"ஆமாம், அக்கா! நாலு மாசம் கழிச்சு வந்திருக்காரு!" என்றாள் சுந்தரி.
"உன் முகத்தைப் பாத்தாலே தெரியுதே! இத்தனை நாளா உன் முகத்தில சுரத்தே இல்லை. இன்னிக்குத்தான் முகத்தில ஒரு மலர்ச்சி தெரியுது."
'உனக்குக் கேலியா இருக்கு! இந்த நாலு மாசமா எப்படித் தவிச்சேன்னு எனக்குத்தானே தெரியும்!' என்று நினைத்துக் கொண்டாள் சுந்தரி.
"என்னடி, மறுபடி உன் முகம் வாடி இருக்கு? உன் காதலன்தான் திரும்பி வந்துட்டாரே! ஒரு மாசமா சந்தோஷமா இருந்தியேன்னு பாத்தேன். மறுபடி எங்கேயாவது ஊருக்குப் போகப் போறாரா என்ன?" என்றாள் ரதிதேவி.
"இல்லை, அக்கா! அவர் இங்கதான் இருக்காரு."
"அப்புறம் என்ன?"
"அவர் என் மேல கோபமா இருக்காரு. ரெண்டு நாளா என்னைப் பாக்கறதும் இல்ல, பேசறதும் இல்ல!"
"எதுக்குக் கோபம்?"
"ஏதோ சின்ன விஷயம். அவர் செஞ்சது தப்புன்னு நான் சொல்லிட்டேன். அதுக்குப் போய்ப் பெரிசாக் கோவிச்சுக்கிட்டு, என்னைப் பாக்காம, எங்கிட்ட பேசாம என்னை தண்டிக்கறாரு!" என்றாள் சுந்தரி. சொல்லும்போதே அவளுக்கு அழுகை பீறிட்டு வந்தது.
"அடி போடி! இதுக்கா இப்படி வாடிப் போயிட்ட? காதலர்களுக்குள்ள இது மாதிரி சண்டை வரது சகஜம்தான். சண்டை போட்டுப்பாங்க, கொஞ்ச நாள் கழிச்சு சமாதானம் ஆயிடுவாங்க. இதுக்காகக் கவலைப்படாதே!" என்றாள் ரதிதேவி.
"இல்லை, அக்கா! அவர் எங்கிட்ட அன்பா இருக்கறப்பவே எனக்குப் பிரிவைக் கொடுத்து கஷ்டப்படுத்தினாரு. இப்ப என் மேல கோபமா இருக்கறப்ப எப்படியெல்லாம் கஷ்டப்படுத்துவாரோன்னு நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு!" என்றாள் சுந்தரி.
காதலனின் பிரிவு சுந்தரியை எந்த அளவுக்கு பாதித்திருந்தது என்பதை உணர்ந்து கொண்ட ரதிதேவி, தோழியை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று யோசிக்கத் தொடங்கினாள்.
கற்பியல்
பொருள்:
நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?
No comments:
Post a Comment