அதிகாரம் 117 - படர் மெலிந்திரங்கல் (பிரிவுத் துயரால் உடல் மெலிதல்)

 

திருக்குறள்
காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 117
படர் மெலிந்திரங்கல்
(பிரிவுத் துயரால் உடல் மெலிதல்)

1161. நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார்!

"என்ன தேன்மொழி, ஏன் கொஞ்ச நாளா ஒரு மாதிரி இருக்கே?" என்றாள் பரிவாதினி.

"உனக்குத் தெரியுமே! நீயே இப்படிக் கேக்கற!" என்றாள் தேன்மொழி.

"உன் காதலைப் பத்தி எனக்குத் தெரியுங்கறது உண்மைதான். ஆனா நீ சோர்வா இருக்கறதுக்குக் காரணம் எனக்குத் தெரியாதே!"

"என்னைப் பாத்தா சோர்வா இருக்கற மாதிரியா இருக்கு?"

"அப்படி இருக்கறதாலதான் கேக்கறேன்!"

"நீயும் ஒத்தரைக் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சுக்கிட்டவதானே? உனக்குத் தெரியாதா காதல் நோயைப் பத்தி? காதலரைப் பாக்க முடியலேன்னா அதனால ஏற்படற ஏக்கம், மனத்துன்பம் பத்தியெல்லாம் உனக்குத் தெரியாதா?"

"எனக்குத் தெரியும். ஆனா மத்தவங்க எங்கிட்ட கேக்கறப்ப எனக்கு என்ன பதில் சொலறதுன்னு தெரியல. அதான் உங்கிட்ட கேட்டேன்!" என்றாள் பரிவாதினி.

"மத்தவங்க உங்கிட்ட கேட்டாங்களா? அது எப்படி? நான்தான் என் காதல் நோயை யாருக்கும் தெரியாம மறைச்சு வச்சிருக்கேனே! அது எப்படி மத்தவங்களுக்குத் தெரிஞ்சது?"

"போடி முட்டாள்! மறைச்சு வச்சுருக்கறதா நீ நினைச்சுக்கிட்டிருக்க! மறைச்சு வச்சா நோய் இன்னும் அதிகமாகி இன்னும் அதிகமா வெளியில தெரியும். நெருப்பை மடியில வச்சுக் கட்டிக்கிட்டா அது அணையுமா என்ன? இன்னும் பெரிசா எரிஞ்சு உடையிலேயும் பத்திக்கிட்டு உன்னை அதிகமா வாட்டறதோட, மத்தவங்களுக்கும் வெளிக்காட்டிடும் இல்ல? காதல் நோயை மறைச்சாலும் அப்படித்தான் நடக்கும். நான் அனுபவிச்சிருக்கேனே!" என்றாள் பரிவாதினி, பெருமூச்சுடன்.

குறள் 1161
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

பொருள்:
என் காதல் நோயைப் பிறர் அறியக் கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல் மறைக்க மறைக்க என் நோயும் பெருகவே செய்கிறது.

1162. அம்மாவின் கேள்வி

"ஏண்டி, ஏற்கெனவே உடம்பு சரியில்ல. அதோட இந்த வெய்யில்ல எங்கே போய் சுத்திட்டு வரே?" என்றாள் லட்சுமி, தன் மகள் சிவகாமியிடம்.

"எனக்கு உடம்புக்கு எதுவும் இல்லைம்மா!" என்றாள் சிவகாமி எரிச்சலுடன்.

"உன்னைப் பாத்தா அப்படித் தெரியலியே! கொஞ்ச நாளா உடம்பு இளைச்சுக்கிட்டே வருது. சரியா சாப்பிட மாட்டேங்கற. ராத்திரியெல்லாம் சரியாத் தூங்காம புரண்டு புரண்டு படுத்துக்கற!"

"அது உனக்கு எப்படித் தெரியும்? நீயும் சரியாத் தூங்கறதில்லையா?"

"என்னை மடக்கிட்டதா நினைக்கறியாக்கும்! எனக்கு ஒண்ணு ரெண்டு தடவை முழிப்பு வந்தப்ப  நீ தூக்கம் வராம புரண்டு புரண்டு படுக்கறதை கவனிச்சேன்" என்றாள் லட்சுமி.

"நீயா கற்பனை செஞ்சுக்கறம்மா! எனக்கு உடம்பு நல்லாத்தான் இருக்கு. நான் நல்லாத்தான் சாப்பிடறேன், நல்லாத்தான் தூங்கறேன்" என்றாள் சிவகாமி.

"நான் கற்பனை செஞ்சுக்கறேனா? 'உன் பெண்ணுக்கு என்ன ஆச்சு? சோகை பிடிச்சவ மாதிரி மெலிஞ்சுக்கிட்டே வராளே' ன்னு நிறைய பேரு எங்கிட்ட கேக்கறாங்கடி. அவங்களுமா கற்பனை செஞ்சுக்கறாங்க?"

"சரிம்மா. இனிமே நல்லா சாப்பிடறேன், தூங்கறேன். நீ கவலைப்படாதே!" என்று தாயைச் சமாதானப்படுத்தி விட்டு அங்கிருந்து அகன்றாள் லட்சுமி.

