"அவ புருஷன் அவளைத் தனியா விட்டுட்டு ஊருக்குப் போயிட்டார், இல்ல? அந்த வருத்தம் இல்லாம இருக்குமா?" என்றாள் மேகலை
"அதில்ல. அவகிட்ட ஏதோ வித்தியாசமா இருக்கு. அவ நடக்கறப்ப ஒரு மாதிரி நடக்கறா?"
"நான் கவனிக்கலியே!"
"இதோ வரா பாரு! கவனிச்சுப் பாரு."
"ஆமாம். ஒரு மாதிரிதான் இருக்கு. ஆனா என்னன்னு தெரியல...ஓ, இப்ப புரியுது. அவ கைகளைப் பின்னாடி வச்சுக்கிட்டு நடக்கறா!"
"ஆமாம். எதுக்கு இப்படி நடக்கணும்? வா, அவகிட்டயே கேக்கலாம்."
மாதவியும், மேகலையும் சற்றுத் தொலைவில் நடந்து வந்து கொண்டிருந்த மலர்க்கொடியின் அருகில் சென்றனர்.
"ஏ மலர்! எப்படி இருக்கே?" என்றாள் மாதவி.
"இருக்கேன்!" என்றள் மலர்க்கொடி, சோர்வுடன்.
"உன் வீட்டுக்காரர் ஊருக்குப் போன சோகம் எங்களுக்குப் புரியுது. ஆனா. அதுக்கு ஏன் ரெண்டு கையையும் பின்னால வச்சுக்கிட்டு நடக்கறே?" என்றாள் மேகலை.
"இல்லையே!" என்று கைகளை முன்னுக்குக் கொண்டு வந்த மலர்க்கொடி, உடனே அவற்றை மீண்டும் பின்னே இழுத்துக் கொண்டாள்.
மலர்க்கொடியின் கைகளை இழுத்துப் பார்த்த மாதவி, பெரிதாகச் சிரித்தாள்.
"ஏண்டி சிரிக்கற?" என்றாள் மேகலை.
"பாவம்! பிரிவுத் துயர்ல இவ இளைச்சதால, இவ கைகள் மெலிஞ்சு, வளையல்கள் இறுக்கம் தளர்ந்து நழுவி, இவ நடக்கறப்ப ஆடிக்கிட்டு சத்தம் ஏற்படுத்திக்கிட்டே இருக்கு. கீழே விழப் போற மாதிரி மணிக்கட்டில இறங்கிக்கிட்டும் இருக்கு. இதை யாராவது பார்த்தா, பிரிவுத் துயர்னால இவ இளைச்சிருக்கறது எல்லாருக்கும் தெரிஞ்சுடுமேன்னுதான் இவ கைகளைப் பின்னால வச்சு மறைச்சுக்கிட்டிருக்கா!" என்றாள் மாதவி.
கற்பியல்
பொருள்:
என் மெலிவால் முன் கையில் இறுக்கம் தளர்ந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ!
No comments:
Post a Comment