Wednesday, November 30, 2022

1164. குமுதாவின் குறள் விளக்கம்!

 


"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்   இறைவனடி சேராதார். இதன் பொருள்..."

தொலைக்காட்சியில் திருக்கறளுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்  அந்தத் தமிழ் அறிஞர்.

"கடல்ல விழுந்துட்டா கடவுளால எப்படி உதவ முடியும்? நீச்சல் தெரியாதவங்களுக்கும் நீந்தற சக்தியைக் கடவுள் கொடுத்துடுவாரா?" என்றாள் ராணி.

"உன் அப்பா ஒரு நாத்திகவாதிங்கறதால நீயும் இப்படிப் பேசற போலருக்கு! கடவுள் நீந்தற சக்தியைக் கொடுக்கணுங்கறதில்ல. அங்கே ஒரு படகை அனுப்பிக் கூட கடல்ல தத்தளிக்கறவங்களைக் காப்பாத்தலாம் இல்ல?" என்றாள் அவள் தோழி குமுதா.

"ஓ, அப்படி ஒரு வழி இருக்கா? அப்படின்னா அது நீந்தறதா ஆகாதே?"

"ஏண்டி, கடல்ல விழுந்துட்டா எப்படியோ கரை சேரறது தான் முக்கியம். நீந்தித்தான் வரணுங்கறதுக்கு வாழ்க்கை என்ன நீச்சல் போட்டியா?"

";நீ சொல்றது சரிதான்!"

சற்று நேர மௌனத்துக்குப் பிறகு, "நீ ஏன் திடீர்னு செந்தில் கவுண்டமணிகிட்ட கேக்கற கேள்வி மாதிரியெல்லாம் எங்கிட்ட கேக்கற?" என்றாள் குமுதா.

"ஒண்ணுமில்ல!" என்றாள் ராணி.

"எனக்குப் புரியுது. கொஞ்ச நாளா உனக்கு ஒரே ஒரு சிந்தனைதானே? உன் காதலைப் பற்றின சிந்தனை! அதுதான் உன்னைப் பேய் பிடிச்ச மாதிரி பிடிச்சு ஆட்டுது. ஓ, நீ பகுத்தறிவுவாதியோட பொண்ணாச்சே! பேய்னு சொன்னா ஒத்துக்க மாட்ட. அதனால நோய்னு வச்சுக்கலாம். அந்தக் காதல் நோய் உன்னைப் பிடிச்சு வாட்டறது உனக்குக் கடல்ல தத்தளிக்கற மாதிரி இருக்கு போல!" என்றாள் கிரிஜா.

"உனக்கு எப்படித் தெரியும்? உனக்கே அந்த நோய் இருக்கிற மாதிரி பேசற!"

"இப்ப இல்லைதான். ஆனா முன்னே இருந்ததே! நான் காதல்ல விழுந்தப்ப!"

"அப்புறம் எப்படி அதிலேந்து விடுபட்ட?"

"என்னோட என் காதலர் ஏத்துக்கிட்டு என்னைக் கல்யாணம் செஞ்சுக்கட்ட அப்புறம்தான். பிறவிப் பெருங்கடலை நீந்தற ஃபார்முலாதான்! உன் காதலன் தோணி மாதிரி வந்து உன்னை ஏத்துக்கிட்டாத்தான் உன் நோய் நீங்கும். அதுக்கு நீ உன் காதலன்கிட்ட உன் காதலைச் சொல்லணும் - பிறவிப் பெருங்கடல்ல விழுந்தவங்க கடவுளை வேண்டிக்கிற மாதிரி!"

"நீ எனக்கு யோசனை சொல்றியா, 'பிறவிப் பெருங்கடல்'ங்கற குறளுக்கு விளக்கம் சொல்றியான்னு தெரியல!" என்றாள் ராணி< நாணத்தை வெற்றி கொண்டு காதலனிடம் தன் காதலை எப்படிச் சொல்லப் போகிறோம் என்ற கவலையுடன்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 117
படர் மெலிந்திரங்கல் (பிரிவுத் துயரால் உடல் மெலிதல்)

குறள் 1164
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.