'நல்ல வேளை! எங்கே போனாய் என்று கேட்க ஆரம்பித்த அம்மா அதை மறுபடி கேட்கவில்லை. கேட்டிருந்தால் அதற்கு ஏதாவது பொய் சொல்ல வேண்டி இருந்திருக்கும்!

கதிரேசன் மீது கொண்ட காதலால் சில நாட்களாக நான் சரியாகச் சாப்பிடாமலும், தூங்காமலும், உடல் இளைத்துப் போயும் இருப்பது எனக்குத் தெரியாதா என்ன?  என்னையும்தான் என் தோழி உட்படப் பல பேர் ஏண்டி இப்படி இளைத்து விட்டாய் என்று கேட்கிறார்கள்.. 

'இந்த நோயைப் போக்கிக் கொள்ள ஒரே வழி கதிரேசனைப் பார்த்து அவனிடம் என் காதலைச் சொல்வதுதான் என்று முடிவு செய்து, அவனைப் பார்க்க அவன் வேலை செய்யும் வயல்வெளிக்குப் போனதையும், நாணம் காதலைச் சொல்ல விடாததால் அவனிடம் காதலைச் சொல்லாமல் நீண்ட நேரம் வெயிலில் நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் திரும்பி வந்ததையும் அம்மாவிடம் சொல்ல முடியுமா என்ன?'

குறள் 1162
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்..

பொருள்:
காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை.

1163. இரண்டு பக்கமும் சுமைகள்

தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்த அந்த இளைஞன் தன் தோளில் ஒரு நீண்ட மூங்கில் கம்பைத் தாங்கிச் சென்று கொண்டிருந்தான்.

கம்பின் இரு முனைகளிலும் கயிறுகள் கட்டப்பட்டு ஒவ்வொரு கயிற்றிலும் பொருட்கள் நிரம்பிய ஒரு வாளி தொங்கிக் கொண்டிருந்தது.

"ரெண்டு மூட்டையையும் எப்படி கஷ்டப்பட்டுத் தூக்கிக்கிட்டு நடந்து போறாரு பாரு!" என்றாள் கலா.

"என்ன செய்யறது? அவரோட பொழைப்பு அப்படி!" என்றாள் கோகிலா.

"என் நிலைமையும் அது மாதிரிதானே இருக்கு!"

"என்னடி உளறரே? அவரு கூலித் தொழிலாளி. நீ ஒரு பெரிய வணிகரோட பொண்ணு. நீ எதுக்குக் காவடி சுமக்கணும்?"

"என் மேல ஒரு அழுத்தம் இருந்துக்கிட்டே இருக்கு. அது ரெண்டு பக்கத்திலேந்தும் அழுத்தற மாதிரி எனக்கு ஒரு வலி இருந்துக்கிட்டே இருக்கு!"

"அது என்ன அழுத்தம்? உன் அப்பா ஒரு பக்கம், உன் அம்மா ஒரு பக்கம்னு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அழுத்தறாங்களா?"

"சேச்சே! அவங்க என்னை சுதந்திரமா இருக்க விட்டிருக்காங்க. எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்க மாட்டாங்க. நான் காட்டற ஆளுக்கு என்னைக் கல்யாணம் செஞ்சு கொடுப்பாங்க!"

"அப்ப உன் ஆளை அவங்ககிட்ட காட்ட வேண்டியதுதானே!"

"அதுக்கு முன்னால அவர்கிட்ட என் காதலைச் சொல்லி அவர் மனசைத் தெரிஞ்சுக்க வேண்டாமா? அதைச் செய்ய முடியாததால காதல் நோய் என்னை அழுத்திக்கிட்டிருக்கு!" என்றாள் கலா.

"ஓ! அதைத்தான் அழுத்தம்னு சொன்னியா? ரெண்டு பக்கமும் அழுத்தம்னு சொன்னியே, அந்த இன்னொரு அழுத்தம்?"

"என் காதலை அவர்கிட்ட சொல்ல முடியாம என்னைத் தடுக்குதே நாணம், அது இன்னொரு பக்கம் என்னை அழுத்திக்கிட்டிருக்கு!"

சற்று நேரம் மௌனமாக இருந்த கோகிலா, "இப்ப பாத்தமே அந்த ஆளு, அவர் தோளில இருக்கற கம்பிலேந்து ஒரு சுமையை எடுத்துட்டா என்ன ஆகும்?" என்றாள் கோகிலா.

"இன்னொரு பக்கம் இருக்கற சுமையும் கீழே விழுந்துடும்!" என்றாள் கலா, தோழி இதை ஏன் கேட்கிறாள் என்று புரியாமல்.

"உன் மேல இருக்கற ரெண்டு அழுத்தத்திலேந்தும் நீ விடுபடணும்னா அதே மாதிரிதான் செய்யணும். உன்னை அழுத்திக்கிட்டிருக்கற நாணத்தை இறக்கி வச்சுட்டு, உன் காதலன்கிட்ட உன் காதலை தைரியமா சொன்னேன்னா, உன் காதல் நோய் தானே இறங்கிடும்!" என்றாள் கோகிலா.

குறள் 1163
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.

பொருள்:
ஒரு புறம் காதல் நோயையும், மறு புறம் காதலை அவரிடம் சொல்ல முடியாமல் நான் படும் வெட்கத்தையும் தாங்க முடியாத என் உடம்பில், என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு அதன் ஒரு புறத்தில் காதல் நோயும், மறுமுனையில் வெட்கமும் தொங்குகின்றன.

