Tuesday, October 18, 2022

1154. வார்த்தை தவறி விட்டாய் கண்ணா!

"ஏண்டி, உன் கணவர் உன்னைப் பிரிஞ்சு இன்னொரு பொண்ணுகிட்டேயா போறாரு? வியாபராத்துக்காகக் கடல் கடந்து போறாரு. இதுக்குப் போய் அலுத்துக்கறியே!" என்றாள் மனோரமா.

"அலுத்துக்கறேனா? நிலை குலைஞ்சு போயிருக்கேன்!" என்றாள் விசித்ரா, பொங்கி வந்த கண்ணீரை அடக்கியபடி.

மனோரமா பெரிதாகச் சிரித்தாள்.

"உன் பெயருக்கேற்றபடி நீ விசித்திரமானவளாத்தான் இருக்கே! ஆண்கள் தொழில், வியாபாரம்னு அடிக்கடி வெளியூர் போறது இயல்பா நடக்கற விஷயம்தான். ஆண்கள் வெளியில போய்ப் பொருள் ஈட்டலேன்னா வீட்டில அடுப்பு எப்படி எரியும்? என் வீட்டுக்காரர் அடிக்கடி வெளியூர் போயிட்டுப் பல நாள் கழிச்சுத்தான் வருவாரு. நான் அதுக்காக மனசு உடைஞ்சு போயிட்டேனா என்ன?"

"உன் கணவரைப் பிரிஞ்சு இருக்கறது உனக்கு வருத்தமா இல்லையா" என்றாள் விசித்ரா.

"வருத்தம் இல்லாம எப்படி இருக்கும்? சொன்னா நம்ப மாட்டே. முதல் தடவை அவர் வெளியூர் போகப் போறதா சொன்னப்ப அவர் போகக் கூடாதுன்னு நான் தரையில புரண்டு அழுதேன்!"

மனோரமா தரையில் புரண்டு அழும் காட்சியை மனக்கண்ணால் பார்த்தபோது, வருத்தமான மனநிலையிலும்  விசித்ராவுக்குச் சிரிப்பு வந்தது.

"அப்புறம்?" என்றாள்.

"அப்புறம் என்ன? நான் அழுததுக்காகப் போகாம இருந்திருப்பாரா? என்னை சமாதானப்படுத்திட்டுப் போனாரு. ரெண்டு மூணு தடவைக்கு அப்புறம் பழகிப் போச்சு. ஒரு ரகசியம் சொல்லட்டுமா? என் வீட்டுக்காரர் ஊர்ல இல்லாதப்பதான் நான் உன்னைப் பார்க்க அடிக்கடி வரேன்! உன் மேல இருக்கிற அன்பினால இல்ல!" என்றாள் சிரித்துக் கொண்டே.

தோழியைச் சீண்டி அவள் துயர மனநிலையை மாற்றி அவளைச் சிரிக்க வைக்க மனோரமா செய்த முயற்சி பலன் தரவில்லை.

விசித்ரா சற்று யோசித்து விட்டு, "ஆமாம். கல்யாணத்துக்கு முன்னால உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்னு உன் கணவர் உனக்கு உறுதிமொழி கொடுத்தாரா?" என்றாள்.

"அதெல்லாம் இல்லை. அப்படியெல்லாம் யாராவது உறுதிமொழி கொடுப்பாங்களா என்ன?" என்றாள் மனோரமா.

"என் கணவர் கொடுத்திருக்காரே! எப்பவும் உன்னை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன், எங்கே போனாலும் உன்னையும் கூட்டிக்கிட்டுத்தான் போவேன்னு திருமணத்துக்கு முன்னால அவர் எனக்கு உறுதி கொடுத்தாரு. நான் அதை நம்பினேன். இப்ப அவர் அதை மீறிட்டாரு. கொடுத்த வாக்கை மீறினதுக்காக அவரைக் குற்றம் சொல்லாம, அவர் பேச்சை நம்பினதுக்காக என்னைக் குற்றம் சொல்றியே! இது என்ன நியாயம்?" என்றாள் விசித்ரா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 116
பிரிவாற்றாமை

குறள் 1154
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.

பொருள்:
பிரிந்திடேன், அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப் பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நான் நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்?.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...