Friday, June 30, 2023

1212. கண்களே உறங்குங்கள், கனவு காண வேண்டும்!

"ஏண்டி மல்லிகா, வெளியூர் போன உன் புருஷன் எப்ப...டீ திரும்பி வருவான்?" என்றாள் ராக்காயி.

ஊர்வம்பு பேசுவதையே தொழிலாகக் கொண்டிருக்கும் இந்தக் கிழவிக்கு என்னைச் சீண்டிப் பார்க்காவிட்டால் தூக்கம் வராது போலிருக்கிறது. தினமுமா இதே கேள்வியைக் கேட்பாள்?

"வந்ததும் முதல்ல உங்ககிட்ட  வந்து சொல்றேன் பாட்டி!" என்றபடியே அங்கிருந்து நகர்ந்தாள் மல்லிகா.

ராக்காயின் கேள்வியைத் தொடர்ந்து மல்லிகாவின் சிந்தனை ஓடியது.

'அவரு எங்கே இருக்கார்னும் தெரியாது, எப்ப வருவார்னும் தெரியாது!'

திடீரென்று மல்லிகாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது:

ஒருவேளை அவர் வராமலே போயிட்டா?

சேச்சே! அது எப்படி வராமப் போவாரு? நான் அவருக்காகக் காத்திருக்கறது அவருக்குத் தெரியாதா?

ஒருவேளை அவர் பிரிவைத் தாங்காம நான் உயிரை விட்டிருப்பேன்னு நினைச்சுருப்பாரோ?

ஒருவேளை அப்படி நினைச்சு வராமலே இருந்துட்டா?

இந்த எண்ணம் மல்லிகாவுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது.

'இல்லை. நான் கல்நெஞ்சுக்காரி. அதனால உங்க பிரிவைத் தாங்கிக்கிட்டு இன்னும் உயிரோடதான் இருக்கேன். நீங்க எவ்வளவு காலம் கழிச்சுத் திரும்பி வந்தாலும் இந்த உயிரைப் பிடிச்சுக்கிட்டு உங்களுக்காகக் காத்துக்கிட்டிருப்பேன்!'

இந்தச் செய்தியை அவருக்கு எப்படித் தெரிவிப்பது? அவர் எந்த ஊரில் இருக்கிறார் என்று தெரிந்தால் அந்த ஊருக்குச் செல்லும் யாரிடமாவது சொல்லி அனுப்பலாம்! ஆனால் அவர்எந்த ஊரில் இருக்கிறார் என்றே தெரியவில்லையே!

ரவு வந்து விட்டது. வழக்கம் போல் உறக்கம் வரவில்லை.

'கண்களே! இன்று ஒரு நாளாவது உறங்குங்களேன்! அப்படி உறங்கினால், அந்த உறக்கத்தில் கனவு வரும். கனவு வந்தால் அதில் என் கணவர் வருவார். அவரிடம் நான் உயிருடன் இருக்கும் செய்தியைச் சொல்லுவேன். எனவே, கண்களே, என்னிடம் இரக்கம் காட்டிக் கொஞ்சம் உறக்கம் கொடுங்கள்!'

படுக்கையில் படுத்துக் கொண்டு உறங்கும் முயற்சியில் கண்களை மூடிக் கொண்டாள் மல்லிகா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவுநிலையுரைத்தல்
குறள் 1212
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.

பொருள்:குறள் 1213
நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1211. நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு!

கடல் தாண்டிச் சென்று வணிகம் செய்துப் பெரும் பொருள் ஈட்டி வருவதாகச் சொல்லி நீலாவின் கணவன்  கதிரவன் அவளைப் பிரிந்து சென்று பல மாதங்கள் கடந்து விட்டன.

கதிரவன் எங்கே இருக்கிறான், எந்த நிலையில் இருக்கிறான், எப்போது திரும்பி வருவான் என்பவற்றை அறிய முடியாமல் பெரும் துயரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாள் நீலா.

முறையான உணவு, சரியான உறக்கம் இவற்றை நீலா அனுபவித்து நீண்ட காலம் ஆகி விட்டது.

டலில் ஒரு கப்பல் விரைவாக வந்து கொண்டிருக்கிறது. அந்தக் கப்பலின் உச்சியில் கதிரவன் நின்று கையை உயர்த்தி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறான்.

 'அட, அவன் என்னைப் பார்த்துத்தான் பேசுகிறான்!'

என்ன பேசுகிறான் என்று உன்னிப்பாக கவனித்தாள் நீலா. 

'நான் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு நாட்களில் உன்னிடம் வந்து சேர்ந்து விடுவேன்' என்று அவன் உரக்கக் கூவியது அலைகளின் இரைச்சல்களுக்கிடையே நீலாவின் காதில் கேட்டது.

சட்டென்று கண் விழித்தாள் நீலா.

இது கனவா?

வெளியில் அதிகாலை வெளிச்சம் தோன்றுவதற்கான அறிகுறிகள் தெரிந்தன.

விடியற்காலையில் கண்ட கனவு பலிக்கும் என்று சொல்வார்களே! 

அப்படியானால் கதிரவன் இரண்டு நாட்களில் வந்து விடுவானா? என் பிரிவுத் துயர் இரண்டு நாட்களில் முடிவுக்கு வந்து விடுமா?

கணவனின் தூதாக அவனிடமிருந்து இந்த நற்செய்தியைத் தாங்கி வந்த இந்தக் கனவுக்கு நான் விருந்து வைக்க வேண்டாமா?

விருந்தாக எத்தகைய அமுதைப் படைக்கலாம் என்று நினைத்தபடி அடுப்படியை நோக்கி விரைந்தாள் நீலா.

சரியான உணவில்லாமல் காய்ந்து கொண்டிருந்த அவள் வயிறு தனக்கு உணவு கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் ஒருமுறை சுருங்கி விரிந்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவுநிலையுரைத்தல்
குறள் 1211
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து

பொருள்:
(யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Wednesday, June 28, 2023

1210. நிலவுக்கு ஒரு வேண்டுகோள்!

'இவ்வளவு நாள் நெருக்கமா இருந்தவர் திடீர்னு காணாம போயிட்டாரே, ஏன்?'

அமுதா தன்னைத் தானே தினமும் கேட்டுக் கொள்ளும் கேள்வி இது.

இந்தக் கேள்வியை அவள் தன் தோழி வசந்தாவிடம் கேட்டபோது, "நான் சொன்னா உனக்கு வருத்தமாத்தான்  இருக்கும். பொம்பளைங்க நாம காதலில வலுவா இருக்கற மாதிரி ஆம்பளைங்க இருக்க மாட்டாங்க. உன் ஆள் இப்ப வேற ஒரு பொண்ணோட சுத்திக்கிட்டிருப்பார்னு நினைக்கிறேன்!" என்றாள் வசந்தா.

அதற்குப் பிறகு அமுதா வசந்தாவிடம் இது பற்றிப் பேசவில்லை. வேறு யாரிடமும் கூடப் பேசவில்லை.

'பரவாயில்லை. என் காதலனை நானே தேடிக் கண்டு பிடிச்சுக்கறேன்!' என்ற உறுதியுடன் அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடங்களுக்குத் திரும்பத் திரும்பச் சென்று தேடினாள் அமுதா.

"இவ ஏன் பைத்தியம் பிடிச்சவ மாதிரி லைஞ்சுக்கிட்டிருக்கா?" என்று சிலர் அவள் காதுபடவே பேசினர். 

ஆனால் அத்தகைய பேச்சுக்களை அமுதா லட்சியம் செய்யவில்லை.

பல இடங்களுக்கு அலைந்து சோர்ந்து அமுத அந்தக் கோவில் வாசலில் அமர்ந்தபோது  பொழுது இருட்டத் தொடங்கி இருந்தது.

அப்போதுதான் அவளுக்கு அந்த எண்ணம் தோன்றியது.

'இத்தனை நாட்களாக அவரைப் பகல் வேளைகளில் மட்டும்தான் தேடி இருக்கிறேன். இனி இரவு வேளைகளில் தேடிப் பார்த்தால் என்ன? ஒருவேளை பகலில் நடமாடினால் என் கண்ணில் பட்டு விடுவோமோ என்று அஞ்சி இரவில் மட்டுமே நடமாடுகிறாரோ என்னவோ!'

வானத்தைப் பார்த்தாள் அமுதா. வானத்தில் நிலவு அரைவட்டமாக இருந்தது. 'இந்த நிலவு இருக்கும் வரையில் வெளிச்சம் இருக்கும். ஆனால் நிலவு எத்தனை நேரம் இருக்கும் என்று தெரியவில்லையே!'