1164. குமுதாவின் குறள் விளக்கம்!

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்   இறைவனடி சேராதார். இதன் பொருள்..."

தொலைக்காட்சியில் திருக்கறளுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்  அந்தத் தமிழறிஞர்.

"கடல்ல விழுந்துட்டா கடவுளால எப்படி உதவ முடியும்? நீச்சல் தெரியாதவங்களுக்கும் நீந்தற சக்தியைக் கடவுள் கொடுத்துடுவாரா?" என்றாள் ராணி.

"உன் அப்பா ஒரு நாத்திகவாதிங்கறதால நீயும் இப்படிப் பேசற போலருக்கு! கடவுள் நீந்தற சக்தியைக் கொடுக்கணுங்கறதில்ல. அங்கே ஒரு படகை அனுப்பிக் கூட கடல்ல தத்தளிக்கறவங்களைக் காப்பாத்தலாம் இல்ல?" என்றாள் அவள் தோழி குமுதா.

"ஓ, அப்படி ஒரு வழி இருக்கா? அப்படின்னா அது நீந்தறதா ஆகாதே?"

"ஏண்டி, கடல்ல விழுந்துட்டா எப்படியோ கரை சேரறது தான் முக்கியம். நீந்தித்தான் வரணுங்கறதுக்கு வாழ்க்கை என்ன நீச்சல் போட்டியா?"

"நீ சொல்றது சரிதான்!"

சற்று நேர மௌனத்துக்குப் பிறகு, "நீ ஏன் திடீர்னு செந்தில் கவுண்டமணிகிட்ட கேக்கற கேள்வி மாதிரியெல்லாம் எங்கிட்ட கேக்கற?" என்றாள் குமுதா.

"ஒண்ணுமில்ல!" என்றாள் ராணி.

"எனக்குப் புரியுது. கொஞ்ச நாளா உனக்கு ஒரே ஒரு சிந்தனைதானே? உன் காதலைப் பற்றின சிந்தனை! அதுதான் உன்னைப் பேய் பிடிச்ச மாதிரி பிடிச்சு ஆட்டுது. ஓ, நீ பகுத்தறிவுவாதியோட பொண்ணாச்சே! பேய்னு சொன்னா ஒத்துக்க மாட்ட. அதனால நோய்னு வச்சுக்கலாம். அந்தக் காதல் நோய் உன்னைப் பிடிச்சு வாட்டறது உனக்குக் கடல்ல தத்தளிக்கற மாதிரி இருக்கு போல!" என்றாள் குமுதா.

"உனக்கு எப்படித் தெரியும்? உனக்கே அந்த நோய் இருக்கிற மாதிரி பேசற!"

"இப்ப இல்லைதான். ஆனா முன்னே இருந்ததே! நான் காதல்ல விழுந்தப்ப!"

"அப்புறம் எப்படி அதிலேந்து விடுபட்ட?"

"என் காதலர் என் காதலை ஏத்துக்கிட்டு என்னைக் கல்யாணம் செஞ்சுக்கிட்ட அப்புறம்தான். பிறவிப் பெருங்கடலை நீந்தற ஃபார்முலாதான்! உன் காதலன் தோணி மாதிரி வந்து உன்னை ஏத்துக்கிட்டாத்தான் உன் நோய் நீங்கும். அதுக்கு நீ உன் காதலன்கிட்ட உன் காதலைச் சொல்லணும் - பிறவிப் பெருங்கடல்ல விழுந்தவங்க கடவுளை வேண்டிக்கிற மாதிரி!"

"நீ எனக்கு யோசனை சொல்றியா, 'பிறவிப் பெருங்கடல்'ங்கற குறளுக்கு விளக்கம் சொல்றியான்னு தெரியல!" என்றாள் ராணி, நாணத்தை வெற்றி கொண்டு காதலனிடம் தன் காதலை எப்படிச் சொல்லப் போகிறோம் என்ற கவலையுடன்.

குறள் 1164
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.

பொருள்:
காமநோயாகிய கடல் இருக்கிறது. ஆனால் அதை நீந்திக் கடந்து செல்வதற்குப் பாதுகாப்பான ‌தோணி இல்லை.

1165. துயர் தரும் காதலன்!

"என்ன சுந்தரி, உன் காதலர் ஊர்லேந்து வந்துட்டார் போல இருக்கே!" என்றாள் ரதிதேவி.

"ஆமாம் அக்கா! நாலு மாசம் கழிச்சு வந்திருக்காரு!" என்றாள் சுந்தரி.

"உன் முகத்தைப் பாத்தாலே தெரியுதே! இத்தனை நாளா உன் முகத்தில சுரத்தே இல்லை. இன்னிக்குத்தான் முகத்தில ஒரு மலர்ச்சி தெரியுது."

'உனக்குக் கேலியா இருக்கு! இந்த நாலு மாசமா எப்படித் தவிச்சேன்னு எனக்குத்தானே தெரியும்!' என்று நினைத்துக் கொண்டாள் சுந்தரி.

