பகம், தன் மகள் கவிதாவிடம்.
"வேற ஏதாவது வேலை இருந்திருக்கும்" என்றாள் கவிதா.
"என்ன வேலை இருந்தாலும், தினம் ஒரு தடவை உன்னைப் பார்க்க வராம இருக்க மாட்டாரே!"
தாய் கூறியதைக் கேட்டதும், கவிதாவுக்குத் தொண்டையை அடைப்பது போல் இருந்தது.
'ஏதோ சண்டை வந்துடுச்சு. நானும் கோபத்தில இனிமே என்னைப் பார்க்க வராதீங்கன்னு சொல்லிட்டேன். அதுக்காக. இப்படியா வீறாப்பா என்னை வந்து பாக்காம இருப்பாரு? ஒருவேளை. வராமலே இருந்துடுவாரோ? சேச்சே! அது எப்படி? கல்யாணம்தான் நிச்சயம் ஆயிடுச்சே!'
"உங்களுக்குள்ள சண்டை எதுவும் இல்லையே! கல்யாணம் நிச்சயம் ஆனப்புறம், சண்டைஎதுவும் போட்டுக்காதீங்க!" என்றாள் கற்பகம், சிரித்தபடி.
'அம்மா விளையாட்டாகப் பேசுகிறாள். ஆனால், உண்மையாகவே நாங்கள் சண்டை போட்டுக் கொண்டு, நான் அவரை இங்கே வர வேண்டாம் என்று சொல்லி, அதனால் இரண்டு நாட்களாக அவர் என்னைப் பார்க்க வராமல் இருக்கிறார் என்று தெரிந்தால், என்ன சொல்வாளோ!'
அன்று மாலை, "நானும், உன் அப்பாவும் கமலா அத்தை வீட்டுக்குப் போயிட்டு வரோம். எட்டு மணிக்கு வந்துடுவோம்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள் கற்பகம்.
கற்பகம் கிளம்பி ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, அழைப்பு மணி அடித்தது.
'அம்மாவாத்தான் இருக்கும். எப்பவுமே வெளியில கிளம்பறப்ப, எதையாவது மறந்துட்டுப் போறது, கொஞ்ச தூரம் போனப்பறம் நினைவு வந்து, திரும்ப வந்து எடுத்துக்கிட்டுப் போறது! இதுவே அம்மாவுக்கு வழக்கமாப் போயிடுச்சு!' என்று நினைத்தபடியே கதவைத் திறந்த கவிதாவுக்கு இன்ப அதிர்ச்சி.
வாசலில் முரளி நின்று கொண்டிருந்தான். கையில் ஒரு பூங்கொத்து வேறு!
கவிதா பேசாமல் உள்ளே வந்து, சோஃபாவில் அமர்ந்தாள். அவளைத் தொடர்ந்து வந்த முரளி, அவள் அருகில் சோஃபாவில் அமர்ந்து கொண்டு, அவளிடம் பூங்கொத்தைக் கொடுத்தான்.
"பூங்கொத்தெல்லாம் எதுக்கு? எனக்கு இன்னிக்குப் பிறந்த நாள் இல்லையே!" என்றாள் கவிதா, பூங்கொத்தை வாங்காமலே.
"நாம சண்டை போட்டுக்கிட்டதே உனக்கு வருத்தமா இருந்திருக்கும். என்னதான் கோபத்தில உன்னைப் பார்க்க வர வேண்டாம்னு நீ சொன்னாலும், ரெண்டு நாளா நான் உன்னைப் பார்க்க வராதது உன் வருத்தத்தை இன்னும் அதிகமாத்தான் ஆக்கி இருக்கும். நீ சொன்னதுக்காக, நானும் ரெண்டு நாள் வராம இருந்தேன். இனிமேயும் உன் வருத்தத்தை நீடிக்க விடக் கூடாதுன்னுதான் இப்ப உன்னைப் பார்க்க வந்தேன்" என்றான் முரளி.
'இப்படிப்பட்ட நல்ல உள்ளவன் கொண்டவனை, ஏதோ கோபத்தில், என்னைப் பார்க்க வராதீர்கள் என்று சொல்லி விட்டோமே' என்று நினைத்த கவிதா, "சாரி!" என்றபடியே அவன் கொடுத்த பூங்கொத்தை மனநெகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டாள்.
