காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
"ஆமாம். குவளை மலருக்கு ஒப்பிடுவாங்க!" என்றாள் குமுதினி.
"குவளை மலர் மட்டும் இல்ல, தாமரை மலர், அல்லி மலர் மாதிரி வேறு சில மலர்களுக்கும் ஒப்பிடுவாங்க. ஆனா, உன் கண்களை நான் மலர்களுக்கு ஒப்பிட மாட்டேன்!"
"ஏன், என்னோட கண்கள் அந்த அளவுக்கு அழகா இல்லையா?" என்றாள் குமுதினி, சற்றே கோபத்துடன்.
"இல்லை. உன் கண்களோட ஒப்பிடற அளவுக்கு அந்த மலர்களுக்கு அழகு போதாது!"
"இது ரொம்ப மிகையா இருக்கே!"
"மிகை இல்லை, உண்மைதான். இந்த மலர்களைப் பார். உன் கண்களைப் பார்த்துட்டு, அந்த அளவுக்கு நாம அழகா இல்லையேன்னு அதெல்லாம் தலை குனிஞ்சக்கிட்டு இருக்கிறதைப் பார்!"
பார்த்தாள். ஆமாம், அவை தலை குனிந்திருப்பது போல்தான் தோற்றமளித்தன. அதற்குக் காரணம் காற்றின் அழுத்தமும், அவற்றின் எடையின் அழுத்தமும்தான் என்பது குமுதினிக்குத் தெரியும். ஆயினும், கணவனின் புகழ்ச்சி அவளுக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளித்தது.
அந்த அனுபவம் இன்று பழங்கதை ஆகி விட்டது.
பொருள் ஈட்டுவதற்காக ராசேந்திரன் வெளிநாட்டுக்குச் சென்றபின், அவன் கொடுத்து விட்டுப் போன பிரிவுத் துன்பத்தால் அழுது அழுது, குமுதினியின் கண்கள் வீங்கி விட்டன.
தன் வீட்டுத் தோட்டத்தில் வந்து நின்று, செடிகளில் பூத்துக் குலுங்கிய மலர்களைப் பார்த்தாள் குமுதினி.
அன்று அவளுடைய கண்களை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் தலை குனிந்த மலர்களா இவை?
இன்று அந்த மலர்கள் நிமிர்ந்து கம்பீரமாக அவள் கண்களைப் பார்த்தன. அழுது வீங்கியதால் அழகிழந்து விட்ட அவள் கண்களைப் பார்த்து அந்த மலர்கள் ஏளனமாகச் சிரித்தது போல் தோன்றியது குமுதினிக்கு.
அவற்றின் ஏளனப் பார்வையைச் சந்திக்க முடியாமல், தன் கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் குமுதினி.
பொருள்:
பிரிவுத் துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.
1232. ஏன் இப்படிக் கேட்கிறார்கள்?
பார்ப்பவர்கள் எல்லாம் இதையே கேட்கிறார்கள்."என்ன பூங்கொடி, உன் காதலனோட ஏதாவது பிணக்கா?"
"அதெல்லாம் இல்லையே!" என்று பூங்கொடி சமாளித்தாலும், கேள்வியில் இருந்த உண்மை அவள் மனதை நெருப்பாகச் சுட்டது.
ஆனால் எல்லோரும் ஏன் இப்படிக் கேட்கிறார்கள் என்பது பூங்கொடிக்குப் புரியவில்லை, அவள் காதலனோடு பிணக்கு ஏற்பட்டிருப்பது அவள் முகத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்ன?
அவள் மீது அன்பைப் பொழிந்து வந்த கந்தமாறன், ஏனோ சில நாட்களாக அவளிடம் பராமுகமாக இருக்கிறான். அவளை வந்து பார்ப்பதில்லை. அவன் வீட்டுக்கும், அவன் வேலை செய்யும் இடத்துக்கும் ஓரிரு முறை சென்று அவனைப் பார்க்க பூங்கொடி முயன்றபோதும், அவன் ஏதோ சாக்குச் சொல்லி அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து விட்டான்.
விளையாட்டுப் போல் இரண்டு மாதங்கள் ஓடி விட்டன.
கந்தமாறன் மீண்டும் தன்னிடம் முன்பு போல் அன்பு காட்டுவானா?