"என்னடி, மறுபடி உன் முகம் வாடி இருக்கு? உன் காதலன்தான் திரும்பி வந்துட்டாரே! ஒரு மாசமா சந்தோஷமா இருந்தியேன்னு பாத்தேன். மறுபடி எங்கேயாவது ஊருக்குப் போகப் போறாரா என்ன?" என்றாள் ரதிதேவி.

"இல்லை அக்கா! அவரு இங்கதான் இருக்காரு."

"அப்புறம் என்ன?"

"அவர் என் மேல கோபமா இருக்காரு. ரெண்டு நாளா என்னைப் பாக்கறதும் இல்ல, பேசறதும் இல்ல!"

"எதுக்குக் கோபம்?"

"ஏதோ சின்ன விஷயம். அவர் செஞ்சது தப்புன்னு நான் சொல்லிட்டேன். அதுக்குப் போய்ப் பெரிசா கோவிச்சுக்கிட்டு என்னைப் பாக்காம, எங்கிட்ட பேசாம என்னை தண்டிக்கறாரு!" என்றாள் சுந்தரி. சொல்லும்போதே அவளுக்கு அழுகை பீறிட்டு வந்தது.

"அடி போடி! இதுக்கா இப்படி வாடிப் போயிட்ட? காதலர்களுக்குள்ள இது மாதிரி சண்டை வரது சகஜம்தான். சண்டை போட்டுப்பாங்க, அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு சமாதானம் ஆயிடுவாங்க. இதுக்காகக் கவலைப்படாதே!" என்றாள் ரதிதேவி.

"இல்லை அக்கா! அவர் எங்கிட்ட அன்பா இருக்கறப்பவே எனக்குப் பிரிவைக் கொடுத்து கஷ்டப்படுத்தினாரு? இப்ப என் மேல கோபமா இருக்கறப்ப எப்படியெல்லாம் கஷ்டப்படுத்துவாரோன்னு நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு" என்றாள் சுந்தரி.

காதலனின் பிரிவு சுந்தரியை எந்த அளவுக்கு பாதித்திருந்தது என்பதை உணர்ந்து கொண்ட ரதிதேவி, தோழியை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று யோசிக்கத் தொடங்கினாள்.

குறள் 1165
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.

பொருள்:
நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?

1166. கடலினும் பெரிது!

"என்னடி கல்யாணத்துக்கப்புறம் ஒரு மாசமா உன்னைக் கண்ணிலேயே காணுமே! ஊருக்கு எங்கேயாவது போயிருந்தியா என்ன?" என்றாள் வானதி.

"இல்லையே! இங்கேதான் இருந்தேன். அவரோட அப்பப்ப எங்கேயாவது போயிட்டு வருவேன். அதைத் தவிர வெளியில அதிகமா வரல. அதனால நீ என்னைப் பாத்திருக்க மாட்ட!" என்றாள் குமுதினி.

"ம்...கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு?"

"உனக்குத் தெரியாதா? நீ எனக்கு முன்னேயே கல்யாணம் ஆனவதானே?"

"ஒவ்வொருத்தரோட அனுபவமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கல்யாணம் ஆன புதுசில 'கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு?'ன்னு என்னை யாராவது கேட்டிருந்தா, 'காத்தில மிதக்கற மாதிரி இருக்கு'ன்னு சொல்லி இருப்பேன். நீ என்ன சொல்லுவ?"

"எனக்கு உன்னை மாதிரியெல்லாம் பேசத் தெரியாதுடி. ஆனா நீ காத்துல மிதக்கற மாதிரி இருக்குன்னு சொன்னதைக் கேட்டப்பறம் எனக்கு வேற ஒண்ணு தோணுது!" என்றாள் குமுதினி.

"என்ன தோணுது?" என்றாள் வானதி.

"நான் கடலைப் பாத்ததில்ல. அது பெரிசா, எல்லை இல்லாதததா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். என் திருமண வாழ்க்கையில என்னோட சந்தோஷமும் கடல் மாதிரி, கரையில்லாத மாதிரி, பரந்ததா இருக்கறதா எனக்குத் தோணுது!" என்றாள் குமுதினி.

"ன்ன குமுதினி, உன் புருஷன் எப்ப ஊர்லேந்து வராரு?" என்றாள் வானதி.

"மூணு மாசத்தில வந்துடுவேன்னு சொன்னாரு. அவர் போய் ரெண்டு மாசம்தான் ஆச்சு. ஆனா எனக்குப் பல வருஷங்கள் ஆயிட்ட மாதிரி இருக்கு. இன்னும் ஒரு மாசம்  எப்படி காத்துக்கிட்டிருக்கப் போறேன்னு நினைச்சா மலைப்பா இருக்கு!" என்றாள் குமுதினி.

"கவலைப்படாதே! கணவன் மனைவியை விட்டுப் பிரிஞ்சு வெளியூர் போறது உலகத்தில எல்லா வீட்டிலேயும் நடக்கற விஷயம்தான். பிரிவுத் துன்பத்தைப் பொறுத்துக்கறது கஷ்டம்தான். ஆனா பொறுத்துக்கிட்டுத்தான் ஆகணும்!"

"கடலை விடப் பெரிசா ஏதாவது இருக்கா?" என்றாள் குமுதினி திடீரென்று.

"ஏன் கேக்கற?" என்றாள் வானதி, புரியாமல்.

