Thursday, June 22, 2023

1204. எந்தன் நெஞ்சில் நீங்காத...

தமயந்தி தன் தோழி திலகாவின் வீட்டுக்குச் சென்றபோது, அங்கிருந்த ஒரு படத்தைப் பார்த்தாள்.

அதில். அனுமார் தன் மார்பைப் பிளந்து காட்ட, அவர் மார்பில் ராமரும், சீதையும் இருந்தனர்.

"புதுசா வாங்கினியா?" என்றாள் தமயந்தி.

"ஆமாம். நான் ராமரோட பக்தையாச்சே!" என்றாள் திலகா.

"அப்ப, ராமர் படத்தைன்னா வாங்கி இருக்கணும்? உன்னோட படத்தை வாங்கி இருக்கே!"

"அடிச்சேன்னா!" என்று விளையாட்டாகக் கையை ஓங்கிய திலகா, "இந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நம் மனசில ஒத்தர் இருக்கார்ங்கறதை நம்மாலயும் இப்படித் திறந்து காட்ட முடிஞ்சா, நல்லா இருக்கும் இல்ல?" என்றாள்.

"ஓ, நீ அப்படி வரியா? நீ உன் மனசில எப்பவும் உன் காதலன் சுந்தரைத்தான் நினைச்சுக்கிட்டிருக்கேங்கறதை அவர் நம்ப மாட்டாரா? நீ இதயத்தைத் திறந்து காட்டினாத்தான் நம்புவாரா?" 

"உனக்குக் காதல் வந்தாதான் இது புரியும்!"

"வேண்டவே வேண்டாம். என்னால நெஞ்சத்தைக் கிழிச்செல்லாம் காட்ட முடியாதும்மா!" என்ற தமயந்தி, "இந்தப் படத்தைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒண்ணு தோணும்" என்றாள், தொடர்ந்து.

"என்ன தோணும்?"

"நீ ராமர் பக்தையாச்சே! கோவிச்சுக்க மாட்டியே?"

"என்னடி, ஏதாவது தப்பா சொல்லப் போறியா?" என்றாள் திலகா.

"இல்லை. அனுமார் தன்னோட நெஞ்சைக் கிழிச்சு, அதில ராமர் இருக்கார்னு காட்டி இருக்காரே, ராமர் எப்பவாவது தன் நெஞ்சைக் கிழிச்சு, அதில அனுமார் இருக்கார்னு காட்டி இருக்காரா?"

திலகா மௌனமாக இருந்தாள்.

"என்னடி? கோவிச்சுக்கிட்டு, என்னைத் திட்டுவேன்னு நினைச்சேன். பேசாம இருக்க. ரொம்பக் கோபமா?" என்றாள் தமயந்தி, பாதி விளையாட்டாகவும், பாதி உண்மையாகவும்.

'என் மனசில எப்பவும் சுந்தர் இருக்கான். அது மாதிரி சுந்தர் மனசில எப்பவும் நான் இருப்பேனா?' என்ற சிந்தனையை தமயந்தியின் கேள்வி, திலகாவின் மனதில் ஏற்படுத்தி விட்டதை தமயந்தி உணரவில்லை.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
குறள் 1204
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.

பொருள்:
எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! (அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...