Saturday, June 17, 2023

1199. இந்திர ஜாலம்!

விமான நிலையத்தில் விஜயாவும் அவள் அம்மாவும் காத்திருந்தபோது பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணுடன் விஜயா பேச்சுக் கொடுத்தபோது வந்தனா என்ற அந்தப் பெண் தான் மும்பையைச் சேர்ந்தவள் என்றும் சென்னையில் ஒரு பயிற்சிக்காக வந்து விட்டுத் திரும்பப் போவதாகவும் கூறினாள்.

"என்ன பயிற்சி?" என்றாள் விஜயா.

"மார்க்கெடிங்" என்றாள் வந்தனா.

"ஏன் மும்பையிலேயே நிறைய பயிற்சி கிடைக்குமே! ஏன் சென்னைக்கு வந்தீங்க? கம்பெனி ஸ்பான்ஸரா?"

"கம்பெனி ஸ்பான்ஸராவது! எனக்கு இன்னும் வேலையே கிடைக்கல. இந்தப் பயிற்சியில சேந்தா வேலை கிடைக்குங்கறதாலதான் என் சொந்தப் பணத்தில இந்தப் பயிற்சிக்கு வந்துட்டுப் போறேன்!"

விஜயாவின் அம்மா ஏதோ சைகை கொடுப்பது போல் விஜயாவின் காலை அழுத்தினாள். விஜயா அதைப் பொருட்படுத்தாமல், "யார் நடத்தற பயிற்சி அது?" என்றாள் வந்தனாவிடம்.

"இந்திரகுமார்னு ஒத்தர் நடத்தறாரு. சென்னையில அவர் ரொம்பப் பிரபலமாச்சே! நீங்க கூட கேள்விப்பட்டிருக்கலாம்."

"கேள்விப்பட்டிருக்கேன். ஆனா அவர் பயிற்சி சுமார்தான்னு சில பேரு சொன்னாங்களே!"

"தப்பா சொல்லி இருப்பாங்க. இல்லேன்னா யாராவது பொறைமையால அப்படிச் சொல்லி இருப்பாங்க. எனக்குத் தெரிஞ்சவங்க நாலைஞ்சு பேருக்கு இந்தப் பயிற்சி முடிச்சப்புறம் நல்ல வேலை கிடைச்சிருக்கு. அதனாலதான் நான் இதில சேர்ந்தேன்!" என்றாள் வந்தனா.

"எத்தனை நாள் பயிற்சி?"

"ரெண்டு வாரம்."

"மார்க்கெடிங் மானேஜ்மென்ட் கோர்ஸ்னா கல்லூரியில ரெண்டு வருஷம் படிக்கணும். ரெண்டு வாரப் பயிற்சியில என்ன சொல்லிக் கொடுக்க முடியும்?"

"இது படிப்பு இல்லை, பயிற்சி. மார்க்கெடிங் பயிற்சின்னு சொன்னாலும் இது ஒருவிதத்தில நம்மையே மாற்றக் கூடிய பயிற்சி."

"பர்சனாலிடி டெவலப்மென்ட் மாதிரியா?"

"அது மாதிரி. ஆனா அதுக்கும் மேல. சுருக்கமா சொல்றதுன்னா இந்தப் பயிற்சிக்கப்புறம் நம்மால நம்மையே மார்க்கெடிங் செய்ய முடியும்! பயிற்சியாளர் இந்திரகுமார் நமக்குள்ள ஒரு மாஜிக்கையே உண்டு பண்ணிடுவாரு. அவர் செய்யற மாயாஜாலத்தை இந்திரஜாலம்னு சொல்லலாம்! அவரை மாதிரி ஒரு பர்சனாலிடியை நான் பாத்ததே இல்லை. பயிற்சி முடிஞ்சப்புறம் எனக்குள்ள ஏற்பட்ட மாறுதலை என்னால உணர முடியுது. இப்பவே ஒரு நல்ல வேலையில சேந்துட்ட மாதிரி உணரறேன்!"

சில நிமிடங்களில் வந்தானாவின் விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு வந்ததால் அவள் விஜயாவிடம் விடைபெற்று எழுந்து சென்றாள்.

வந்தனா சென்றதும், விஜயாவின் அம்மா, "ஏண்டி! கட்டின பெண்டாட்டியைக் கைவிட்டுட்டு இன்னொரு பெண்ணோட வாழ்ந்துக்கிட்டிருக்கறவன் அவன். அவனைப் பத்தித் தூண்டித் தூண்டிக் கேக்கற? இந்திரஜாலமாம்! இந்திரன் அகலிகை மேல ஆசைப்பட்ட மாதிரி இன்னொரு பெண்கிட்ட ஆசை வச்சவன்னு வேணும்னா சொல்லலாம். எனக்குப் பத்திக்கிட்டு வருது!" என்றாள் விஜயாவிடம் ஆற்றாமையுடன்.

"அவர் என்னை விட்டுப் பிரிஞ்சுட்டாரு. நாங்க இனிமே நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழப்போறதில்ல. ஆனாலும் அவரை யாராவது புகழ்ந்து பேசறதைக் கேட்டா எனக்கு சந்தோஷமா இருக்கும்மா. அதனாலதான் அந்தப் பொண்ணு அவரைப் புகழ்ந்து சொன்னதை ஆவலாக் கேட்டேன்!" என்றாள் விஜயா பெருமூச்சுடன்.

 காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
 (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

குறள் 1199
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.

பொருள்:
என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்கு இனியதாகும்.

.குறள் 1200
குறள் 1198

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...