பொருள்:
காமநோயாகிய கடல் இருக்கிறது. ஆனால் அதை நீந்திக் கடந்து செல்வதற்குப் பாதுகாப்பான ‌தோணி இல்லை.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Monday, November 28, 2022

1163. இரண்டு பக்கமும் சுமைகள்

தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்த அந்த இளைஞன் தன் தோளில் ஒரு நீண்ட மூங்கில் கம்பைத் தாங்கிச் சென்று கொண்டிருந்தான்.

கம்பின் இரு முனைகளிலும் கயிறுகள் கட்டப்பட்டு ஒவ்வொரு கயிற்றிலும் பொருட்கள் நிரம்பிய ஒரு வாளி தொங்கிக் கொண்டிருந்தது.

"ரெண்டு மூட்டையையும் எப்படி கஷ்டப்பட்டுத் தூக்கிக்கிட்டு நடந்து போறாரு பாரு!" என்றாள் கலா.

"என்ன செய்யறது? அவரோட பொழைப்பு அப்படி!" என்றாள் கோகிலா.

"என் ;நிலைமையும் அது மாதிரிதானே இருக்கு!"

"என்னடி உளறரே? அவரு கூலித் தொழிலாளி. நீ ஒரு பெரிய வணிகரோட பொண்ணு. நீ எதுக்குக் காவடி சுமக்கணும்?"

"என் மேல ஒரு அழுத்தம் இருந்துக்கிட்டே இருக்கு. அது ரெண்டு பக்கத்திலேந்தும் அழுத்தற மாதிரி எனக்கு ஒரு வலி இருந்துக்கிட்டே இருக்கு!"

"அது என்ன அழுத்தம்? உன் அப்பா ஒரு பக்கம், உன் அம்மா ஒரு பக்கம்னு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அழுத்தறாங்களா?"

"சேச்சே! அவங்க என்னை சுதந்திரமா இருக்க விட்டிருக்காங்க. எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்க மாட்டாங்க. நான் காட்டற ஆளுக்கு என்னைக் கல்யாணம் செஞ்சு கொடுப்பாங்க!"

"அப்ப உன் ஆளை அவங்ககிட்ட காட்ட வேண்டியதுதானே!"

"அதுக்கு முன்னால அவர்கிட்ட என் காதலைச் சொல்லி அவர் மனசைத் தெரிஞ்சுக்க வேண்டாமா? அதைச் செய்ய முடியாததால காதல் நோய் என்னை அழுத்திக்கிட்டிருக்கு!" என்றாள் கலா.

"ஓ! அதைத்தான் அழுத்தம்னு சொன்னியா? ரெண்டு பக்கமும் அழுத்தம்னு சொன்னியே, அந்த இன்னொரு அழுத்தம்?"

"என் காதலை அவர்கிட்ட சொல்ல முடியாம என்னைத் தடுக்குதே நாணம், அது இன்னொரு பக்கம் என்னை அழுத்திக்கிட்டிருக்கு!"

சற்று நேரம் மௌனமாக இருந்த கோகிலா, "இப்ப பாத்தமே அந்த ஆளு, அவர் தோளில இருக்கற கம்பிலேந்து ஒரு சுமையை எடுத்துட்டா என ஆகும்?" என்றாள் கோகிலா.

"இன்னொரு பக்கம் இருக்கற சுமையும் கீழே விழுந்துடும்!" என்றாள் கலா, தோழி இதை ஏன் கேட்கிறாள் என்று புரியாமல்.

"உன் மேல இருக்கற ரெண்டு அழுத்தத்திலேந்தும் நீ விடுபடணும்னா அதே மாதிரிதான் செய்யணும். உன்னை அழுத்திக்கிட்டிருக்கற நாணத்தை இறக்கி வச்சுட்டு உன் காதலன்கிட்ட உன் காதலை தைரியமா சொன்னேன்னா, உன் காதல் நோய் தானே இறங்கிடும்!" என்றாள் கோகிலா."

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 117
படர் மெலிந்திரங்கல் (பிரிவுத் துயரால் உடல் மெலிதல்)

குறள் 1163
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.