"ஊர்லதான் இருக்கா!" என்றான் விஜய், சலிப்புடன்.
"அப்புறம் ஏன் அவளைப் பாக்கப் போகல? அவளுக்கு ஏதாவது எக்ஸாமா இப்ப?"
"அவளுக்கு எதுவும் இல்லை. எனக்குத்தான் எக்ஸாம்!"
"உனக்கு ஏதுடா எக்ஸாம்?" என்றான் சபரீஷ், புரியாமல்.
"டேய் டியூப் லைட்! அவனோட காதலி அவனை சோதிக்கறாளாம்! அதைத்தான் எக்ஸாம்கறான்! அப்படித்தானேடா?" என்றான் சிவா.
"கரெக்டா சொல்லிட்டியே! உனக்கும் இது மாதிரி சோதனையெல்லாம் நடந்திருக்கா என்ன?" என்றான் விஜய், சிரித்துக் கொண்டே.
"எனக்கு எப்படி நடக்கும்? எனக்குத்தான் காதலியே இல்லையே! உன்னை மாதிரி எல்லாரும் அதிர்ஷ்டக்காரங்களா இருப்பாங்களா என்ன?" என்றான் சிவா, பெருமூச்சுடன்.
"டேய்! சோதனைன்னு பேசி நீங்க ரெண்டு பேரும் என் பொறுமையைத்தான் சோதிக்கிறீங்க! என்னடா சோதனை?" என்றான் சபரீஷ்.
"நீ ஒரு டியூப் லைட்டுங்கறதைத் திரும்பித் திரும்ப வெளிக்காட்டணுமா என்ன? காதலி அவனை சோதிக்கிறான்னா, காதலியோட ஏதோ சண்டைன்னு அர்த்தம். அப்படித்தானேடா?" என்றான் சிவா.
"ஆமாம். ஒரு சின்ன விஷயம். அதுக்குக் கோவிச்சுக்கிட்டு, எங்கிட்ட பேச மாட்டேன்னுட்டா. நான் அவளைப் போய்ப் பார்க்கவும் கூடாதாம்!" என்றான் விஜய்.
"அப்படின்னா, உன் காதல் அவ்வளவுதானா? பலூன் மாதிரி வெடிச்சுடுச்சா?" என்றான் சபரீஷ்.
"உன்னை எத்தனை தடவை டியூப் லைட்னு சொல்றதுன்னு தெரியல! எனக்கு அலுத்தே போச்சு. காதலியோட சண்டை போட்டா, காதல் முடிஞ்சு போச்சுன்னு அர்த்தமா? ஊடல்னு ஒரு வார்த்தை கேள்விப்பட்டதில்ல?" என்றான் சிவா.
"ஓ, அதுவா?" என்றான் சபரீஷ் சுருக்கமாக. மறுபடி ஏதாவது சொல்லித் தன்னை ஒரு டியூப் லைட் என்று மீண்டும் உறுதிப்படுத்த அவன் விரும்பவில்லை.
"எதுக்குடா அவளோட சண்டை போட்ட?" என்றான் சிவா.
"இவன் போட்டானோ, அவ போட்டாளோ!" என்றான் சபரீஷ்.
"இவனை மாதிரி ஒத்தனுக்கு ஒரு காதலி கிடைச்சதே ஒரு பெரிய அதிர்ஷ்டம். சண்டை போட்டு, அதைக் கெடுத்துப்பானா என்ன? அவதான் போட்டிருப்பா. அப்படித்தானேடா?" என்றான் சிவா.
"இல்லை. நான்தான் சண்டை போட்டேன்!" என்றான் விஜய்.
"ஏண்டா? கொழுப்புதானே?" என்றான் சபரீஷ்.
"ஆறு மாசமா அவளைக் காதலிக்கறேன். இது வரையிலேயும், எங்களுக்குள்ள எந்தக் கருத்து வேறுபாடும் வரலை. ஒரு தடவையாவது சண்டை போட்டாத்தான், காதல்ல சுவாரசியம் இருக்கும்னு நினைச்சேன். அதோட, அவளோட கோபத்தைப் பார்க்கணும்னு ஆசையா இருந்தது. அதனாலதான், சின்னதா ஒரு சண்டை போட்டேன். அவளும் கோவிச்சுக்கிட்டு என்னோட பேச மாட்டேன்னுட்டா!"