வானத்தை அண்ணாந்து பார்த்து, "ஏ நிலவே! பல நாட்கள் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்த என் காதலர் இப்போது என்னைப் பிரிந்து எங்கோ சென்று விட்டார். நான் அவரைத் தேடிக் கண்டு பிடிக்கும் வரை நீ வானிலிருந்து மறையக் கூடாது!" என்றாள் அமுதா.

அந்தப் பக்கம் போய்க் கொண்டிருந்த ஒருவயதான பெண், "இத்தனை நாளா  பித்துப் பிடிச்ச மாதிரி ஊரைச் சுத்திச்சுத்தி வந்துக்கிட்டிருந்தா. இப்ப வானத்தைப் பார்த்து ஏதோ பேசறா. பைத்தியம் ரொம்ப முத்திடுச்சு போல இருக்கு. இவ அம்மாக்காரிகிட்ட சொல்ல வேண்டியதுதான்!' என்று நினைத்துக் கொண்டாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121 
நினைந்தவர் புலம்பல்
குறள் 1210
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

பொருள்:
தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1209. ஈருடல் ஓருயிர்!!

"ரெண்டு உடம்புக்குள்ள ஒரு உயிர் இருக்க முடியுமா?"

குணவதி இவ்வாறு கேட்டதும் அவளுடைய தோழி சந்திரா பெரிதாகச் சிரித்தாள்.

"ஏதாவது கவிதையில படிச்சியா என்ன?"

"இல்லை. என் காதலர்தான் அப்படிச் சொன்னாரு!"

"எச்சரிக்கையா இருந்துக்கடி. இப்படியெல்லாம் மிகையாப் பேசறவங்களை நம்பவே கூடாது!"

'அன்று சந்திரா விளையாட்டாகத் தன்னை எச்சரித்தது இன்று உண்மையாகி விட்டதே!' என்று நினைத்தபோது ஏற்கெனவே பலவீனமடைந்திருந்த குணவதியின் உடல் மேலும் சோர்வடைந்தது.

சோமன் அவளைச் சந்தித்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. ஒருவேளை வெளியூர் போய் விட்டானோ என்று முதலில் நினைத்தாள். 

ஒருநாள் சற்றுத் தொலைவிலிருந்து அவள் அவனைப் பார்த்து விட்டு அவனிடம் விரைந்தாள். ஆனால் அவளைப் பார்த்து விட்ட சோமன் வேகமாக வேறு புறம் சென்று விட்டான்.

அப்போதுதான் குணவதிக்குப் புரிந்தது சோமன் தன் மீது வைத்திருந்த காதல் காற்றில் கரைந்து விட்டதென்று.

இன்னொரு நாள் குணவதி சோமனை வேறொரு பெண்ணுடன் பார்த்தாள். ஒருவேளை அவளிடமும் 'நாம் இருவரும் வேறு உடல் கொண்டிருந்தாலும் நம் இருவருக்கும் ஒரே உயிர்தான்' என்று சொல்லிக் கொண்டிருப்பானோ?

'ஆனால் என்னைப் பொருத்தவரை ஈருடல் ஓருயிர் என்று சோமன் சொன்னது சரிதான். அவரைப் பிரிந்த பிறகு என் உயிர் என்னை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறதே! இனி இந்த இரண்டு உயிர்களில் அவர் உயிர் மட்டும்தானே மிஞ்சி இருக்கப் போகிறது!' என்ற எண்ணம் குணவதியின் மனதில் தோன்றியபோதே அவள் கூறுவதை ஆமோதிப்பது போல் அவள் கண்களிலிருந்து நீர்த்துளிகள் வெளிப்பட்டன.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
குறள் 1209
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.

பொருள்:
நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது என்னிடம் அன்பு இல்லாமல் இருப்பதை நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Tuesday, June 27, 2023

1208. காதலர் கோபிப்பாரா?

"என்னடி எப்பப் பார்த்தாலும் உன் புருஷனைப் பத்தின நினைப்புத்தானா? உலகத்தில வேற விஷயமே இல்லையா என்ன? நாங்கல்லாம் இருக்கிறது உன் கண்ணுக்குத் தெரியலியா?" என்றாள் வாசுகியின் தாய் மணியம்மை.

அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த வாசுகியின் தோழி சிலம்பரசி, "வாசுகியை ரொம்ப கோவிச்சுக்காதீங்கம்மா! அவ ஏற்கெனவே ரொம்ப வருத்தத்தல இருக்கா" என்றாள்.

"நான் கோவிச்சுக்கறது போதாது. நீயும் அவகிட்ட கடுமையாச் சொல்லு. அப்பவாவது அவ திருந்தறாளான்னு பாக்கலாம்!" என்றபடியே உள்ளே சென்று விட்டாள் மணியம்மை.

"அம்மா சொல்லிட்டாங்க இல்ல? நீயும் உன் பங்குக்கு என்னைத் திட்டுடி!" என்றாள் வாசுகி சிலம்பரசியிடம்.

"நான் யாருடி உன்னைத் திட்ட? உன் புருஷன் ஊர்லேந்து வந்தப்பறம், 'என் பெண்டாட்டியைத் திட்டினியா?'ன்னு என்னைக் கோவிச்சுக்கிட்டார்னா?" என்றாள் சிலம்பரசி தோழியின் துயர மனநிலையைச் சற்றே மாற்றும் முயற்சியில்.

வாசுகி பதில் சொல்லவில்லை.

"அது சரி. நீ உன் புருஷனை அதிகம் நினைச்சுக்கிட்டே இருக்கேன்னு உங்கம்மாவும் மத்தவங்களும் கோவிச்சுக்கறது இருக்கட்டும். உன் புருஷனுக்கு இது தெரிஞ்சா 'ஏன் என்னை ரொம்ப அதிகமா நினைச்சு உன்னைக் கஷடப்படுத்திக்கிட்டிருக்கே?'ன்னு உன்னைக் கோவிச்சுக்க மாட்டாரா?" என்றாள் சிலம்பரசி..

"நிச்சயமா கோபிச்சுக்க மாட்டாரு. ஏன்னா அவரை நினைச்சுக்கிட்டிருக்கறதுதான் என் பிரிவுத் துன்பத்துக்கு மருந்துன்னு அவருக்குத் தெரியும். என் மனசைப் புரிஞ்சுக்காம நான் அவரை அதிகமா நினைக்கறேன்னு என்னைக் குத்தம் சொல்றதுக்கு அவரு உங்களை மாதிரி ஆள் இல்லையே!" என்றாள் வாசுகி.

அதைச் சொல்லும்போது வாசுகியின் முகம் மலர்ந்திருந்ததை சிலம்பரசி கவனித்தாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
குறள் 1208
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

பொருள்:
காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினம் கொள்ள மாட்டார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1207. எப்போதும் உன் நினைவில்!

"காலையில கண் விழிச்சதுமே என் முகத்தைத்தான் பாப்பாரு. அப்பதான் அவருக்கு அந்த நாள் மகிழ்ச்சியா அமையும்னு சொல்லுவாரு. இப்ப என்ன செய்யறாரோ தெரியல!" என்றாள் காஞ்சனா.

குளித்து விட்டு வந்து வேறு உடை உடுத்திக் கொண்டதும், "அவரு முதல்ல என்னைப் பாக்க வந்தப்ப இந்தப் புடவைதான் உடுத்திக்கிட்டிருந்தேன்!" என்றாள்.

இதற்கு பதில் சொல்ல வாயெடுத்த அவள் தாய் சகுந்தலா பேசாமல் இருந்து விட்டாள்.

இரவு குழிப் பணியாரம் அருந்தும்போது, "அவருக்கு ரொம்பப் பிடிச்ச உணவு குழிப் பணியாரம்தான்!" என்றாள் காஞ்சனா.

"ஏண்டி, உன் புருஷன் சம்பாதிக்கறதுக்காகக் கடல் தாண்டிப் போயிருக்காரு. அவரு திரும்பி வர வரையில பொறுமையாத்தான் இருக்கணும். காலையிலேந்து ராத்திரி வரைக்கும் எல்லா விஷயத்திலேயும் அவரைத் தொடர்பு படுத்திப் பேசிக்கிட்டே இருந்தா உன்னோட பிரிவுத் துன்பம் அதிகமா இல்ல ஆகும்?" என்றாள் சகுந்தலா.