பொருள்:
ஒரு புறம் காதல் நோயையும், மறு புறம் காதலை அவரிடம் சொல்ல முடியாமல் நான் படும் வெட்கத்ததையும் தாங்க முடியாத என் உடம்பில், என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு அதன் ஒரு புறத்தில் காதல் நோயும், மறுமுனையில் வெட்கமும் தொங்குகின்றன.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1162. அம்மாவின் கேள்வி

"ஏண்டி, ஏற்கெனவே உடம்பு சரியில்ல. அதோட இந்த வெய்யில்ல எங்கே போய் சுத்திட்டு வரே"  என்றாள் லட்சுமி தன் மகள் சிவகாமியிடம்.

"எனக்கு உடம்புக்கு எதுவும் இல்லைம்மா!" என்றாள் சிவகாமி எரிச்சலுடன்.

"உன்னைப் பாத்தா அப்படித் தெரியலியே! கொஞ்ச நாளா உடம்பு இளைச்சுக்கிட்டே வருது. சரியா சாப்பிட மாட்டேங்கற. ராத்திரியெல்லாம் சரியாத் தூங்காம புரண்டு புரண்டு படுத்துக்கற!"

"அது உனக்கு எப்படித் தெரியும்? நீயும் சரியாத் தூங்கறதில்லையா?"

"என்னை மடக்கிட்டதா நினைக்கறியாக்கும்! எனக்கு ஒண்ணு ரெண்டு தடவை முழிப்பு வந்தப்ப  நீ தூக்கம் வராம புரண்டு புரண்டு படுக்கறதை கவனிச்சேன்" என்றாள் லட்சுமி.

"நீயா கற்பனை செஞ்சுக்கறம்மா! எனக்கு உடம்பு நல்லாத்தான் இருக்கு. நான் நல்லாத்தான் சாப்பிடறேன், நல்லாத்தான் தூங்கறேன்" என்றாள் சிவகாமி.

"நான் கற்பனை செஞ்சுக்கறேனா? 'உன் பெண்ணுக்கு என்ன ஆச்சு? சோகை பிடிச்சவ மாதிரி மெலிஞ்சுக்கிட்டே வராளே' ன்னு நிறைய பேரு எங்கிட்ட கேக்கறாங்கடி. அவங்களுமா கற்பனை செஞ்சுக்கறாங்க?"

"சரிம்மா. இனிமே நல்லா சாப்பிடறேன், தூங்கறேன். நீ கவலைப்படாதே!" என்று தாயைச் சமாதானப்படுத்தி விட்டு அங்கிருந்து அகன்றாள் லட்சுமி.

'நல்ல வேளை! எங்கே போனாய் என்று கேட்க ஆரம்பித்த அம்மா அதை மறுபடி கேட்கவில்லை. கேட்டிருந்தால் அதற்கு ஏதாவது பொய் சொல்ல வேண்டி இருந்திருக்கும்!

கதிரேசன் மீது கொண்ட காதலால் சில நாட்களாக நான் சரியாகச் சாப்பிடாமலும், தூங்காமலும், உடல் இளைத்துப் போயும் இருப்பது எனக்குத் தெரியாதா என்ன?  என்னையும்தான் என் தோழி உட்படப் பல பேர் ஏண்டி இப்படி இளைத்து விட்டாய் என்று கேட்கிறார்கள்.. 

'இந்த நோசைப் போக்கிக் கொள்ள ஒரே வழி கதிரேசனைப் பார்த்து அவனிடம் என் காதலைச் சொல்வதுதான் என்று  நினைத்து, அவனைப் பார்க்க அவன் வேலை செய்யும் வயல்வெளிக்குப் போனதையும், நாணம் காதலைச் சொல்ல விடாததால் அவனிடம் காதலைச் சொல்லாமல் நீண்ட நேரம் வெயிலில் நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் திரும்பி வந்ததையும் அம்மாவிடம் சொல்ல முடியுமா என்ன?'

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 117
படர் மெலிந்திரங்கல் (பிரிவுத் துயரால் உடல் மெலிதல்)

குறள் 1162
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்..

பொருள்:
காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, November 27, 2022

1161. நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார்!

 "என்ன தேன்மொழி, ஏன் கொஞ்சநாளா ஒரு மாதிரி இருக்கே?" என்றாள் பரிவாதினி.

"உனக்குத் தெரியுமே! நீயே இப்படிக் கேக்கற!" என்றாள் தேன்மொழி.

"உன் காதலைப் பத்தி எனக்குத் தெரியுங்கறது உண்மைதான். ஆனா நீ சோர்வா இருக்கறதுக்குக் காரணம் எனக்குத் தெரியாதே!"