"ஏண்டா, முட்டாளாடா நீ? அவ உன் மேல நிரந்தரமாக் கோவிச்சுக்கிட்டு, உங்க காதல் முறிஞ்சு போச்சுன்னா, என்ன செய்வே?" என்ற சபரீஷ், ஒருவேளை, தான் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டோமோ என்று நினைத்து சிவாவைப் பார்த்தான்.
"டேய் டியூப் லைட்!" என்று சிவா ஆரம்பப்பதற்குள், விஜய்யின் கைபேசி அடித்தது.
"அவதான்!" என்று சொல்லி விட்டு, வாய் நிறையச் சிரிப்புடன், ஃபோனில் பேசுவதற்காகச் சற்று விலகிச் சென்றான் விஜய்.
ஒரு நிமிடம் கழித்து, ஃபோன் பேசி விட்டுத் திரும்பிய விஜய்யின் முகத்தில உற்சாகம் கொப்பளித்தது.
"பைடா! மெரினாவுக்கு வரச் சொல்லி இருக்கா. நாளைக்குப் பாக்கலாம்!" என்று கூறி விட்டுக் கிளம்பினான் விஜய்.
"கொடுத்து வச்சவன்!" என்றான் சபரீஷ்.
அதை ஆமோதிப்பது போல், தலையசைத்தான் சிவா.
"கலாகிட்டேந்துதான்" என்றாள் உமா, சுருக்கமாக. கலா உமாவின் தங்கை.
"ஏதோ ஆறுதல் சொல்லிக்கிட்டிருந்தே போல இருக்கே!"
"அவ புருஷன் ரெண்டு மூணு நாளா அவகிட்ட பேசறது இல்லையாம். அதைச் சொல்லி வருத்தப்பட்டா. 'கவலைப்படாதே. புருஷன் பெண்டாட்டிக்குள்ள இதெல்லாம் சகஜம்தான். சீக்கிரமே சரியாயிடும்'னு ஆறுதல் சொன்னேன்.
"சகஜம்னு எப்படிச் சொல்ற? நமக்குக் கல்யாணம் ஆகி, அஞ்சு வருஷம் ஆச்சு. நமக்குள்ள சண்டையே வந்ததில்ல. உன் தங்கையும் அவ புருஷனும் கல்யாணம் ஆகி ஆறு மாசத்துக்குள்ள, மூணு தடவை சண்டை போட்டுட்டாங்களே!"
"எல்லாரும் ஒரே மாதிரி இருப்பாங்களா?" என்றபோது, உமாவின் குரலில் ஒரு சலிப்புத் தெரிந்தது.
அன்று மாலை, உமாவுக்கு மீண்டும் அவள் தங்கையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
அவள் பேசி முடித்ததும், "இப்ப என்ன? சண்டை முத்திப் போய், அடிதடியில இறங்கிட்டாங்களாமா?" என்றான் தரணிதரன், கேலியாக.
கணவனை முறைத்துப் பார்த்த உமா, "அதெல்லாம் இல்ல. அவ புருஷன் ஆஃபீஸ்லேந்து ஃபோன் பண்ணினாராம். ராத்திரி ஓட்டல்ல டின்னர் சாப்பிட்டுட்டு, நைட் ஷோ போகலாம்னு சொன்னாராம். அவளுக்கு ஒரே சந்தோஷம். அதைச் சொல்லத்தான் ஃபோன் பண்ணினா!" என்றாள்.
"அடிச்சுக்கறது அப்புறம் சேந்துக்கறது! என்ன இது? நாம எப்படி இருக்கோம் பாரு! எனக்குப் பெருமையா இருக்கு!" என்றான் தரணிதரன்.
