
"இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல!" என்றாள் காஞ்சனா.
"இங்க பாரு, காஞ்சனா! உண்மையாத்தான் சொல்றேன். நீ பியூட்டி பார்லர்க்குப் போறது அனாவசியம். நீ ஏற்கெனவே அழகாத்தானே இருக்கே!"
"உலகத்தில எவ்வளவு விஷயங்கள் மாறினாலும், ஆண்கள் இப்படி எல்லாம் பேசிப் பெண்களை ஏமாத்தறது இன்னும் மாறல!"
"'நாங்க ஒண்ணும் அழகுப் பொருட்கள் இல்லை'ன்னு பெண்கள் எவ்வளவுதான் வீர வசனம் பேசினாலும், பெண்கள் தங்களை அழகுபடுத்திக்காம இருக்கறதில்ல."
"நான் பியூட்டி பார்லருக்குப் போறதில உனக்கு என்ன பிரச்னை?"
"என்ன பிரச்னையா? ஏற்கெனவே நான் உன் அழகில மயங்கி சுய சிந்தனை இல்லாம இருக்கேன்னு என் நண்பர்கள் எல்லாம் சொல்றாங்க. இதில நீ பியூட்டி பார்லருக்குப் போய் இன்னும் கொஞ்சம் அழகா ஆகிட்டு வந்தா என் கதி என்ன ஆகிறது?"
"சரி. நான் பர்ஃபெக்ட்டா இருக்கேன். ஒரு இம்ப்ரூவ்மென்ட் கூடத் தேவையில்லேன்னு உன்னால சொல்ல முடியுமா?"
"அது எப்படிச் சொல்ல முடியும்? உன் முன் பல்லு வளைஞ்சிருக்கு, மூக்கு நீளமாயிருக்கு, உதடு வீங்கின மாதிரி இருக்கு..."
காஞ்சனா கையை ஓங்கியபடி, "ஏய்! இப்பத்தானே, நான் பியூட்டி பார்லருக்கே போக வேண்டாம், என் அழகில நீ மயங்கி விழுந்து கிடக்கே அப்படின்னேல்லாம் சொன்னே?" என்றாள், பொய்க் கோபத்துடன்.
"இந்த அழகுக்கே மயங்கிட்டேன்னு சொன்னேம்மா, ரதி தேவி! அதோட நான் சொன்ன விஷயங்களையெல்லாம் பியூட்டி பார்லர்ல போய் மாத்த முடியாதே!"
"இரு! நான் போயிட்டு வந்து வச்சுக்கறேன்!"
"அப்ப, பியூட்டி பார்லருக்குப் போகத்தான் போறியா? "
"ஆமாம்."
"அப்ப, எனக்காக ஒரே ஒரு மாறுதல் பண்ணிக்கிட்டு வரியா?"
"என்ன, இந்த மூஞ்சியை விட்டுட்டு வேற மூஞ்சியை வச்சுக்கிட்டு வரணுமா?"
"ம்...அப்படிச் செய்ய முடிஞ்சாத்தான் நல்லா இருக்குமே! அதெல்லாம் வேண்டாம். உன் புருவம் வளைவா இருக்குல்ல, அதை நேராக்கிக்கிட்டு வந்துடேன்!"
"ஏன்? புருவம் வளைஞ்சு இருக்கறதுதானே அழகும்பாங்க?"
"அழகுதான்! ஆனா, ஆபத்தா இல்ல இருக்கு எனக்கு?"
"ஆபத்தா? எப்படி?"
"உன் கண்ணைப் பாத்தாலே எனக்கு நடுக்கமா இருக்கு. இப்ப உன் புருவம் வளைஞ்சு இருக்கறதால, உன் பார்வை லென்ஸால ஃபோகஸ் பண்ணின மாதிரி என் மேல நேராப் பாயுது! புருவம் நேரா இருந்தா ஓரளவுக்காவது உன் கண்களை மறைச்சு, உன் பார்வையோட உக்கிரத்திலேந்து என்னைக் காப்பாத்துமே, அதுக்குத்தான்!" என்றான் குமரன்.
இதற்கு பதில் சொல்லாமல் அவனை நேராகப் பார்த்த காஞ்சனாவின் பார்வையின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் அங்கிருந்து நகர்ந்தான் குமரன் .
காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல் (தலைவியின் அழகு தலைவனை வருத்துதல்)
குறள் 1086
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்செய்யல மன்இவள் கண்.
பொருள்:
இவள் வளைந்த புருவங்கள் நேராக இருந்து இவள் கண்களை மறைத்தால் இவள் கண்கள் என்னை நடுங்க வைக்கும் துன்பத்தை எனக்குச் செய்யாமல் இருக்குமே!
Read 'Arched Eyebrows? They can be dangerous! the English version of this story by the same author.
No comments:
Post a Comment