Saturday, October 22, 2022

1155. விடை கொடுப்பாளா சுகாசினி?

"எதுக்கு என் அம்மாவை வரச் சொன்னீங்க?" என்றாள் சுகாசினி.

"பின்னே, நீ இப்படிக் காய்ச்சலோட படுத்துக் கிடந்தா உன்னை இப்படியே விட்டுட்டு நான் எப்படி ஊருக்குப் போக முடியும்?" என்றான் வேலன்.

"அப்படின்னா, நீங்க ஊருக்குப் போகிறதுக்காகத்தான் என் அம்மாவை வரச் சொல்லி இருக்கீங்க! என் மேல உள்ள அக்கறையினால இல்ல!" என்று வெடித்தாள் சுகாசினி.

"நான் ஊருக்குப் போறதே நாலு காசு சம்பாதிச்சு உன்னை நல்லா வச்சுக்கணுங்கறதுக்காகத்தான்!"

"நீங்க போங்க மாப்பிள்ளை! நான் பாத்துக்கறேன்!" என்றாள் சுகாசினியின் தாய் நீலா.

"கணவன் பிரிஞ்சு போறேன்னு சொன்னா மனைவிக்குக் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா ஆண்கள் நாலு இடத்துக்குப் போனாதான் நாலு காசு சம்பாதிச்சு தன் மனைவியையும், குழந்தைகளையும் நல்லா வச்சுக்க முடியும்!" என்றாள் நீலா, சுகாசினியிடம.

"உனக்கென்ன? நீ சொல்லுவ. உன் புருஷனா உன்னை விட்டுப் பிரிஞ்சு போகப் போறாரு?"

"போயிருக்காருடி! அதுவும் கல்யாணமான ஒரு மாசத்திலேயே பிரிஞ்சு போனாரு. உனக்காவது கல்யாணமாகி ஒரு வருஷம் ஆச்சு!"

"நீ அவரைத் தடுக்கலையா?"

"தடுக்கலையாவது! அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் செஞ்சதில காய்ச்சல் வந்து படுத்துட்டேன். உனக்கு வந்திருக்கிறதை விட மோசமான காய்ச்சல். அப்ப எங்க ஊர்ல நல்ல வைத்தியரு கூட இல்லை. உன் அப்பா என் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தாரு. ஒரு வழியா, காய்ச்சல்லேந்து மீண்டு எழுந்தேன். அப்பவும் என்ன சொன்னேன் தெரியுமா? இப்ப என்னை நல்லா கவனிச்சு என்னைக் காப்பாத்திட்டீங்க. என்னை விட்டுட்டுப் போனீங்கன்னா நீங்க திரும்பி வரச்சே நான் இருப்பேனான்னு சொல்ல முடியாதுன்னு சொன்னேன். அதனால அவர் தன் பயணத்தைக் கைவிட்டுட்டாரு."

"உன்னைப் பிரிஞ்சு போனார்னு சொன்னியே?"

"அப்புறம் யோசிச்சுப் பாத்ததில, கஷ்டப்பட்டாவது அவரோட பிரிவைக் கொஞ்ச நாளைக்குத் தாங்கிக்கறதுதான் குடும்பத்துக்கு நல்லதுன்னு தோணிச்சு. அப்புறம் நானே அவரைப் போகச் சொல்லி அனுப்பினேன். அவரைப் பிரிஞ்சிருந்தது கஷ்டமாத்தான் இருந்தது. ஆனா தாங்கிக்கிட்டேன்."

"நானும் உன்னை மாதிரி பிரிவுத் துயரைத் தாங்கிக் கிட்டு அவரை அனுப்பி வைக்கணுங்கறியா?"

"அதை நீதான் முடிவு செய்யணும். மாப்பிள்ளை மூட்டை முடிச்சையெல்லாம் கட்டி வச்சுட்டு நீ விடை கொடுக்கணுங்கறதுக்காக்கக் காத்திருக்காரு!" என்றாள் நீலா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 116
பிரிவாற்றாமை

குறள் 1155
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.

பொருள்:
என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...