Monday, November 28, 2022

1162. அம்மாவின் கேள்வி

"ஏண்டி, ஏற்கெனவே உடம்பு சரியில்ல. அதோட இந்த வெய்யில்ல எங்கே போய் சுத்திட்டு வரே"  என்றாள் லட்சுமி தன் மகள் சிவகாமியிடம்.

"எனக்கு உடம்புக்கு எதுவும் இல்லைம்மா!" என்றாள் சிவகாமி எரிச்சலுடன்.

"உன்னைப் பாத்தா அப்படித் தெரியலியே! கொஞ்ச நாளா உடம்பு இளைச்சுக்கிட்டே வருது. சரியா சாப்பிட மாட்டேங்கற. ராத்திரியெல்லாம் சரியாத் தூங்காம புரண்டு புரண்டு படுத்துக்கற!"

"அது உனக்கு எப்படித் தெரியும்? நீயும் சரியாத் தூங்கறதில்லையா?"

"என்னை மடக்கிட்டதா நினைக்கறியாக்கும்! எனக்கு ஒண்ணு ரெண்டு தடவை முழிப்பு வந்தப்ப  நீ தூக்கம் வராம புரண்டு புரண்டு படுக்கறதை கவனிச்சேன்" என்றாள் லட்சுமி.

"நீயா கற்பனை செஞ்சுக்கறம்மா! எனக்கு உடம்பு நல்லாத்தான் இருக்கு. நான் நல்லாத்தான் சாப்பிடறேன், நல்லாத்தான் தூங்கறேன்" என்றாள் சிவகாமி.

"நான் கற்பனை செஞ்சுக்கறேனா? 'உன் பெண்ணுக்கு என்ன ஆச்சு? சோகை பிடிச்சவ மாதிரி மெலிஞ்சுக்கிட்டே வராளே' ன்னு நிறைய பேரு எங்கிட்ட கேக்கறாங்கடி. அவங்களுமா கற்பனை செஞ்சுக்கறாங்க?"

"சரிம்மா. இனிமே நல்லா சாப்பிடறேன், தூங்கறேன். நீ கவலைப்படாதே!" என்று தாயைச் சமாதானப்படுத்தி விட்டு அங்கிருந்து அகன்றாள் லட்சுமி.

'நல்ல வேளை! எங்கே போனாய் என்று கேட்க ஆரம்பித்த அம்மா அதை மறுபடி கேட்கவில்லை. கேட்டிருந்தால் அதற்கு ஏதாவது பொய் சொல்ல வேண்டி இருந்திருக்கும்!

கதிரேசன் மீது கொண்ட காதலால் சில நாட்களாக நான் சரியாகச் சாப்பிடாமலும், தூங்காமலும், உடல் இளைத்துப் போயும் இருப்பது எனக்குத் தெரியாதா என்ன?  என்னையும்தான் என் தோழி உட்படப் பல பேர் ஏண்டி இப்படி இளைத்து விட்டாய் என்று கேட்கிறார்கள்.. 

'இந்த நோசைப் போக்கிக் கொள்ள ஒரே வழி கதிரேசனைப் பார்த்து அவனிடம் என் காதலைச் சொல்வதுதான் என்று  நினைத்து, அவனைப் பார்க்க அவன் வேலை செய்யும் வயல்வெளிக்குப் போனதையும், நாணம் காதலைச் சொல்ல விடாததால் அவனிடம் காதலைச் சொல்லாமல் நீண்ட நேரம் வெயிலில் நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் திரும்பி வந்ததையும் அம்மாவிடம் சொல்ல முடியுமா என்ன?'

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 117
படர் மெலிந்திரங்கல் (பிரிவுத் துயரால் உடல் மெலிதல்)

குறள் 1162
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்..

பொருள்:
காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...