காலை எழுந்துடன், முதல்நாள் முழுவதும் கணவனுடன் கழித்த நேரத்தை எண்ணி அசை போட்டு மகிழ்ந்த பிறகும், அன்றுதான் தன் மண வாழ்க்கையின் முதல் நாள் என்பது போல் உணர்வாள் கோதை.
கணவன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவன் தன்னிடம் காட்டும் அன்பை உணர்ந்து, தானும் தன் அன்பைப் பேச்சாலும், செயலாலும் வெளிப்படுத்தி, இரவு உறங்கும்போது, இருவரும் ஒருவர் மற்றவர் மீது வெளிப்படுத்தும் அன்பின் உச்சத்தை அனுபவித்து, காலை கண் விழித்ததும், மீண்டும் ஒரு புது நாளை எதிர்நோக்கும் புத்துணர்ச்சி அவளுக்கு ஏற்படும்.
'இது என்ன விந்தை! இந்த அன்பு வெள்ளம் தினமும் பாய்ந்து என்னை மூழ்கடிக்கிறதே! இந்த அன்பு வெள்ளத்துக்குக் கரையே கிடையாதா?' என்று நினைத்து நினைத்து மலைப்பாள் கோதை.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, கோதையின் கணவன் வியாபார விஷயமாக வெளியூருக்குச் செல்ல வேண்டி இருந்தது. போவதற்கு முன் கோதையை அவள் தாய் வீட்டில் விட்டு விட்டு, தான் திரும்பி வரச் சில மாதங்கள் ஆகும் என்று சொல்லி விட்டுப் போனான் அவன்.
"ஏண்டி உன் கண் இப்படிச் சிவந்திருக்கு?" என்றாள் கோதையின் தோழி செவ்வந்தி.
"பின்னே? சிவக்காம எப்படி இருக்கும், ராத்திரி முழுக்கத் தூங்காம, கொட்டக் கொட்ட விழிச்சுக்கிட்டுப் படுத்துக்கிட்டிருந்தா?" என்றாள் கோதையின் தாய் காவேரி.
"ஏண்டி இப்படி? உடம்பு சரியில்லையா?" என்றாள் செவ்வந்தி.
"உடம்புக்கு ஒண்ணுமில்ல. ஊருக்குப் போன கணவனை நினைச்சுத் தூங்காம கண் முழிச்சுக்கிட்டிருக்கா. இத்தனைக்கும், அவன் இவளோட ஆறு மாசம் குடித்தனம் நடத்திட்டு அப்புறம்தான் போனான். உன் புருஷன் கல்யாணம் ஆகி ஒரு வாரத்திலேயே உன்னை விட்டுட்டு ஊருக்குப் போயிட்டான். நீ பிரிவைத் தாங்கிக்கிட்டு, தைரியமா இல்ல? இப்ப அவன் திரும்பி வந்துட்டான். நீ இதையெல்லாம் இயல்பா எடுத்துக்கற. ஆனா, இவளுக்கு அது புரியலையே!" என்றாள் காவேரி.
காவேரி தன் பெண்ணைப் பற்றிக் குறை சொல்கிறாளா, அல்லது, 'என் பெண்ணைப் போல் உனக்கு உன் கணவனிடம் அளவு கடந்த அன்பு இல்லையே!' என்று சொல்லிக் காட்டுகிறாளா என்று புரியாமல், தாய் மகள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள் செவ்வந்தி.
கற்பியல்
பொருள்:
காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.
No comments:
Post a Comment