"எங்கே போயிட்டாரு? விசாரிச்சுப் பாத்தியா?" என்றாள் அவள் தோழி ராகினி.
"அவங்க வீட்டிலேயே கேட்டுட்டேன். அவங்களுக்கு எங்க காதலைப் பத்தித் தெரியுமே! நண்பர்களோட ஏதோ வெளிநாட்டுக்குப் போயிருக்காராம். எப்ப வருவார்னு அவங்களுக்கே தெரியாதுன்னு சொல்றாங்க!"
"எதுக்கு வெளிநாட்டுப் பயணம்?"
"அவர் அப்பா நிறையப் பணம் சம்பாதிச்சு வச்சிருக்காரு. அதை வச்சுக்கிட்டுக் கொஞ்ச நாள் எங்கேயாவது உல்லாசமாப் போகலாம்னு போயிருப்பார் போல இருக்கு!"
"சரி. அவர் வரப்ப வரட்டும். அதுக்காக நீ சாப்பிடாம, தூங்காம இருந்து உடம்பைக் கெடுத்துக்காதே!" என்றாள் ராகினி.
"சாப்பாடு பிடிக்காதததால, ஒழுங்கா சாப்பிடறது இல்லதான். ஆனா, தூங்காம இருக்க மாட்டேன்!" என்றாள் கார்த்திகா.
"ஆமாம். முழிச்சுக்கிட்டு இருக்கறப்ப எல்லாம் அவரையே நினைச்சுக்கிட்டிருக்கே. தூங்கும்போதாவது எல்லாத்தையும் மறந்துட்டு நிம்மதியா இருக்கலாம்."
"நான் தூங்கறது மறக்கறதுக்காக இல்லடி, நினைக்கறதுக்காக!" என்றாள் கார்த்திகா.
"என்னடி சொல்ற?" என்றாள் ராகினி.
"முழிச்சுக்கிட்டிருக்கறப்ப, அவர் நேரில வரலியே, என் மேலே அன்பு காட்டலியேன்னு வருத்தமாவும், ஏக்கமாவும் இருக்கும். ஆனா, தூங்கினா கனவு வரும். அந்தக் கனவில அவர் வருவாரு. எங்கிட்ட அன்பாப் பேசுவாரு. அதில கிடைக்கிற சந்தோஷத்தினாலதான் நான் உயிரோடயே இருக்கேன்!" என்றாள் கார்த்திகா.
கற்பியல்
கனவுநிலை உரைத்தல்
பொருள்:
நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.
No comments:
Post a Comment