Monday, June 19, 2023

1201. வேண்டாம் அந்த போதை!

"கள் குடிக்கிறதை விட்டுடு" என்று பொன்னம்மாள் எத்தனையோ முறை தன் மகன் தண்டபாணியிடம் கூறியும் அவன் தன் தாயின் பேச்சைக் கேட்கவில்லை.

"விட்டுடணும்னுதாம்மா பாக்கறேன். ஆனா என்னால முடியலியே!" என்றான் தண்டபாணி.

"ஏண்டா, கள்ளு குடிச்சா அந்த போதை கொஞ்ச நேரம் இருக்கப் போகுது. தெளிஞ்சப்புறம் எல்லாம் போயிடும். அந்தக் கொஞ்ச நேர போதைக்காகக் குடிக்கணுமா?"

"அதாம்மா பிரச்னை! ஒரு தடவை குடிச்சா போதை அப்படியே இருந்தா நல்லா இருக்கும். ஆனா போதை தெளிஞ்சுடறதனால மறுபடி குடிக்கணும்னு வெறி வருது. அதைக் கட்டுப்படுத்த முடியல. சாப்பிட்ட சில மணி நேரங்கள்ள பசி எடுத்து மறுபடி சாப்பிடற மாதிரி!"

"நல்லா வியாக்கியானம் பண்ணு. நான் சொன்னா கேக்க மாட்டே.. கல்யாணத்துக்கப்புறம் உன் பெண்டாட்டி சொன்னாலாவது கேக்கறியான்னு பாக்கலாம்!" என்றாள் பொன்னம்மாள்.

திருமணமாகிச் சில நாட்களில் தண்டபாணி கள் குடிப்பதை நிறுத்தி விட்டான்.

"நான் சொன்னேன் இல்ல? பெத்தவ சொன்னா கேக்க மாட்ட, பொண்டாட்டி சொன்னா கேப்ப! எப்படியோ, நீ குடியை நிறுத்தினது எனக்கு சந்தோஷம்தான்" என்றாள் பொன்னம்மாள்.

"குடியை நிறுத்தச் சொல்லி அவ சொல்லலம்மா. நீ இத்தனை நாளா சொல்லிக்கிட்டு இருக்கறதனாலதான் நிறுத்தினேன்!" என்றான் தண்டபாணி.

"பொய் சொல்லாதடா!" என்றாள் பொன்னம்மாள்.

'பொய்தான். திருமணத்துக்குப் பிறகு மனைவியுடன் ஏற்பட்ட காதல் இன்பம்தான் நான் குடியை விட்டதற்குக் காரணம். ஒருமுறை அனுபவித்த காதல் இன்பம் எப்போதும் மனதில் இனிமையாக நிலைத்து நிற்பதை அனுபவிப்பதால்தான், அருந்தும்போது மட்டுமே இன்பமளிக்கும் கள்ளின் போதை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டேன். இதை எப்படி என்னால் உனக்கு விளக்க முடியும்?' என்று நினைத்துக் கொண்டான் தண்டபாணி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
குறள் 1201
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது

பொருள்:
உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...