Wednesday, July 5, 2023

1214. கன்னத்தில் விழுந்த அறை!

மீராவைத் தூக்கத்திலிருந்து எழுப்ப முயன்றாள் அவள் அம்மா காமாட்சி.

எவ்வளவோ கூப்பிட்டும் மீரா எழுந்திருக்காததால் அவளைப் பிடித்து உலுக்கினாள் காமாட்சி.

கண் விழித்து எழுந்த மீரா எதிர்பாராத விதமாக காமாட்சியின் கன்னத்தில் அறைந்து விட்டாள்.

அதிர்ச்சியடைந்த காமாட்சி கன்னத்தைப் பிடித்துக் கொண்டு, "என்னடி இது? நான் உன் அம்மா. இப்படியா என்னை அடிப்பே?" என்றாள் அதிர்ச்சியுடன்.

அப்போதுதான் கண்களைக் கசக்கிக் கொண்டு இயல்பு நிலைக்கு வந்த மீரா, தான் அறைந்த அம்மாவின் கன்னத்தை வருடி, "மன்னிச்சுக்கம்மா! நல்லா தூங்கிக்கிட்டிருப்ப என்னை உலுக்கி எழுப்பினதால என்னை அறியாம கோபம் வந்து அடிச்சுட்டேன்!" என்றாள்.

"நல்லா அடிப்பேடி!" என்ற காமாட்சி, "உன் புருஷன் உன் மேல கோவிச்சுக்கிட்டு உன்னை வீட்டை விட்டு அனுப்பினதிலேந்து நீ இப்படித்தான் இருக்கே. அவன் எப்ப கோபம் தணிஞ்சு உன்னை அழைச்சுக்கிட்டுப் போகப் போறானோ!" என்றாள் பெருமூச்சுடன்.

'நேரில எங்கிட்ட அன்பு செலுத்தாத மனுஷன் இன்னிக்குக் கனவில வந்து எங்கிட்ட அன்பு காட்டினாரு. என்னைத் தூக்கத்திலேந்து எழுப்பி அந்த சுகமான கனவைப் பாதியில கலைச்சுட்டியே! அந்த ஆத்திரத்திலதானே என்னை அறியாமலேயே உன்னை அறைஞ்சுட்டேன்!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் மீரா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவுநிலையுரைத்தல்
குறள் 1214
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.

பொருள்:
நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.

குறள் 1215 (விரைவில்)
அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...