Monday, June 12, 2023

1197. மன்மதன் அம்பு!

"காமன் பண்டிகை. ராத்திரி முழுக்க நடக்குமாம். வாடி, போயிட்டு வரலாம்!" என்று அழைத்தாள் வள்ளி.

"ராத்திரி முழுக்கவா? எப்படியும் ராத்திரி முழுக்க நான் தூங்கப் போறதில்ல. அங்கே போய்தான் உக்காந்துட்டு வரேனே!" என்று  கூறியபடியே வள்ளியுடன் கிளம்பினாள் மீனாட்சி.

இரவு முழுவதும் காமன் பண்டிகை நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டுத் தோழிகள் இருவரும் விடிகாலையில் விடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

"பல நாள் தூங்காத அலுப்போ என்னவோ தெரியலை. விழாவைப் பாக்காம தூங்கி வழிச்சுக்கிட்டு இருந்த. 'என்ன இவ சாமி ஆடற மாதிரி தலையை ஆட்டிக்கிட்டே இருக்கா!' ன்னு பக்கத்தில உக்காந்திருந்தவங்கல்லாம் கேலி செஞ்சாங்க!" என்றாள் வள்ளி.

"நான் உண்மையாகவே சாமி ஆடிக்கிட்டுத்தான் இருந்தேன். ஒத்தர் சாமி ஆடறப்ப அவங்க மேல சாமி வந்து பேசும்னு சொல்லுவாங்க. ஆனா நான்  சாமிகிட்ட பேசிக்கிட்டிருந்தேன். அவ்வளவுதான் வித்தியாசம்!" என்றாள் மீனாட்சி.

"சாமிகிட்ட பேசினியா? எந்த சாமிகிட்ட, என்ன பேசின?" என்றாள் வள்ளி கேலிச் சிரிப்புடன்.

"காமன் பண்டிகைன்னா என்ன சொல்லு பாக்கலாம்!"

"ஏண்டி, நீ நல்லாத் தூங்கிட்டு எங்கிட்ட கதை கேட்டு சமாளிக்கறியா? காமன்னா யாரு? மன்மதன்! மன்மதன்கிட்ட ஒரு வில் இருக்கும். அதைக் கரும்பு வில்னு சொல்லுவாங்க. அந்த வில்லிலேந்து அவன் யார் மேலயாவது அம்பை விட்டா அவங்க காதல்ல ஈடுபட்டுடுவாங்க. 'மன்மதன் அம்பு' ன்னு கமல் நடிச்ச ஒரு படம் கூட வந்திருக்கே! காமன் கணைன்னு இலக்கியங்கள்ள கூட வரும். 

"அந்த காமன் ஒரு  தடவவை சிவபெருமான் மேலேயே அம்பை விட்டுட்டான். அவருக்குக் கோபம் வந்து தன் நெற்றிக் கண்ணால காமனை அதாவது மன்மதனை எரிச்சுட்டாரு. அப்புறம் மன்மதனோட மனைவி ரதி கேட்டுக்கிட்டப்பறம் காமனை உயிர்ப்பிச்சாரு. 

"இந்தக் கதையைத்தான் ராத்திரி பூரா தெருவில ஊர்வலம் போயும், நெருப்பு மூட்டியும் நடிச்சுக் காட்டினாங்க. நீதான் தூங்கி வழிஞ்சிக்கிட்டிருந்தியே, இல்லை, சாமி ஆடிக்கிட்டிருந்தியே, உனக்கு எப்படி கதை புரிஞ்சிருக்கும்?"

"புரிஞ்சதனாலதாண்டி கண்ணை மூடிக்கிட்டு அந்த காமன்கிட்ட வேண்டிக்கிட்டிருந்தேன்!" என்றாள் மீனாட்சி.

"என்ன வேண்டிக்கிட்டிருந்த?" என்றாள் வள்ளி.

"காமதேவனே! கடவுள்கிட்ட கூட உன் வேலையைக் காட்டற. ஆனா ஏன் என் காதலன் மேல உன் அம்பை வீச மாட்டேங்கற? என்னோட காதலைக் கண்டுக்காம அவன் அலட்சியமா இருக்கறதால, என்னைக் காதல் நோய் பிடிச்சு வாட்டறதும், என் மேனியில பசலை படறதும் உனக்குத் தெரியலியா?" என்று மீனாட்சி கூறும்போதே அவள் கண்களில் நீர் படர்ந்தது.

"அதான் காமன் பண்டிகைக்கு வந்து காமன்கிட்ட வேண்டிக்கிட்டிருக்கியே, காமன் நிச்சயமா உன் வேண்டுதலை நிறைவேத்துவான்!" என்று கூறி தோழியின் கைகளை ஆதரவுடன் பற்றிக் கொண்டாள் வள்ளி.

 காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
 (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

குறள் 1197
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்

பொருள்:
காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ள மாட்டான் போலும்!

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...