அதிகாரம் 123 - பொழுது கண்டிரங்கல்

திருக்குறள்
காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்

1221. இதுவா மாலைப் பொழுது,
இல்லவே இல்லை!

மாலைப் பொழுது என்றாலே கண்மணிக்குத் தனி மகிழ்ச்சிதான். 

கண்மணிக்கு மட்டுமல்ல, எல்லா இளம் பெண்களுக்கும்தான் - அதாவது காதலனுடன் சேர்ந்து வாழும் இளம் பெண்களுக்கு!

மலர்ச் சோலைகளில், மலர்களுக்குப் போட்டியாகக் குழுமி இருக்கும் இளம் பெண்களும், அவர்களுடன் அன்புடன் உரையாடும் இளங்காளைகளும் என்று எத்தகைய களையுடன் இருக்கும் மாலைப் பொழுது!

மலர்ச்சோலைகள்தான் என்றில்லை, மரத்தோட்டங்ள், சாலை ஓரங்கள், நதிக்கரைகள், குளக்கரைகள் மற்றும் விடுகளுக்குள்ளேயும் கூட உற்சாகத்தைக் கொண்டு வரும் பொழுதல்லவா மாலை!

என்னதான் நாள் முழுவதும் காதலரின் நினைவில் களிப்பாக இருந்தாலும், மாலைப் பொழுது அளிக்கும் இன்பம் தனிச் சுவை கொண்டதுதான். அவ்வாறு சிறப்பாக இன்பமளிக்க வேண்டுமென்று மாலைப் பொழுது இறைவனிடம் வரம் வாங்கிக் கொண்டு வந்திருக்கும் போலும்!.

சட்டென்று தலையை உலுக்கிக் கொண்டாள் கண்மணி.

'இதென்ன, இப்போது மாலைப் பொழுதைப் பற்றிய நினைவு - கடும் கோடையில் வசந்த காலத்தின் இனிமையைப் பற்றி நினைப்பது போல்? இப்போதெல்லாம்தான் மாலைப் பொழுது என்ற ஒன்று வருவதே இல்லையே!

மாலைப் பொழுதைப் பார்த்தே மாதங்கள் பல ஆகி விட்டன.

அவள் கணவன் அவளைப் பிரிந்து வெளியூர் செல்வதற்கு முதல் நாள் அவளுடன் இனிமையாகப் பேசிக் கொண்டிருந்தானே, அந்த நாளுக்குப் பிறகு, அவள் மாலைப் பொழுதையே பார்க்கவில்லேயே!

"கண்மணி. பொழுது சாஞ்சுடுச்சு பாரு. விளக்கேத்தி வை!"

உள்ளிருந்து அம்மாவின் குரல் கேட்டது.

இல்லை, இது மாலைப் பொழுதல்ல. அம்மா தவறாகக் கூறுகிறாள். தினமும் எனக்கு அதிகத் துன்பத்தைக் கொடுக்கும் இந்தப் பொழுதை மாலை என்று எப்படிக் கூற முடியும்?

நான் மட்டுமா? என்போல் காதலனைப் பிரிந்து வாழும் என் தோழிகளும் இந்தப் பொழுதைத் தங்கள் உயிரைக் குடிக்கும் கொடிய பொழுது என்றுதானே கூறுகிறார்கள்?

என் கணவர் என்னை விட்டுப் பிரிந்து சென்றபோது, மாலைப் பொழுதும் அவருடன் சென்று விட்டது. இனி அவர் திரும்பி வரும்போதுதான் மாலையும் வரும்.

இது மாலை அல்ல, மாலை என்ற வேடத்தில் வந்து என்னைத் துன்புறுத்தும் கொலைப் பொழுது.

குறள் 1221
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.

பொருள்:
பொழுதே! நீ மாலைக் காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கின்றாய்!

1222. மயங்கிய மாலைப் பொழுது 

மதுவந்தி கண் விழித்தாள்.