"சண்டை போட்டுக்கிட்டு, அப்புறம் சேர்ந்துக்கறதிலயும் ஒரு சந்தோஷம் இருக்கலாம் இல்ல?" என்ற உமா, 'எனக்கு நம்ம வாழ்க்கை உப்புச் சப்பில்லாம இருக்கற மாதிரி இருக்கு. கலாவைப் பார்த்தா, பொறாமையா இருக்கு!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
அஜய், வழக்கம்போல், வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தபோது, "ஆமாம், என்னை ரொம்ப அழகுன்னு சொல்லிக்கிட்டிருக்கியே, அது உண்மைதானா?" என்றாள் வீணா.
"ஆமாம். அதில என்ன சந்தேகம்?" என்றான் அஜய்.
"அப்படின்னா, என் அழகுக்காகத்தான் என்னைக் காதலிக்கறியா? என் குணத்துக்காக இல்லையா?"
சற்று யோசித்த அஜய், "இங்கே பாரு வீணா. முதல்ல ஒத்தரைப் பாக்கறப்ப, நமக்குத் தெரியறது அவரோட தோற்றம்தான். அதை வச்சுத்தான் ஒத்தரைப் பிடிக்கிறதும் பிடிக்காததும். குணம் எல்லாம் பழகின அப்புறம்தானே தெரிய வரும்!" என்றான்.
"அப்படியா? அப்படின்னா, என்னை விட அழகான ஒரு பெண்ணேப் பார்த்தா. என்னை விட்டுட்டு அவகிட்ட போயிடுவ இல்ல?" என்று சீண்டினாள் வீணா.
"அப்படிச் சொல்ல முடியாது. ஆனா, ஐஸ்வர்யா ராய் மாதிரி அழகியா இருந்தா, கொஞ்சம் யோசிக்க வேண்டியதுதான்!" என்றான் அஜய், விளையாட்டாக.
"அப்படின்னா, அப்படி ஒரு பெண்ணைத் தேடிக்க!" என்று கோபமாகச் சொல்லி விட்டு, உரையாடலைத் துண்டித்து விட்டாள் வீணா.
அதற்குப் பிறகு, அஜய் வீணாவை ஃபோனில் அழைக்கப் பலமுறை முயன்றான். அவள் ஃபோனை எடுக்கவில்லை.
"சாரி. விளையாட்டுக்குத்தான் அப்படிச் சொன்னேன். மன்னிச்சுடு!" என்றெல்லாம் ஐந்தாறு செய்திகள் அனுப்பினான். அவற்றுக்கும் பதில் இல்லை.
இன்றோடு ஐந்து நாட்கள் ஆகி விட்டன. வீணாவுடன் தனக்கு நிரந்தரப் பிரிவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம், அஜய்யின் மனதில் ஏற்படத் தொடங்கியது. அவளுடன் பழகிய இனிமையான தருணங்கள் நினைவுக்கு வந்தன.
'எவ்வளவு அற்புதமான தருணங்கள் அவை! என்னுடைய விளையாட்டான, முட்டாள்தனாமான ஒரு பேச்சால், எல்லாவற்றையும் இழக்கப் போகிறேனா?
'இத்தனை நாள் பழகியும், வீணாவின் வீட்டு முகவரியை வாங்கி வைத்துக் கொள்ளவில்லை. அசோக் நகரில் இருக்கிறாள் என்பதுதான் தெரியும். அவளுடைய அபார்ட்மென்ட் பெயர் கூட மறந்து விட்டது. அவள் வீட்டை எப்படிக் கண்டுபிடிப்பது?'
அஜய்யின் தொலைபேசி அடித்தது. யாராக இருக்கும் என்று ஆர்வமில்லாமல் பார்த்தவனுக்கு, இன்ப அதிர்ச்சி. வீணா!
"ஹலோ" என்றான் அஜய், அவசரமாக.
"சாரி" என்றாள் வீணா.
"இல்லை. என் மேலதான் தப்பு!"
"தப்பு யார் பேரிலேயோ! ஆனா, நாலஞ்சு நாள் உங்கிட்ட கோவிச்சுக்கிட்டுப் பேசாம இருந்தப்புறம், எனக்கு ஒரு பயம் வந்துடுச்சு!"
"என்ன பயம்?"
"நான் பேசாம இருந்ததால, நீ என் மேல கோவிச்சுக்கிட்டு, எங்கிட்டேந்து நிரந்தரமாப் பிரிஞ்சுடுவியோங்கற பயம். உன்னோட சந்தோஷமா இருந்த நாட்கள் மறுபடி வராதோன்னு பயம். அதனாலதான், நான் கால் பண்ணினேன். எங்கே சந்திக்கலாம், சொல்லு" என்றாள் வீணா.