"என்னடி? உன் காதலனோட உனக்கு என்ன பிணக்கு?" என்றாள் பூங்கொடியின் தோழி கலையரசி.
பொங்கி வந்த அழுகையைச் சட்டென்று மறைத்துக் கொண்ட பூங்கொடி, "அதெல்லாம் ஒன்றுமில்லை!" என்றாள்.
"நீ ஒண்ணுமில்லைன்னு சொன்னாலும், உன் கண் காட்டிக் கொடுக்குதே!"
"என்ன காட்டிக் கொடுக்குது?"
"உன் கண்கள்ள பசலை வந்து வெளுத்துப் போயிருக்கு. கண்ணில எப்பவும் ஈரம் கசிஞ்சுக்கிட்டே இருக்கு. நீ கண்ணாடியைப் பாக்கறதே இல்லையா"
ஓ! இதை வைத்துத்தான் எல்லாரும் என்னிடம் கேட்கிறார்களா? அட, காட்டிக் கொடுத்த கண்களே!
"சொல்லுடி!" என்று கலைச்செல்வி அவள் முகவாயைப் பிடித்துக் கேட்டபோது, பூங்கொடியின் கண்களிலிருந்து நீர் பெருக்கெடுத்து வழிய ஆரம்பித்தது.
பொருள்:
பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை என்பதைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.
1233. செய்தி சொல்லும் தோள்கள்
"புருஷன் பிரிஞ்சு போன அப்புறமும் தனியா உன் வீட்டிலதான் இருப்பேன்னு பிடிவாதம் பிடிச்சுக்கிட்டிருந்தே. இப்பவாவது அம்மா வீட்டுக்கு வரணும்னு தோணிச்சே!" என்றபடியே, மகள் ரேவதியை வரவேற்றாள் துர்க்கா.மாலையில் பள்ளியிலிருந்து திரும்பிய ரேவதியின் தங்கை ரோகிணி, ஓடி வந்து அக்காவை அணைத்துக் கொண்டாள்.
சற்று நேரம் கழித்து, ரேவதி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது, உள்ளே ரோகிணி அம்மாவிடம் மெல்லிய குரலில் பேசியது ரேவதியின் காதில் விழுந்தது.
"ஏம்மா, அக்கா இவ்வளவு இளைச்சுப் போயிட்டா? தோள் எலும்பெல்லாம் தெரியுது. அவளைப் பின்னாலேந்து கட்டிக்கிட்டப்ப, அவ தோள் எலும்பு என் கையில அழுந்தி வலிக்கிற மாதிரி இருந்தது!" என்றாள் ரோகிணி.
"அவ புருஷன் ஊருக்குப் போனதிலேந்து அவரை நினைச்சு நினைச்சு ரேவதி ரொம்ப இளைச்சுட்டா. எனக்கே அவளைப் பார்த்தப்ப, நம்ம ரேவதியா இவன்னு தோணிச்சு. என்ன செய்யறது? அவ புருஷன் திரும்பி வந்தப்புறம்தான் அவ பழையபடி ஆவா!" என்றாள் துர்க்கை.
கணவன் அவளுடன் இருந்தபோது, அவன் அடிக்கடி அவள் தோளில் தலையைச் சாய்த்துக் கொண்டு, "எவ்வளவு இதமா இருக்கு, மெத்தையில தலையை வைச்சுக்கிட்ட மாதிரி!" என்று சொன்னது ரேவதிக்கு நினைவு வந்தது.
'இப்போது சிறுமியான தங்கை கூட கவனிக்கும்படி, தோள் எலும்புகள் தெரியும் அளவுக்கு இளைத்து விட்டேனா என்ன?'
தெருவில் செல்லும் சிலர் தன்னை உற்றுப் பார்த்து விட்டுப் போவதாக ரேவதிக்குத் தோன்றியது.
ஒருவேளை, அவர்கள் தன் தோள்கள் இளைத்திருப்பதைப் பார்த்துத் தன் காதலன் தன்னை விட்டுப் பிரிந்திருப்பதைத் தெரிந்து கொள்வார்களோ என்ற அச்சத்தில், தன் சேலைத் தலைப்பால் தோள்களை நன்றாக மூடிக் கொண்டாள் ரேவதி.
