Friday, January 4, 2019

1085. இரண்டு கண்கள், மூன்று செயல்கள்


"டேய் கண்ணா,சிங்கப்பூர்லேந்து வந்திருக்கற ஒருத்தர் ஒரு த்ரீ இன் ஒன்  வாங்கிட்டு வந்திருக்காரு. புது செட். நல்ல கம்பெனி. குறைச்ச விலைக்கு வாங்கலாம். நீ வாங்கிக்கறயா?" என்றான் வையாபுரி.

"த்ரீ இன் ஒன்னா? நம்ம ஊர்ல சில பேரு டூ  இன் ஒன் வச்சிருக்காங்க. பாத்திருக்கேன். அது என்ன த்ரீ இன் ஒன்?" என்றான் கண்ணன்.

"இப்ப புதுசா சி டின்னு வந்திருக்கில்ல, சின்ன கிராமஃபோன்  ரிகார்டு மாதிரி? புதுப் பாட்டெல்லாம் இப்ப சி டிலதானே வருது? சிடி,  டேப், ரேடியோ மூணும் சேந்ததுதான் த்ரீ இன் ஒன்!" என்று விளக்கினான் வையாபுரி.

"எனக்கு எதுக்கு அதெல்லாம்? அதோட நான் பழைய பாட்டு கேக்கற ஆளு. எனக்கு எதுக்கு சிடில்லாம்?"

"பழைய பாட்டெல்லாம் கூட சிடில வருதுடா. அவரே சிங்கப்பூர்லேந்து எம் ஜி ஆர் பாட்டு, சிவாஜி பாட்டு, சுசீலா பாட்டுன்னு அஞ்சாறு பழைய பாட்டு  சிடி வச்சிருக்காரு. கொஞ்ச நாள்ள இந்த சிடி எல்லாம் இங்கேயும் வர ஆரம்பிச்சுடும். நீதான் சரக்குப் பிடிக்க வாரா வாரம் மாயவரத்துக்குப் போவியே, அங்கேந்து சிடில்லாம் வாங்கிட்டு வரலாம்"  என்ற வையாபுரி, அவன் காதருகே வந்து, "இந்தசெட்டை நீ எடுத்துக்கிட்டுப் போயி, உன் ஆளுக்கு சிடியில் பாட்டுப் போட்டுக் காட்டினேன்னா, அவ எவ்வளவு நேரம் வேணும்னாலும் உன்கிட்ட பேசிக்கிட்டிருப்பாடா!" என்றான்.

"போடா!" என்றான் கண்ணன் சிரித்தபடி.

சாலையிலிருந்து சற்றுத் தள்ளி, செடிகள் அடர்ந்த பள்ளமான இடத்தில் கண்ணனுக்கு எதிரே அமர்ந்து கொண்டாள் காவேரி.

"ஆமாம், பொம்பளைங்கல்லாம் ஏன் ஆம்பளைங்க முகத்தைப் பாக்க வெக்கப்படறாங்க?" என்றான் கண்ணன்.

"அது வெட்கம் இல்ல கண்ணா! உங்க மேல உள்ள பரிதாபம்!" என்றாள்  காவேரி.

"எதுக்கு பரிதாபம்?" என்ற கண்ணன், "அதுக்கு முன்ன ஒரு விஷயம் சொல்லிடு. நீ என்னைக் கண்ணான்னு செல்லமாக் கூப்பிடறியா, இல்ல என் பேரைச் சொல்லிக் கூப்பிடறியா?" என்றான்.

"எப்படி வேணும்னா வச்சுக்க கண்ணா!" என்ற காவேரி,
"உங்க மேல பரிதாபப் பட்டுத்தான் நாங்க உங்களைப் பாக்காம இருக்கோம். ஏன்னா, எங்க பார்வையை நீங்க தாங்க மாட்டீங்க!" என்றாள்.

"அது சரிதான். நீ என்னை நேரா பாக்கறது எப்பவாவதுதான். ஆனா ஒவ்வொரு தடவையும் நீ என்னைப் பாக்கறச்சே சிவபெருமான் நெத்திக் கண்ணைத் திறந்து பாக்கற மாதிரி இருக்கு!"

"ஏன், நான்  உன்னைப் பாத்தா உன் உடம்பு எரியுதா என்ன?"