'எப்போது தூங்கினேன்?' என்ற கேள்வி அவளுள் எழுந்தது. அதைத் தொடர்ந்து, 'இப்போது நான் விழித்துக் கொண்டிருக்கிறேனா?' என்ற கேள்வியும் வந்தது.

தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டாள் மதுவந்தி. வலித்தது. 'அப்படியானால், விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன்!'

'ஒருவேளை, இந்தக் கிள்ளிக் கொள்வது, வலியை உணர்வது எல்லாமே தூக்கத்தில் வரும் கனவில் நிகழ்வதாக இருந்தால்...?'

மதுவந்தி எழுந்து, நடந்து வாசலுக்கு வந்தாள்.

'ஏன் எல்லாம் மங்கலாகத் தெரிகின்றன?

ஒருவேளை, தூக்கத்தில் தெரியும் காட்சிகள் என்பதால்தான் எல்லாம் மங்கலாகத் தெரிகின்றனவோ?'

வாசல் திண்ணையில் அம்மா அமர்ந்திருந்தாள்.

"தூங்கி எழுந்தியா? ராத்திரி முழுக்க தூங்காம, மத்தியானம் உன்னை அறியாமலேயே தூங்கிட்டு, சாயந்திரம் எழுந்து வர! பகல்ல சரியா சாப்பிடக் கூட இல்ல. இரு. உனக்குச் சாப்பிட ஏதாவது எடுத்துக்கிட்டு வரேன்!" என்று கூறியபடியே உள்ளே போனாள் அவள் அம்மா.

அவளைக் கடந்து போனபோது, "உன் புருஷன் ஊருக்குப் போனதிலேந்து கண்ணெல்லாம் மங்கிப் போய் சோர்வாவே இருக்கே! அவன் எப்ப திரும்பி வரப் போறானோ, நீ எப்ப பழையபடி ஆகப்போறியோ?" என்று முணுமுணுத்துக் கொண்டே போனாள் அம்மா.

அம்மா சொன்ன பிறகுதான், அது மாலை நேரம் என்பது மதுவந்திக்குப் புரிந்தது.

'ஓ, இது மாலை நேரமா? அதுதான் இப்படி மங்கலாய் இருக்கிறாயா? நீ பகலைச் சேர்ந்தவளா, அல்லது இரவைச் சேர்ந்தவளா? பாவம், அது தெரியாமல்தானே நீ இப்படி மயங்கி நிற்கிறாய்? ஏன் இந்த மயக்கம்? உன் காதலனும் என் காதலனைப் போல் கொடியவனோ? உன்னைத் தனியே விட்டு விட்டுப் போய் விட்டானோ? அதனால்தான், நீயும் என்னைப் போல் கண் பார்வை மங்கி நிற்கிறாயோ?'

"மது, உள்ளே வா! பலகாரம் எடுத்து வச்சிருகேன்!"

உள்ளிருந்து அம்மாவின் குரல் கேட்டது.

'அம்மாவின் குரல் கேட்பது கனவிலா அல்லது நனவிலா?'

குறள் 1222
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.

பொருள்:
பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ?

1223. மாதமோ மார்கழி!

வள்ளி தன் வீட்டு வாசலில் வந்து நின்றபோது, பனிக் காற்று அவள் உடலைச் சுள்ளென்று தாக்கியது.

இது மாலை நேரம் ஆயிற்றே! இப்போதே ஏன் இப்படிக் குளிர்கிறது?

"மார்கழி மாசம். முன்பனிக் காலம்னு சொல்லுவாங்க. பொழுது சாயற நேரத்திலேயே எப்படிக் குளிருது பாரு! இந்தக் குளிர் உடம்புக்கு ஒத்துக்காது. உள்ளே போயிடு!" என்று கூறிக் கொண்டே, வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தாள் அவள் அம்மா.

'மார்கழி மாதம் என்பதாலா இந்த மாலை நேரத்தில் இவ்வளவு குளிர்கிறது?

'இல்லை. அதனால் இல்லை.

