Friday, February 15, 2019

1088. நந்தவனத்தில் ஒரு மின்னல்!

"அரசே! சின்னமலை அரசன் ராஜவர்மரிடமிருந்து ஓலை வந்திருக்கிறது" என்றார் அமைச்சர்.

"என்ன எழுதி இருக்கிறார் என் நண்பர்?" என்றான் அரசன் கிள்ளிவளவன்.

"சின்னமலை மீது போர் தொடுக்க இருந்த நெடுங்காரி, ராஜவர்மருக்கு உதவியாக நீங்களே போர்க்களத்தில் இறங்குவீர்கள் என்று அறிந்ததும் பின்வாங்கி விட்டானாம்!"

"நல்ல விஷயம்! ஒரு போர் தவிர்க்கப்பட்டது. ஆனால் நெடுங்காரி என்னுடன் போர் செய்ததில்லையே? அவனுக்கு எப்படி என்னைப் பற்றித் தெரியும்?"

"என்ன அரசே இது? உங்களுடன் போரிட்டுத்தான் உங்கள் வலிமையைத் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன? உங்களுடன் போரில் ஈடுபட்ட ஒரு சில மன்னர்கள் உங்கள் வீரத்தையும் வலிமையையும் பற்றிச் சொன்னதைக் கேட்டே எல்லா மன்னர்களும் உங்களிடம் அச்சம் கொண்டிருக்கிறார்களே!" என்றார் அமைச்சர்.

கிள்ளிவளவனுக்குப் பெருமையாக இருந்தது.

ரண்மனையை ஒட்டி இருந்த அந்த நந்தவனத்தில் யாருக்கும் தெரியாமல் நுழைந்தான் கிள்ளிவளவன். அரசனாக இருப்பவன் காவல் இல்லாமல் வெளியே செல்வது கடினம்தான். ஆனால், அந்தப்புரத்தில் தன் அன்னையைப் பார்த்து விட்டு, அங்கிருந்து பின் வழியே நந்தவனத்துக்குள் நழுவி விட்டான் கிள்ளி வளவன். சேடிப் பெண்கள் யாராவது பார்த்திருக்கலாம். ஆனால் அவர்கள் தன் அன்னையிடம் சொல்ல மாட்டார்கள் என்பது அவன் நம்பிக்கை. அவர்கள் தினமும் பார்க்கும் காட்சிதானே இது!

நந்தவனத்தின் உள்ளே இருந்த ஒரு சிறிய மேடைக்கருகில் சென்றான். அங்கு யாருமில்லை.

'இத்தனை நேரம் வந்திருக்க வேண்டுமே அவள்! ஏன் இன்னும் வரவில்லை?' என்று நினைத்த கிள்ளிவளவன், "காஞ்சனை!" என்று மெதுவாக அழைத்தான்.

"நாட்டைக் காக்கும் காவலர் இப்படியா கள்வர் போல் வருவது?" என்று மறைவிலிருந்து குரல் கேட்டது.

குரல் கேட்ட திசையில் கிள்ளிவளவன் பார்த்தபோது, செடிகளுக்குப் பின்னே ஒரு தலை மட்டும் சற்று தூரத்தில் தெரிந்தது.

கிள்ளிவளவன் அவளை நோக்கிச் சென்றபோதே, இலைகளை விலக்கித் தன் முகத்தைக் காட்டினாள் காஞ்சனை.

கிள்ளிவளவன் ஒரு நிமிடம் நிலை குலைந்தது போல் நின்றான்.

"பெண்கள் எதை மறைக்க வேண்டுமோ அதை மறைப்பதில்லை" என்றான்.

"என்ன சொல்கிறீர்கள்?" என்றாள் காஞ்சனை அதிர்ச்சியுடன் குனிந்து தன் உடையைப் பார்த்தபடி.

"இப்போதுதான் அமைச்சர் சொன்னார் என்னைப் போர்க்களத்தில் நேரில் சந்திக்காத வீரர்கள் கூட என் வலிமையைப்  பற்றி மற்றவர்களிடம் கேள்விப்பட்டு என்னிடம் அஞ்சுவதாக. ஆனால் நீ சட்டென்று உன் முகத்தைக் காட்டியதும், உன் நெற்றியிலிருந்து என் மீது பாய்ந்த ஒளி  ஒருகணம் என் வலிமையையே வீழ்த்தி விட்டதே, அந்த நெற்றியை மறைக்க வேண்டாமா?" என்றான் கிள்ளிவளவன் சிரிப்புடன்.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல் (தலைவியின் அழகு தலைவனை வருத்துதல்)

குறள் 1088
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

பொருள்:
போர்க்களத்தில் என்னுடன் மோதாத பகைவர் கூடப்  பிறர் சொல்லக் கேட்டு அஞ்சும் என் வலிமை இவளுடைய ஒளி பொருந்திய நெற்றியிடம் தோற்று விட்டதே!
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

No comments:

Post a Comment

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...