"என் காதல் வாழ்க்கை எப்படி இருக்குன்னு அன்னிக்கு நீ கேட்டப்ப, கடல் மாதிரி பரந்ததா இருக்குன்னு சொன்னேன். இந்தப் பிரிவுத் துன்பம் அந்தக் கடலை விடப் பெரிசா இருக்கே, அதுதான் கேட்டேன்!" என்றாள் குமுதினி.

குறள் 1166
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

பொருள்:
காதல் இன்பம் கடல் போன்றது. காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலை விடப் பெரியது.

1167. செவ்வந்தியின் சந்தேகம்!

திருமணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகி விட்டன. ஆயினும் கோதைக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புது நாளாகத்தான் இருந்தது.

காலை எழுந்துடன் முதல்நாள் முழுவதும் கணவனுடன் கழித்த நேரத்தை எண்ணி அசை போட்டு மகிழ்ந்த பிறகும், அன்றுதான் தன் மண வாழ்க்கையின் முதல் நாள் என்பது போல் உணர்வாள் கோதை.

கணவன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவன் தன்னிடம் காட்டும் அன்பை உணர்ந்து, தானும் தன் அன்பைப் பேச்சாலும், செயலாலும் வெளிப்படுத்தி, இரவு உறங்கும்போது, இருவரும் ஒருவர் மற்றவர் மீது வெளிப்படுத்தும் அன்பின் உச்சத்தை அனுபவித்து, காலை கண் விழித்ததும் மீண்டும் ஒரு புது நாளை எதிர்நோக்கும் புத்துணர்ச்சி அவளுக்கு ஏற்படும்.

'இது என்ன விந்தை! இந்த அன்பு வெள்ளம் தினமும் பாய்ந்து என்னை மூழ்கடிக்கிறதே! இந்த அன்பு வெள்ளத்துக்குக் கரையே கிடையாதா?' என்று நினைத்து நினைத்து மலைப்பாள் கோதை.

ஆறு மாதங்களுக்குப் பிறகு கோதையின் கணவன் வியாபார விஷயமாக வெளியூருக்குச் செல்ல வேண்டி இருந்தது. போவதற்கு முன் கோதையை அவள் தாய் வீட்டில் விட்டு விட்டு, தான் திரும்பி வரச் சில மாதங்கள் ஆகும் என்று சொல்லி விட்டுப் போனான் அவன்.

"ஏண்டி உன் கண் இப்படிச் சிவந்திருக்கு?" என்றாள் கோதையின் தோழி செவ்வந்தி.

"பின்ன சிவக்காம எப்படி இருக்கும்? ராத்திரி முழுக்க தூங்காம கொட்டக் கொட்ட விழிச்சுக்கிட்டுப் படுத்துக்கிட்டிருந்தா?" என்றாள் கோதையின் தாய் காவேரி.

"ஏண்டி, இப்படி? உடம்பு சரியில்லையா?" என்றாள் செவ்வந்தி.

"உடம்புக்கு ஒண்ணுமில்ல. ஊருக்குப் போன கணவனை நினைச்சுத் தூங்காம கண் முழிச்சுக்கிட்டிருக்கா. இத்தனைக்கும், அவன் இவளோட ஆறு மாசம் குடித்தனம் நடத்திட்டு அப்புறம்தான் போனான். உன் புருஷன் கல்யாணம் ஆகி ஒரு வாரத்திலேயே உன்னை விட்டுட்டு ஊருக்குப் போயிட்டான். நீ சமாளிச்சு தைரியமா இல்ல? இப்ப அவன் திரும்பி வந்துட்டான். நீ இதையெல்லாம் இயல்பா எடுத்துக்கற. ஆனா இவளுக்கு அது புரியலையே!" என்றாள் காவேரி.

காவேரி தன் பெண்ணைப் பற்றிக் குறை சொல்கிறாளா, அல்லது, 'என் பெண்ணைப் போல் உனக்கு உன் கணவனிடம் அளவு கடந்த அன்பு இல்லையே!' என்று சொல்லிக் காட்டுகிறாளா?' என்று புரியாமல் தாய் மகள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள் செவ்வந்தி.

குறள் 1167
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.

பொருள்:
காமம் என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.

1168. இரவுக்கு நான் மட்டும் காவல்

"ஏண்டி, எனக்கு ஃபிரண்டுன்னு நீ ஒருத்திதான் இருக்கே. கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருக்கலாம்னா, அதுக்குள்ள வீட்டுக்குக் கிளம்பறேங்கறியே!" என்றாள் உமா.

"இப்ப போனாத்தான் வீட்டுக்குப் போய் ராத்திரிக்கு சாப்பாடு செஞ்சு எல்லாருக்கும் போட்டுட்டு பத்து மணிக்குத் தூங்கப் போக முடியும். காலையில நாலு மணிக்கு எழுந்து பால் பூத்துக்குப் போய் பால் பாக்கெட்களை வாங்கிக்கிட்டு வந்து வீடுகளுக்குப் போட முடியும். உன்னை மாதிரி எட்டு மணி வரைக்கும் என்னால தூங்க முடியாது!" என்றாள் கலா.

"நான் எட்டு மணி வரைக்கும் தூங்கறேன்னு உனக்கு யார் சொன்னது?" என்றாள் உமா சற்று சங்கடத்துடன்.