"நான் எப்பவும் அவரை நினைச்சுக்கிட்டிருக்கறதால மனசளவிலேயாவது அவரோட சேந்து இருக்கேன். அப்படி இருக்கறப்பவே என்னால பிரிவுத் துன்பத்தைத் தாங்க முடியல. அவரை நினைக்காம இருந்துட்டா மனசளவில அவரோட ஒண்ணா இருக்கற சந்தோஷம் கூட இருக்காது. அப்ப பிரிவுத் துன்பத்தைத் தாங்கறது இன்னும் கஷ்டமா இருக்குமே!" என்றாள் காஞ்சனா.

"என்னவோ நீ சொல்றது எனக்கு ஒண்ணுமே புரியல!" என்றாள் சகுந்தலா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
குறள் 1207
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

பொருள்:
மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்குபோதே பிரிவுத் துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆகுமோ?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, June 25, 2023

1206. கணவன் பிரிந்த பின்...

"கட்டின பருஷன் இவளைக் கைவிட்டுட்டு வேற ஒரு பொண்ணோட எங்கேயோ போயிட்டான். இவ கொஞ்சம் கூட வருத்தப்படாம உல்லாசமா வாழ்ந்துக்கிட்டிருக்கா!"

தெருவில் நடந்து கொண்டிருந்த செல்வியின் காதில் இந்தப் பேச்சு விழுந்ததும், சட்டென்று திரும்பிய செல்வி அவ்வாறு பேசிய அந்த நடுத்தர வயதுப் பெண்மணி அமர்ந்திருந்த திண்ணையை நோக்கி விரைந்தாள்.

அவளுடன் நடந்து வந்து கொண்டிருந்த அவள் தோழி காந்திமதி, "நில்லுடி! அவங்க கூடப் போய் சண்டை போடப் போறியா? வேண்டாண்டி" என்று செல்வியைத் தடுக்க முயன்றாள்.

ஆனால் செல்வி தோழியின் பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

செல்வி தங்களை நோக்கி வருவதைக் கண்டதும் திண்ணையில் அமர்ந்திருந்த அந்த இரண்டு பெண்களும் சற்றுப் பதட்டமடைந்தனர்.

"ஏம்மா, என் புருஷன் என்னை விட்டுட்டு ஓடிட்டான்னா நான் உயிரோடயே இருக்கக் கூடாதா? தற்கொலை பண்ணிக்கணுமா?" என்றாள் செல்வி, தன்னைப் பற்றிப் பேசிய பெண்ணைப் பார்த்து.

"நான் அப்படிச் சொல்லல!" என்றாள் அந்தப் பெண் பதட்டமான குரலில்.

"உங்க புருஷன் இறந்துட்டாரு. அதுக்காக நீங்க உடன்கட்டை ஏறினீங்களா? நல்லா சாப்பிட்டுட்டுத் திண்ணையில உக்காந்து தெருவில போறவங்களைப் பத்தி வம்பு பேசிக்கிட்டு சந்தோஷமாத்தானே இருக்கீங்க?"

"போதும்டி. வா, போகலாம்" என்று செல்விழின் கையைப் பிடித்து இழுத்தாள் காந்திமதி.

காந்திமதியின் கையை உதறி விட்டு செல்வி தொடர்ந்து பேசினாள். 

"கோவலன் மாதவிகிட்ட போனதும் கண்ணகி உயிரை விட்டுடல. அவ உயிரோட இருந்ததாலதான் அவளால கோவலனோட மறுபடியும் சேர்ந்து வாழ முடிஞ்சுது!"

அந்தப் பெண் சமதானமாக ஏதோ சொல்ல முயல, அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் திரும்பி நடந்தாள் செல்வி. காந்திமதியும் அவளுடன் நடந்தாள்.

சற்று தூரம் நடந்ததும், "ஏண்டி செல்வி, உண்மையாவே உன் புருஷன் திரும்பி வருவாருங்கற நம்பிக்கையிலதான் நீ வாழ்ந்துக்கிட்டிருக்கியா?" என்றாள் காந்திமதி.

"அந்த நம்பிக்கையெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூட இல்லடி. சும்மா வீம்புக்காக அவங்ககிட்ட அப்படிச் சொன்னேன். உண்மையில என் புருஷனோட சேர்ந்து நான் சந்தோஷமாக இருந்த நாட்களை நினைச்சுத்தான் நான் வாழ்ந்துக்கிட்டிருக்கேன். மத்தபடி நான் உயிரோட இருக்கறதுக்கு எந்த அர்த்தமும் இல்லை!"

சொல்லிக் கொண்டிருக்கும்போதே நெஞ்சில் பொங்கி வந்த அழுகையை செல்வி கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டதை காந்திமதியால் உணர முடிந்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
குறள் 1206
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.

பொருள்:
நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர் வாழ முடியும்?.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Thursday, June 22, 2023

1205. நெஞ்சினிலே நினைவு முகம்!

"நாம ஆசைப்படற விஷயம் நமக்குக் கிடைக்கலேன்னா அதை விட்டுடணும்!" என்றாள் பூங்கொடி, தன் தோழி அருணாவிடம்.

"ஆறு மாசமா என்னோட காதலை அவருக்கு நான் எப்படியெல்லாமோ வெளிப்படுத்திட்டேன். ஆனா அவரு தன் மனசில எனக்கு இடம் கொடுக்க மாட்டேங்கறாரு. நாம ஆசைப்படற விஷயம் கிடைக்கலேன்னா அதை விட்டுடணும்னு நீ சுலபமா சொல்லிட்ட!" என்றாள் அருணா.

பூங்கொடி தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"நீ சொன்னபடி செய்யறது சுலபம் இல்லேன்னு நான் சொன்னா அதுக்கு நீ ஏன் என் மேல கோபிச்சுக்கிட்டு உன் முகத்தைத் திருப்பிக்கற?" என்றபடியே தோழியின் முகத்தைத் தனக்கு நேரே திருப்பிய அருணா, தோழியின் கண்களில் பெருகி வழிந்து கொண்டிருந்த கண்ணீரைக் கண்டு திடுக்கிட்டு, "நீ ஏண்டி அழற?" என்றாள்.

"நான் சுலபமா சொல்லல. என் அனுபவத்தை வச்சுத்தான் சொல்றேன். நானும் ஒத்தரைக் காதலிச்சு அவர் என் காதலை ஏத்துக்காததால வேற வழியில்லாம என் முயற்சிகளைக் கைவிட்டவதான். அதானாலதான் சொன்னேன், ஆசைப்படற விஷயம் நமக்குக் கிடைக்கலேன்னா அதை விட்டுடணும்னு!" என்றாள் பூங்கொடி கண்ணீரைத் துடைத்தபடி.

"அடிப்பாவி! எங்கிட்ட கூட சொல்லாம இருந்துட்டியே! அது சரி. அவர் மேல ஆசையை விட்டுட்டேன்னா ஏன் உன் கண்ல கண்ணீர் வருது?"

"ஆசையை விட்டேன்னு எங்கே சொன்னேன்? அவர்கிட்ட என் காதலைத் தெரிவிக்கிற முயற்சிகளை விட்டுட்டேன், அவ்வளவுதான். அவர் உருவம் என் நெஞ்சிலே இருந்துக்கிட்டு என்னை வாட்டிக்கிட்டேதானே இருக்கு?"

"ஏண்டி, உன் காதலை ஏத்துக்காதவரை உன் மனசில வச்சுக்கிட்டிருக்கியே, உனக்கு வெக்கமா இல்லை?" என்றாள் அருணா.

"நான் ஏன் வெட்கப்படணும். என்னை அவர் தன்னோட இதயத்துக்குள்ள விடாம வெளியே நிறுத்தி வச்சுக்கிட்டு, அவர் மட்டும் என் நெஞ்சுக்குள்ள வந்து உக்காந்திருக்கறதுக்கு அவர்தானே வெட்கப்படணும்?" என்றாள் பூங்கொடி கோபத்துடன்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
குறள் 1205
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.

பொருள்:
தம்முடைய நெஞ்சில் எம்மை வர விடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வருவதைப் பற்றி நாண மாட்டாரோ?.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1204. எந்தன் நெஞ்சில் நீங்காத...

தமயந்தி தன் தோழி திலகாவின் வீட்டுக்குச் சென்றபோது அங்கிருந்த ஒரு படத்தைப் பார்த்தாள்.

அதில் அனுமார் தன் மார்பைப் பிளந்து காட்ட அதில் ராமரும் சீதையும் இருந்தனர்.

"புதுசா வாங்கினியா?" என்றாள் தமயந்தி.

"ஆமாம். நான் ராமரோட பக்தையாச்சே!" என்றாள் திலகா.

"அப்ப ராமர் படத்தைன்னா வாங்கி இருக்கணும்? உன்னோட படத்தை வாங்கி இருக்கே!"