கூடி இருந்த இன்பத்தை ஊடல் அழித்து விடுமோ என்று தனக்கு ஏற்பட்ட அச்சம், தன் காதலிக்கும் ஏற்பட்டிருப்பதை நினைத்து வியந்த அஜய், "உன் வீட்டு அட்ரஸை அனுப்பு. நான் அங்கே வந்து உன்னைக் கூட்டிக்கிட்டுப் போறேன். எங்கே போறதுன்னு அப்புறம் தீர்மானிக்கலாம். நீ ஃபோனை எடுக்கல. உன் அட்ரஸ் இல்லாததால, உன்னை நேரிலேயும் தொடர்பு கொள்ள முடியல. இந்த ஒரு நிலைமை இனிமேயும் வரக் கூடாது. அதனால, அட்ரஸ் ஃபர்ஸ்ட், மீட்டிங் நெக்ஸ்ட்!" என்றான் அஜய், பறிபோயிருந்த உற்சாகம் திரும்பக் கிடைத்தவனாக.
"இல்லடி. கல்யாணமான இந்த ஒரு வருஷத்தில, அவரு என்னை விட்டு ஒருநாள் கூடப் பிரிஞ்சதில்ல. ஆனா, இப்பதான் ரெண்டு வாரம் ஆஃபீஸ் டூர்னு போயிருக்காரு. போய், பத்து நாள ஆச்சு. இந்தjf பத்து நாள்ள, ஒரே ஒரு லெட்டர்தான் போட்டாரு. அதுக்கு பதில போட்டேன். மறுபடியும், அவர்கிட்டேந்து பதில் வரல. அவரோட லெட்டரைப் படிச்சாலாவது, கொஞ்சம் ஆறுதலா இருக்கும்" என்றாள் சுசீலா.
"எனக்கும்தான் கல்யாணம் ஆகி இருக்கு. எனக்கு என் புருஷன் ரெண்டு நாள் எங்கேயாவது போயிட்டு வர மாட்டாரான்னு இருக்கும். நீ என்னடான்னா..."
"உண்மையாவா சொல்ற? புருஷனை விட்டுப் பிரிஞ்சிருக்கறதில, அவ்வளவு சந்தோஷமா உனக்கு?" என்றாள் சுசீலா, வியப்புடன்.
"சில சமயம் அப்படித் தோணும். ஆனா, அவர் ரெண்டு நாள் எங்கேயாவது போயிட்டு வந்தாக் கூட, எப்ப திரும்பி வருவார்னு ஏக்கமாத்தான் இருக்கும்!" என்றாள் கமலி.
"பின்னே?"
"சும்மா உன்னை சீண்டிப் பாக்கறதுக்காக, அப்படிச் சொன்னேன். கவலைப்படாதே! அவர்தான் நாலஞ்சு நாள்ள வந்துடுவாரே!"
ஐந்து நாட்கள் கழித்து, சுகுமாரன் திரும்பி வந்தான். மாலையில் இருவரும் ஓய்வாக நடந்து கொண்டிருந்தபோது, "என்னங்க, பதினைஞ்சு நாள் என்னைப் பிரிஞ்சிருந்தது உங்களுக்கு எப்படி இருந்தது?" என்றாள் சுசீலா.
"உன் பிரிவுத் துயர் தாங்காம, ஆஃபீஸ் வேலையைப் பாதியிலேயே விட்டுட்டு ஓடி வந்துடலாமான்னு நினைச்சேன்!" என்றான் சுகுமாரன்.
"உண்மையாவா?" என்றாள் சுசிலா, பொங்கி வந்த மகிழ்ச்சியுடன்.
"நீ வேற! நமக்குக் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆச்சு. ஒத்தரை விட்டு ஒத்தர் கொஞ்ச நாள் பிரிஞ்சிருக்கறது, ஒரு நல்ல மாறுதல் இல்லையா? எனக்கு அப்படித்தான் இருந்தது. உனக்கும் அப்படித்தானே இருந்திருக்கும்?"
