Monday, June 5, 2023

1194. "கொடுத்து வைத்தவள்"

திருமணம் ஆனதிலிருந்தே பலரும் சுகன்யாவிடம் அடிக்கடி கூறும் சொற்கள்: "நீ கொடுத்து வச்சவடி."

எடுப்பான தோற்றம், நல்ல வேலை, வசதியான பெற்றோருக்கு ஒரே பையன் ஆகிய தகுதிகளுடன் சதீஷ் அவளுக்கு மணமகனாக அமைந்தபோது 'ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த, அதிகம் படிக்காத, வேலைக்குப் போகாத எனக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை எப்படிக் கிடைத்தார்? அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ள எப்படிச் சம்மதித்தார்? நான் என்ன அதிர்ஷ்டம் செய்திருக்கிறேனோ!' என்று மலைத்தாள் சுகன்யா.

எதிர்பார்த்தது போலவே சுகபோக வாழ்க்கை. பெரிய வீடு, வீட்டில் சமையல் உட்பட எல்லா வேலைகளுக்கும் ஆட்கள், சுகன்யா எங்காவது போக வேண்டுமென்றால் அவளுக்காக டிரைவருடன்  தயாராக இருக்கும் கார், அதற்கும் மேல் அவளிடம் அன்பு காட்டிய அவள் மாமியார் எல்லாம் அவள் நினைத்துப் பார்க்காத அளவில் அமைந்து விட்டன.

திருமணத்துக்குப் பிறகு சுகன்யா தன் பிறந்த வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் அவளுடைய அம்மா, அப்பா, தங்கை, அண்ணன் ஆகிய அனைவரும், "இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்!" என்று கூறுவார்கள்.

உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் ஆகியோரை அவள் சந்திக்க நேர்ந்தபோதெல்லாம் அவர்களும் இதையேதான் சொன்னார்கள்.

"ஏண்டி, கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சு, இன்னும் உனக்குக் குழந்தை உண்டாகலியே! நீயும் உன் புருஷனும் ஒரு நல்ல டாக்டரைப் பாருங்களேன்!" என்றாள் அம்மா.

"அதெல்லாம் வேண்டாம்மா!" என்றபடியே முகத்தைத் திருப்பிக் கொண்டாள் சுகன்யா - தன் கண்களில் பெருக்கெடுக்கும் கண்ணீரை அம்மா பார்த்து விடக் கூடாதே என்று.

முதலிரவன்று தனக்கு ஒரு நல்ல கணவன் கிடைத்து விட்டான் என்ற களிப்பில் இருந்த தன்னிடம், "இங்கே பாரு சுகன்யா! நான் உன்னை விரும்பிக் கல்யாணம் செஞ்சுக்கல. நான் ஒரு பெண்ணைக் காதலிச்சேன். அவ வேற ஜாதிங்கறதால அவளை நான் கல்யாணம் செஞ்சுக்க என் அம்மா சம்மதிக்கல. அவங்க வற்புறுத்தலாலதான் நான் உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். வெளியுலகத்துக்கு மட்டும்தான் நாம் கணவன் மனைவி! மத்தபடி நம்ம ரெண்டு பேருக்கு நடுவில எந்த உறவும் கிடையாது!" என்று சதீஷ் கூறி விட்டதையும், அப்போதிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மனதில் மகிழ்ச்சி இல்லாமல், 'இதுதான் என் விதி போலும்'  என்ற விரக்தியில் வாழ்ந்து கொண்டிருப்பதையும் தன் அம்மாவிடம் சொல்லி அவளுக்கு வருத்தம் ஏற்படுத்த விரும்பவில்லை சுகன்யா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
 (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

குறள் 1194
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.

பொருள்:
தாம் விரும்பும் கணவனால் விரும்பப்படாத நிலையில் மனைவி இருந்தால், அவள் தீவினை வசப்பட்டவளே.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...