"அடிச்சேன்னா என்று கையை ஓங்கிய திலகா, "இந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நம் மனசில ஒத்தர் இருக்கார்ங்கறதை நம்மாலயும் இப்படித் திறந்து காட்ட முடிஞ்சா நல்லா இருக்கும் இல்ல?" என்றாள்.

"ஓ, நீ அப்படி வரியா? நீ உன் மனசில எப்பவும் உன் காதலன் சுந்தரைத்தான் நினைச்சுக்கிட்டிருகேங்கறதை அவர் நம்ப மாட்டாரா? நீ இதயத்தைத் திறந்து காட்டினாத்தான் நம்புவாரா?" 

"உனக்குக் காதல் வந்தாதான் உனக்கு இது புரியும்!"

"வேண்டவே வேண்டாம். என்னால நெஞ்சத்தைக் கிழிச்செல்லாம் காட்ட முடியாதும்மா!" என்ற தமயந்தி, "இந்தப் படத்தைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒண்ணு தோணும்" என்றாள் தொடர்ந்து.

"என்ன தோணும்?"

"நீ ராமர் பக்தையாச்சே! கோவிச்சுக்க மாட்டியே?"

"என்னடி, ஏதாவது தப்பா சொல்லப் போறியா?" என்றாள் திலகா.

"இல்லை. அனுமார் தன்னோட நெஞ்சைக் கிழிச்சு அதில ராமர் இருக்கார்னு காட்டி இருக்காரே, ராமர் எப்பவாவது தன் நெஞ்சைக் கிழிச்சு அதில அனுமார் இருக்கார்னு காட்டி இருக்காரா?"

திலகா மௌனமாக இருந்தாள்.

"என்னடி, கோவிச்சுக்கிட்டு என்னைத் திட்டுவேன்னு நினைச்சேன். பேசாம இருக்க. ரொம்பக் கோபமா?" என்றாள் தமயந்தி பாதி விளையாட்டாகவும், பாதி உண்மையாகவும்.

'என் மனசில எப்பவும் சுந்தர் இருக்கான். அது மாதிரி சுந்தர் மனசில எப்பவும் நான் இருப்பேனா?' என்ற சிந்தனையை  தமயந்தியின் கேள்வி, திலகாவின் மனதில் ஏற்படுத்தி விட்டதை தமயந்தி உணரவில்லை.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
குறள் 1204
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.

பொருள்:
எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! (அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ?.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Wednesday, June 21, 2023

1203. அவன் என்னை நினைக்கும்போதெல்லாம்....

 சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பத்மாவுக்குப் புரை ஏறிற்று.

"என்னம்மா புரையேறுது?" என்றுபடியே தண்ணீர் தம்ளருடன் தாயிடம் விரைந்தாள் கனகா.

"உன் அப்பா ஊருக்குப் போயிருக்காரு இல்ல? என்னை நினைச்சிருப்பாரு. அதான் புரையேறி இருக்கு!" என்றாள் பத்மா.

"ஏம்மா, அப்பா வேற ஊர்ல இருந்துக்கிட்டு உன்னை நினைச்சா உனக்குப் புரையேறுமா?" என்றாள் கனகா கேலியாக.

"வெளியூர் போனால்தான்னு இல்ல, அவர் ஊர்ல இருக்கறப்ப, ஆஃபீஸ்ல என்னை நினைச்சாக் கூட எனக்குப் புரையேறும்!"

"சரி. அப்பா உன்னை நினைக்கறப்ப நீ சாப்பிட்டுக்கிட்டிருந்தா உனக்குப் புரையேறும். மத்த நேரங்கள்ள நினைச்சா?"

"தும்மல் வரும்!" என்றாள் பத்மா.

கனகாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

"என்னடி சிரிக்கற? உனக்கும் கல்யாணம் ஆகி உன் புருஷன் உன்னை நினைக்கறப்ப உனக்குத் தும்மல் வரும். அப்போதான் உனக்கு இது புரியும்!" என்றாள் பத்மா.

'கல்யாணம் ஆகாவிட்டால் என்ன? எனக்கு ஒரு காதலன் இருக்கிறானே! அவன் என்னை நினைக்கும்போது எனக்குத் தும்மல் வருமா?'

அதற்குப் பிறகு தனக்கு எப்போது தும்மல் வருகிறது என்று கவனிக்க ஆரம்பித்தாள் கனகா.

ஒவ்வொரு முறை தும்மல் வந்தபோதும் தன் காதலன் சுரேஷ் தன்னை நினைக்கிறான் என்ற உணர்வில் கனகாவுக்கு மனதில் மகிழ்ச்சி பொங்கியது.

'என்ன இது? அம்மா சொன்னபோது இது என்ன முட்டாள்தனம் என்று நினைத்து எனக்குச் சிரிப்பு வந்தது. இப்போது நானும் இந்த நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு விட்டேனே!' என்ற சிந்தனை ஏற்பட்டாலும், 'நம்பிக்கை சரியோ, தவறோ, அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறதே, அது போதும்!' என்று நினைத்துக் கொண்டாள் கனகா.

தும்மல் வரும் உணர்வு வந்ததுமே கனகாவின் மனதில் மகிழ்ச்சி ததும்பத் துவங்கியது. 'சுரேஷ் என்னை நினைக்கிறான்!'

ஆனால் தும்மல் வருவது போல் தோற்றமளித்து விட்டு வராமலே இருந்து விட்டது!

'இது என்ன? ஏன் வந்த தும்மல் வராமலேயே அடங்கி விட்டது? ஒருவேளை சுரேஷ் என்னை நினைக்கத் துவங்கி வேறு ஏதோ சிந்தனை வந்ததால் என்னை நினைக்காமலே இருந்து விட்டானோ?' என்று நினைத்துப் பார்த்தபோது கனகாவுக்கு ஏமாற்றமாக இருந்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
குறள் 1203
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

பொருள்:
தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Monday, June 19, 2023

1202. பிரிவு சுடுமோ?

"நீ என் நெருங்கின தோழிங்றதால உங்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும். தப்பா நினைச்சுக்க மாட்டியே!"

"கேளுடி!"

"காதல் இனிமையானதுன்னு சொல்றாங்களே, உண்மையா?"

"ஏண்டி, ஒத்தரைக் காலிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்டு அவரோட சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டிருக்கேன். என்னைப் பார்த்து ஏன் இந்தக் கேள்வியைக் கேக்கற?"

"இப்ப நீ சந்தோஷமா இருக்கியா?"

"இப்ப மட்டும் இல்ல, எப்பவுமே சந்தோஷமாத்தான் இருக்கேன். ஏன் உனக்கு இந்த சந்தேகம்?"

"உன் கணவர் வெளியூருக்குப் போயிருக்காரே, அவரைப் பிரிஞ்சு இருக்கும்போது நீ இப்ப வருத்தமாத்தானே இருக்கணும்?"

"காதலரைப் பிரிஞ்சு இருந்தா வருத்தமாத்தான் இருக்கணும்னு அவசியம் இல்லையே!"

"சில பேரு அப்படி இருக்கறதைப் பாத்திருக்கேன்."

"அவங்களுக்குக் கல்யாணம் ஆகி இருக்காது!"

"அப்படீன்னா?"

"நான் காதலிச்சவரைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு அவரோட இல்லற சுகத்தை அனுபவிச்சப்பறம், அந்த சுகத்தோட இனிமை மனசில எப்பவுமே இருந்துக்கிட்டிருக்கு. என் கணவர் இல்லாதப்ப, அவரை நினைக்கும்போதெல்லாம் அந்த இனிமையான நினைவுதான் மனசில வருது. அதனால, அவரைப் பிரிஞ்சிருக்கறப்பவும், அந்த நினைவிலேயே நான் சந்தோஷமா இருக்கேன். ஆமாம், நீ ஏன் இப்ப இதைப் பத்திக் கேக்கற?"

"நான் ஒத்தரைக் காதலிக்கறேன். ஆனா அதை இன்னும் அவர்கிட்ட சொல்லல. காதல்ல பிரிவுத் துன்பம் ரொம்பக் கொடுமையானதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதனாலதான் இந்தக் காதலை வளர விடறதுக்கே பயமா இருக்கு. அதான் உங்கிட்ட கேட்டேன்."

"தைரியமா உன் காதலை முன்னே எடுத்துக்கிட்டுப் போ. எப்போதாவது உன் காதலரை நீ பிரிய வேண்டி இருந்தாலும் அவரோட நினைவு உனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்!"

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
குறள் 1202
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.

பொருள்:
தான் விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின்போது வரக் கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1201. வேண்டாம் அந்த போதை!