பொருள்:
கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், (இப்போது மெலிந்து) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.
1234. பவளக்கொடியின் கண்ணீர் முத்துக்கள்!
"அதான் எனக்கும் சேர்த்து நீ பருத்திருக்கியே!" என்றாள் பவளக்கொடி.
"நான் ஒண்ணும் பருக்கல. உண்டாயிருக்கறதால, கொஞ்சம் பூசின மாதிரி தெரியறேன். அவ்வளவுதான்!"
"நீ கொடுத்து வச்சவடி! உன் புருஷனோட சந்தோஷமா இருக்க. குழந்தை வேற வரப் போகுது!"
"உன்னோட நிலைமையை நினைச்சா, எனக்கு வருத்தமாத்தான் இருக்கு. உன் புருஷன் எப்ப திரும்பி வருவாராம்?" என்றாள் கண்மணி, தோழியின் தோளைப் பரிவுடன் பற்றியபடி. பவளக்கொடியின் தோள் எலும்பு கையை அழுத்தியதால், உடனே கையை எடுத்து விட்டு, "ரொம்பதான் இளைச்சுட்ட. உன் தோள் எலும்பு என் கையைக் குத்துது!" என்றாள்.
பவளக்கொடி பதில் சொல்லாமல், தன் கையை ஆட்டி, அதில் இருந்த வளையல்களைச் சுழற்றிக் கொண்டிருந்தாள்.
"என்னடி இது! உன் புருஷனைப் பிரிஞ்சதைப் பத்தி உனக்கு வருத்தமே இருக்கற மாதிரி தெரியல. இளைச்சுட்டியேன்னு நான் பரிதாபப்பட்டுக் கேட்டா, நான் பருத்துட்டதைச் சொல்லிக் கேலி செய்யற. குழந்தை மாதிரி கையை ஆட்டி, வளையல்களைச் சுத்திக்கிட்டிருக்க!" என்றாள் கண்மணி.
கையை ஆட்டுவதைச் சட்டென்று நிறுத்தி விட்டுத் தோழியை உற்றுப் பார்த்த பவளக்கொடி, "எனக்கு வருத்தம் இல்லையா? எலும்பு தெரிய இளைச்சிருக்கேன்னு நீயே சொல்ற. அவர் எப்ப திரும்பி வருவார்னு எனக்கே தெரியாதபோது, உனக்கு எப்படி பதில் சொல்ல முடியும்? இந்த வளையல்களைப் பார்த்தியா? அவர் ஊருக்குப் போறதுக்கு முன்னால, இதெல்லாம் எவ்வளவு இறுக்கமா இருந்தது தெரியுமா? கையை அழுத்தற மாதிரி! அவர் கூடக் கேலி செய்வாரு - இந்த வளையல் எல்லாம் உன் கையை இறுக்கிக்கிட்டிருக்கறதைப் பார்த்தா, எந்த நேரத்திலேயும் வெடிச்சுச் சிதறிடற மாதிரி இருக்குன்னு! இப்ப பார், நான் கையை அசைச்சாலே, வளையல்கள் சுழலுது. அவ்வளவு இளைச்சிருக்கேன்! இந்த வளையல் எல்லாம் என் கையிலேந்து நழுவிக் கீழே விழுந்துடுமோன்னு பயந்து, அப்பப்ப கையைத் தூக்கிக்கறேன். எனக்கு வருத்தம் இல்லேன்னு நீ சொல்றியா?" என்றாள் படபடவென்று.
பேசிக் கொண்டிருக்கும்போதே, பவளக்கொடியின் கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் தெறித்து அவள் கன்னங்களில் விழுந்தன.
பொருள்:
துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து, வளையல்களையும் கழலச் செய்கின்றன.
1235. காட்டிக் கொடுத்த வளையல்கள்
செங்கமலத்தின் உறவினர்கள் சிலர் ஊரிலிருந்து வந்திருந்தனர். செங்கமலத்திடம் சற்று நேரம் உரையாடிய பின், "உன் பெண் கயல் எப்படி இருக்கா?" என்றனர்."இங்கேதான் இருக்கா. அவ புருஷன் வியாபாரத்துக்காகக் கப்பல்ல போயிருக்கறதால, ரெண்டு மாசமா எங்க வீட்டிலதான் இருக்கா. அறைக்குள்ள இருப்பா. கூப்பிடறேன்!" என்று செங்கமலம் கூறிக் கொண்டிருந்தபோதே, தன்னைப் பற்றிய பேச்சு காதில் விழுந்து, கயல்விழியே வெளியே வந்தாள்.
