Thursday, November 24, 2022

1159. நந்தினியைச் சுட்ட நெருப்பு!

"என்னம்மா, மறுபடி காய்ச்சல் வந்திருக்கா?" என்றார் மருத்துவர்.

"ஆமாம் மருத்துவரே! ஏன்தான் இந்தப் பெண்ணைப் போட்டு இப்படிப் படுத்துதோ தெரியல! இந்த மூணு நாலு மாசத்தில நாலஞ்சு தடவை காய்ச்சல் வந்துடுச்சு" என்றாள் நந்தினியின் தாய் பகவதி.

"இப்ப கோடைக்காலம்தானே! காய்ச்சல் வரதுக்கான புறக் காரணங்கள் எதுவும் இல்ல. மறுபடி அதே சூரணம் கொடுக்கறேன். அஞ்சு நாள் சாப்பிட்டா சரியாயிடும்!" என்றார் மருத்துவர்.

"கோடைக்கால வெப்பத்தால உடம்பு சூடாகிக் காய்ச்சல் வருமா ஐயா?" என்றாள் நந்தினி.

"வெய்யில்ல நின்னா கூட உடம்பு சூடாகாது, களைப்புதான் ஏற்படும். அதோட காய்ச்சலால உடம்பு சூடாகறது உடம்புக்குள்ள ஏற்படற விளைவுகளால. வெளி வெப்பத்துக்கும்  அதுக்கும் சம்பந்தமில்ல!" என்று விளக்கினார் மருத்துவர்.

பிறகு, ஏதோ நினைவு வந்தவராக, "மனசில ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் காய்ச்சல் வரலாம். உங்க பொண்ணு மனசை பாதிக்கற மாதிரி ஏதாவது நடந்ததா?" என்றார் மருத்துவர்.

"அப்படி ஒண்ணும் நடக்கலியே!" என்ற பகவதி, "நாலு மாசம் முன்னே இவ புருஷன் வியாபார விஷயமா வெளியூர் போயிட்டாரு. அதிலேந்தே கொஞ்சம் சோர்வோடதான் இருக்கா!" என்றாள்.

மருத்துவர் வீட்டிலிருந்து வெளியே வந்ததும், "ஏண்டி, கோடை வெப்பத்தால காய்ச்சல் வருமான்னு வைத்தியர்கிட்ட கேக்கற, உனக்கு அறிவு இல்ல?" என்று மகளைக் கடிந்து கொண்டாள் பகவதி.

"சரி. இதுக்கு பதில் சொல்லு. நெருப்புக்குப் பக்கத்தில போனா சுடும். விலகிப் போனா சுடாதுதானே?" என்றாள் நந்தினி.

"இது என்னடி கேள்வி? உனக்கு மூளை பிசகிப் போச்சா என்ன?" என்றாள் பகவதி. 

''நெருப்பை விட்டு விலகி இருந்தா நெருப்பு சுடாது. ஆனா அவர் என்னை விட்டு விலகிப் போயிருக்கறப்ப அவர் பிரிவு என்னை ஏன் சுடுகிறது?' 

 இதைத் தாயிடம் கேட்டால் ஏற்கெனவே தனக்கு மூளை பிசகி விட்டதாகக் கூறம் தன் தாய் தனக்கு உண்மையாகவே மனம் பேதலித்து விட்டதாக முடிவு கட்டி விடுவாள் என்று  நினைத்தபோது, அந்த நிலையிலும் நந்தினிக்குச் சிரிப்பு வந்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 116
பிரிவாற்றாமை

குறள் 1159
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

பொருள்:
தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...