"கள் குடிக்கிறதை விட்டுடு" என்று பொன்னம்மாள் எத்தனையோ முறை தன் மகன் தண்டபாணியிடம் கூறியும் அவன் தன் தாயின் பேச்சைக் கேட்கவில்லை.

"விட்டுடணும்னுதாம்மா பாக்கறேன். ஆனா என்னால முடியலியே!" என்றான் தண்டபாணி.

"ஏண்டா, கள்ளு குடிச்சா அந்த போதை கொஞ்ச நேரம் இருக்கப் போகுது. தெளிஞ்சப்புறம் எல்லாம் போயிடும். அந்தக் கொஞ்ச நேர போதைக்காகக் குடிக்கணுமா?"

"அதாம்மா பிரச்னை! ஒரு தடவை குடிச்சா போதை அப்படியே இருந்தா நல்லா இருக்கும். ஆனா போதை தெளிஞ்சுடறதனால மறுபடி குடிக்கணும்னு வெறி வருது. அதைக் கட்டுப்படுத்த முடியல. சாப்பிட்ட சில மணி நேரங்கள்ள பசி எடுத்து மறுபடி சாப்பிடற மாதிரி!"

"நல்லா வியாக்கியானம் பண்ணு. நான் சொன்னா கேக்க மாட்டே.. கல்யாணத்துக்கப்புறம் உன் பெண்டாட்டி சொன்னாலாவது கேக்கறியான்னு பாக்கலாம்!" என்றாள் பொன்னம்மாள்.

திருமணமாகிச் சில நாட்களில் தண்டபாணி கள் குடிப்பதை நிறுத்தி விட்டான்.

"நான் சொன்னேன் இல்ல? பெத்தவ சொன்னா கேக்க மாட்ட, பொண்டாட்டி சொன்னா கேப்ப! எப்படியோ, நீ குடியை நிறுத்தினது எனக்கு சந்தோஷம்தான்" என்றாள் பொன்னம்மாள்.

"குடியை நிறுத்தச் சொல்லி அவ சொல்லலம்மா. நீ இத்தனை நாளா சொல்லிக்கிட்டு இருக்கறதனாலதான் நிறுத்தினேன்!" என்றான் தண்டபாணி.

"பொய் சொல்லாதடா!" என்றாள் பொன்னம்மாள்.

'பொய்தான். திருமணத்துக்குப் பிறகு மனைவியுடன் ஏற்பட்ட காதல் இன்பம்தான் நான் குடியை விட்டதற்குக் காரணம். ஒருமுறை அனுபவித்த காதல் இன்பம் எப்போதும் மனதில் இனிமையாக நிலைத்து நிற்பதை அனுபவிப்பதால்தான், அருந்தும்போது மட்டுமே இன்பமளிக்கும் கள்ளின் போதை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டேன். இதை எப்படி என்னால் உனக்கு விளக்க முடியும்?' என்று நினைத்துக் கொண்டான் தண்டபாணி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
குறள் 1201
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது

பொருள்:
உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, June 18, 2023

1200. அன்பே, அன்பே!

முகிலை முதல் முறையாகப் பார்த்ததுமே மலர்விழிக்கு அவன் மேல் ஒரு ஈடுபாடு வந்து விட்டது.

அடுத்த சந்திப்பிலேயே அது காதல் என்பது அவளுக்குப் புரிந்து விட்டது.

இருவரும் ஒரே கல்லூரியில் படித்ததால் அடிக்கடி சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது.

வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் மலர்விழி முகிலிடம் தன் காதலை வெளிப்படுத்தத் தவறவில்லை - முதலில் மறைமுகமாக, பிறகு மறைமுகமான முயற்சிகள் பலன் தரவில்லை என்றதும், நேரடியாகவே.

ஆனால் முகில் வெறுமனே சிரித்ததைத் தவிர வேறு பதில் சொல்லவில்லை.

கல்லூரியில் மற்ற பெண்களிடம் பழகுவது போல்தான் மலர்விழியிடம் பழகினான் முகில். அவள் மீது காதல் இருப்பதற்கான எந்த ஒரு அடையாளத்தையும் அவன் வெளிப்படுத்தவில்லை.

நான்கைந்து முறை முகிலிடம் தன் காதலை வெளிப்படுத்திய பிறகும், அவனிடமிருந்து சாதகமான பதில் வராததால் மலர்விழிக்கு மனச்சோர்வு ஏற்பட்டு விட்டது. தன் முயற்சியைத் தொடர வேண்டுமா என்று அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.

லர்விழியின் தோழி வசந்தி அதிகம் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ளவள். புத்தகத்தில் ஏதாவது சுவையானதைப் படித்தால் அதை அவள் மலர்விழியிடம் பகிர்ந்து கொள்வாள்.

"மலர்! இதைப் பாரேன்! கனூட்னு ஒரு அரசன் இருந்தானாம். எவ்வளவு பெரிய அரசானா இருந்தாலும் அவனால இயற்கையைக் கட்டுப்படுத்த முடியாதுன்னு காட்டறதுக்காகத் தன் அமைச்சர்கள், அதிகாரிகளோட கடற்கரையில போய் நின்னுக்கிட்டு, கரையை நோக்கி வந்துக்கிட்டிருந்த ஒரு பெரிய அலையைப் பாத்து, 'ஏ அலையே! அரசனான நான் உத்தரவு போடறேன். நீ அங்கேயே நின்னுடு. கரைக்கு வந்து என் காலை நனைக்காதே' ன்னு சொன்னானாம். சுவாரசியமா இல்லை?" என்றாள் வசந்தி சிரித்தபடி.

"அதை விட கடல்லேந்து எல்லா நீரையும் இறைச்சு கடலையே தூர்த்திருக்கலாமே! அப்புறம் அலைகளே இல்லாம போயிருக்குமே!" என்றாள் மலர்விழி எங்கோ பார்த்தபடி.

"என்னடி உளரற? கடலை எங்கேயாவது தூர்க்க முடியுமா?"

'முகிலோட மனசில என் மேல அன்பை உண்டாக்க முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கேனே, கடலைத் தூர்க்கறது அதை விட சுலபமாத்தான் இருக்கும்!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட மலர்விழி, "சும்மா சொன்னேன்" என்றாள் தோழியிடம்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
 (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

குறள் 1200
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

பொருள்:
நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.


அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, June 17, 2023

1199. இந்திர ஜாலம்!

விமான நிலையத்தில் விஜயாவும் அவள் அம்மாவும் காத்திருந்தபோது பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணுடன் விஜயா பேச்சுக் கொடுத்தபோது வந்தனா என்ற அந்தப் பெண் தான் மும்பையைச் சேர்ந்தவள் என்றும் சென்னையில் ஒரு பயிற்சிக்காக வந்து விட்டுத் திரும்பப் போவதாகவும் கூறினாள்.

"என்ன பயிற்சி?" என்றாள் விஜயா.

"மார்க்கெடிங்" என்றாள் வந்தனா.

"ஏன் மும்பையிலேயே நிறைய பயிற்சி கிடைக்குமே! ஏன் சென்னைக்கு வந்தீங்க? கம்பெனி ஸ்பான்ஸரா?"

"கம்பெனி ஸ்பான்ஸராவது! எனக்கு இன்னும் வேலையே கிடைக்கல. இந்தப் பயிற்சியில சேந்தா வேலை கிடைக்குங்கறதாலதான் என் சொந்தப் பணத்தில இந்தப் பயிற்சிக்கு வந்துட்டுப் போறேன்!"

விஜயாவின் அம்மா ஏதோ சைகை கொடுப்பது போல் விஜயாவின் காலை அழுத்தினாள். விஜயா அதைப் பொருட்படுத்தாமல், "யார் நடத்தற பயிற்சி அது?" என்றாள் வந்தனாவிடம்.

"இந்திரகுமார்னு ஒத்தர் நடத்தறாரு. சென்னையில அவர் ரொம்பப் பிரபலமாச்சே! நீங்க கூட கேள்விப்பட்டிருக்கலாம்."

"கேள்விப்பட்டிருக்கேன். ஆனா அவர் பயிற்சி சுமார்தான்னு சில பேரு சொன்னாங்களே!"

"தப்பா சொல்லி இருப்பாங்க. இல்லேன்னா யாராவது பொறைமையால அப்படிச் சொல்லி இருப்பாங்க. எனக்குத் தெரிஞ்சவங்க நாலைஞ்சு பேருக்கு இந்தப் பயிற்சி முடிச்சப்புறம் நல்ல வேலை கிடைச்சிருக்கு. அதனாலதான் நான் இதில சேர்ந்தேன்!" என்றாள் வந்தனா.