"இல்லீங்க. எனக்கு நீங்க இல்லாத பத்து நாளும் ரொம்ப கஷ்டமா இருந்தது. உங்களை எப்ப பாக்கப் போறோம்னு ஏக்கமா இருந்தது" என்றாள் சுசீலா, ஏமாற்றத்துடன்.
"இதெல்லாம் ஒரு கற்பனைதான். ஈருடல், ஓருயிர்னெல்லாம், நாவல்களில படிச்சுட்டும், சினிமாவில கேட்டுட்டும் நீயா கற்பனை பண்ணிக்கிட்டிருக்க. உண்மையில, நான் பதினைஞ்சு நாள் இல்லாம இருந்தது உனக்கு ஒரு பெரிய ரிலீஃபாத்தான் இருந்திருக்கும். இந்தப் பதினைஞ்ச நாள்ள, நீ ஒரு சுற்றுப் பெருத்திருக்கியே!" என்றான் சுகுமாரன், சிரித்துக் கொண்டே.
சுசீலா அடிபட்டவள் போல் கணவன் முகத்தைப் பார்த்தாள். அவன் இதை விளையாட்டுக்குச் சொல்லவில்லை, உண்மையாகவே அவன் அப்படித்தான் நினைக்கிறான் என்பதை உணர்ந்தபோது, தன்னைப் பிரிந்திருந்தது கணவனுக்கு வருத்தத்தை அளிக்காவிட்டாலும், அவனைப் பிரிந்திருந்தது தனக்கு வருத்தம் அளித்திருக்கிறது என்பதை அவன் புரிந்து கொள்ளாதது அவளுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
"எனக்கு சமையல் செய்யறதில ஒண்ணும் பிரச்னை இல்ல. நான் பாக்கற ஐடி வேலையை நீ பாக்கறியா?" என்றான் பரத்.
"நானும் படிச்சிருக்கேன். நீங்க வேலைக்குப் போக வேண்டாம்னு சொன்னதாலதானே நான் வேலைக்குப் போகல? வேணும்னா, நாளைக்கே என்னால ஒரு வேலை தேடிக்க முடியும். ஐடி வேலைதான் பாக்கணும்னாலும், ஒண்ணும் பிரச்னை இல்லை. இப்பல்லாம் கோடிங், டேடா சயன்ஸ் எல்லாம் ரெண்டு மூணு மாசத்திலேயே கத்துக்கலாம். அது மாதிரி கத்துக்கிட்டு, ஐடி வேலைக்கே போறேன். நீங்க வீட்டில இருந்தே சமைக்கிறீங்களா?"
பரத் பதில் பேசாமல், அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டான்.
அதற்குப் பிறகு, இரண்டு மூன்று நாட்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. பரத் வீட்டில் சாப்பிடுவதில்லை. சௌம்யாவும் அதைப் பொருட்படுத்தாமல், தனக்கு மட்டும் சமையல் செய்து கொண்டாள்.
மூன்று நாட்கள் ஆன பிறகு, சௌம்யாவின் மனதில் இலேசாக ஒரு கவலை எழுந்தது.
'இப்படியே எத்தனை நாள் ஓடும்? நான் கொஞ்சம் அதிகமாகப் பேசி விட்டேனோ? இன்று மாலை பரத் அலுவலகத்திலிருந்து வந்ததும், அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்!'
ஆனால், அன்று மாலை சௌம்யாவின் அம்மா ருக்மிணி அவளுக்கு ஃபோன் செய்தாள். ருக்மிணியின் தோழி அபிராமி ஊரிலிருந்து வருகிறாளாம். ருக்மிணியின் வீட்டுக்கு வந்து விட்டு, உடனேயே ஒரு திருமண வரவேற்புக்குப் போய் விடுவாளாம். சௌம்யா குழந்தையாக இருந்ததிலிருந்தே, அபிராமி அவளைப் பார்த்து வந்திருக்கிறாள். அவளுக்கு சௌம்யாவின் மீது ஒரு தனி அன்பு உண்டு.
"அபிராமி உன்னைப் பாக்கணும்னு ஆசைப்படுவா. நீ கொஞ்ச நேரம் வந்துட்டுப் போறியா?" என்றாள் ருக்மிணி.
