Wednesday, June 21, 2023

1203. அவன் என்னை நினைக்கும்போதெல்லாம்...

 சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பத்மாவுக்குப் புரை ஏறிற்று.

"என்னம்மா புரையேறுது?" என்றபடியே தண்ணீர் தம்ளருடன் தாயிடம் விரைந்தாள் கனகா.

"உன் அப்பா ஊருக்குப் போயிருக்காரு இல்ல? என்னை நினைச்சிருப்பாரு. அதான் புரையேறி இருக்கு!" என்றாள் பத்மா.

"ஏம்மா, அப்பா வேற ஊர்ல இருந்துக்கிட்டு உன்னை நினைச்சா, உனக்குப் புரையேறுமா?" என்றாள் கனகா, கேலியாக.

"வெளியூர் போனால்தான்னு இல்ல, அவர் ஊர்ல இருக்கறப்ப, ஆஃபீஸ்ல என்னை நினைச்சாக் கூட எனக்குப் புரையேறும்!"

"சரி. அப்பா உன்னை நினைக்கறப்ப நீ சாப்பிட்டுக்கிட்டிருந்தா, உனக்குப் புரையேறும். மத்த நேரங்கள்ள நினைச்சா?"

"தும்மல் வரும்!" என்றாள் பத்மா.

கனகாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

"என்னடி சிரிக்கற? உனக்கும் கல்யாணம் ஆகி, உன் புருஷன் உன்னை நினைக்கறப்ப, உனக்குத் தும்மல் வரும். அப்போதான் உனக்கு இது புரியும்!" என்றாள் பத்மா.

'கல்யாணம் ஆகாவிட்டால் என்ன? எனக்கு ஒரு காதலன் இருக்கிறானே! அவன் என்னை நினைக்கும்போது, எனக்குத் தும்மல் வருமா?'

அதற்குப் பிறகு, தனக்கு எப்போது தும்மல் வருகிறது என்று கவனிக்க ஆரம்பித்தாள் கனகா.

ஒவ்வொரு முறை தும்மல் வந்தபோதும், தன் காதலன் சுரேஷ் தன்னை நினைக்கிறான் என்ற உணர்வில் கனகாவுக்கு மனதில் மகிழ்ச்சி பொங்கியது.

'என்ன இது? அம்மா சொன்னபோது, இது என்ன முட்டாள்தனம் என்று நினைத்து எனக்குச் சிரிப்பு வந்தது. இப்போது நானும் இந்த நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு விட்டேனே!' என்ற சிந்தனை ஏற்பட்டாலும், 'நம்பிக்கை சரியோ, தவறோ, அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறதே, அது போதும்!' என்று நினைத்துக் கொண்டாள் கனகா.

தும்மல் வரும் உணர்வு வந்ததுமே, கனகாவின் மனதில் மகிழ்ச்சி ததும்பத் துவங்கியது. 'சுரேஷ் என்னை நினைக்கிறான்!'

ஆனால், தும்மல் வருவது போல் தோற்றமளித்து விட்டு, வராமலே இருந்து விட்டது!

'இது என்ன? ஏன் வந்த தும்மல் வராமலேயே அடங்கி விட்டது? ஒருவேளை சுரேஷ் என்னை நினைக்கத் துவங்கி, வேறு ஏதோ சிந்தனை வந்ததால். என்னை நினைக்காமலே இருந்து விட்டானோ?' என்று நினைத்துப் பார்த்தபோது, கனகாவுக்கு ஏமாற்றமாக இருந்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
குறள் 1203
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

பொருள்:
தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...