'சென்ற ஆண்டு மார்கழி மாத மாலை வேளையில் இது போன்ற குளிர் இல்லையே!

'ஓ! இப்போது காரணம் புரிகிறது.

'அப்போது என் காதலர் என் அருகில் இருந்தார். அதனால் என் முன்னால் வரத் துணிவில்லாமல், பனியினால் மேனி கருத்து, பசலை அடைந்து நடுங்கிக் கொண்டு வந்ததல்லவா இந்த மாலை!

'ஆனால் இன்று, என்னிடம் பிணக்குக் கொண்டது போல், இப்படி என் மீது குளிரை வீசி என்னைத் துன்புறுத்துகிறதே இந்த மாலை! தினமும் இப்படி என்னைக் கொடுமைப்படுத்தி என் உயிரை வாட்டுவது, என் அருகில் என் காதலன் இல்லை என்ற இளக்காரத்தினல்தானே?

'ஏ, மாலைப் பொழுதே! அவர் திரும்பி வரட்டும். அப்போது உன்னை கவனித்துக் கொள்கிறேன்!'

குறள் 1223
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.

பொருள்:
அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு, என் முன் வரவே நடுக்கம் எய்தி, மேனி கருத்து வந்த இந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரைப் பறிப்பது போல் தோன்றி, துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.

1224. மாலைப் பொழுது வந்து
படை போலக் கொல்லும்!

ஒரு கொடிய கனவு கண்டு, திடுக்கிட்டுக் கண் விழித்தாள் நாயகி.

நாயகி தன் கணவனோடு ஒரு சோலையில் அமர்ந்திருக்கிறாள். அவள் கணவன் எழுந்து எங்கேயோ போய் விடுகிறான்.

நாயகி தனியே உட்கார்ந்திருக்கும்போது, ஒரு பெண் தன் கையில் ஒரு வாளை ஓங்கியபடி, அவளை நோக்கி வருகிறாள். நாயகி பயந்து போய் எழுந்து ஓடுகிறாள்.

ஓடிக் கொண்டிருக்கும்போதே, கனவு கலைந்து கண் விழுத்தாள் நாயகி.

என்ன ஒரு பயங்கரமான கனவு!

விடியற்காலையில் கண்ட கனவு பலிக்கும் என்பார்களே!

அப்படியானால், அவளை யாராவது கொல்லப் போகிறார்களா? எதற்காக?

கணவனைப் பிரிந்திருக்கும் காலத்தில், இப்படி ஒரு கனவு ஏன் வருகிறது? யாரிடமாவது இந்தக் கனவுக்கு விளக்கம் கேட்கலாமா? யாரிடம் கேட்பது?

மாலை வந்ததும், வாசலுக்கு வந்து திண்ணையில் அமர்ந்தாள் நாயகி.

கடந்த சில மாதங்களாகவே, மாலை நேரத்தில் அவளுக்கு ஏற்பட்டு வந்த உணர்வு அன்றும் ஏற்பட்டது.

மனதில் இனம் புரியாத ஒரு வலியும் வேதனையும்.

என் கணவரைப் பிரிந்ததிலிருந்து, இந்த மாலை நேரம் ஏன் என்னை இப்படித் துன்புறுத்துகிறது?

ஏ மாலையே! ஒருவேளை நீ என்னைப் போல் ஒரு பெண்ணாக இருந்தால், என் நிலையைப் புரிந்து கொண்டு, என்னைத் துன்புறுத்தாமல் இருப்பாயோ, என்னவோ!

இந்த எண்ணம் தோன்றியதுமே, அன்று விடியற்காலை கனவில் வந்த பெண்ணின் உருவம் மனதில் வந்து போயிற்று.

'ஓ! மாலைப் பொழுது என்னை வருத்துவதை நினைத்துக் கொண்டே தூங்கியதால்தான், மாலைப் பொழுது ஒரு பெண் வடிவத்தில் வந்து என்னைக் கொல்ல வருவது போன்ற கனவு வந்திருக்கிறது!'