சௌம்யா யோசித்தாள். இரண்டு மூன்று நாட்களாக, பரத் வீட்டுக்கு வரும்போதே சாப்பிட்டு விட்டு வந்து விடுகிறான். இன்றும் அப்படித்தான் வருவான். அதனால் அம்மா வீட்டுக்குப் போய் விட்டு வந்த பிறகு, பரத்திடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, அவனை சமாதானப்படுத்தலாம் என்று நினைத்து, அம்மா வீட்டுக்குக் கிளம்பினாள் சௌம்யா.
ஆனால், அம்மா வீட்டுக்குப் போய்க் காத்திருந்ததுதான் மிச்சம். அபிராமி வரவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த பிறகு, ருக்மிணி அபிராமிக்கு ஃபோன் செய்து கேட்டபோது, நேரமாகி விட்டதால், நேராகத் திருமண வரவேற்புக்குப் போய் விட்டதாகவும், இன்னொரு முறை வருவதாகவும் அபிராமி சொல்லி விட்டாள்.
ருக்மிணி ஃபோனை வைத்ததும், "ஏம்மா, ஃபோன்லேயாவது அபிராமி ஆன்ட்டிகிட்டப் பேசி இருப்பேனே!" என்றாள் சௌம்யா.
"அவ கல்யாண மண்டபத்தில இருக்கா. ஒரே சத்தமா இருக்கு. அவ பேசறதே சரியாக் கேக்கல. அதனாலதான் ஃபோனை வச்சுட்டேன்" என்றாள் ருக்மிணி.
வந்ததற்கு, அம்மா வீட்டில் சாப்பிட்டு விட்டுப் போய் விடலாம் என்று நினைத்தாள் சௌம்யா.
அதற்குள் ருக்மிணி, "அப்ப நீ கிளம்பு. உன் புருஷன் ஆ்பீஸ்லேந்து வரதுக்குள்ள, அவருக்கு ஏதாவது சமைச்சு வைக்க வேண்டாமா?" என்று கூறியபோது, திருடனுக்குத் தேள் கொட்டியது போல், எதுவும் சொல்ல முடியாமல் கிளம்பினாள் சௌம்யா. வீட்டுக்குப் போய்த் தனக்காக ஏதேனும் சமைக்க வேண்டுமே என்று நினைத்தபோது, சௌம்யாவுக்கு எரிச்சலாக வந்தது.
சௌம்யா விட்டுக்குப் போனபோது, பரத் சோஃபாவில் அமர்ந்து மடிக்கணினியில் ஆழ்ந்திருந்தான். சௌம்யா உள்ளே நுழைந்ததை கவனித்தாலும், அவளை நிமிர்ந்து பார்க்காமல் வேலையில் ஆழ்ந்திருந்தான்
பரத் காட்டிய அலட்சியத்தால் ஏற்பட்ட கோபத்துடனும், சமையல் செய்ய வேண்டுமே என்ற எரிச்சலுடனும், சமையலறைக்குள் நுழைந்தாள் சௌம்யா. பரத்திடம் மன்னிப்புக் கேட்டு, அவனை சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அடியோடு போய் விட்டிருந்தது.
சமையலறைக்குள் நுழைந்ததுமே, ஏதோ வித்தியாசமாக உணர்ந்தாள் சௌம்யா. சமீபத்தில்தான் ஏதோ சமைக்கப்பட்டிருப்பது போன்ற மணம் வந்தது.
மேடை மீது வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களைத் திறந்து பார்த்தாள் சௌம்யா. ஹாட்பேக்கில் பட்டர்-நான், இரண்டு பாத்திரங்களில் காலிஃப்ளவர் சாப்ஸ் மற்றும் வெஜ் கிரேவி ஆகிய சைட் டிஷ்கள்!
பரத்தான் சமைத்து வைத்திருக்கிறான்!
இன்ப அதிர்ச்சியுடன், ஹாலுக்குப் போவதற்காக சௌம்யா திரும்பியபோது, அங்கே சத்தம் போடாமல் பரத் வந்து நின்று கொண்டிருந்தான்.
சட்டென்று அவளை அணைத்துக் கொண்ட பரத், "சாரி சௌம்யா!" என்றான்.
