
சின்னையனை அழைத்துப் போக அவன் வீட்டுக்குச் சென்றபோது கதிருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சின்னையன் வீட்டுக்கு வந்திருந்த அவன் உறவுக்காரப் பெண் சுமதியும் திருவிழாவுக்கு வரக் கிளம்பித் தயாராக இருந்தாள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு சின்னையனுடன் அவள் தெருவில் நடந்து போனபோது அவளைக் கதிர் பார்த்தான். பார்த்ததுமே சட்டென்று அவளிடம் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. ஆயினும், நண்பன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருப்பவள் என்பதாலும், அவளைப் பற்றிய எந்த விவரமும் தெரியாதென்பதாலும் அவளைப் பற்றி மேலே நினைக்காமல் இருந்தான்.
சின்னையன் கதிரை சுமதிக்குத் தன் நண்பன் என்று அறிமுகப்படுத்தியதும், "அன்னிக்குத் தெருவில நடந்து போகச்சே, அவரு வீட்டு வாசல்ல நின்னுக்கிட்டிருந்தாரே!" என்றாள் சுமதி அவனைப் பார்த்துச் சிரித்தபடி.
கதிரின் உடலில் குபீரென்று ஒரு உணர்வு பரவியது. அவளும் என்னை கவனித்திருக்கிறாள்! இதற்குப் பிறகு, கரை கடந்த உற்சாகத்துடன் கதிர் அவர்கள் இருவருடன் திருவிழாவுக்குச் சென்றான்.
திருவிழாவில் பல சந்தர்ப்பங்களில் கதிர் மீது தனக்கு இருக்கும் ஈடுபாட்டை சுமதி வெளிப்படுத்தினாள். மௌனமான பார்வை, காரணம் இல்லாமல் அவனைப் பார்த்துச் சிரித்தது, உரிமையான கிண்டல் என்று பல விதங்களில் அவனுக்கு மட்டும் புரியும்படி அவள் தன் விருப்பத்தை வெளிப்படுத்தியதாக அவனுக்குத் தோன்றியது.
"இந்த வருஷம் திருவிழாவில் ஒரு விசேஷம். வெளியூர்லேந்து யானை வரவழைச்சிருக்காங்க" என்றான் சின்னையன்.
"அப்படியா? எங்கே? நாம பாக்கவே இல்லையே?" என்றாள் சுமதி.
"கொஞ்ச நேரத்தில சாமி ஊர்வலம் வரும். அப்ப சாமிக்கு முன்னே யானை வரும்."
"அப்ப, இப்ப எங்க இருக்கு யானை?"
"மறைவா ஒரு இடத்தில வச்சு அலங்காரம் பண்ணிக்கிட்டிருக்காங்க" என்றான் சின்னையன்.
"யானைக்குக் கூட அலங்காரம் பண்ணுவாங்களா என்ன?" என்றாள் சுமதி.
"ஏன், பொண்ணுங்க மட்டும்தான் அலங்காரம் பண்ணிக்கணுமா?" என்றான் கதிர்.
"வேணும்னா, நீங்களும் பண்ணிக்கங்களேன்! யாரு வேண்டான்னாங்க?" என்றாள் சுமதி. மறுபடி அவனைப் பார்த்து ஒரு சிரிப்பு!
அவர்களை கவனிக்காமல் முன்னே பார்த்துக் கொண்டிருந்த சின்னையன், "உங்க சண்டையை நிறுத்திட்டு அங்கே பாருங்க. யானை வந்துக்கிட்டிருக்கு!" என்றான்.
"அட! எவ்வளவு அழகா நடந்து வருது!" என்ற சுமதி, "ஆமாம். நீ சொன்ன மாதிரி அலங்காரம்லாம் பண்ணி இருக்காங்க. அது என்ன நெத்தியை மறைக்கிற மாதிரி ஏதோ ஜரிகைத் துணி மாதிரி கட்டி இருக்காங்க?" என்றாள்.
"அது பேரு முகபடாம். யானையோட மத்தகத்தில - அதாவது நெத்தியிலேந்து தும்பிக்கை துவங்கற இடம் வரை உள்ள பகுதியில - அதைக் கட்டுவாங்க" என்றான் கதிர்.
"மதம் பிடிச்ச யானைக்குத்தானே இப்படி முகபடாம் போடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்?"
"ஆமாம். மதம் பிடிச்ச யானை தறி கேட்டு ஓடி எல்லாரையும் தாக்கக் கூடாதுங்கறதுக்காக, அதோட பார்வையைக் கொஞ்சம் குறைக்கறதுக்காக முகபடாம் போடுவாங்க. ஆனா அலங்காரத்துக்காகவும் போடுவாங்க."
"யானைக்கு மத்தகம்தான் அழகு. அதைத் துணியைப் போட்டு மறைப்பாங்களா?"
"சில சமயம் அழகை மறைக்க வேண்டியிருக்கும். அப்பத்தான் பாக்கறவங்களுக்கு மதம் பிடிக்காம இருக்கும்!" என்றபடியே கதிர் சிரிப்புடன் சுமதியைப் பார்த்தான்.
சுமதி சேலைத் தலைப்பால் தன்னை இன்னும் சற்று அதிகமாக மூடிக் கொண்டாள்.
காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல் (தலைவியின் அழகு தலைவனை வருத்துதல்)
குறள் 1087
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்படாஅ முலைமேல் துகில்
பொருள்:
அந்த மங்கை தன் நிமிர்ந்த மார்பகங்களின் மீது அணிந்திருக்கும் உடை மதம் பிடித்த யானையின் நெற்றியில் அணிவிக்கப்பட்ட முகபடாம் போன்று உள்ளது.
Read 'A Veil that Covers the Beauty' the English version of this story by the same author.
No comments:
Post a Comment