கதிரவன் எங்கே இருக்கிறான், எந்த நிலையில் இருக்கிறான், எப்போது திரும்பி வருவான் என்பவற்றை அறிய முடியாமல், பெரும் துயரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாள் நீலா.
முறையான உணவு, சரியான உறக்கம் இவற்றை நீலா அனுபவித்து நீண்ட காலம் ஆகி விட்டது.
கடலில் ஒரு கப்பல் விரைவாக வந்து கொண்டிருக்கிறது. அந்தக் கப்பலின் உச்சியில் கதிரவன் நின்று கொண்டு, கையை உயர்த்தி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறான்.
'அட, அவன் என்னைப் பார்த்துத்தான் பேசுகிறான்!'
என்ன பேசுகிறான் என்று உன்னிப்பாக கவனித்தாள் நீலா.
'நான் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு நாட்களில் உன்னிடம் வந்து சேர்ந்து விடுவேன்' என்று அவன் உரக்கக் கூவியது அலைகளின் இரைச்சல்களுக்கிடையே நீலாவின் காதில் கேட்டது.
சட்டென்று கண் விழித்தாள் நீலா.
இது கனவா?
வெளியில் அதிகாலை வெளிச்சம் தோன்றுவதற்கான அறிகுறிகள் தெரிந்தன.
விடியற்காலையில் கண்ட கனவு பலிக்கும் என்று சொல்வார்களே!
அப்படியானால், கதிரவன் இரண்டு நாட்களில் வந்து விடுவானா? என் பிரிவுத் துயர் இரண்டு நாட்களில் முடிவுக்கு வந்து விடுமா?
கணவனின் தூதாக அவனிடமிருந்து இந்த நற்செய்தியைத் தாங்கி வந்த இந்தக் கனவுக்கு நான் விருந்து வைக்க வேண்டாமா?
விருந்தாக எத்தகைய அமுதைப் படைக்கலாம் என்று நினைத்தபடி அடுப்படியை நோக்கி விரைந்தாள் நீலா.
சரியான உணவில்லாமல் காய்ந்து கொண்டிருந்த அவள் வயிறு தனக்கு உணவு கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் ஒருமுறை சுருங்கி விரிந்தது.
கனவுநிலை உரைத்தல்
பொருள்:
(யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?
No comments:
Post a Comment