அந்தச் சோர்வான மனநிலையிலும், கனவு அளித்த பயம் நீங்கியது நாயகிக்குச் சற்றே ஆறுதலாக இருந்தது.

குறள் 1224
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.

பொருள்:
காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது, கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.

1225. காலைப் பொழுதே வருக!

சாரதாவின் கணவன் அவளை விட்டுப் பிரிந்ததிலிருந்து, அவள் அவனுடன் கனவில்தான் வாழ்ந்து வந்தாள்.

தினந்தோறும் வரும் கனவு. அதில் வந்து அவளுடன் அன்புடன் பேசி அவளை மகிழ்விக்கும் அவள் கணவன்.

துவக்கத்தில், காலையில் கண் விழித்ததும், எல்லாம் கனவுதானா என்ற ஏமாற்றம் ஏற்பட்டது. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, காலையில் எழுந்ததும், கனவை நினைத்துப் பார்த்து மகிழ ஆரம்பித்து விட்டாள்.

அதனால், சாரதாவுக்குக் காலை நேரம் ஒரு நாளின் அதிக மகிழ்ச்சியான பொழுதாக இருந்தது.

மாறாக, மாலை வந்தாலே, சாரதாவை ஒருவித ஏக்கமும், மனச் சோர்வும் பற்றிக் கொண்டன. மாலையில் கணவனுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் களித்த நாட்கள் நினைவு வந்து, இப்போது அப்படி இல்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தின.

அதனால், மாலை நேரம் என்றாலே, சாரதாவுக்கு மனவலியைத் தரும் நேரம் என்று ஆகி விட்டது.

ன்று இரவு உறங்கச் சென்றபோது, சாரதாவின் மனதில் ஒரு சிந்தனை தோன்றியது.

'காலை, மாலை இரண்டுமே ஒரு நாளின் இரு பகுதிகள்தானே? அவற்றில், காலை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, மாலையோ, எனக்கு மனவேதனையைத்தான் தருகிறது.

'காலைப் பொழுது என்மீது அன்பு காட்டுகிறதென்றால், காலைப் பொழுதுக்கு நான் ஏதாவது நன்மை செய்திருக்க வேண்டும்.

'அதுபோல், மாலைப் பொழுது என்னை வாட்டி வதைக்கிறது என்றால், மாலைப் பொழுதுக்கு நான் ஏதேனும் தீங்கு இழைத்திருக்க வேண்டும்!

'ஆனால், காலைக்கு நான் செய்த நன்மை எது என்பதையும், மாலைக்கு நான் செய்த தீங்கு எது என்பதையும் என்னால் உணர முடியவில்லையே!'

குறள் 1225
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.

பொருள்:
யான் காலைப் பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?

1226. கொடிது கொடிது மாலை கொடிது!

செங்கமலத்துக்குத் திருமணம் ஆன புதிதில், ஒரு நாளின் சிறந்த பகுதி எது என்று அவளை யாராவது கேட்டிருந்தால், மாலை நேரம் என்று சொல்லி இருப்பாள்.

அந்த மாலை நேரத்தில்தான் அவள் கணவன் வேலை முடிந்து வீடு திரும்புவான் என்பது ஒரு காரணம் என்றாலும், அந்த மாலை நேரம் தந்த சுகம்தான் முக்கியமான காரணம். 

வெயிலின் கடுமை தணிந்து, இனிமையான பொழுதாகத் திகழும் மாலை.

இதமாக உடலை வருடிச் சென்று இன்பமளிக்கும் தென்றல் காற்றைக் கொண்டு வரும் மாலை.

வீட்டு வாசலில் அமர்ந்தபடியோ, தெருவில் நடந்தபடியோ, கணவனுடன் பேசிக் கொண்டிருக்கும் இனிய அனுபவத்தை அளிக்கும் மாலை.

