அது காதல் என்பது அடுத்த சந்திப்பிலேயே அவளுக்குப் புரிந்து விட்டது.
இருவரும் ஒரே கல்லூரியில் படித்ததால், அடிக்கடி சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது.
வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம், மலர்விழி முகிலிடம் தன் காதலை வெளிப்படுத்தத் தவறவில்லை - முதலில் மறைமுகமாக, பிறகு மறைமுகமான முயற்சிகள் பலன் தரவில்லை என்றதும், நேரடியாகவே.
ஆனால், முகில் வெறுமனே சிரித்ததைத் தவிர, வேறு பதில் சொல்லவில்லை.
கல்லூரியில் மற்ற பெண்களிடம் பழகுவது போல்தான் மலர்விழியிடம் பழகினான் முகில். அவள் மீது காதல் இருப்பதற்கான எந்த ஒரு அடையாளத்தையும் அவன் வெளிப்படுத்தவில்லை.
நான்கைந்து முறை முகிலிடம் தன் காதலை வெளிப்படுத்திய பிறகும், அவனிடமிருந்து சாதகமான பதில் வராததால், மலர்விழிக்கு மனச்சோர்வு ஏற்பட்டு விட்டது. தன் முயற்சியைத் தொடர வேண்டுமா என்று அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.
மலர்விழியின் தோழி வசந்தி அதிகம் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ளவள். புத்தகத்தில் ஏதாவது சுவையானதைப் படித்தால், அதை அவள் மலர்விழியிடம் பகிர்ந்து கொள்வாள்.
"மலர்! இதைப் பாரேன்! கனூட்னு ஒரு அரசன் இருந்தானாம். எவ்வளவு பெரிய அரசானா இருந்தாலும், அவனால இயற்கையைக் கட்டுப்படுத்த முடியாதுன்னு காட்டறதுக்காகத் தன் அமைச்சர்கள், அதிகாரிகளோட கடற்கரையில போய் நின்னுக்கிட்டு, கரையை நோக்கி வந்துக்கிட்டிருந்த ஒரு பெரிய அலையைப் பாத்து, 'ஏ அலையே! அரசனான நான் உத்தரவு போடறேன். நீ அங்கேயே நின்னுடு. கரைக்கு வந்து என் காலை நனைக்காதே'ன்னு சொன்னானாம். சுவாரசியமா இல்லை?" என்றாள் வசந்தி, சிரித்தபடி.
"அதை விட, கடல்லேந்து எல்லா நீரையும் இறைச்சுக் கடலையே தூர்த்திருக்கலாமே! அப்புறம், அலைகளே இல்லாம போயிருக்குமே!" என்றாள் மலர்விழி, எங்கோ பார்த்தபடி.
"என்னடி உளரற? கடலை எங்கேயாவது தூர்க்க முடியுமா?"
'முகிலோட மனசில என் மேல அன்பை உண்டாக்க முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கேனே, கடலைத் தூர்க்கறது அதை விட சுலபமாத்தான் இருக்கும்!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட மலர்விழி, "சும்மா சொன்னேன்" என்றாள், தோழியிடம்.
கற்பியல்
தனிப்படர் மிகுதி (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)
பொருள்:
நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.
No comments:
Post a Comment