"அன்னிக்குக் காலையில எட்டு மணிக்கு நான் உன் வீட்டுக்கு வந்தப்ப உங்கம்மா சொன்னாங்ளே 'அவ இன்னும் தூங்கிக்கிட்டுத்தான் இருப்பா, போய் எழுப்பிக்கிட்டு வரேன்'னு!"

"இப்ப நான் எங்க அம்மா வீட்டில  இருக்கறதால சீக்கிரம் எழுந்திருக்க வேண்டாங்கறதால, சும்மா படுத்துக்கிட்டிருப்பேன். நான் தூங்கறதா எங்கம்மா நினைச்சுக்கிட்டிருப்பாங்க. எங்க வீட்டில இருந்தா நானும் அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்துடுவேன்!"

"உன் புருஷன் துபாய்லேந்து எப்ப வராரு?"

"இன்னும் ரெண்டு மாசம் ஆகுமாம்."

"அடிக்கடி கடுதாசி போடறாருல்ல?"

"எங்கே? எப்பவாவதுதான். அவருக்கு நேரம் கிடைக்கறதில்லையாம்! இங்கே ஃபோன் வசதி இருந்தா ஃபோனாவது பண்ணச் சொல்லலாம்! அதுக்கெல்லாம் நமக்கு வசதி ஏது?" என்றாள் உமா பெருமூச்சுடன்.

"கவலைப்படாதே! உன் புருஷன் துபாய்லேந்து நிறைய சம்பாதிச்சுட்டு வந்ததும், நீயும் கார் ஃபோன் எல்லாம் வச்சுக்கிட்டு வசதியா இருக்கலாம். அப்பல்லாம் என்னால உன்னை வந்து பாக்க முடியுமோ என்னவோ!" என்றாள் கலா சிரித்தபடி.

"போடி, நீ வேற? பொண்டாட்டியைத் தனியா விட்டுட்டு அப்படி என்ன வெளிநாடு போய் சம்பாதிக்க வேண்டி இருக்குன்னு நான் ஏங்கிக்கிட்டிருக்கேன். யாருக்கு வேணும் வசதி எல்லாம்? அவரு என்னோட இருந்தா எனக்குப் போதும்!"

"என் புருஷனுக்கு வெளிநாடு போற வாய்ப்பு வந்தா நான் சந்தோஷமா அனுப்பி வச்சுடுவேன். அவரு போய்ப் பணம் சம்பாதிச்சுட்டு வந்தா அப்புறம் வசதியா இருக்கலாம் இல்ல?"

"இப்ப இப்படித்தான் சொல்லுவ. அவரு நிஜமாகவே உன்னைத் தனியா விட்டுட்டுப் போனா அப்ப உணருவே!"

"எனக்கு நேரமாச்சு! நான் கிளம்பணும். ரொம்ப அலுப்பா இருக்கு. காலையில எழுந்ததிலேந்தே ராத்திரி எப்ப வரும், எப்ப படுத்து நிம்மதியாத் தூங்கலாம்னு இருக்கு. அப்படி ஒரு அலுப்பு!" என்று கூறியபடியே கிளம்பினாள் கலா.

'நீ கொடுத்து வச்சவடி! தூக்கத்தை நல்லா அனுபவிக்கற!' என்று தனக்குள் முணுமுணுத்தாள் உமா.

டுக்கையில் படுத்து நீண்ட நேரம் ஆகி விட்டது. இன்னும் தூக்கம் வரவில்லை. மணி என்ன இருக்கும் என்று தெரியவில்லை. அலார்ம் வைத்த சிறிய கடிகாரம் முன்னறையில் இருந்தது. அங்கே போய் மணி பார்க்கலாம் என்றால் அம்மா காலடிச் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டு, "ஏண்டி சத்தம் போட்டு என்னை எழுப்பின?" என்று சத்தம் போடுவாள்.

இப்படியே ஏதாவது நினைத்துக் கொண்டு படுத்திருந்தால் எப்போதோ ஒரு சமயம் பொழுது விடிந்து விடும். ஆனால் அதற்குப் பிறகு பகல் முழுவதும் தூக்கக் கலக்கத்துடனும் கண் எரிச்சலுடனும்தான் இருக்க வேண்டும்!

இந்த இரவில் எல்லோரும் நிம்மதியாக உறங்குகிறார்கள் - கலாவைப்போல். ஆனால் நான் மட்டும் விழித்துக் கொண்டேதான் இருக்கிறேன். 

பாவம், இந்த இரவும் என்னைப் போல் தனியாகத்தானே இருக்கிறது! அதற்கு ஒரு துணை வேண்டாமா? அதனால்தான் என்னைத் துணையாக வைத்துக் கொண்டிருக்கிறது போலிருக்கிறது!

தான் அடிக்கடி நினைத்துப் பார்க்கும் பாட்டைத் தனக்குள் மெல்ல முணுமுணுத்தாள் கலா.

'இரவுக்கு நான் மட்டும் காவல்
எனக்கொரு துணை இந்தப் பாடல்.'

'கண்ணதாசன் இந்தப் பாட்டை எனக்காகவே எழுதின மாதிரி இருக்கு!' என்று நினைத்தபடியே கண்ணை மூடித் தூங்க முயன்றாள் உமா.

குறள் 1168
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை

பொருள்:
இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிர்களையும் தூங்கச் செய்து விட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.

