Wednesday, July 10, 2019

1092. பார்வை ஒன்றே போதுமே!

''என்னைத் தொட்டுச் சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்''

"எவ்வளவு அருமையா எழுதி இருக்காரு கவிஞர்! கண்ணதாசன்னா கண்ணதாசன்தான்!' என்றான் லிங்கம்.

''சும்மா அளக்காதே! இதில என்ன புரிஞ்சுது உனக்கு?'' என்றாள் சுமதி.

''என்ன அப்படிச் சொல்ற? உன் கண்கள் என்னைத் தொடுது, ஆனா உன் கைகள் என்னைத் தொடலியேன்னு ஏக்கமா இருக்கு! இதான் அர்த்தம்!''

''பரவாயில்லையே! அர்த்தம் புரியாமலியே அளக்கறியோன்னு நினைச்சேன்'' என்றாள் சுமதி.

'அப்ப என் ஏக்கத்தைப் போக்குவியா?'' என்றான் லிங்கம்.

''அது முடியாதுடா கண்ணா!'

''ஏன் கண்ணு?''

''அந்தப் பாட்டில அடுத்த வரியிலியே அதுக்கு பதில் இருக்கு!''

''அப்படியா? அடுத்த வரில என்ன வருது?'' என்று மனதுக்குள் பாட்டைச் சொல்லிப் பார்த்த லிங்கம், ''முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம்.  ஓ! அதான் காரணமா?'' என்றான்.

சுமதி ஆமோதிப்பது போல் தலையாட்டினாள்.

''ஏன் கஷ்டப்பட்டு முள் மேல நிக்கற? என்ன செய்யணும்னு அடுத்த வரியிலியே சொல்லியிருக்காரே கவிஞர்?''

அடுத்த வரி என்ன என்று சுமதி யோசிப்பதற்குள், ''முத்துச் சரமே வா எந்தன் பக்கம்!'' என்றபடியே அவள் கையைப் பிடிக்கப் போனான் லிங்கம்.

சட்டென்று பின் வாங்கிய சுமதி, ''இங்க பாரு. தொட முயற்சி பண்ணினா, நீ என்னை மறந்துட வேண்டியதுதான்.'' என்றாள் கோபத்துடன்.

அவள் திடீர் கோபத்தால் அதிர்ச்சி அடைந்த லிங்கம், ''சும்மா கையைத் தொட வந்ததுக்கு இப்படி எகிறிக் குதிக்கிற! எனக்கும் ரோஷம் இருக்கு. இனிமே உன்னை நான் பாக்க வர மாட்டேன்'' என்று சொல்லி விட்டுக் கோபமாகக் கிளம்பினான்.

சுமதி அதிர்ச்சியுடன் நின்றாள்.

ரு வாரத்துக்குப் பீறகு ஒரு நாள் லிங்கம் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, எதிரில் சில பெண்கள் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். எதிர்ச் சாரியில் நடந்து வந்து கொண்டிருந்த லிங்கம் அவர்களை கவனிக்கவில்லை. அவர்களைக் கடந்து செல்லும்போதுதான் ஏதோ உள்ளுணர்வு தோன்றி சட்டென்று திரும்பிப் பார்த்தான்.

அவர்களில் சுமதியும் இருந்ததை அப்போதுதான் கவனித்தான். அவன் பார்த்த நேரத்தில் அவளும் அவனைக் கடைக் கண்ணால் ஒரு கணம் பார்த்து விட்டுப் பிறகு முகத்தைத் திருப்பிக் கொண்டாள். லிங்கத்தின் உடலில் சுரீரென்று ஒரு உணர்வு பரவியது.

''என்னைப் பாக்கவே மாட்டேன்ன. அப்புறம் அதுக்கு வந்திருக்க?'' என்றாள் சுமதி.

''நீதான் வரச் சொன்ன!''

''நான் வரச் சொன்னேனா? இது என்ன புதுக் கதை?''

''காலையில தெருவில போகச்சே என்னைப் பாக்கல?''

''தெருவில நடந்து போறப்ப, எதுத்தாப்பில நடந்து வரவங்களைப் பாக்காம இருக்க முடியுமா?''

''அப்படியா பாத்த நீ? ஒரு நொடியே பாத்தாலும், கடைக்கண்ணால பாத்தாலும், ஆளை அப்படியே அடிச்சுத் தூக்கிட்டுப் போற பார்வை இல்ல அது! அதான் ஓடி வந்துட்டேன்!  இன்னொரு விஷயமும் புரிஞ்சுது.''

''என்ன?''

''உன்னைத் தொட்டா ஒரு சிலிர்ப்பு வரும்னு நினைச்சுதான் அன்னிக்கு உன்னைத் தொட முயற்சி செஞ்சேன். ஆனா உன் பார்வைல கிடைக்கற சந்தோஷமே இவ்வளவு இருக்கே! தொடறதையெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் வச்சுக்கலாம்னு முடிவு செஞ்சுட்டேன்!''

''போய்யா!'' என்றாள் சுமதி.

''முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம்'' என்று பாடினான் லிங்கம்.