எல்லாவற்றுக்கும் மேல், இரவில் கணவனுடன் தனிமையில் படுத்துறங்கும் இன்பமான அனுபவத்தை எதிர்நோக்க வைக்கும் மாலை!

செங்கமலம் வீட்டுக்கு வெளியே வந்தாள். அவள் தனிமையைச் சுட்டிக் காட்டி ஏளனம் செய்வது போல் மாலைப் பொழுது காட்சி அளித்தது.

'ஏன் இந்த மாலைப் பொழுது எனக்கு ஒரு நாளின் மோசமான பகுதியாக இருக்கிறது?' என்ற எண்ணம் எழுந்ததும், சில மாதங்கள் முன்பு வரை, மாலைப் பொழுதை ஒரு நாளின் மிக இனிமையான பொழுதாகத் தான் கருதியது செங்கமலத்துக்கு நினைவு வந்தது.

'கணவனைப் பிரிந்திருக்கும் காலத்தில், இந்த மாலை இவ்வளவு கொடியதாக இருக்கக் கூடும் என்பது கணவனுடன் கூடியிருந்தபோது, எனக்குத தெரியாமல் போய் விட்டதே!'

குறள் 1226
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

பொருள்:
மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல், உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

1227. காலையில் அரும்பி மாலையில் மலரும் பூ!

கமலியின் தாய் கோசலைக்கு விடாத இருமல் இருந்ததால், அவளைப் பார்க்க வைத்தியர் வந்தார்.

 அவள் நாடியைப் பார்த்து விட்டு, "கப நாடியோட துடிப்பு அதிகமா இருக்கே! சளி அதிகமா இருக்கு. எத்தனை நாளா சளி இருக்கு?" என்றார் வைத்தியர்.

"ஒரு மாசத்துக்கு மேல இருக்குங்க!" என்றாள் கோசலை.

"முதலிலேயே கவனிக்காம விட்டுட்டீங்க. சளி பிடிச்சா, தயிர், மோர், எலுமிச்சை, வெள்ளரி மாதிரி குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்கணும். சுடுநீர் குடிக்கணும். கவனமா இல்லாததால, இப்ப இருமல் வந்திருக்கு. அப்புறம், காய்ச்சல், உடல்வலின்னு நோய் முத்திக்கிட்டே இருக்கும். நான் கொடுக்கற சூரணத்தை மூணு வேளை சுடுநீர்ல கலந்து சாப்பிடுங்க. அதோட, நான் சொன்ன மாதிரி குளிர்ச்சியான உணவுப் பொருட்களை சாப்பிடாம இருங்க!"

வைத்தியர் சென்றதும், "வைத்தியர் சொல்றதைப் பாருடி. சளி பிடிக்கறதுல ஆரம்பிச்சு, இருமல், காய்ச்சல், உடல்வலின்னு எப்படி நோய் முத்துது பாரேன்!" என்றாள் கோசலை.

"இது பரவாயில்லைம்மா. இந்த நோய் முத்தறதுக்கு ஒரு மாசத்துக்கு மேல ஆகுதே. இன்னொரு நோய் இருக்கு. அது காலையில பூ அரும்பற மாதிரி இலேசா ஆரம்பிக்கும். பூ கொஞ்சம் கொஞ்சாமா விரியற மாதிரி, நாள் முழுக்க முத்திக்கிட்டே இருக்கும். சாயந்திரம் ஆனா, பூ முழுசா மலருகிற மாதிரி, இந்த நோய் முழுசா முத்தி, ஆளை வாட்டி எடுக்கும்!" என்றாள் கமலி.

"அது என்னடி அப்படி ஒரு நோய்? நான் கேள்விப்பட்டதே இல்லையே!" என்றாள் கோசலை, வியப்புடன்.

கணவனைப் பிரிந்திருப்பதால், தினமும் தன்னைப் பிடித்து வாட்டும் காம நோய்தான் அது என்பதைத் தாயிடம் எப்படிச் சொல்வது என்று தயங்கிய கமலி, "பெயர் ஞாபகம் இல்லை. ஏதோ ஒரு புத்தகத்தில படிச்சேன்" என்று சொல்லிச் சமாளித்தாள்.