"என்னைப் பாத்தா சோர்வா இருக்கற மாதிரியா இருக்கு?"

"அப்படி இருக்கறதாலதான் கேக்கறேன்!"

"நீயும் ஒத்தரைக் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சுக்கிட்டவதானே? உனக்குத் தெரியாதா காதல் நோயைப் பத்தி? காதலரைப் பாக்க முடியலேன்னா அதனால ஏற்படற ஏக்கம், மனத்துன்பம் பத்தியெல்லாம் உனக்குத் தெரியாதா?"

"எனக்குத் தெரியும். ஆனா மத்தவங்க எங்கிட்ட கேக்கறப்ப எனக்கு என்ன பதில் சொலறதுன்னு தெரியல. அதான் உங்கிட்ட கேட்டேன்!" என்றாள் பரிவாதினி.

"மத்தவங்க உங்கிட்ட கேட்டாங்களா? அது எப்படி? நான்தான் என் காதல் நோயை யாருக்கும் தெரியாம மறைச்சு வச்சிருக்கேனே! அது எப்படி மத்தவங்களுக்குத் தெரிஞ்சது?"

"போடி முட்டாள்! மறைச்சு வச்சுருக்கறதா நீ தினைச்சுக்கிட்டிருக்க! மறைச்சு வச்சா நோய் இன்னும் அதிகமாகி இன்னும் அதிகமா வெளியில தெரியும். நெருப்பை மடியில வச்சுக் கட்டிக்கிட்டா அது அணையுமா என்ன? இன்னும் பெரிசா எரிஞ்சு உடையிலேயும் பத்திக்கிட்டு உன்னை அதிகமா வாட்டறதோட, மத்தவங்களுக்கும் வெளிக்காட்டிடும் இல்ல? காதல் நோயை மறைச்சாலும் அப்படித்தான் நடக்கும். நான் அனுபவிச்சிருக்கேனே!" என்றாள் பரிவாதினி பெருமூச்சுடன்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 117
படர் மெலிந்திரங்கல் (பிரிவுத் துயரால் உடல் மெலிதல்)

குறள் 1161
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

பொருள்:
என் காதல் நோயைப் பிறர் அறியக் கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல் மறைக்க மறைக்க என் நோயும் பெருகவே செய்கிறது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, November 26, 2022

1160. தூது வந்த தோழி!

"உனக்கு ஊர்மிளாவைத் தெரியுமா?"

"'எந்த ஊர்மிளா?"

"அதாண்டி லட்சுமணரோட மனைவி. எந்த லட்சுமணர்னு கேட்டுடாதே! ராமரோட தம்பி லட்சுமணரோட மனைவி. எந்த ராமர்..."

"எந்த ராமர்னு கேக்க மாட்டேன். நானும் கொஞ்சம் ராமாயணம் படிச்சிருக்கேன். சொல்லு!"

"ராமரோட தானும் காட்டுக்குப் போறேன்னு லட்சுமணர்னு சொன்னப்ப, ஊர்மிளா மறுப்பே சொல்லாம அவரை வழியனுப்பி வச்சா. பதினாலு வருஷம் கணவனோட பிரிவைத் தாங்கிக்கிட்டுப் பொறுமையா இருந்தா!"

"ராமாயணக் கதை உண்மையில நடந்ததா?"

"என்னடி நாத்திகவாதி மாதிரி பேசற? சரி. ராமாயணம் கதையாவே இருக்கட்டும். சந்திரவதியை உனக்குத் தெரியும் இல்ல?"

"எந்த சந்திர...ஓ, அவங்களா? தெரியுமே! நம்ம ஊர்லேயே ரொம்ப வசதியான குடும்பம் அவங்களோடதுதானே?"

