Wednesday, January 25, 2023

1168. இரவுக்கு நான் மட்டும் காவல்

"ஏண்டி, எனக்கு ஃபிரண்டுன்னு நீ ஒருத்திதான் இருக்கே. கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருக்கலாம்னா, அதுக்குள்ள வீட்டுக்குக் கிளம்பறேங்கறியே!" என்றாள் உமா.

"இப்ப போனாத்தான் வீட்டுக்குப் போய் ராத்திரிக்கு சாப்பாடு செஞ்சு எல்லாருக்கும் போட்டுட்டு, பத்து மணிக்குத் தூங்கப் போக முடியும். காலையில நாலு மணிக்கு எழுந்து, பால் பூத்துக்குப் போய், பால் பாக்கெட்களை வாங்கிக்கிட்டு வந்து, வீடுகளுக்குப் போட முடியும். உன்னை மாதிரி எட்டு மணி வரைக்கும் என்னால தூங்க முடியாது!" என்றாள் கலா.

"நான் எட்டு மணி வரைக்கும் தூங்கறேன்னு உனக்கு யார் சொன்னது?" என்றாள் உமா, சற்று சங்கடத்துடன்.

"அன்னிக்குக் காலையில எட்டு மணிக்கு நான் உன் வீட்டுக்கு வந்தப்ப, உங்கம்மா சொன்னாங்ளே, 'அவ இன்னும் தூங்கிக்கிட்டுத்தான் இருப்பா, போய் எழுப்பிக்கிட்டு வரேன்'னு!"

"இப்ப நான் எங்க அம்மா வீட்டில  இருக்கறதால, சீக்கிரம் எழுந்திருக்க வேண்டாங்கறதால, சும்மா படுத்துக்கிட்டிருப்பேன். நான் தூங்கறதா எங்கம்மா நினைச்சுக்கிட்டிருப்பாங்க. எங்க வீட்டில இருந்தா, நானும் அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்துடுவேன்!"

"உன் புருஷன் துபாய்லேந்து எப்ப வராரு?"

"இன்னும் ரெண்டு மாசம் ஆகுமாம்."

"அடிக்கடி கடுதாசி போடறாருல்ல?"

"எங்கே? எப்பவாவதுதான். அவருக்கு நேரம் கிடைக்கறதில்லையாம்! இங்கே ஃபோன் இருந்தா, ஃபோனாவது பண்ணச் சொல்லலாம்! அதுக்கெல்லாம் நமக்கு வசதி ஏது?" என்றாள் உமா, பெருமூச்சுடன்.

"கவலைப்படாதே! உன் புருஷன் துபாய்லேந்து நிறைய சம்பாதிச்சுட்டு வந்ததும், நீயும் கார், ஃபோன் எல்லாம் வச்சுக்கிட்டு வசதியா இருக்கலாம். அப்பல்லாம் என்னால உன்னை வந்து பாக்க முடியுமோ என்னவோ!" என்றாள் கலா, சிரித்தபடி.

"போடி, நீ வேற? பொண்டாட்டியைத் தனியா விட்டுட்டு அப்படி என்ன வெளிநாடு போய் சம்பாதிக்க வேண்டி இருக்குன்னு நான் ஏங்கிக்கிட்டிருக்கேன். யாருக்கு வேணும் வசதி எல்லாம்? அவர் என்னோட இருந்தா எனக்குப் போதும்!"

"என் புருஷனுக்கு வெளிநாடு போற வாய்ப்பு வந்தா, நான் சந்தோஷமா அனுப்பி வச்சுடுவேன். அவர் போய்ப் பணம் சம்பாதிச்சுட்டு வந்தா, அப்புறம் வசதியா இருக்கலாம் இல்ல?"

"இப்ப இப்படித்தான் சொல்லுவ. அவர் நிஜமாகவே உன்னைத் தனியா விட்டுட்டுப் போனா, அப்ப உணருவே!"

"எனக்கு நேரமாச்சு. நான் கிளம்பணும். ரொம்ப அலுப்பா இருக்கு. காலையில எழுந்ததிலேந்தே ராத்திரி எப்ப வரும், எப்ப படுத்து நிம்மதியாத் தூங்கலாம்னு இருக்கு. அப்படி ஒரு அலுப்பு!" என்று கூறியபடியே கிளம்பினாள் கலா.

'நீ கொடுத்து வச்சவடி! தூக்கத்தை நல்லா அனுபவிக்கற!' என்று தனக்குள் முணுமுணுத்தாள் உமா.

டுக்கையில் படுத்து நீண்ட நேரம் ஆகி விட்டது. இன்னும் தூக்கம் வரவில்லை. மணி என்ன இருக்கும் என்று தெரியவில்லை. அலாரம் வைத்த சிறிய கடிகாரம் முன்னறையில் இருந்தது. அங்கே போய் மணி பார்க்கலாம் என்றால், அம்மா காலடிச் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டு, "ஏண்டி சத்தம் போட்டு என்னை எழுப்பின?" என்று சத்தம் போடுவாள்.

இப்படியே ஏதாவது நினைத்துக் கொண்டு படுத்திருந்தால், எப்போதோ ஒரு சமயம் பொழுது விடிந்து விடும். ஆனால், அதற்குப் பிறகு பகல் முழுவதும் தூக்கக் கலக்கத்துடனும், கண் எரிச்சலுடனும்தான் இருக்க வேண்டும்!

இந்த இரவில் எல்லோரும் நிம்மதியாக உறங்குகிறார்கள் - கலாவைப்போல். ஆனால், நான் மட்டும் விழித்துக் கொண்டேதான் இருக்கிறேன். 

பாவம், இந்த இரவும் என்னைப் போல் தனியாகத்தானே இருக்கிறது! அதற்கு ஒரு துணை வேண்டாமா? அதனால்தான் என்னைத் துணையாக வைத்துக் கொண்டிருக்கிறது போலிருக்கிறது!

தான் அடிக்கடி நினைத்துப் பார்க்கும் பாட்டைத் தனக்குள் மெல்ல முணுமுணுத்தாள் கலா.

'இரவுக்கு நான் மட்டும் காவல்
எனக்கொரு துணை இந்தப் பாடல்.'

'கண்ணதாசன் இந்தப் பாட்டை எனக்காகவே எழுதின மாதிரி இருக்கு!' என்று நினைத்தபடியே, கண்ணை மூடித் தூங்க முயன்றாள் உமா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 117
படர் மெலிந்திரங்கல் (பிரிவுத் துயரால் உடல் மெலிதல்)

குறள் 1168
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை

பொருள்:
இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிர்களையும் தூங்கச் செய்து விட்டு, என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...