அமுதா தன்னைத் தானே தினமும் கேட்டுக் கொள்ளும் கேள்வி இது.
இந்தக் கேள்வியை அவள் தன் தோழி வசந்தாவிடம் கேட்டபோது, "நான் சொன்னா உனக்கு வருத்தமாத்தான் இருக்கும். பொம்பளைங்க நாம காதல வலுவா இருக்கற மாதிரி, ஆம்பளைங்க இருக்க மாட்டாங்க. உன் ஆள் இப்ப வேற ஒரு பொண்ணோட சுத்திக்கிட்டிருப்பார்னு நினைக்கிறேன்!" என்றாள் வசந்தா.
அதற்குப் பிறகு, அமுதா வசந்தாவிடம் இது பற்றிப் பேசவில்லை. வேறு யாரிடமும் கூடப் பேசவில்லை.
'பரவாயில்லை. என் காதலனை நானே தேடிக் கண்டு பிடிச்சுக்கறேன்!' என்ற உறுதியுடன், அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடங்களுக்குத் திரும்பத் திரும்பச் சென்று தேடினாள் அமுதா.
"இவ ஏன் பைத்தியம் பிடிச்சவ மாதிரி அலைஞ்சுக்கிட்டிருக்கா?" என்று சிலர் அவள் காதுபடவே பேசினர்.
ஆனால், அத்தகைய பேச்சுக்களை அமுதா லட்சியம் செய்யவில்லை.
பல இடங்களுக்கு அலைந்து சோர்ந்து, அமுதா அந்தக் கோவில் வாசலில் அமர்ந்தபோது, பொழுது இருட்டத் தொடங்கி இருந்தது.
அப்போதுதான் அவளுக்கு அந்த எண்ணம் தோன்றியது.
'இத்தனை நாட்களாக, அவரைப் பகல் வேளைகளில் மட்டும்தான் தேடி இருக்கிறேன். இனி, இரவு வேளைகளில் தேடிப் பார்த்தால் என்ன? ஒருவேளை பகலில் நடமாடினால் என் கண்ணில் பட்டு விடுவோமோ என்று அஞ்சி, இரவில் மட்டுமே நடமாடுகிறாரோ என்னவோ!'
வானத்தைப் பார்த்தாள் அமுதா. வானத்தில் நிலவு அரைவட்டமாக இருந்தது. 'இந்த நிலவு இருக்கும் வரையில், வெளிச்சம் இருக்கும். ஆனால், நிலவு எவ்வளவு நேரம் இருக்கும் என்று தெரியவில்லையே!'
வானத்தை அண்ணாந்து பார்த்து, "ஏ நிலவே! பல நாட்கள் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்த என் காதலர், இப்போது என்னைப் பிரிந்து எங்கோ சென்று விட்டார். நான் அவரைத் தேடிக் கண்டு பிடிக்கும் வரை, நீ வானிலிருந்து மறையக் கூடாது!" என்றாள் அமுதா.
அந்தப் பக்கம் போய்க் கொண்டிருந்த ஒருவயதான பெண், "இத்தனை நாளா, பித்துப் பிடிச்ச மாதிரி ஊரைச் சுத்திச் சுத்தி வந்துக்கிட்டிருந்தா. இப்ப வானத்தைப் பார்த்து ஏதோ பேசறா. பைத்தியம் ரொம்ப முத்திடுச்சு போல இருக்கு. இவ அம்மாக்காரிகிட்ட சொல்ல வேண்டியதுதான்!' என்று நினைத்துக் கொண்டாள்.
நினைந்தவர் புலம்பல்
பொருள்:
திங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!
No comments:
Post a Comment