குறள் 1227
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.

பொருள்:
காதல் துன்பமாகிய இந்தப் பூ காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப் பொழுதில் மலர்ந்து விடுகிறது.

1228. கொல்லும் குழலிசை!

இரவில் சரியாகத் தூங்காததால், சுமந்திரை பிற்பகலில் தன்னை அறியாமல் சற்றுக் கண்ணயர்ந்து விட்டாள்.

அது முழுத் தூக்கமாக இல்லை. விழிப்பா, தூக்கமா என்று இனம் காண முடியாத ஒருவகை மயக்க நிலை.

அந்த அரைத் தூக்க நிலையில், தூரத்திலிருந்து வந்த ஒரு ஒலி சுமந்திரையின் காதில் கேட்டது.

என்ன ஒலி அது?

அந்த ஒலி இன்னும் நெருங்கி வந்தபோது, அது குழலோசையாக இருக்குமோ என்று தோன்றியது.

ஆம், குழலோசைதான் அது!

விழிப்பு வந்து, சுமந்திரை விருட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.

ஓ, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று, திரும்ப வீட்டுக்கு அழைத்து வரும்போது, வழக்கமாகச் செய்வது போல், புல்லாங்குழலை வாசித்தபடி வருகிறான் ஆயச் சிறுவன்.

அப்படியானால், மாலைப் பொழுது வந்து விட்டதா? தன்னை அறியாமல், சற்று நேரம் கண்ணயர்ந்திருந்த தனக்கு, மாலை வந்து விட்டது என்று நினைவூட்டும் விதமாக ஒலிக்கிறதே இந்தக் குழலோசை!

குழல் இனிது என்பார்கள். ஆனால் கணவனைப் பிரிந்திருக்கும் இந்தக் காலத்தில், என்னை வருத்துவதற்கென்றே வரும் மாலையை நினைவூட்டுவது போல் வரும் இந்தக் குழலிசை எனக்கு மனச் சோர்வைத்தானே அளிக்கிறது!

'ஆயச் சிறுவனே! உன்னுடைய குழலோசை என்னை வருத்துவதற்காக மாலை அனுப்பும் தூதா, அல்லது என்னைக் கொல்ல மாலை அனுப்பும் படையா?'

குறள் 1228
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

பொருள்:
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப் பொழுதிற்குத் தூதாகி, என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது.

1229. மாலினியின் சாபம்!

மாலை நேரத்தில் தன் வீட்டு வாசலில் வந்து நின்றபோது, வழக்கமாக அந்த வேளையில் வரும் சோர்வு மாலினியைப் பற்றிக் கொண்டது. 

அவள் கணவன் அவளைப் பிரிந்து வெளியூர் சென்று விட்ட கடந்த நான்கு மாதங்களாவே இப்படித்தான்.

மாலைப் பொழுதைக் காணவே கூடாது என்று உள்ளே படுத்திருந்தால், "பொழுது சாயற நேரத்தில் வீட்டுக்குள்ளே படுத்துக் கிடந்தால் குடும்பத்துக்கு ஆகாது. வாசல்ல போய் நில்லுடி!" என்று சொல்லி, அவள் அம்மா அவளை வெளியே துரத்தி விடுவாள்.

தினமும் இந்த மாலைப் பொழுது அளிக்கும் துன்பத்தைத் தாங்கிக் கொள்வது மாலினிக்குப் பெரும்பாடாக இருந்தது. 

'கணவன் எப்போது திரும்புவான், இந்தத் துயரத்திலிருந்து நான் எப்போது விடுபடுவேன்?'

தெருவில் போய்க் கொண்டிருந்தவர்களைப் பார்த்தாள் மாலினி.

பலரும் சிரித்துப் பேசியபடி உற்சாகமாகச் சென்று கொண்டிருந்தனர்.