"இப்ப சொன்னியே, நம்ம ஊரிலேயே வசதியான குடும்பம் அவங்களோடதுன்னு, அந்த வசதி எப்படி வந்தது தெரியுமா? அவங்க கல்யாணம் ஆகி இந்த ஊருக்கு வந்தப்ப அவங்க கணவர் ஒரு கூலித் தொழிலாளியாத்தான் இருந்தாரு. வேலை கிடைச்சாதான் கூலி, கூலி கிடைச்சாதான் சோறுங்கற நிலைமை. கல்யாணத்துக்கப்பறம் தன் மனைவியை சந்தோஷமா வச்சுக்கணும்னா அதுக்குப் பணம் வேணும்னு புரிஞ்சுக்கிட்டு அவரு ஒரு கப்பல்ல வேலைக்குப் போனாரு. அப்பதான் கல்யாணம் ஆகி இருந்தாலும், சந்தரவதி தன் குடும்ப நிலையைப் புரிஞ்சுக்கிட்டு கணவனுக்கு விடை கொடுத்தாங்க. அவர் திரும்பி வரவரைக்கும் பொறுமையாக் காத்துக்கிட்டிருந்தாங்க. ஆறு மாசம் கழிச்சு அவங்க புருஷன் கைநிறையப் பணத்தோட வந்தாரு. அந்தப் பணத்தை வச்சு சின்னதா வியாபாரம் ஆரம்பிச்சு அது பெரிசாகி வளர்ந்து, அதனாலதான் இன்னிக்கு அவங்க நம்ம ஊரிலேயே பணக்காரங்களா இருக்காங்க."

"............"

"என்னடி மௌனமா இருக்க? சந்திரவதியைப் பத்தி நான் சொன்னதும் கட்டுக்கதைன்னு சொல்லப் போறியா?"

"இல்ல. உண்மையாத்தான் இருக்கும். சந்திரவதி மாதிரி கணவன் தன்னை விட்டுப் பிரியச் சம்மதிச்சு அவர் திரும்ப வர வரைக்கும் பொறுமையாக் காத்திருந்த வேற சில பெண்களும் இருக்கலாம். ஆனா..."

"என்னடி ஆனா, ஆவன்னா?"

"ஆனா, என்னால என் கணவரைப் பிரிஞ்சு இருக்க முடியாது. நீ சொன்ன ராமாயண உதாரணத்திலேயே, சீதை தன் கணவனை விட்டுப் பிரிய மாட்டேன்னு அவரோட காட்டுக்குப் போனாங்களே! அதனால, உன்னை தூது அனுப்பின என் புருஷன்கிட்ட அவர் என்னைப் பிரிஞ்சு போறதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிடு!" 

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 116
பிரிவாற்றாமை

குறள் 1160
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.

பொருள்:
காதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல் அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக் கொண்டு, பிரிந்த பின்னும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கிறார்கள்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Thursday, November 24, 2022

1159. நந்தினியைச் சுட்ட நெருப்பு!

"என்னம்மா, மறுபடி காய்ச்சல் வந்திருக்கா?" என்றார் மருத்துவர்.

"ஆமாம் மருத்துவரே! ஏன்தான் இந்தப் பெண்ணைப் போட்டு இப்படிப் படுத்துதோ தெரியல! இந்த மூணு நாலு மாசத்தில நாலஞ்சு தடவை காய்ச்சல் வந்துடுச்சு" என்றாள் நந்தினியின் தாய் பகவதி.

"இப்ப கோடைக்காலம்தானே! காய்ச்சல் வரதுக்கான புறக் காரணங்கள் எதுவும் இல்ல. மறுபடி அதே சூரணம் கொடுக்கறேன். அஞ்சு நாள் சாப்பிட்டா சரியாயிடும்!" என்றார் மருத்துவர்.

"கோடைக்கால வெப்பத்தால உடம்பு சூடாகிக் காய்ச்சல் வருமா ஐயா?" என்றாள் நந்தினி.

"வெய்யில்ல நின்னா கூட உடம்பு சூடாகாது, களைப்புதான் ஏற்படும். அதோட காய்ச்சலால உடம்பு சூடாகறது உடம்புக்குள்ள ஏற்படற விளைவுகளால. வெளி வெப்பத்துக்கும்  அதுக்கும் சம்பந்தமில்ல!" என்று விளக்கினார் மருத்துவர்.

பிறகு, ஏதோ நினைவு வந்தவராக, "மனசில ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் காய்ச்சல் வரலாம். உங்க பொண்ணு மனசை பாதிக்கற மாதிரி ஏதாவது நடந்ததா?" என்றார் மருத்துவர்.