"எப்படி இருக்கீங்க?" என்றாள் கயல்விழி, வந்திருந்தவர்களைப் பார்த்து.
"நாங்க இருக்கிறது இருக்கட்டும். நீ ஏண்டி இப்படி இளைச்சுட்டே? போன தடவை பாக்கறப்ப, நல்ல தெம்பா, ஆரோக்கியமா, பப்பாளிப் பழம் மாதிரி இருந்தே. இப்ப கொத்தவரங்கா வத்தல் மாதிரி வாடி வதங்கி இருக்கியே!" என்றாள் மங்களம் என்ற பெண்.
"ஏன் உன் தோள்பட்டை எலும்புக் கூடு மாதிரி இருக்கு?" என்றாள் நாகம்மை என்ற பெண்.
"ஆமாம், ஏன் கையில வளையலே போட்டுக்கல?" என்றாள் இன்னொரு பெண்.
"அவ கொஞ்சம் இளைச்சுட்டாளா, அதனால, வளையல் எல்லாம் நழுவிக் கீழே விழுந்துடும் போல இருந்தது. அதனால, நான்தான் வளையல்களைக் கழற்றி வைக்கச் சொல்லிட்டேன். கொஞ்சம் சின்னதா, வேற வளையல்கள்தான் வாங்கிப் போடணும்" என்றாள் செங்கமலம், அவசரமாக.
"பாத்துடி! இவ இன்னும் இளைச்சு, அந்த வளையல்களும் நழுவிக் கீழே விழுந்துடப் போகுது!" என்று சொல்லிச் சிரித்தாள் மங்களம்.
"நீங்க பேசிக்கிட்டிருங்க. நான் கொஞ்சம் கடைக்குப் போயிட்டு வந்துடறேன்!" என்று அவர்களிடம் சொல்லி விட்டு விரைந்து வாசலுக்கு வந்தாள் கயல்விழி.
எங்கோ தொலைதுரத்தில் கப்பலில் பணிபுரிந்து கொண்டிருந்த கணவன் முகத்தை மனக்கண் முன் கொண்டு வந்து, 'கொடியவரே! நீங்க பாட்டுக்கு என்னை விட்டுட்டுப் போயிட்டீங்க. நான் உங்களைக் காட்டிக் கொடுக்கக் கூடாதுன்னு வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தாலும், இளைச்சு அழகை இழந்த என் உடம்பும், எலும்பு தெரிய இளைச்ச தோளும், வளையல்கள் கழன்று விழுந்ததால வெறுமையா இருக்கிற என் கைகளும் நீங்க எனக்கு செஞ்ச கொடுமையை எல்லாருக்கும் காட்டிக் கொடுக்குதே! நான் என்ன செய்ய?' என்று அவனிடம் உரையாடியபடியே, பொங்கி வந்த கண்ணீரைச் சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள் கயல்விழி.
பொருள்:
வளையல்களும் கழன்று, பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரின் கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.
1236. சின்ன வளை!
"ஆமாம்" என்ற குமரி, 'ஆனால் ஒரு சில நாட்களில் இந்த வளையல்களும் தளர்வானவை ஆகி விடும். அப்புறம் இன்னும் சிறிய வளையல்களைத்தான் வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டும்!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
"உன் காதலனுக்குக் கெட்ட பேர் வந்துடக் கூடாதுங்கறதுக்காக ரொம்பவும்தான் முயற்சி செய்யற!" என்றாள் யாமினி.
"என்னடி சொல்ற?"
"ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காதே! உன் காதலன் ஊருக்குப் போனதிலேந்து, அவன் பிரிவைத் தாங்க முடியாம, நீ இளைச்சுக்கிட்டே வரே! வளையல்கள் எல்லாம் தளர்வாப் போய்க்கிட்டே இருக்கு. உன் தோள்கள் இளைச்சு, எலும்பு தெரியுது. இதையெல்லாம் பாக்கறவங்க, 'பாவம் இந்தப் பொண்ணை இப்படித் தவிக்க விட்டுட்டுப் போயிட்டானே இவளோட காதலன்! அவன் ரொம்பக் கொடியவனாத்தான் இருக்கணும்'னு சொல்லிடக் கூடாதேங்கறதுக்காக, அடிக்கடி சின்ன வளையல், இன்னும் சின்ன வளையல்னு வாங்கிப் போட்டுக்கிட்டிருக்க. உன் தோள் எலும்பு தெரியாம இருக்க, உன் ரெண்டு தோளையும் சேலைத் தலைப்பால மூடிக்கிட்டிருக்க. எனக்குத் தெரியாதா இது?"
"என்னடி செய்யறது? என் காதலன் என்னைப் பிரிஞ்ச துயரத்தைக் கூடப் பொறுத்துப்பேன். ஆனா, அவரைக் கல் மனசுக்காரர்னு மத்தவங்க சொல்றதை என்னால பொறுத்துக்க முடியலையே!" என்றாள் குமரி, கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டே!
பொருள்:
வளையல்கள் கழன்று, தோள்களும் மெலிவடைவதால், (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.
1237. நெஞ்சே நீ போய்ச் சேதியைச் சொல்லு!
பொருள் ஈட்டுவதற்காகத் தன்னைத் தனியாக விட்டு விட்டு வெளியூர் சென்றிருக்கும் காதலனுக்கு யார் மூலம் செய்தி சொல்லி அனுப்புவது என்று நீண்ட நேரம் யோசித்த மதி, இறுதியில் தன் நெஞ்சத்தையே தூதாக அனுப்புவது என்று முடிவு செய்தாள்.அன்பால் இணைந்த இரு நெஞ்சங்களால் ஒன்றை ஒன்று தொடர்பு கொள்ள முடியாதா என்ன? இங்கிருக்கும் என் நெஞ்சம் எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் அவர் நெஞ்சத்தைச் சென்றடைவதற்கு, தூரம் ஒரு தடையாக இருக்க முடியாதே!
"நெஞ்சே! என் காதலரிடம் என்ன சொல்ல வேண்டும் தெரியுமா?:
உங்கள் பிரிவால் மதி மிகவும் இளைத்து விட்டாள். எந்த அளவுக்கு இளைத்து விட்டாள் என்றால், அவள் தோள் எலும்புகள் தோலைத் துருத்திக் கொண்டு வெளியே வரப் போவது போல் இளைத்து விட்டன!
அவளைப் பார்ப்பவர் ஒவ்வொருவரையும் அவை தங்களைப் பற்றியே பேச வைக்கின்றன. நேற்று கூட ஒரு பெண்மணி, 'என்னடி மதி, உன் தோள் எலும்புக்கு மேல இருந்த சதையைக் காணோம்? காக்கா கொத்திக்கிட்டுப் போயிடுச்சா என்ன?' என்று மதியைக் கேலி செய்தாள்.
அது மட்டுமல்ல. மதி இவ்வளவு இளைத்ததைப் பார்த்துப் பலரும் அவளை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவள் காதலன் கொடியவனாகத்தான் இருக்க வேண்டும் என்று உங்களை இகழ்ந்து பேசுகிறார்கள்.
உங்கள் மீது உயிர்க் காதல் கொண்டுள்ள மதிக்கு இத்தகைய பேச்சுக்கள் எவ்வளவு மன வருத்தத்தைக் கொடுக்கும் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும் அல்லவா?
எனவே, உடனே கிளம்பி வந்து, மதியைச் சேர்ந்து, அவள் மன வருத்தத்தையும், அதனால் அவள் உடலுக்கு ஏற்பட்டுள்ள வருத்தத்தையும் போக்கி, உங்கள் மீது ஊர் சுமத்தும் அவப்பெயரையும் போக்கிக் கொள்ளுங்கள்.
என் அருமை நெஞ்சே! நீ மட்டும் இந்தச் செய்தியை அவரிடம் சேர்த்து அவர் விரைவிலேயே திரும்ப வகை செய்து விட்டால், நீ பெருமை பெற்று விளங்குவாய்!"
சொல்ல வேண்டிய செய்தியைத் தன் நெஞ்சுக்குச் சொன்னதும், சில விநாடிகள் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள் மதி.
