Thursday, January 26, 2023

1169. நீலாவின் கோபம்!

"ஹலோ! இப்பதாம்மா வேலைக்கு வந்திருக்கேன். சொல்லு, ஏதாவது முக்கியமான விஷயமா?" என்றான் மாணிக்கம்.

"உங்கிட்ட பேசணும். அதை விட முக்கியமான விஷயம் வேற என்ன வேணும்?" என்றாள் நீலா.

"நான் வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போனப்பறம் கூப்பிடறேனே! அப்ப நீயும் முழிச்சுக்கிட்டிருப்பே!"

"இப்ப  நான் என்ன தூங்கிக்கிட்டா இருக்கேன்?"

"ராத்திரி பன்னிரண்டு மணிக்கு எனக்கு ஃபோன் பண்றியே! உனக்கும் தூக்கம் கெடும். என்னாலயும் வேலை நேரத்தில அதிகம் பேச முடியாது. அதனாலதான் வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போனப்பறம் பேசறேன்னு சொன்னேன். நீயும் தூக்கத்தைக் கெடுத்துக்காம பகல் நேரத்தில பேசலாம்" என்றான் மாணிக்கம்.

"அப்ப உனக்கு ராத்திரிதானே? நீ தூங்க வேண்டாமா?"

"என்ன நீலா, முட்டாள் மாதிரி பேசற? பத்து மணிக்கு உங்கிட்ட பேசிட்டு அப்புறம் தூங்க முடியாதா? இப்ப எனக்கு வேலை இருக்கு. ஃபோனை வச்சுடு. ராத்திரி  நானே உனக்கு ஃபோன் பண்றேன்!" என்று கூறி ஃபோனை வைத்து விட்டான் மாணிக்கம்.

"என்ன நீலா இது? அங்க ரெண்டு மணி! இப்ப ஃபோன் பண்ற?" என்றான் மாணிக்கம்.

"இப்ப உனக்கு லஞ்ச் டைம்தானே? அதனாலதான் ஃபோன் பண்ணினேன்!" என்றாள் நீலா.

"எங்களுக்கெல்லாம் லஞ்ச் டைம்னு தனியா கிடையாதும்மா. உக்காந்து ஒரு கையால கம்ப்யூட்டர்ல வேலை செஞ்சுக்கிட்டே இன்னொரு கையால சாப்பிட வேண்டியதுதான். நடுப்பற பாஸ்கிட்டேந்து ஃபோன் வரும். 'இப்ப லஞ்ச் டைம்தானே, ஃப்ரீயாதானே இருக்கே, என் கேபினுக்குக் கொஞ்சம் வரியா?' ம்பாரு, ஏதோ நான் லஞ்ச் டயத்துல மத்தவங்களோட அரட்டை அடிச்சுக்கிட்டு உக்காந்திருக்கற மாதிரி! இதுல நீ வேற லஞ்ச் டைம்தானேன்னு கேக்கற!"

"சாப்பிட்டுக்கிட்டிருக்கேன்னா சொல்லு. பத்து நிமிஷம் கழிச்சு ஃபோன் பண்றேன். உன் பாஸ்கிட்ட பேசற மாதிரி ஒரு கையில ஃபோனை வச்சுக்கிட்டு எங்கிட்ட பேசிக்கிட்டே ஒரு கையால சாப்பிட வேண்டாம்!"

"நான் லஞ்ச் முடிச்சுட்டேன். நான் சொல்ல வந்ததை நீ புரிஞ்சுக்கல. இப்படி ராத்திரியில கண் முழிச்சு எங்கிட்ட பேசறதை விடக் காலையில ஃப்ரீயாப் பேசலாமேன்னுதான் சொல்றேன்!"

"முட்டாளாடா நீ?" என்றாள் நீலா கோபத்துடன். "உன் கம்பெனியில அமெரிக்காவுக்குப் போகச் சொன்னதும் நீ பாட்டுக்கு ஜாலியா போயிட்டே! உன்னைப் பிரிஞ்சு இருக்கறது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்குன்னு உனக்குத் தெரியுமா? உன் பிரிவைக் கூடப் பொறுத்துப்பேன். ஆனா இந்த ராத்திரி நேரத்தை என்னால பொறுத்துக்கவே முடியவே இல்லை. பகல்லன்னா ஏதாவது வேலை இருக்கும், யாராவது வருவாங்க, போவாங்க. ஒரு மாதிரி நேரம் ஓடிடும். ஆனா இந்த ராத்திரி வந்தா அது முடியவே மாட்டேங்குது! தூக்கம் வராம ராத்திரி பூரா கொட்டக் கொட்ட முழிச்சுக்கிட்டிருக்கறது எவ்வளவு நரகமா இருக்கு தெரியுமா? அதனாலதான் ராத்திரியில ரெண்டு மூணு தடவை உங்கிட்ட பேசி இந்த ராத்திரியோட கொடுமையிலேந்து கொஞ்சம் விடுபடலாம்னு பாத்தா, நீ அதைப் புரிஞ்சுக்காம எனக்கு அட்வைஸ் பண்ற! உனக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவுங்கறதே கிடையாதா?"

திடீரென்று நீலா கோபத்தில் வெடித்த அதிர்ச்சியில் சில விநாடிகள் என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாக இருந்தான் மாணிக்கம்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 117
படர் மெலிந்திரங்கல் (பிரிவுத் துயரால் உடல் மெலிதல்)

குறள் 1169
கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா.

பொருள்:
இந்த இரவுகள் நீண்டு கொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே, அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையை விடப் பெரிதாக உள்ளது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...