Sunday, November 6, 2022

1158. சோகத்தின் காரணம்?

அந்தப் பெண்ணைக் கலாவதி இரண்டு மூன்று முறை தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது - ஒருமுறை கோவிலில், ஒருமுறை ஆற்றங்கரையில், ஒருமுறை திருவிழாக் கூட்டத்தில் என்று.

அந்தப் பெண்ணிடம் ஒரு சோகம் இருப்பதைக் கலாவதி உணர்ந்தாள்.

அடுத்த முறை கலாவதி அந்தப் பெண்ணை அங்காடித் தெருவில் சந்தித்தபோது, அவள் பின்னால் சென்று அவள் தோளைத் தட்டினாள்.

திடுக்கிட்டுத் திரும்பிய அந்தப் பெண் கலாவதியைப் பார்த்து, "நீங்க யாரு? என்னை ஏன் தோள்ள தட்டினீங்க?" என்றாள் பதட்டத்துடன்.

"என் பெயர் கலாவதி. நான் உங்களை ரெண்டு மூணு தடவை தற்செயலாப் பார்த்தேன். நீங்க ஏதோ சோகத்தில இருக்கற மாதிரி இருக்கு. அது ஏன்னு உங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்க விரும்பறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தா சொல்லுங்க!" என்றாள் கலாவதி.

சுற்றுமுற்றும் பார்த்த அந்தப் பெண், "இங்க வாங்க!" என்று கலாவதியை ஒரு ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்றாள்.

"இங்கே பாருங்க கலாவதி! என் பெயர் பொன்னி. வேற ஜாதியில கல்யாணம் செஞ்சுக்கிட்டதுக்காக என்னையும் என் கணவரையும் எங்க ஊர்ல ஒதுக்கி வச்சுட்டாங்க  அதனால இந்த ஊருக்கு வந்தோம். எங்களைப் பத்தித் தெரிஞ்சதால இந்த ஊர்லயும் யாரும் எங்க்கிட்ட நெருக்கமாப் பழக மாட்டேங்கறாங்க. நீங்க எங்கிட்ட பேசறதையே யாராவது தப்பு சொல்லப் போறாங்க. அதுதான் உங்களைத் தனியாக் கூப்பிட்டுக்கிட்டு வந்தேன்" என்றள் அவள்.

"நான் அதைப் பத்திக் கவலைப்படல. ஆனா உங்க நிலைமைக்காக நான் பரிதாப்பபடறேன். நான் உங்க்கிட்ட பேசறேன். அது உங்களுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்!"  என்றாள்  கலாவதி.

"என்ன கலாவதி! எனக்கு ஆறுதலா இருக்கேன்னு சொன்னே. ஆனா நாம் பழகற இந்த ஒரு வாரத்தில நீயே ரொம்ப சோகமா இருக்கற மாதிரி இருக்கு. உன் குடும்ப வாழ்க்கையைப் பத்திக் கேட்டாலும் எதுவும் சொல்ல மாட்டேங்கற. எனக்கு ஆறுதலா இருக்கிற உனக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு ஆறுதலா இருக்க விரும்பறேன். என்ன விஷயம், சொல்லு!" என்றாள் பொன்னி.

ஒரு நிமிடம் மனமாக இருந்த கலாவதி, "என் புருஷன் என்னை விட்டுட்டு கப்பல்ல  வேலை செஞ்சு நிறையப் பணம் சம்பாதிச்சுட்டு வரேன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. அவர் திரும்பி வரப் பல மாதங்கள் ஆகும்!" என்றாள் கலாவதி. சொல்லும்போதே அவள் கண்கள் குளமாகி விட்டன.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 116
பிரிவாற்றாமை

குறள் 1158
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.

பொருள்:
நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...