'மனோவேகம் என்கிறார்களே! அப்படியானால், என் நெஞ்சம் இதற்குள் இந்தச் செய்தியை என் காதலரின் நெஞ்சத்துக்குக் கொண்டு சேர்த்திருக்க வேண்டும். இந்தச் செய்தியைக் கேட்ட பிறகாவது, அவர் உடனே கிளம்பி வருகிறாரா என்று பார்க்கலாம்!' என்று நினைத்துக் கொண்டாள் மதி.
பொருள்:
நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?
1238. தழுவிய கைகள்!
"ஆதிரை!""ம்..."
"ஏன் பேச மாட்டேன் என்கிறாய்?"
"உங்கள் அணைப்பில் இருக்கும்போது, எனக்கு எப்படிப் பேச்சு வரும்?"
"இப்போது பேசி விட்டாயே!"
ஆதிரையைக் கேலி செய்வது போல் கைதட்டினான் இளவழகன்.
ஆதிரை சோர்வுடன் கட்டிலில் அமர்ந்தாள்.
"என்ன ஆயிற்று, ஆதிரை!" என்றான் இளவழகன், பதற்றத்துடன்.
"ஒன்றுமில்லை" என்று ஆதிரை கூறினாலும், அவள் உடலில் ஒரு சோர்வு தெரிந்ததை இளவழகன் கவனித்தான்.
ஆதிரையின் முகத்தை நிமிர்த்திப் பார்த்த இளவழகன், "என்ன இது? உன் நெற்றி வெளிரிப் போயிருக்கிறது!" என்றான், கவலையுடன்.
"அதைப் பசலை என்று சொல்வார்கள்!"
"அப்படியென்றால்?"
"காதலன் பிரிவால் காதலிக்கு ஏற்படும் உடற்சோர்வு, அதனால் சருமம் வெளிரிப் போவது."
"நான் உன்னைப் பிரியவில்லையே! உன்னுடன்தானே இருக்கிறேன்!"
"இப்போது கைதட்டினீர்களே?"
"ஆமாம். அது எப்படிப் பிரிவாகும்?"
"என்னை அணைத்துக் கொண்டிருந்த கைகளை விடுவித்துக் கொண்டுதானே கைதட்டினீர்கள்! அது ஒரு பிரிவுதானே?"
"இது ஒரு பிரிவா? உன்னை அணைத்திருந்த கைகளை நான் விலக்கிக் கொண்ட கணநேரப் பிரிவையே உன்னால் தாங்க முடியாதென்றால், நான் உன்னை விட்டுப் பிரிந்து வெளியூர் சென்றால், அந்தப் பிரிவை எப்படித் தாங்குவாய்?"
"அப்படி வாயால் கூடச் சொல்லாதீர்கள். நீங்கள் சொல்வதைக் கேட்கும்போதே, எனக்குப் பசலை படிந்த உணர்வு ஏற்படுகிறது!" என்றாள் ஆதிரை, காதுகளைக் கைகளால் பொத்தியபடி.
பொருள்:
தழுவிய கைகளைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, (அவ்வளவு சிறிய பிரிவைக் கூடப் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.
1239. குறுக்கே வந்த குளிர் காற்று!
சாளரத்தை மூடப் போன செம்பியனைப் பார்த்து, "அதுதான் திரைச்சீலை போட்டிருக்கே! அப்புறம் ஏன் சாளரத்தை மூடறீங்க?" என்றாள் கயல்விழி."திரைச்சீலையால காற்றைத் தடுக்க முடியாதே!" என்றான் செம்பியன்.
"காற்று அடிச்சா என்ன? இப்ப குளிர்காலம் இல்லையே!"
"நேத்திக்கு நான் உன்னை அணைச்சுக்கிட்டப்ப, காற்று அடிச்சது. அப்புறம் பார்த்தா, உன் கண்கள் வெளிறிப் போயிருந்தது. ஒருவேளை, இந்தக் குளிர் காற்று உன் உடம்புக்கு ஒத்துக்கலையோன்னு நினைச்சேன்."
"என் கண்கள் வெளிறி, நிறம் மாறினதுக்குக் காரணம் காற்று இல்லை, எனக்கு ஏற்பட்ட பசலை."