1169. நீலாவின் கோபம்!

"ஹலோ! இப்பதாம்மா வேலைக்கு வந்திருக்கேன். சொல்லு, ஏதாவது முக்கியமான விஷயமா?" என்றான் மாணிக்கம்.

"உங்கிட்ட பேசணும். அதை விட முக்கியமான விஷயம் வேற என்ன வேணும்?" என்றாள் நீலா.

"நான் வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போனப்பறம் கூப்பிடறேனே! அப்ப நீயும் முழிச்சுக்கிட்டிருப்பே!"

"இப்ப  நான் என்ன தூங்கிக்கிட்டா இருக்கேன்?"

"ராத்திரி பன்னிரண்டு மணிக்கு எனக்கு ஃபோன் பண்றியே! உனக்கும் தூக்கம் கெடும். என்னாலயும் வேலை நேரத்தில அதிகம் பேச முடியாது. அதனாலதான் வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போனப்பறம் பேசறேன்னு சொன்னேன். நீயும் தூக்கத்தைக் கெடுத்துக்காம பகல் நேரத்தில பேசலாம்" என்றான் மாணிக்கம்.

"அப்ப உனக்கு ராத்திரிதானே? நீ தூங்க வேண்டாமா?"

"என்ன நீலா, முட்டாள் மாதிரி பேசற? பத்து மணிக்கு உங்கிட்ட பேசிட்டு அப்புறம் தூங்க முடியாதா? இப்ப எனக்கு வேலை இருக்கு. ஃபோனை வச்சுடு. ராத்திரி  நானே உனக்கு ஃபோன் பண்றேன்!" என்று கூறி ஃபோனை வைத்து விட்டான் மாணிக்கம்.

"என்ன நீலா இது? அங்க ரெண்டு மணி! இப்ப ஃபோன் பண்ற?" என்றான் மாணிக்கம்.

"இப்ப உனக்கு லஞ்ச் டயம்தானே? அதனாலதான் ஃபோன் பண்ணினேன்!" என்றாள் நீலா.

"எங்களுக்கெல்லாம் லஞ்ச் டயம்னு தனியா கிடையாதும்மா. உக்காந்து ஒரு கையால கம்ப்யூட்டர்ல வேலை செஞ்சுக்கிட்டே இன்னொரு கையால சாப்பிட வேண்டியதுதான். நடுப்பற பாஸ்கிட்டேந்து ஃபோன் வரும். 'இப்ப லஞ்ச் டயம்தானே, ஃப்ரீயாதானே இருக்கே, என் கேபினுக்குக் கொஞ்சம் வரியா?' ம்பாரு, ஏதோ நான் லஞ்ச் டயத்துல மத்தவங்களோட அரட்டை அடிச்சுக்கிட்டு உக்காந்திருக்கற மாதிரி! இதுல நீ வேற லஞ்ச் டயம்தானேன்னு கேக்கற!"

"சாப்பிட்டுக்கிட்டிருக்கேன்னா சொல்லு. பத்து நிமிஷம் கழிச்சு ஃபோன் பண்றேன். உன் பாஸ்கிட்ட பேசற மாதிரி ஒரு கையில ஃபோனை வச்சுக்கிட்டு எங்கிட்ட பேசிக்கிட்டே ஒரு கையால சாப்பிட வேண்டாம்!"

"நான் லஞ்ச் முடிச்சுட்டேன். நான் சொல்ல வந்ததை நீ புரிஞ்சுக்கல. இப்படி ராத்திரியில கண் முழிச்சு எங்கிட்ட பேசறதை விடக் காலையில ஃப்ரீயாப் பேசலாமேன்னுதான் சொல்றேன்!"

"முட்டாளாடா நீ?" என்றாள் நீலா கோபத்துடன். "உன் கம்பெனியில அமெரிக்காவுக்குப் போகச் சொன்னதும் நீ பாட்டுக்கு ஜாலியா போயிட்டே! உன்னைப் பிரிஞ்சு இருக்கறது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்குன்னு உனக்குத் தெரியுமா? உன் பிரிவைக் கூடப் பொறுத்துப்பேன். ஆனா இந்த ராத்திரி நேரத்தை என்னால பொறுத்துக்கவே முடியவே இல்லை. பகல்லன்னா ஏதாவது வேலை இருக்கும், யாராவது வருவாங்க, போவாங்க. ஒரு மாதிரி நேரம் ஓடிடும். ஆனா இந்த ராத்திரி வந்தா அது முடியவே மாட்டேங்குது! தூக்கம் வராம ராத்திரி பூரா கொட்டக் கொட்ட முழிச்சுக்கிட்டிருக்கறது எவ்வளவு நரகமா இருக்கு தெரியுமா? அதனாலதான் ராத்திரியில ரெண்டு மூணு தடவை உங்கிட்ட பேசி இந்த ராத்திரியோட கொடுமையிலேந்து கொஞ்சம் விடுபடலாம்னு பாத்தா, நீ அதைப் புரிஞ்சுக்காம எனக்கு அட்வைஸ் பண்ற! உனக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவுங்கறதே கிடையாதா?"

திடீரென்று நீலா கோபத்தில் வெடித்த அதிர்ச்சியில் சில விநாடிகள் என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாக இருந்தான் மாணிக்கம்.