சௌம்யாவுக்கு அழுகை வந்து விடும் போல் இருந்தது.
"நான்தான் சாரி சொல்லணும். நான் ரொம்ப லக்கி!" என்றாள் சௌம்யா.
"எதுக்கு? ஒரு அருமையான ஷெஃப் புருஷனாக கிடைச்சதுக்கா?"
சௌம்யா வாய்விட்டுச் சிரித்தாள்.
"என்ன அபிராமி ஆன்ட்டி வந்திருந்தாங்களா?" என்றான் பரத், குறும்பாகச் சிரித்தபடி..
"இதெல்லாம் உங்க ஏற்பாடுதானா? என் அம்மாவும் இதுக்கு உடந்தையா?" என்றாள் சௌம்யா, பொய்க் கோபத்துடன்.
"ஐயோ, மறுபடியும் கோவிச்சுக்கிட்டு, எங்கிட்ட பேசாம இருந்துடாதே! ஆனா,, அப்படிக் கோவிச்சுக்கிட்டா கூட, நல்லதுதான். நாம அன்பா இருக்கறவங்ககிட்ட சண்டை போட்டுட்டு, மறுபடி சேந்துக்கறப்ப, வெயில்ல நடந்துட்டு வந்து, ஒரு நீரோடையில இறங்கித் தண்ணி குடிக்கிற மாதிரி இருக்கு. அதுவும், அந்தத் தண்ணி ஒரு மர நிழலுக்குப் பக்கத்தில இருந்தா எவ்வளவு குளிர்ச்சியா இருக்கும்!" என்றான் பரத்.
"ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக.
"கிரீஷ் உங்கிட்ட பேசி எத்தனை நாளாச்சு?"
"ஒன்பது நாள்!"
"இந்த ஒன்பது நாள்ள நீ அவருக்கு எத்தனை தடவை ஃபோன் பண்ணி இருப்ப?"
"கணக்கு வச்சுக்கல!"
"மெஸ்ஸேஜ் அனுப்பினது?"
"ஒரு நாளைக்கு பத்துக்குக் குறையாது"
"ஆனா எதுக்கும் அவர்கிட்டேந்து பதில் இல்ல!"
மாதங்கி மௌனமாக இருந்தாள்.
"என்ன செய்யப் போற?" என்றாள் நளினி.
"தொடர்ந்து முயற்சி பண்ணிக்கிட்டே இருப்பேன். வேற என்ன செய்ய முடியும்?"
"இத்தனை நாளா இறங்கி வராதவர், இனிமே இறங்கி வருவாரா?"
"நான் திரும்பத் திரும்ப முயற்சி செஞ்சா, என் மேல இரக்கப்பட்டாவது இறங்கி வர மாட்டாராங்கற நம்பிக்கைதான்!"
"ஒரு சின்ன சண்டை. அதுக்காக ஒரு நாள் ரெண்டு நாள் பேசாம இருக்கலாம். எனக்கும் பிரதீப்புக்கும் கூட இப்படி நடந்திருக்கு. ஆனா, அடுத்த நாள் அவரே வந்து சமாதானமாப் பேசுவாரு. ஆனா, உன் ஆளு நீ இவ்வளவு தடவை ஃபோன் பண்ணியும், மெஸ்ஸேஜ் அனுப்பியும், சமாதானம் ஆகாம, ஒரு சின்ன ஊடலை இத்தனை நாள் இழுத்துக்கிட்டிருக்காரு. ஆனா, நீ இன்னும் விடாம அவரை சமாதானப்படுத்திக்கிட்டிருக்க!"
"நம்மகிட்ட கொஞ்சம் கூட அன்பு இல்லாதவர் மாதிரி நடந்துக்கிறாரே, அவர்கிட்ட நாம ஏன் திரும்பத் திரும்பப் போய்க் கெஞ்சணும்னு எனக்கே சில சமயம் தோணும். ஆனா..."
"ஆனா என்ன?" என்றாள் நளினி.
"அவர் மேல எனக்கு இருக்கற காதல்தான் என்னை இப்படிச் செய்யத் தூண்டுது" என்றாள் மாதங்கி, ஒரு கணம் கண்களை மூடியபடி.
No comments:
Post a Comment