Wednesday, October 26, 2022

1156. அன்பு எங்கே?

"என்னது? ஊருக்குப் போறீங்களா?" என்றாள் மாலினி அதிர்ச்சியுடன்.

"ஆமாம். அதுக்கு ஏன் இப்படி ஆச்சரியப்படற?" என்றான் மகிழ்நன்.

"ஆச்சரியம் இல்ல. அதிர்ச்சியா இருக்கு. இப்படியா திடீர்னு கிளம்புவீங்க? நாளைக்குப் போறேன்னு இன்னிக்கு வந்து சொல்றீங்க! உங்களை விட்டுப் பிரிஞ்சிருக்கறது எனக்கு எவ்வளவு வருத்தமா இருக்குமேன்னு நினைச்சுப் பாத்தீங்களா?"

"இது சில மாதங்களுக்கான பிரிவுதானே? ஒரு மாசம் முன்னாடியே சொல்லியிருந்தா உனக்கு வருத்தமா இருந்திருக்காதா?"

"அது இல்லீங்க. இப்படி திடீர்னு சொல்லி எனக்கு அதிர்ச்சி கொடுக்காம, கொஞ்சம் முன்னாலேயே சொல்லி என்னைத் தயார்ப்படுத்திக்கக் கொஞ்சம் அவகாசம் கொடுத்திருக்கலாம் இல்ல?"

"நீ சொல்றது எனக்குப் புரியல மாலினி. எப்ப சொன்னா என்ன? சரி, நாளைக்கு விடிஞ்சதும் கிளம்பிடுவேன். வரதுக்கு மூணு மாசம் ஆகும்!" என்றான் மகிழ்நன்.

"என்னடி, உன் கணவர் இன்னும் ஒரு வாரம், பத்து நாள்ள வந்துடறதா யார் மூலமோ செய்தி அனுப்பி இருக்காராமே, அப்படியா?" என்றாள் காமவர்த்தினி.

"வரபோது வரட்டும். அதுக்கென்ன இப்ப?" என்றாள் மாலினி ஆர்வம் இல்லாமல்.

"என்னடி இப்படிக் கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாம பேசற? ஊருக்குப் போன கணவன் மூணு மாசம் கழிச்சுத் திரும்பி வரார்னு ரொம்ப உற்சாகத்தோட இருப்பேன்னு நினைச்சேன்!"

"ஊருக்குப் போகும்போது என்னைப் பிரிஞ்சு இருக்கப் போற வருத்தம் கொஞ்சம் கூட இல்லாம, ஏதோ காலையில வேலைக்குப் போயிட்டு மாலையில வீட்டுக்கு வரப் போற மாதிரி போயிட்டு வரேன்னு சாதாரணமா சொல்லிட்டுப் போனாரு. என் மேல அவருக்கு இருக்கற அன்பு அவ்வளவுதான். இப்ப திரும்பி வந்து என் மேல அன்பைப் பொழியப் போறாரா என்ன?" என்றாள் மாலினி, உற்சாகம் இல்லாதவளாக."

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 116
பிரிவாற்றாமை

குறள் 1156
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.

பொருள்:
போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...