Saturday, June 10, 2023

1196. கவிதாவின் மனச்சுமை

 தெருவில் காவடி தூக்கிச் சென்றவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் கவிதாவும் அவள் தோழி யாமினியும்.

"காவடி ரொம்ப எடை இருக்கும் இல்ல? எப்படி அதைத் தோளிலே சுமந்துக்கிட்டு நடக்கறாங்க? சில பேரு ஆடிக்கிட்டே வேற நடக்கறாங்க!" என்றாள் கவிதா.

"காவடியோட எடை ரெண்டு பக்கமும் சமமா இருக்கும். மையப்பகுதியை தோளிலே வச்சுக்கிட்டிருக்கறதால, எடையோட அழுத்தம் ரெண்டு பக்கமும் சமாமாப் பரவி இருக்கும். நாம கடையில போய் பொருட்கள் வாங்கிக்கிட்டு வரச்சே, எல்லாப் பொருட்களையும் ஒரே பையில போட்டுத் தூக்கிக்கிட்டு வரதை விட, பொருட்களை ரெண்டு பையில போட்டு ரெண்டு கையிலேயும் பையோட நடந்தா எடையோட அழுத்தம் குறைவா இருக்கும் இல்ல? அது மாதிரி." என்று விளக்கினாள் யாமினி.

கவிதாவின் பார்வை காவடி சுமந்து நடந்து கொண்டிருந்தவர்களை விட்டு அகலவில்லை.

"என்னடி, அங்கேயே பாத்துக்கிட்டிருக்கே?" என்ற யாமினி, காவடி சுமந்து வருபவர்களை உற்றுப் பார்த்து விட்டு, "ஓ, உன்னோட ஆளும் காவடி தூக்கிக்கிட்டு  வராறா? நான் கவனிக்கலையே!" என்றாள்.

'என்னோட ஆளுன்னு நான்தான் நினைச்சுக்கிட்டிருக்கேன். ஆனா அவரு இன்னும் என்னோட காதலை ஏத்துக்கலையே! அப்படி ஏத்துக்கிட்டா எனக்கு மனச்சுமை இல்லாம இருக்கும். ஒருபக்கக் காதலை மனசில சுமந்துக்கிட்டு இருக்கறது எவ்வளவு பெரிய சுமை தெரியுமா?' என்று மனதுக்குள் நினைத்துஃ கொண்டாள் கவிதா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
 (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

குறள் 1196
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.

பொருள்:
காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.


அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...