"போதும்டி, உன் மாமியார் கொடுமைப் புலம்பல்! தினமும் கேட்டு அலுத்துப் போச்சு. வேற ஏதாவது பேசுவோம். அங்கே தூண் பக்கத்தில நிக்கறாளே ஒரு பொண்ணு, அவ தினமும் கோவிலுக்கு வரா போலருக்கே! உனக்கு அவளைத் தெரியுமா?"
"தெரியாம என்ன? நம்ம குமுதா! பாவம், ரொம்ப நல்ல பொண்ணு!"
"ஏன் பாவம்கற? நல்லவளா இருக்கறது பாவமா என்ன?"
"நான் பாவம்னு சொன்னது அவளோட பரிதாப நிலைமைக்காக. புருஷன் மேல அவ்வளவு அன்பா இருக்கா. அவ தினமும் கோவிலுக்கு வரது கூடத் தன் புருஷனுக்காக வேண்டிக்கறதுக்காகத்தான் இருக்கும்."
"பரிதாப நிலைமைன்னு சொன்னியே?"
"தன் புருஷன் மேல அவ உயிரையே வச்சிருக்கா. ஆனா, அவன் அவளைத் திரும்பியே பாக்க மாட்டேங்கறான்!"
"ஏன், கழுத்து வலியா?"
"அட போடி, இவ ஒத்தி! நான் அவளோட கஷ்டத்தைப் பத்தி சொல்லிக்கிட்டிருக்கச்சே, பொருத்தமில்லாம ஜோக் அடிக்கறா!"
"சாரி. சொல்லு, அவ புருஷன் ஏன் அவளைத் திரும்பிப் பாக்க மாட்டேங்கறாரு?"
"அவனுக்கு அவளைப் பிடிக்கல!"
"ஏன் பிடிக்கல? அழகா இருக்கா. புருஷன் மேல உயிரையே வச்சிருக்கான்னு சொல்ற. அப்புறம் ஏன் அவருக்கு அவளைப் பிடிக்கலையாம்?"
"அவன் வேற ஒரு பெண்ணைக் காதலிச்சான். ஆனா, அவன் வீட்டில ஒத்துக்கல. அவங்க வற்புறுத்தலுக்காகத்தான் குமுதாவைக் கட்டிக்கிட்டான். ஆனா, பழைய காதலை மறக்க முடியததாலயோ என்னவோ, குமுதாகிட்ட கொஞ்சம் கூட அன்பு காட்ட மாட்டேங்கறான்!"
"இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?"
"குமுதா எனக்குத் தெரிஞ்ச பொண்ணுதான். அவ பல தடவை இதையெல்லாம் எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டு அழுதிருக்கா."
"அவளுக்குக் கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆச்சு?"
"ஒரு வுருஷத்துக்கு மேல ஆகியிருக்கும்!"
"உன் மாமியாரைக் கொடுமையானவங்கன்னு நீ அடிக்கடி சொல்ற. ஆனா, அவங்க கூட குமுதாவை விடக் கொடுமையானவங்களா இருக்க மாட்டாங்கன்னு நினைக்கறேன்."
"என்னடி சொல்ற?"
"இந்த மாதிரி நிலையில இருந்தா, நான் உயிரையே விட்டிருப்பேன். ஆனா, குமுதா இன்னும் உயிரோட இருக்காளே, அதைச் சொல்றேன். நீ அவளைப் பாவம்னு சொன்னது சரிதான்!"
கற்பியல்
தனிப்படர் மிகுதி (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)
பொருள்:
தன்னால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு யாரும் இல்லை.
No comments:
Post a Comment