Friday, June 2, 2023

1193. செங்கமலத்தின் செருக்கு!

"செங்கமலத்தோட புருஷன் வியாபாரத்துக்கு வெளியூர் போயிருக்காரு இல்ல?"

"ஆமாம். அதுக்கு என்ன?"

"ஆனா அவளைப் பாத்தா கணவனைப் பிரிஞ்ச வருத்தம் கொஞ்சம் கூட இருக்கறவ மாதிரி தெரியலையே!"

"இல்லையே! வருத்தமாத்தான் இருக்கா. சரியா சாப்பிடறதில்ல, தூங்கறதில்லன்னு அவ அம்மா எங்கம்மாகிட்ட வருத்தப்பட்டு சொன்னாங்களே!"

"அவ அம்மா சொல்றது இருக்கட்டும். நீ அவகிட்ட பேசிப் பாத்திருக்கியா?"

"இல்லை. அவளை எனக்கு அவ்வளவு பழக்கம் கிடையாது. என் அம்மாவுக்கு அவங்க அம்மாவைத் தெரியும். ஒரு தடவை கோவில்ல என் அம்மாகிட்ட பேசினதைக் கேட்டதை வச்சு சொல்றேன்."

"அதானே பாத்தேன்.  நீ செங்கமலத்துக்கிட்ட பேசி இருந்தா உனக்குத் தெரிஞ்சிருக்கும்!"

"நீ பேசினியா? அவ என்ன சொன்னா?"

"ஒரு ஆறுதலுக்காக 'பாவம் உன் புருஷன் உன்னைத் தனியா விட்டுட்டுப் போயிட்டாரே!'ன்னு சொன்னேன். அதுக்கு அவ 'போனா என்ன? ரெண்டு மூணு மாசத்தில வந்துடப் போறாரு. அவரு வியாபாரத்துக்குத்தானே போயிருக்காரு! வீட்டில பொண்டாட்டி இருக்கறப்ப இன்னொரு காதலி வீட்டுக்கா போயிருக்காரு?' அப்படின்னு பதில் சொன்னா. என் புருஷனுக்கு இன்னொரு காதலி இருக்கறதை சொல்லிக் காட்டறாளாம்! எவ்வளவு திமிர் பாத்தியா!"

"உன் புருஷனும், என் புருஷனும் ஊர்ல இருக்கறப்பவும் நம்மகிட்ட அன்பா இருக்க மாட்டாங்க. அவங்க வெளியூர் போயிட்டு வந்தாலும் முதல்ல தங்க காதலி வீட்டுக்குத்தான் போவாங்க. செங்கமலத்தோட கணவனுக்கு அவ மேல அவ்வளவு அன்பு இருக்கு. அவளுக்கு ஏன் திமிர் இருக்காது?"

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
 (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

குறள் 1193
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.

பொருள்:
தாம் விரும்பும் கணவனால் விரும்பப்பட்ட பெண்ணுக்கே (எப்படியும் விரைவில் அவர் வருவார் என்ற உறுதியினால்) வாழ்வோம் என்னும் செருக்கு, பொருத்தமாக இருக்கும்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...