"அப்படி ஒண்ணும் நடக்கலியே!" என்ற பகவதி, "நாலு மாசம் முன்னே இவ புருஷன் வியாபார விஷயமா வெளியூர் போயிட்டாரு. அதிலேந்தே கொஞ்சம் சோர்வோடதான் இருக்கா!" என்றாள்.

மருத்துவர் வீட்டிலிருந்து வெளியே வந்ததும், "ஏண்டி, கோடை வெப்பத்தால காய்ச்சல் வருமான்னு வைத்தியர்கிட்ட கேக்கற, உனக்கு அறிவு இல்ல?" என்று மகளைக் கடிந்து கொண்டாள் பகவதி.

"சரி. இதுக்கு பதில் சொல்லு. நெருப்புக்குப் பக்கத்தில போனா சுடும். விலகிப் போனா சுடாதுதானே?" என்றாள் நந்தினி.

"இது என்னடி கேள்வி? உனக்கு மூளை பிசகிப் போச்சா என்ன?" என்றாள் பகவதி. 

''நெருப்பை விட்டு விலகி இருந்தா நெருப்பு சுடாது. ஆனா அவர் என்னை விட்டு விலகிப் போயிருக்கறப்ப அவர் பிரிவு என்னை ஏன் சுடுகிறது?' 

 இதைத் தாயிடம் கேட்டால் ஏற்கெனவே தனக்கு மூளை பிசகி விட்டதாகக் கூறம் தன் தாய் தனக்கு உண்மையாகவே மனம் பேதலித்து விட்டதாக முடிவு கட்டி விடுவாள் என்று  நினைத்தபோது, அந்த நிலையிலும் நந்தினிக்குச் சிரிப்பு வந்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 116
பிரிவாற்றாமை

குறள் 1159
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

பொருள்:
தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, November 6, 2022

1158. சோகத்தின் காரணம்?

அந்தப் பெண்ணைக் கலாவதி இரண்டு மூன்று முறை தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது - ஒருமுறை கோவிலில், ஒருமுறை ஆற்றங்கரையில், ஒருமுறை திருவிழாக் கூட்டத்தில் என்று.

அந்தப் பெண்ணிடம் ஒரு சோகம் இருப்பதைக் கலாவதி உணர்ந்தாள்.

அடுத்த முறை கலாவதி அந்தப் பெண்ணை அங்காடித் தெருவில் சந்தித்தபோது, அவள் பின்னால் சென்று அவள் தோளைத் தட்டினாள்.

திடுக்கிட்டுத் திரும்பிய அந்தப் பெண் கலாவதியைப் பார்த்து, "நீங்க யாரு? என்னை ஏன் தோள்ள தட்டினீங்க?" என்றாள் பதட்டத்துடன்.

"என் பெயர் கலாவதி. நான் உங்களை ரெண்டு மூணு தடவை தற்செயலாப் பார்த்தேன். நீங்க ஏதோ சோகத்தில இருக்கற மாதிரி இருக்கு. அது ஏன்னு உங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்க விரும்பறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தா சொல்லுங்க!" என்றாள் கலாவதி.

சுற்றுமுற்றும் பார்த்த அந்தப் பெண், "இங்க வாங்க!" என்று கலாவதியை ஒரு ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்றாள்.

"இங்கே பாருங்க கலாவதி! என் பெயர் பொன்னி. வேற ஜாதியில கல்யாணம் செஞ்சுக்கிட்டதுக்காக என்னையும் என் கணவரையும் எங்க ஊர்ல ஒதுக்கி வச்சுட்டாங்க  அதனால இந்த ஊருக்கு வந்தோம். எங்களைப் பத்தித் தெரிஞ்சதால இந்த ஊர்லயும் யாரும் எங்க்கிட்ட நெருக்கமாப் பழக மாட்டேங்கறாங்க. நீங்க எங்கிட்ட பேசறதையே யாராவது தப்பு சொல்லப் போறாங்க. அதுதான் உங்களைத் தனியாக் கூப்பிட்டுக்கிட்டு வந்தேன்" என்றள் அவள்.

"நான் அதைப் பத்திக் கவலைப்படல. ஆனா உங்க நிலைமைக்காக நான் பரிதாப்பபடறேன். நான் உங்க்கிட்ட பேசறேன். அது உங்களுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்!"  என்றாள்  கலாவதி.