"அப்படிச் சொல்லல. ஆனா எதோ பண்ணுது. அதைத் தாங்க முடியல. எழுந்து  ஓடிடலாம் போல இருக்கு!"

"அப்படியா? சரி, நான் இப்ப உன்னை நேராப் பாக்கறேன். நீ எழுந்து ஓடறியான்னு பாக்கலாம்."

"ஐயையோ! எழுந்து ஓடறதுக்கா உன்னைப் பாக்க வந்திருக்கேன்? சரி, பாரு. என் மேல கொஞ்சம் கருணை வச்சு, என்னை எரிச்சுட்டாம பாரு" என்றான் கண்ணன்.

அவனை நேராகப் பார்த்த காவேரி, "என்ன கண்ணா இது? தலையை நல்லா படிய வார மாட்டியா? மூஞ்சில மூணு நாள் தாடி! உன்  சட்டை கலர் உனக்குப் பொருந்தவே இல்லை. பழுப்பு ஏறின வேட்டி. வேட்டி கட்டிக்கிட்டு கால்ல ஏன் பூட்ஸ் போட்டுக்கிட்டிருக்க?" என்றாள்.

"ஏண்டி, எதோ என் மூஞ்சியைப் பாருன்னு சொன்னா, ஒரு பார்வையிலேயே தலையிலேந்து கால் வரையிலும் பாத்துட்டியே. நான் இவ்வளவு நேரம் உன்னைப் பாத்துக்கிட்டிருக்கேன், உன் புடவை என்ன நிறம்னு கூட கவனிக்கல."

"அதான் கண்ணா ஆம்பளை பாக்கறதுக்கும், பொம்பளை பாக்கறதுக்கும் உள்ள  வித்தியாசம்! நாங்க ஒரு பார்வையிலேயே மொத்தமாப் பாத்துடுவோம். எங்க பார்வை அவ்வளவு வேகமா ஓடும்."

"நல்ல வேளை சொன்னியே! ஒங்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும் போலருக்கு. ஆமாம், ஏன் இப்படி அடிக்கடி கண்ணைத் திருப்பி இங்கியும் அங்கியும் பாத்துக்கிட்டிருக்கே?"

"யாராவது நம்பளைப் பாத்துடுவாங்களோன்னு பயம். அதான் யாராவது வரங்களான்னு பாத்துக்கிட்டிருக்கேன்."

"பாத்தா என்ன, அதான் நாம கல்யாணம் பண்ணிக்கப்போறமே?"

"அதுக்காக பயப்படலை கண்ணா!  நாம பழகறதை மத்தவங்க பாத்தா வெக்கமாவும் சங்கடமாவும்தானே இருக்கும்?" என்றாள் காவேரி.

"வேடிக்கையா இருக்கு காவேரி. உன் கண் என்னை வாட்டி எடுக்குது. ஆனா அதுவே பயப்படவும் செய்யுது! போறாததுக்கு, வேகமா அங்கேயும் இங்கேயும் ஓடுது. என் நண்பன் வையாபுரிகிட்ட சொல்லணும்" என்றான் கண்ணன்.

"அவர்கிட்ட என்ன சொல்லப்போற?" என்றாள்  காவேரி மருட்சியுடன்.

"அவன் என்னை த்ரீ இன் ஒன் வாங்கச் சொல்லிக்கிட்டிருக்கான். என்கிட்டயே ஒரு த்ரீ இன் ஒன்  இருக்குன்னு சொல்லப் போறேன்."

"த்ரீ இன் ஒன்னா?"  செயல்கள்

"ஆமாம். மூணு விதமா செயல்படற உன்னோட பார்வை!" என்றான் கண்ணன்."

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல் (தலைவியின் அழகு தலைவனை வருத்துதல்)

குறள் 1085
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து..

பொருள்:
என்னை வருத்துவதால், உயிர் குடிக்கும் கூற்றம், என் மீது பார்வை ஓடுவதால் இது  கண், மருட்சியுடன் இருப்பதால்  மான் என்று  இந்தப்பெண்ணின் பார்வை இந்த மூன்று இயல்புகளையும் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment

1128. ஆறிய காப்பி!

"என்ன நம்ம பொண்ணு ஆம்பளைங்க மாதிரி அடிக்கடி காப்பி குடிக்கறா?" என்றார் சபாபதி. "ஏன், பொம்பளைங்க அடிக்கடி காப்பி குடிக்கக் கூட...