"எத்தனை நாள் பயிற்சி?"

"ரெண்டு வாரம்."

"மார்க்கெடிங் மானேஜ்மென்ட் கோர்ஸ்னா கல்லூரியில ரெண்டு வருஷம் படிக்கணும். ரெண்டு வாரப் பயிற்சியில என்ன சொல்லிக் கொடுக்க முடியும்?"

"இது படிப்பு இல்லை, பயிற்சி. மார்க்கெடிங் பயிற்சின்னு சொன்னாலும் இது ஒருவிதத்தில நம்மையே மாற்றக் கூடிய பயிற்சி."

"பர்சனாலிடி டெவலப்மென்ட் மாதிரியா?"

"அது மாதிரி. ஆனா அதுக்கும் மேல. சுருக்கமா சொல்றதுன்னா இந்தப் பயிற்சிக்கப்புறம் நம்மால நம்மையே மார்க்கெடிங் செய்ய முடியும்! பயிற்சியாளர் இந்திரகுமார் நமக்குள்ள ஒரு மாஜிக்கையே உண்டு பண்ணிடுவாரு. அவர் செய்யற மாயாஜாலத்தை இந்திரஜாலம்னு சொல்லலாம்! அவரை மாதிரி ஒரு பர்சனாலிடியை நான் பாத்ததே இல்லை. பயிற்சி முடிஞ்சப்புறம் எனக்குள்ள ஏற்பட்ட மாறுதலை என்னால உணர முடியுது. இப்பவே ஒரு நல்ல வேலையில சேந்துட்ட மாதிரி உணரறேன்!"

சில நிமிடங்களில் வந்தானாவின் விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு வந்ததால் அவள் விஜயாவிடம் விடைபெற்று எழுந்து சென்றாள்.

வந்தனா சென்றதும், விஜயாவின் அம்மா, "ஏண்டி! கட்டின பெண்டாட்டியைக் கைவிட்டுட்டு இன்னொரு பெண்ணோட வாழ்ந்துக்கிட்டிருக்கறவன் அவன். அவனைப் பத்தித் தூண்டித் தூண்டிக் கேக்கற? இந்திரஜாலமாம்! இந்திரன் அகலிகை மேல ஆசைப்பட்ட மாதிரி இன்னொரு பெண்கிட்ட ஆசை வச்சவன்னு வேணும்னா சொல்லலாம். எனக்குப் பத்திக்கிட்டு வருது!" என்றாள் விஜயாவிடம் ஆற்றாமையுடன்.

"அவர் என்னை விட்டுப் பிரிஞ்சுட்டாரு. நாங்க இனிமே நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழப்போறதில்ல. ஆனாலும் அவரை யாராவது புகழ்ந்து பேசறதைக் கேட்டா எனக்கு சந்தோஷமா இருக்கும்மா. அதனாலதான் அந்தப் பொண்ணு அவரைப் புகழ்ந்து சொன்னதை ஆவலாக் கேட்டேன்!" என்றாள் விஜயா பெருமூச்சுடன்.

 காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
 (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

குறள் 1199
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.

பொருள்:
என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்கு இனியதாகும்.

.குறள் 1200
குறள் 1198

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Monday, June 12, 2023

1198. எனக்கொரு காதலி இருக்கின்றாள்!

"இன்னிக்கு என் மாமியார் என்ன செஞ்சாங்க தெரியுமா?"

"போதும்டி உன் மாமியார் கொடுமைப் புலம்பல்! தினமும் கேட்டு அலுத்துப் போச்சு. வேற ஏதாவது பேசுவோம். அங்கே தூண் பக்கத்தில நிக்கறாளே ஒரு பொண்ணு, அவ தினமும் கோவிலுக்கு வரா போலருக்கே! உனக்கு அவளைத் தெரியுமா?"

"தெரியாம என்ன? நம்ம குமுதா! பாவம், ரொம்ப நல்ல பொண்ணு!"

"ஏன் பாவம்கற? நல்லவளா இருக்கறது பாவமா என்ன?"

"நான் பாவம்னு சொன்னது அவளோட பரிதாப நிலைமைக்காக. புருஷன் மேல அவ்வளவு அன்பா இருக்கா. அவ தினமும் கோவிலுக்கு வரது கூடத் தன் புருஷனுக்காக வேண்டிக்கறதுக்காகத்தான் இருக்கும்."

"பரிதாப நிலைமைன்னு சொன்னியே?"

"தன் புருஷன் மேல அவ உயிரையே வச்சிருக்கா. ஆனா அவன் அவளைத் திரும்பியே பாக்க மாட்டேங்கறான்!"

"ஏன், கழுத்து வலியா?"

"அட போடி இவ ஒத்தி, நான் அவ கஷ்டத்தைப் பத்தி சொல்லிக்கிட்டிருக்கச்சே பொருத்தமில்லாம ஜோக் அடிக்கறா!"

"சாரி, சொல்லு. அவ புருஷன் ஏன் அவளைத் திரும்பிப் பாக்க மாட்டேங்கறாரு?"

"அவனுக்கு அவளைப் பிடிக்கல!" 

"ஏன் பிடிக்கல. அழகா இருக்கா. புருஷன் மேல உயிரையே வச்சிருக்கான்னு சொல்ற. அப்புறம் ஏன் அவருக்கு அவளைப் பிடிக்கலையாம்?"

"அவன் வேற ஒரு பெண்ணைக் காதலிச்சான். ஆனா அவன் வீட்டில ஒத்துக்கல. அவங்க வற்புறுத்தலுக்காகத்தான் குமுதாவைக் கட்டிக்கிட்டான். ஆனா பழைய காதலை மறக்க முடியததாலயோ என்னவோ, குமுதாகிட்ட கொஞ்சம் கூடஅன்பு காட்ட மாட்டேங்கறான்!"

"இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?"

"குமுதா எனக்குத் தெரிஞ்ச பொண்ணுதான். அவ பல தடவை இதையெல்லாம் எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டு அழுதிருக்கா."

"அவங்ளுக்குக் கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆச்சு?"

"ஒரு வுருஷத்துக்கு மேல ஆகியிருக்கும்!"

"உன் மாமியாரைக் கொடுமையானவங்கன்னு நீ அடிக்கடி சொல்ற. ஆனா அவங்க கூட குமுதாவை விடக் கொடுமையானவங்களா இருக்க மாட்டாங்கன்னு நினைக்கறேன்."

"என்னடி சொல்ற?"

"இந்த மாதிரி நிலையில இருந்தா நான் உயிரையே விட்டிருப்பேன். ஆனா குமுதா இன்னும் உயிரோட இருக்காளே அதைச் சொல்றேன். நீ அவளைப் பாவம்னு சொன்னு சரிதான்!"

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
 (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

குறள் 1198
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

பொருள்:
தன்னால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு யாரும் இல்லை.


அறத்துப்பால்                                                               பொருட்பால்

1197. மன்மதன் அம்பு!

"காமன் பண்டிகை. ராத்திரி முழுக்க நடக்குமாம். வாடி, போயிட்டு வரலாம்!" என்று அழைத்தாள் வள்ளி.

"ராத்திரி முழுக்கவா? எப்படியும் ராத்திரி முழுக்க நான் தூங்கப் போறதில்ல. அங்கே போய்தான் உக்காந்துட்டு வரேனே!" என்று  கூறியபடியே வள்ளியுடன் கிளம்பினாள் மீனாட்சி.

இரவு முழுவதும் காமன் பண்டிகை நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டுத் தோழிகள் இருவரும் விடிகாலையில் விடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

"பல நாள் தூங்காத அலுப்போ என்னவோ தெரியலை. விழாவைப் பாக்காம தூங்கி வழிச்சுக்கிட்டு இருந்த. 'என்ன இவ சாமி ஆடற மாதிரி தலையை ஆட்டிக்கிட்டே இருக்கா!' ன்னு பக்கத்தில உக்காந்திருந்தவங்கல்லாம் கேலி செஞ்சாங்க!" என்றாள் வள்ளி.

"நான் உண்மையாகவே சாமி ஆடிக்கிட்டுத்தான் இருந்தேன். ஒத்தர் சாமி ஆடறப்ப அவங்க மேல சாமி வந்து பேசும்னு சொல்லுவாங்க. ஆனா நான்  சாமிகிட்ட பேசிக்கிட்டிருந்தேன். அவ்வளவுதான் வித்தியாசம்!" என்றாள் மீனாட்சி.

"சாமிகிட்ட பேசினியா? எந்த சாமிகிட்ட, என்ன பேசின?" என்றாள் வள்ளி கேலிச் சிரிப்புடன்.