"என்ன கலாவதி! எனக்கு ஆறுதலா இருக்கேன்னு சொன்னே. ஆனா நாம் பழகற இந்த ஒரு வாரத்தில நீயே ரொம்ப சோகமா இருக்கற மாதிரி இருக்கு. உன் குடும்ப வாழ்க்கையைப் பத்திக் கேட்டாலும் எதுவும் சொல்ல மாட்டேங்கற. எனக்கு ஆறுதலா இருக்கிற உனக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு ஆறுதலா இருக்க விரும்பறேன். என்ன விஷயம், சொல்லு!" என்றாள் பொன்னி.

ஒரு நிமிடம் மனமாக இருந்த கலாவதி, "என் புருஷன் என்னை விட்டுட்டு கப்பல்ல  வேலை செஞ்சு நிறையப் பணம் சம்பாதிச்சுட்டு வரேன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. அவர் திரும்பி வரப் பல மாதங்கள் ஆகும்!" என்றாள் கலாவதி. சொல்லும்போதே அவள் கண்கள் குளமாகி விட்டன.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 116
பிரிவாற்றாமை

குறள் 1158
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.

பொருள்:
நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Tuesday, November 1, 2022

1157. கைகளை மறைத்ததேன்?

 

"மலர் ஏன் ஒரு மாதிரி இருக்கா?" என்றாள் மாதவி.

"அவ புருஷன் அவளைத் தனியா விட்டுட்டு ஊருக்குப் போயிட்டாரு இல்ல? அந்த வருத்தம் இல்லாம இருக்குமா?" என்றாள் மேகலை

"அதில்ல. அவகிட்ட ஏதோ வித்தியாசமா இருக்கு. அவ நடக்கறப்ப ஒரு மாதிரி நடக்கறா?"

"நான் கவனிக்கலியே!"

"இதோ வரா பாரு! கவனிச்சுப்பாரு."

"ஆமாம். ஒரு மாதிரிதான் இருக்கு. ஆனா என்னன்னு தெரியல...ஓ, இப்ப புரியுது. அவ கைகளைப் பின்னாடி வச்சுக்கிட்டு நடக்கறா!"

"ஆமாம். எதுக்கு இப்படி நடக்கணும்? வா, அவகிட்டயே கேக்கலாம்."

மாதவியும், மேகலையும் சற்றுத் தொலைவில் நடந்து வந்து கொண்டிருந்த மலர்க்கொடியின் அருகில் சென்றனர்.

"ஏ மலர்! எப்படி இருக்கே?" என்றாள் மாதவி.

"இருக்கேன்!" என்றள் மலர்க்கொடி சோர்வுடன்.

"உன் வீட்டுக்காரர் ஊருக்குப் போன சோகம் எங்களுக்குப் புரியுது. ஆனா அதுக்கு ஏன் ரெண்டு கையையும் பின்னால வச்சுக்கிட்டு நடக்கறே?" என்றாள் மேகலை.

"இல்லையே!" என்று கைகளை முன்னுக்குக் கொண்டு வந்த மலர்க்கொடி உடனே அவற்றை மீண்டும் பின்னே இழுத்துக் கொண்டாள்.

மலர்க்கொடியின் கைகளை இழுத்துப் பார்த்த மாதவி பெரிதாகச் சிரித்தாள்.

"ஏண்டி சிரிக்கற?" என்றாள் மேகலை.

"பாவம் பிரிவுத் துயர்ல இவ இளைச்சதால இவ கைகள் மெலிஞ்சு  வளையல்கள் இறுக்கம் தளர்ந்து நழுவி, இவ நடக்கறப்ப ஆடிக்கிட்டு சத்தம் ஏற்படுத்திக்கிட்டே இருக்கு. கீழே விழப் போற மாதிரி மணிக்கட்டில இறங்கிக்கிட்டும் இருக்கு. இதை யாராவது பார்த்தா, பிரிவுத் துயர்னால இவ இளைச்சிருக்கறது எல்லாருக்கும் தெரிஞ்சுடுமேன்னுதான் இவ கைகளைப் பின்னால வச்சு மறைச்சுக்கிட்டிருக்கா!" என்றாள் மாதவி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 116
பிரிவாற்றாமை

குறள் 1157
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.

பொருள்:
என் மெலிவால் முன் கையில் இறுக்கம் தளர்ந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ!

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...