'அடுத்த வரிக்குப் போயிடப் போற, ஜாக்கிரதை!'' என்றாள் சுமதி.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 110
குறிப்பறிதல் 
குறள் 1092
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

பொருள்:
கண்களால் என்னை நோக்கிக் களவு கொள்ளும் அந்தச் சுருங்கிய பார்வை காமத்தில் பாதியை விடப்பெரியது.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Wednesday, July 3, 2019

1091. பார்வையிலே நோய் கொடுத்தாய் கன்னி இள மானே!

"ஏண்டா ஒரு மாதிரி இருக்கே?" என்றான் சபேசன்.

"ஒண்ணுமில்லையே!" என்றான் நடராஜன்.

"சும்மா மழுப்பாதேடா! அந்தப் பொண்ணைப் பாத்ததிலேந்துதானே இப்படி இருக்கே?"

"தப்பு. அந்தப் பொண்ணைப் பாத்ததிலேந்து. இல்ல. அந்தப் பொண்ணு என்னைப் பாத்ததிலேந்து!"

"ரெண்டும் ஒண்ணுதானேடா?"

"எப்படி ஒண்ணாகும்? நாம எவ்வளவோ பெண்களை சைட் அடிக்கிறோம். பல பேரு நம்பளைத் திருப்பி பாக்கக் கூட மாட்டாங்க."

"ஆனா அவ உன்னைப் பாத்துட்டாளாக்கும்?"

"பாக்கறதுன்னு சாதாரணமா சொல்ல முடியாதுடா அதை. ஒரு பெண்ணோட பார்வை ஈட்டி மாதிரி, அம்பு மாதிரி, வாள் மாதிரின்னெல்லாம் இலக்கியத்தில எழுதுவாங்க. அப்பல்லாம் அதைப் படிச்சு சிரிச்சுருக்கேன். ஆனா அந்தப் பொண்ணு என்னைப் பாத்ததும் உடம்பே ஒரு மாதிரி ஆயிடுச்சு. அன்னிலேந்து இன்னும் உடம்பு ஏதோ ஜுரம் வந்த மாதிரிதான் இருக்கு" என்றான் நடராஜன்

"அப்ப, அவளை மறுபடியும் போய்ப் பாத்துப் பேச வேண்டியதுதானே?"

"பயமா இருக்குடா. அவ ஒரு தடவை என்னைப் பார்த்ததே என்னை என்னவோ செய்யுது. மறுபடி ஒரு தடவை அவ பார்வையைச் சந்திச்சா என்ன ஆகுமோ!" 

"போடா..." என்றான் சபேசன் எரிச்சலுடன்.

சற்று தூரம் நண்பர்கள் பேசாமல் நடந்து சென்றனர்.

வழியில் ஒரு இடத்தில் ஒரு பாம்புப் பிடாரன் கையில் ஒரு பாம்பைப் பிடித்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான்.

அவனைத் தாண்டிச் சென்றதும் "பாம்பையெல்லாம் பிடிச்சுக்கிட்டுப் போய் அவங்க என்ன செய்வாங்க தெரியுமா?" என்றான் சபேசன்.

"வித்தை காட்டுவாங்க" என்றான் நடராஜன்.

"அது விஷம் இல்லாத பாம்பை வச்சு. விஷமுள்ள பாம்பா இருந்தா?"

"என்ன செய்வாங்க?"

"அதோட பல்லிலேந்து விஷத்தை எடுத்து வித்துடுவாங்க" என்றான் சபேசன்

"வித்துடுவாங்களா? யாருக்கு?"

"யாருக்குன்னு எனக்கு சரியாத் தெரியாது. ஆனா பாம்போட விஷத்தை எடுத்து பாம்புக்கடிக்கு விஷ முறிவு மருந்து தயார் செய்வாங்கன்னு தெரியும்."

"விஷத்திலேந்து விஷ முறிவு மருந்து தயாரிப்பாங்களா? ஆச்சரியமா இருக்கே!" என்றான் நடராஜன்.

"ஆமாம். இயற்கையிலே எல்லாமே அப்படித்தான். விஷத்தை முறிக்க விஷத்தைத்தான் பயன்படுத்தணும்!"

"அப்ப, நீ சொன்னது சரிதான். நான் இப்பவே அவளைப் போய்ப் பாக்கணும்!" என்றான் நடராஜன்.

"பாக்கணுமா? எதுக்கு?"

"அதாவது அவ மறுபடி என்னைப் பாக்கணும். அவ பார்வையாலே ஏற்பட்ட நோயை அவளோட இன்னொரு பார்வைதான் தீர்க்க முடியும்!"

சபேசனின் பதிலை எதிர்பார்க்காமல் நடராஜன் வேறு திசையில் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 110
குறிப்பறிதல் 
குறள் 1091
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

பொருள்:
மை தீட்டிய இவள் கண்களில் இரண்டு வகைப் பார்வைகள் உள்ளன. ஒருவகைப் பார்வை நோயைக் கொடுக்கும். இன்னொரு வகைப் பார்வை அந்த நோயைத் தீர்க்கும் மருந்தாக இருக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

அறத்துப்பால்                                                                     பொருட்பால்        


















1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...