"அப்படின்னா?"
"இது தெரியாதா? காதலனைப் பிரியறப்ப, ஒரு பெண்ணுக்குப் பசலை நோய் வரும். உடம்பெல்லாம் நிறம் மாறும்."
"நான் எங்கே உன்னைப் பிரிஞ்சேன்? உன்னைத் தழுவிக்கிட்டுத்தானே இருந்தேன்?"
"நீங்க என்னைத் தழுவிக்கிட்டிருக்கறப்பவே, குறுக்கே வந்த குளிர் காற்று நம்மைப் பிரிச்சுது இல்ல? அதனால ஏற்பட்டதுதான் அந்தப் பசலை!"
"அப்படியா? அப்ப நான் சாளரத்தை அடைக்கிறது சரிதானே?"
"அதுக்கு ஏன் சாளரத்தை அடைக்கணும்? காற்றைத் தடுக்க வேற ஒரு எளிய வழி இருக்கே!"
"என்ன வழி?"
"நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில காற்று நுழைய வழியே இல்லாம செய்யறது!" என்று கூறி. நாணத்துடன் கைகளால் முகத்தைப் பொத்திக் கொண்டாள் கயல்விழி.
பொருள்:
இறுகத் தழுவியிருந்தபோது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால், அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.
1240. நேற்று நெற்றி, இன்று கண்கள்!
"என்னடி, உன் நெற்றி வெளிரிப் போயிருக்கு? உடம்பு சரியில்லையா என்ன?"நேற்று கோதையைப் பார்த்துப் பலரும் கேட்ட கேள்வி இது.
"இன்னிக்கு நான் மஞ்சள் பூசிக் குளிச்சேன். அந்த மஞ்சளோட தன்மை கொஞ்சம் மாறி இருந்ததால, நெற்றியில வெண்மை படர்ந்திருக்கு போல இருக்கு!" என்றாள் கோதை.
உண்மையில், கோதையின் நெற்றி பசலை நிறம் அடைந்ததற்கு வேறு ஒரு காரணம் இருந்தது.
நேற்று கோதை தன் காதலன் ரகுவர்மன் அணைப்பில் இருந்தபோது, வாயிற்கதவு படபடவென்று தட்டப்பட்டது.
ரகுவர்மன் கதவைத் திறந்து பார்த்தான். அங்கே நின்ற அரண்மனைச் சேவகன், ரகுவர்மனை உடனே அழைத்து வரும்படி அரண்மனையின் பாதுகாப்புத் தலைவர் பணித்தாகக் கூறினான். உடனே ரகுவர்மன் கிளம்பி விட்டான்.
இனி ரகுவர்மன் எப்போது வீட்டுக்குத் திரும்புவானோ தெரியாது. அன்றே திரும்பலாம், சில நாட்கள் கழித்தும் திரும்பலாம். அரண்மனைக் காவல் பணி அத்தகையது.
கூடியிருந்த காதலன் தன்னைத் தனியே விட்டு விட்டுப் பணி நிமித்தமாகச் சென்று விட்டான், எப்போது திரும்புவானோ தெரியாது என்பதால்தான், கோதை தன் நெற்றியில் பசலை படர்ந்திருக்கிறது என்பதை வெளியில் சொல்ல முடியாமல், தான் பூசிக் குளித்த மஞ்சளின் தன்மை மாறுபட்டிருந்ததால், அந்த மாற்றம் ஏற்பட்டதாகச் சொல்லிச் சமாளித்தாள்.
இன்று காலை, கோதை கண்ணாடியைப் பார்த்தபோது, தன் கண்களிலும் வெளிர் நிறம் படர்ந்திருப்பதைக் கண்டாள்.
நெற்றியின் பசலையைக் கண்டதும், அருகிலிருந்த கண்களுக்கும் பசலை வரத் தொடங்கி விட்டது போலும்!
'நேற்று நெற்றியில் படர்ந்த பசலைக்கு மஞ்சளைக் காரணம் காட்டிச் சமாளித்து விட்டேன். இன்று கண்களின் பசலைக்கு என்ன காரணம் கூறப் போகிறேன்?' என்று எண்ணிக் கவலை அடைந்தாள் கோதை.
பொருள்:
காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.
No comments:
Post a Comment