'இந்த மாலைப் பொழுது இவர்களுக்கெல்லாம் மட்டும் எப்படி மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கிறது?'

தெருவில் மகிழ்ச்சியாகச் சிரித்துப் பேசிக் கொண்டு சென்றவர்களைப் பார்த்தபோது, அவர்கள் மீது அந்தக் கணத்தில் ஏற்பட்ட பொறாமையினால், மாலினியின் மனதுக்குள் இந்த எண்ணம் தோன்றியது.

ஏ, ஊர் மக்களே! இந்த மாலைப் பொழுது அளிக்கும் துன்பத்தால் நான் வாடி வதங்கிக் கொண்டிருக்கும்போது, நீங்கள் மட்டும் இந்த மாலைப் பொழுதில் உல்லாசமாக இருக்கிறீர்களே! நீங்களும் இந்த மாலைப் பொழுதால் துன்பத்துக்கு ஆளாகி வருந்தும் நாள் வரும்!' என்று தன் மனதுக்குள் சாபமிட்டள் மாலினி.

குறள் 1229
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.

பொருள்:
அறிவு மயங்கும்படியாக மாலைப் பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி, என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.

1230. தோழியின் அழைப்பு

"அல்லி! உன் தோழி கலை வந்திருக்கா பாரு!" என்று கூவினாள் அல்லியின் தாய் சங்கரி.

அல்லி அறையிலிருந்து வெளியே வந்ததும், "வாடி! கொஞ்சம் வெளியில போயிட்டு வரலாம்" என்று அழைத்தாள் கலை.

"இந்த நேரத்திலேயா? வேண்டாம்" என்றாள் அல்லி, தலையை பலமாக ஆட்டியபடி.

"ஏண்டி, நான் என்ன உன்னை உச்சி வெயில் நேரத்திலேயா வெளியே கூப்பிடறேன்? வெயில் அடங்கிப் போன சாயங்கால வேளையிலதானே கூப்பிடறேன்?" என்றாள் கலை.

"உச்சி வெயில் நேரத்தில கூப்பிட்டா கூட, அவ வெளியே வருவா. சாயங்கால நேரத்தில வர மாட்டா. உள்ளேயே முடங்கிக் கிடக்கறா. நான் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன். கேக்கறதில்லை" என்றாள் சங்கரி, உள்ளிருந்தே.

அல்லியின் கையைப் பரிவுடன் பற்றிக் கொண்ட கலை, "உன் பிரச்னை எனக்குப் புரியுது, அல்லி. என் வீட்டுக்காரர் என்னை விட்டுப் பிரிஞ்சபோது, எனக்கும் இப்படித்தான் இருந்தது" என்றாள்.

"உனக்கு எப்படி இருந்ததோ தெரியல. ஆனா, ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுது வந்தா, எனக்கு என் உயிரே போற மாதிரி இருக்கு. அதனாலதான், எழுந்து வரக் கூட சக்தி இல்லாம படுத்துக் கிடக்கேன். இன்னிக்கு நீ வந்ததால, எழுந்து வந்தேன். நீ என்னன்னா, என்னை வெளியே வரச் சொல்றே!"

கலை பேசாமல் இருந்தாள்.

"ஆனா, எனக்கு இது வேண்டியதுதான்!" என்றாள் அல்லி.

"என்னடி சொல்ற?"

"அவர் என்னை விட்டுப் பிரிஞ்சு போனப்பவே, இந்த உயிர் போயிருக்க வேண்டாமா? அப்படிப் போகாம, இப்ப  செத்துச் செத்துப் பிழைக்கற மாதிரி, தினமும் மாலை நேரத்தில என் உயிர் போயிட்டு போயிட்டு வருது!" என்று அல்லி கூறியபோது, அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்தாள் கலை.

குறள் 1230
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.

பொருள்:
பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரைப் பிரிந்தபோது மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.

அறத்துப்பால்                                                                     பொருட்பால்   

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...