"ஆறு மாசமா என்னோட காதலை அவருக்கு நான் எப்படியெல்லாமோ வெளிப்படுத்திட்டேன். ஆனா, அவ தன் மனசில எனக்கு இடம் கொடுக்க மாட்டேங்கறாரு. நாம ஆசைப்படற விஷயம் கிடைக்கலேன்னா, அதை விட்டுடணும்னு நீ சுலபமா சொல்லிட்ட!" என்றாள் அருணா.
பூங்கொடி தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
"நீ சொன்னபடி செய்யறது சுலபம் இல்லேன்னு நான் சொன்னா, அதுக்கு நீ ஏன் என் மேல கோவிச்சுக்கிட்டு உன் முகத்தைத் திருப்பிக்கற?" என்றபடியே, தோழியின் முகத்தைத் தனக்கு நேரே திருப்பிய அருணா, தோழியின் கண்களில் பெருகி வழிந்து கொண்டிருந்த கண்ணீரைக் கண்டு திடுக்கிட்டு, "நீ ஏண்டி அழற?" என்றாள்.
"நான் சுலபமா சொல்லல. என் அனுபவத்தை வச்சுத்தான் சொல்றேன். நானும் ஒத்தரைக் காதலிச்சு, அவர் என் காதலை ஏத்துக்காததால, வேற வழியில்லாம, என் முயற்சிகளைக் கைவிட்டவதான். அதானாலதான் சொன்னேன், ஆசைப்படற விஷயம் நமக்குக் கிடைக்கலேன்னா, அதை விட்டுடணும்னு!" என்றாள் பூங்கொடி, கண்ணீரைத் துடைத்தபடி.
"அடிப்பாவி! எங்கிட்ட கூட சொல்லாம இருந்துட்டியே! அது சரி. அவர் மேல ஆசையை விட்டுட்டேன்னா, ஏன் உன் கண்ல கண்ணீர் வருது?"
"ஆசையை விட்டேன்னு எங்கே சொன்னேன்? அவர்கிட்ட என் காதலைத் தெரிவிக்கிற முயற்சிகளை விட்டுட்டேன், அவ்வளவுதான். அவர் உருவம் என் நெஞ்சிலே இருந்துக்கிட்டு, என்னை வாட்டிக்கிட்டேதானே இருக்கு?"
"ஏண்டி, உன் காதலை ஏத்துக்காதவரை உன் மனசில வச்சுக்கிட்டிருக்கியே, உனக்கு வெக்கமா இல்லை?" என்றாள் அருணா.
"நான் ஏன் வெட்கப்படணும். என்னை அவர் தன்னோட இதயத்துக்குள்ள விடாம வெளியே நிறுத்தி வச்சுக்கிட்டு, அவர் மட்டும் என் நெஞ்சுக்குள்ள வந்து உக்காந்திருக்கறதுக்கு அவர்தானே வெட்கப்படணும்?" என்றாள் பூங்கொடி, கோபத்துடன்.
நினைந்தவர் புலம்பல்
பொருள்:
தம்முடைய நெஞ்சில் எம்மை வர விடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வருவதைப் பற்றி நாண மாட்டாரோ?
No comments:
Post a Comment