"காமன் பண்டிகைன்னா என்ன சொல்லு பாக்கலாம்!"

"ஏண்டி, நீ நல்லாத் தூங்கிட்டு எங்கிட்ட கதை கேட்டு சமாளிக்கறியா? காமன்னா யாரு? மன்மதன்! மன்மதன்கிட்ட ஒரு வில் இருக்கும். அதைக் கரும்பு வில்னு சொல்லுவாங்க. அந்த வில்லிலேந்து அவன் யார் மேலயாவது அம்பை விட்டா அவங்க காதல்ல ஈடுபட்டுடுவாங்க. 'மன்மதன் அம்பு' ன்னு கமல் நடிச்ச ஒரு படம் கூட வந்திருக்கே! காமன் கணைன்னு இலக்கியங்கள்ள கூட வரும். 

"அந்த காமன் ஒரு  தடவவை சிவபெருமான் மேலேயே அம்பை விட்டுட்டான். அவருக்குக் கோபம் வந்து தன் நெற்றிக் கண்ணால காமனை அதாவது மன்மதனை எரிச்சுட்டாரு. அப்புறம் மன்மதனோட மனைவி ரதி கேட்டுக்கிட்டப்பறம் காமனை உயிர்ப்பிச்சாரு. 

"இந்தக் கதையைத்தான் ராத்திரி பூரா தெருவில ஊர்வலம் போயும், நெருப்பு மூட்டியும் நடிச்சுக் காட்டினாங்க. நீதான் தூங்கி வழிஞ்சிக்கிட்டிருந்தியே, இல்லை, சாமி ஆடிக்கிட்டிருந்தியே, உனக்கு எப்படி கதை புரிஞ்சிருக்கும்?"

"புரிஞ்சதனாலதாண்டி கண்ணை மூடிக்கிட்டு அந்த காமன்கிட்ட வேண்டிக்கிட்டிருந்தேன்!" என்றாள் மீனாட்சி.

"என்ன வேண்டிக்கிட்டிருந்த?" என்றாள் வள்ளி.

"காமதேவனே! கடவுள்கிட்ட கூட உன் வேலையைக் காட்டற. ஆனா ஏன் என் காதலன் மேல உன் அம்பை வீச மாட்டேங்கற? என்னோட காதலைக் கண்டுக்காம அவன் அலட்சியமா இருக்கறதால, என்னைக் காதல் நோய் பிடிச்சு வாட்டறதும், என் மேனியில பசலை படறதும் உனக்குத் தெரியலியா?" என்று மீனாட்சி கூறும்போதே அவள் கண்களில் நீர் படர்ந்தது.

"அதான் காமன் பண்டிகைக்கு வந்து காமன்கிட்ட வேண்டிக்கிட்டிருக்கியே, காமன் நிச்சயமா உன் வேண்டுதலை நிறைவேத்துவான்!" என்று கூறி தோழியின் கைகளை ஆதரவுடன் பற்றிக் கொண்டாள் வள்ளி.

 காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
 (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

குறள் 1197
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்

பொருள்:
காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ள மாட்டான் போலும்!

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, June 10, 2023

1196. கவிதாவின் மனச்சுமை

 தெருவில் காவடி தூக்கிச் சென்றவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் கவிதாவும் அவள் தோழி யாமினியும்.

"காவடி ரொம்ப எடை இருக்கும் இல்ல? எப்படி அதைத் தோளிலே சுமந்துக்கிட்டு நடக்கறாங்க? சில பேரு ஆடிக்கிட்டே வேற நடக்கறாங்க!" என்றாள் கவிதா.

"காவடியோட எடை ரெண்டு பக்கமும் சமமா இருக்கும். மையப்பகுதியை தோளிலே வச்சுக்கிட்டிருக்கறதால, எடையோட அழுத்தம் ரெண்டு பக்கமும் சமாமாப் பரவி இருக்கும். நாம கடையில போய் பொருட்கள் வாங்கிக்கிட்டு வரச்சே, எல்லாப் பொருட்களையும் ஒரே பையில போட்டுத் தூக்கிக்கிட்டு வரதை விட, பொருட்களை ரெண்டு பையில போட்டு ரெண்டு கையிலேயும் பையோட நடந்தா எடையோட அழுத்தம் குறைவா இருக்கும் இல்ல? அது மாதிரி." என்று விளக்கினாள் யாமினி.

கவிதாவின் பார்வை காவடி சுமந்து நடந்து கொண்டிருந்தவர்களை விட்டு அகலவில்லை.

"என்னடி, அங்கேயே பாத்துக்கிட்டிருக்கே?" என்ற யாமினி, காவடி சுமந்து வருபவர்களை உற்றுப் பார்த்து விட்டு, "ஓ, உன்னோட ஆளும் காவடி தூக்கிக்கிட்டு  வராறா? நான் கவனிக்கலையே!" என்றாள்.

'என்னோட ஆளுன்னு நான்தான் நினைச்சுக்கிட்டிருக்கேன். ஆனா அவரு இன்னும் என்னோட காதலை ஏத்துக்கலையே! அப்படி ஏத்துக்கிட்டா எனக்கு மனச்சுமை இல்லாம இருக்கும். ஒருபக்கக் காதலை மனசில சுமந்துக்கிட்டு இருக்கறது எவ்வளவு பெரிய சுமை தெரியுமா?' என்று மனதுக்குள் நினைத்துஃ கொண்டாள் கவிதா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
 (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

குறள் 1196
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.

பொருள்:
காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.


அறத்துப்பால்                                                               பொருட்பால்

Tuesday, June 6, 2023

1195. விரும்பியது கிடைத்தும்...

"வாழ்த்துக்கள் மலர்! பிடிவாதமா இருந்து நீ காதலிச்சவரையே கைப்பிடிச்சுட்டியே!"

"அவ காதலிச்சு கைப்பிடிச்சது அவ அத்தை பையனைத்தானே? அதில என்ன ஆச்சரியம் இருக்கு?"

"இருக்கே! மலரோட காதலை அவ அத்தை பையன் அவ்வளவு சுலபமா ஏத்துக்கலையே! ஆனா இவ பிடிவாதமா இருந்து அவரைத் தன் காதலை ஏத்துக்க வச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டா!"

திருமண நிகழ்வில் தனிமையில் சிறிது நேரம் தோழிகளுடன் இருந்தபோது தோழிகள் இவ்வாறு பேசியதைக் கேட்க மலர்விழிக்குப் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

லர்விழிக்குத் திருமணமாகிச் சில மாதங்கள் கழித்து அவள் நெருஙுகிய தோழி பல்லவி அவளைப் பார்க்க வந்தாள்.

"உன் கல்யாணத்துக்கு வர முடியல. சாரி!" என்றாள் பல்லவி.

"நீதான் கல்யாணம் ஆகி அமெரிக்கா போயிட்டியே, உன்னால எப்படி வர முடியும்"" என்றாள் மலர்விழி.

"ஏண்டி,மும்பையில இருந்துக்கிட்டு சென்னையில நடந்த உன்னோட திருமணத்துக்கு என்னால வர முடியலைங்கறதை சொல்லிக் காட்டறியா?" என்ற பல்லவி, "ஆமாம், ஏன் கிண்டலாப் பேசறப்ப கூட உன் முகம் இவ்வளவு சீரியஸா இருக்கு. உடம்பு சரியில்லையா?" என்றாள்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லையே!" என்று மலர்விழி சொல்லிக் கொண்டிருந்தபோதே அவளிடமிருந்து ஒரு விம்மல் வெடித்தது. அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் தோழியின் தோளில் சாய்ந்து தேம்பி அழ ஆரம்பித்தாள் மலர்விழி.

"என்னடி ஆச்சு? ஏன் அழறே?" என்றாள் பல்லவி திகைப்புடன்.

சில விநாடிகள் கழித்து அழுது ஓய்ந்தபின் மெல்லத் தலையை நிமிர்த்தினாள் மலர்விழி. கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டு இயல்பு நிலைக்கு வர முயன்றாள்.

பல்லவி தோழியின் தோளை ஆதரவுடன் அணைத்தபடி மௌனமாக இருந்தாள்.

"உனக்குத் தெரியுமே என் அத்தை பையன் முரளியைத்தான் நான் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்னு..." என்று ஆரம்பித்தாள் மலர்விழி.

"ஏன் உனக்கு அவரைக் கல்யாணம் பண்ணிக்கறதில விருப்பம் இல்லையா? உங்க அப்பா அம்மாவோட வற்புறுத்தலினாலதான் ஒத்துக்கிட்டியா?"

