Monday, November 28, 2022

1163. இரண்டு பக்கமும் சுமைகள்

தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்த அந்த இளைஞன் தன் தோளில் ஒரு நீண்ட மூங்கில் கம்பைத் தாங்கிச் சென்று கொண்டிருந்தான்.

கம்பின் இரு முனைகளிலும் கயிறுகள் கட்டப்பட்டு ஒவ்வொரு கயிற்றிலும் பொருட்கள் நிரம்பிய ஒரு வாளி தொங்கிக் கொண்டிருந்தது.

"ரெண்டு மூட்டையையும் எப்படி கஷ்டப்பட்டுத் தூக்கிக்கிட்டு நடந்து போறாரு பாரு!" என்றாள் கலா.

"என்ன செய்யறது? அவரோட பொழைப்பு அப்படி!" என்றாள் கோகிலா.

"என் ;நிலைமையும் அது மாதிரிதானே இருக்கு!"

"என்னடி உளறரே? அவரு கூலித் தொழிலாளி. நீ ஒரு பெரிய வணிகரோட பொண்ணு. நீ எதுக்குக் காவடி சுமக்கணும்?"

"என் மேல ஒரு அழுத்தம் இருந்துக்கிட்டே இருக்கு. அது ரெண்டு பக்கத்திலேந்தும் அழுத்தற மாதிரி எனக்கு ஒரு வலி இருந்துக்கிட்டே இருக்கு!"

"அது என்ன அழுத்தம்? உன் அப்பா ஒரு பக்கம், உன் அம்மா ஒரு பக்கம்னு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அழுத்தறாங்களா?"

"சேச்சே! அவங்க என்னை சுதந்திரமா இருக்க விட்டிருக்காங்க. எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்க மாட்டாங்க. நான் காட்டற ஆளுக்கு என்னைக் கல்யாணம் செஞ்சு கொடுப்பாங்க!"

"அப்ப உன் ஆளை அவங்ககிட்ட காட்ட வேண்டியதுதானே!"

"அதுக்கு முன்னால அவர்கிட்ட என் காதலைச் சொல்லி அவர் மனசைத் தெரிஞ்சுக்க வேண்டாமா? அதைச் செய்ய முடியாததால காதல் நோய் என்னை அழுத்திக்கிட்டிருக்கு!" என்றாள் கலா.

"ஓ! அதைத்தான் அழுத்தம்னு சொன்னியா? ரெண்டு பக்கமும் அழுத்தம்னு சொன்னியே, அந்த இன்னொரு அழுத்தம்?"

"என் காதலை அவர்கிட்ட சொல்ல முடியாம என்னைத் தடுக்குதே நாணம், அது இன்னொரு பக்கம் என்னை அழுத்திக்கிட்டிருக்கு!"

சற்று நேரம் மௌனமாக இருந்த கோகிலா, "இப்ப பாத்தமே அந்த ஆளு, அவர் தோளில இருக்கற கம்பிலேந்து ஒரு சுமையை எடுத்துட்டா என ஆகும்?" என்றாள் கோகிலா.

"இன்னொரு பக்கம் இருக்கற சுமையும் கீழே விழுந்துடும்!" என்றாள் கலா, தோழி இதை ஏன் கேட்கிறாள் என்று புரியாமல்.

"உன் மேல இருக்கற ரெண்டு அழுத்தத்திலேந்தும் நீ விடுபடணும்னா அதே மாதிரிதான் செய்யணும். உன்னை அழுத்திக்கிட்டிருக்கற நாணத்தை இறக்கி வச்சுட்டு உன் காதலன்கிட்ட உன் காதலை தைரியமா சொன்னேன்னா, உன் காதல் நோய் தானே இறங்கிடும்!" என்றாள் கோகிலா."

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 117
படர் மெலிந்திரங்கல் (பிரிவுத் துயரால் உடல் மெலிதல்)

குறள் 1163
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.

பொருள்:
ஒரு புறம் காதல் நோயையும், மறு புறம் காதலை அவரிடம் சொல்ல முடியாமல் நான் படும் வெட்கத்ததையும் தாங்க முடியாத என் உடம்பில், என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு அதன் ஒரு புறத்தில் காதல் நோயும், மறுமுனையில் வெட்கமும் தொங்குகின்றன.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...