குறள் 1169
கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா.

பொருள்:
இந்த இரவுகள் நீண்டு கொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே, அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையை விடப் பெரிதாக உள்ளது.

1170. நெஞ்சம் அங்கே, கண்கள் இங்கே!

"வைத்தியரே! என் பொண்ணு கொஞ்ச நாளா எப்ப பாத்தாலும் கண்ணை மூடிக்கிட்டு தியானம் பண்ற மாதிரி இருக்கா. கண்ணை முழிச்சதும் கண்ணில தண்ணியாக் கொட்டுது. என்னடி பிரச்னைன்னு கேட்டா, பதில் சொல்லாம சிரிக்கறா. அவளுக்கு மூளை கலங்கிடுச்சோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு!" என்றாள் பொன்னி.

"அப்படியெல்லாம் இருக்காது. ஆமாம் உங்க பொண்ணுக்கு அஞ்சாறு மாசம் முன்னாலதானே கல்யாணம் ஆச்சு? என்னைக் கூடக் கூப்பிட்டிருந்தீங்க. ஆனா என்னால வர முடியல. அவ புருஷனோடதானே இருக்கா?" என்றார் வைத்தியர்.

"ஆமாங்க கல்யாணம் ஆயிடுச்சு. ஆனா கல்யாணம் ஆன கொஞ்ச நாள்ளேயே அவ புருஷன் மலைத்தோட்டத்தில வேலைக்குப் போயிட்டான். ஒரு வருஷம் கழிச்சுத்தான் வருவான். அதனால அவ இப்ப எங்க வீட்டிலதான் இருக்கா. கணவனைப் பிரிஞ்சிருக்கறதால அவளுக்கு புத்தி பேதலிச்சுடுச்சோன்னு எனக்கு பயமா இருக்கு!" என்றாள் பொன்னி.

"கணவனைப் பிரிஞ்சு இருக்கறதால ராத்திரியில சரியா தூங்காம இருந்திருப்பா. அதனால பகல் நேரத்தில கண் எரிச்சல்ல அப்பப்ப கண்ணை மூடிக்கிட்டு உக்காந்துக்கிட்டிருக்கான்னு நினைக்கறேன். கண் எரிச்சலினால கண்ணில தண்ணி வரது இயல்புதானே! உங்க பொண்ணு வந்திருக்காளா?" என்றார் வைத்தியர்.

"வந்திருக்கா. வாசல்ல உக்காரச் சொல்லி இருக்கேன்."

"உள்ள வரச் சொல்லுங்க. நான் அவகிட்ட பேசிப் பாக்கறேன்."

"நானும் கூட இருக்கலாமா?" என்றாள் பொன்னி.

"கண்டிப்பா. அப்பதான் அவ பிரச்னை என்னன்னு உங்களுக்குப் புரியும்!"

"உன் பேர் என்னம்மா?" என்றார் வைத்தியர்.

"யமுனா."

"அம்மா பேரு பொன்னி. மகள் பேரு யமுனா. நல்ல பெயர்ப் பொருத்தம்... ராத்திரி நல்லா தூங்கறியாம்மா?" 

"ஓ, தூங்கறேனே!" என்றாள் யமுனா.

வைத்தியர் தன் அனுமானம் தவறாகப் போனதை உணர்ந்து பொன்னியைப் பார்த்தார். பொன்னி மௌனமாக இருந்தாள்.

"அப்புறம் ஏன் பகல்ல அடிக்கடி கண்ணை மூடிக்கற? கண் எரிச்சலா இருக்கா?"

"என் புருஷன் ஏதோ ஒரு மலைத்தோட்டத்தில இருக்காரு. அது எங்கே இருக்குன்னு தெரியாது. ஆனா என் மனசு முழுக்க அவர்கிட்ட இருக்கு. கண்ணை மூடிக்கிட்டா மலைத்தோட்டத்தோட காட்சி என் மனசில தெரியுது. அதில அவர் வேலை செய்யற காட்சி தெரியுது. அவரைப் பாத்துக்கிட்டே இருக்கேன். அது மகிழ்ச்சியா இருக்கு. ஆனா கண்ணைத் திறந்தா அதைப் பாக்க முடியலியே! என் மனசால அவர் இடத்துக்குப் போக முடியுது, ஆனா என் கண்களால அங்கே போக முடியலியே! அதை நினைச்சுதான் கண்ணில  தண்ணி வருது!"

என்ன சொல்வதென்று தெரியாமல் ஒரு நிமிடம் மௌனமாக இருந்த வைத்தியர், "ஆமாம். ராத்திரி நல்லாத் தூங்கறேன்னியே, அவரை நினைச்சுத் தூக்கம் வராம போகலியா?" என்றார்.

"இல்லையே! தூங்கினா கனவில அவர்தானே வராரு? அதனாலதான்  படுத்தவுடனேயே தூங்கிடறேன்!" என்றாள் யமுனா.

சட்டென்று எழுந்த பொன்னி "வரேன் வைத்தியரே!" என்று வைத்தியரிடம் சொல்லி விட்டு,  "வாடி போகலாம்!" என்று மகளின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

குறள் 1170
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.

பொருள்:
என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்த மாட்டா.

அறத்துப்பால்                                                                     பொருட்பால்   

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...