"வற்புறுத்தினது நான்தாண்டி! சின்ன வயசிலேந்தே முரளி மேல எனக்கு ஒரு ஈடுபாடு இருந்தது. ஆனா அவருக்கு என் மேல அந்த மாதிரி விருப்பம் எதுவும் இருந்ததில்ல போலருக்கு. என் விருப்பத்தை நான் என் அப்பாகிட்ட சொன்னப்ப, என அப்பா முரளியைக் கேட்டாரு. ஆரம்பத்தில முரளி தனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டாரு. ஆனா நான் அவரைத்தான் கல்யாணம் செஞ்சுக்கணும்னு பிடிவாதமா இருந்ததால என் அப்பா என் அத்தைகிட்ட, அதான் முரளியோட அம்மாகிட்ட, பேசி இருக்காரு. தன்னோட அம்மாவும் வற்புறுத்ததினதால முரளி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாரு போல இருக்கு. இப்ப கல்யாணத்துக்கப்புறம் ஏதோ கடமைக்காக என்னோட கணவனா இருக்கற மாதிரி நடந்துக்கறாரு. அவருக்கு என்கிட்ட அன்பு இருக்கற மாதிரி தெரியல. திருமண வாழ்க்கையில எனக்குக் கொஞ்சம் கூட மகிழ்ச்சியே இல்ல."

சொல்லி முடித்ததும் மலர்விழியின் கண்களில் மீண்டும் நீர் வழிய ஆரம்பித்தது.

"கவலைப்படாதேடி! கொஞ்ச நாள்ள எல்லாம் சரியாயிடும்!" என்றாள் பல்லவி ஆறுதலாக.

"எனக்கு அப்படித் தோணல!" என்றாள் மலர்விழி

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
 (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

குறள் 1195
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.

பொருள்:
நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Monday, June 5, 2023

1194. "கொடுத்து வைத்தவள்"

திருமணம் ஆனதிலிருந்தே பலரும் சுகன்யாவிடம் அடிக்கடி கூறும் சொற்கள்: "நீ கொடுத்து வச்சவடி."

எடுப்பான தோற்றம், நல்ல வேலை, வசதியான பெற்றோருக்கு ஒரே பையன் ஆகிய தகுதிகளுடன் சதீஷ் அவளுக்கு மணமகனாக அமைந்தபோது 'ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த, அதிகம் படிக்காத, வேலைக்குப் போகாத எனக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை எப்படிக் கிடைத்தார்? அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ள எப்படிச் சம்மதித்தார்? நான் என்ன அதிர்ஷ்டம் செய்திருக்கிறேனோ!' என்று மலைத்தாள் சுகன்யா.

எதிர்பார்த்தது போலவே சுகபோக வாழ்க்கை. பெரிய வீடு, வீட்டில் சமையல் உட்பட எல்லா வேலைகளுக்கும் ஆட்கள், சுகன்யா எங்காவது போக வேண்டுமென்றால் அவளுக்காக டிரைவருடன்  தயாராக இருக்கும் கார், அதற்கும் மேல் அவளிடம் அன்பு காட்டிய அவள் மாமியார் எல்லாம் அவள் நினைத்துப் பார்க்காத அளவில் அமைந்து விட்டன.

திருமணத்துக்குப் பிறகு சுகன்யா தன் பிறந்த வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் அவளுடைய அம்மா, அப்பா, தங்கை, அண்ணன் ஆகிய அனைவரும், "இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்!" என்று கூறுவார்கள்.

உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் ஆகியோரை அவள் சந்திக்க நேர்ந்தபோதெல்லாம் அவர்களும் இதையேதான் சொன்னார்கள்.

"ஏண்டி, கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சு, இன்னும் உனக்குக் குழந்தை உண்டாகலியே! நீயும் உன் புருஷனும் ஒரு நல்ல டாக்டரைப் பாருங்களேன்!" என்றாள் அம்மா.

"அதெல்லாம் வேண்டாம்மா!" என்றபடியே முகத்தைத் திருப்பிக் கொண்டாள் சுகன்யா - தன் கண்களில் பெருக்கெடுக்கும் கண்ணீரை அம்மா பார்த்து விடக் கூடாதே என்று.

முதலிரவன்று தனக்கு ஒரு நல்ல கணவன் கிடைத்து விட்டான் என்ற களிப்பில் இருந்த தன்னிடம், "இங்கே பாரு சுகன்யா! நான் உன்னை விரும்பிக் கல்யாணம் செஞ்சுக்கல. நான் ஒரு பெண்ணைக் காதலிச்சேன். அவ வேற ஜாதிங்கறதால அவளை நான் கல்யாணம் செஞ்சுக்க என் அம்மா சம்மதிக்கல. அவங்க வற்புறுத்தலாலதான் நான் உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். வெளியுலகத்துக்கு மட்டும்தான் நாம் கணவன் மனைவி! மத்தபடி நம்ம ரெண்டு பேருக்கு நடுவில எந்த உறவும் கிடையாது!" என்று சதீஷ் கூறி விட்டதையும், அப்போதிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மனதில் மகிழ்ச்சி இல்லாமல், 'இதுதான் என் விதி போலும்'  என்ற விரக்தியில் வாழ்ந்து கொண்டிருப்பதையும் தன் அம்மாவிடம் சொல்லி அவளுக்கு வருத்தம் ஏற்படுத்த விரும்பவில்லை சுகன்யா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
 (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

குறள் 1194
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.

பொருள்:
தாம் விரும்பும் கணவனால் விரும்பப்படாத நிலையில் மனைவி இருந்தால், அவள் தீவினை வசப்பட்டவளே.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Friday, June 2, 2023

1193. செங்கமலத்தின் செருக்கு!

"செங்கமலத்தோட புருஷன் வியாபாரத்துக்கு வெளியூர் போயிருக்காரு இல்ல?"

"ஆமாம். அதுக்கு என்ன?"

"ஆனா அவளைப் பாத்தா கணவனைப் பிரிஞ்ச வருத்தம் கொஞ்சம் கூட இருக்கறவ மாதிரி தெரியலையே!"

"இல்லையே! வருத்தமாத்தான் இருக்கா. சரியா சாப்பிடறதில்ல, தூங்கறதில்லன்னு அவ அம்மா எங்கம்மாகிட்ட வருத்தப்பட்டு சொன்னாங்களே!"

"அவ அம்மா சொல்றது இருக்கட்டும். நீ அவகிட்ட பேசிப் பாத்திருக்கியா?"

"இல்லை. அவளை எனக்கு அவ்வளவு பழக்கம் கிடையாது. என் அம்மாவுக்கு அவங்க அம்மாவைத் தெரியும். ஒரு தடவை கோவில்ல என் அம்மாகிட்ட பேசினதைக் கேட்டதை வச்சு சொல்றேன்."

"அதானே பாத்தேன்.  நீ செங்கமலத்துக்கிட்ட பேசி இருந்தா உனக்குத் தெரிஞ்சிருக்கும்!"

"நீ பேசினியா? அவ என்ன சொன்னா?"

"ஒரு ஆறுதலுக்காக 'பாவம் உன் புருஷன் உன்னைத் தனியா விட்டுட்டுப் போயிட்டாரே!'ன்னு சொன்னேன். அதுக்கு அவ 'போனா என்ன? ரெண்டு மூணு மாசத்தில வந்துடப் போறாரு. அவரு வியாபாரத்துக்குத்தானே போயிருக்காரு! வீட்டில பொண்டாட்டி இருக்கறப்ப இன்னொரு காதலி வீட்டுக்கா போயிருக்காரு?' அப்படின்னு பதில் சொன்னா. என் புருஷனுக்கு இன்னொரு காதலி இருக்கறதை சொல்லிக் காட்டறாளாம்! எவ்வளவு திமிர் பாத்தியா!"

"உன் புருஷனும், என் புருஷனும் ஊர்ல இருக்கறப்பவும் நம்மகிட்ட அன்பா இருக்க மாட்டாங்க. அவங்க வெளியூர் போயிட்டு வந்தாலும் முதல்ல தங்க காதலி வீட்டுக்குத்தான் போவாங்க. செங்கமலத்தோட கணவனுக்கு அவ மேல அவ்வளவு அன்பு இருக்கு. அவளுக்கு ஏன் திமிர் இருக்காது?"

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
 (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

குறள் 1193
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.

பொருள்:
தாம் விரும்பும் கணவனால் விரும்பப்பட்ட பெண்ணுக்கே (எப்படியும் விரைவில் அவர் வருவார் என்ற உறுதியினால்) வாழ்வோம் என்னும் செருக்கு, பொருத்தமாக இருக்கும்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...