முதலில் சற்றுத் தயங்கினாலும், பிறகு தாயுடன் சென்றாள் கிரிஜா.
சொற்பொழிவு முடிந்து வீட்டுக்கு வந்ததும், "ஆன்மீகச் சொற்பொழிவுன்னா, ஏதாவது புராணக் கதை சொல்லுவாரு, சுவாரசியமா இருக்கும்னு நினைச்சுக்கிட்டுப் போனா, வெறும் தத்துவத்தைப் பேசி, அலுப்புத் தட்டும்படி பண்ணிட்டாரு. உன்னை வேற அழைச்சுகிட்டுப் போனேனே!" என்றாள் லட்சுமி, சோர்வுடன்.
"ஏம்மா, நல்லாத்தானே சொன்னாரு?" என்றாள் கிரிஜா.
"என்னடி சொல்ற? அவர் சொன்ன தத்துவமெல்லாம் உனக்குப் புடிச்சிருந்ததா?" என்றாள் லட்சுமி, வியப்புடன்.
"புடிச்சுது, புடிக்கலேன்னு இல்லை. அவர் சொன்னதில இருந்த உண்மை புரிஞ்சுது."
"என்ன உண்மையைப் புரிஞ்சுக்கிட்டே?" என்றாள் லட்சுமி, கேலியாக.
"நிலையாமையைப் பத்திப் பேசினாரும்மா. நிலையாமைன்னா என்ன? எது நடந்தாலும், அது அந்தத் தருணத்தில மட்டும்தான் இருக்கும், அப்புறம் அது இருக்காதுன்னுதானே அர்த்தம்?"
"ஆமாம். இதில நீ என்ன புதுசாப் புரிஞ்சுக்கிட்ட?"
"என் புருஷன் என்னோட இருந்தப்ப, நான் சந்தோஷமா இருந்தேன். இப்ப அவர் என்னைப் பிரிஞ்சு, எங்கேயோ தொலைதூத்தில இருக்காரு. இப்ப அவர் என்னோட இல்லாதப்ப, அந்த சந்தோஷம் இல்லை. அது மாதிரி..."
"அது மாதிரி?"
"என் கனவில அவர் வரப்ப, சந்தோஷம் இருக்கு. ஆனா, கனவு முடிஞ்சு, கண் முழிச்சப்பறம், அந்த சந்தோஷம் இல்ல. அதாவது, அவர் என்னோட இருந்தப்ப எனக்கு இருந்த சந்தோஷம் அந்த சமயத்தில மட்டுமே இருந்த மாதிரி, கனவில அவர் வரப்ப கிடைக்கற சந்தோஷமும் கனவு காணும்போது மட்டும்தான் இருக்கு! இதைத்தானே அம்மா, வாழ்க்கையில நடக்கறது எல்லாமே நீர்க்குமிழி மாதிரி, அந்தச் சமயத்தில மட்டும்தான் இருக்கும்னு அந்தச் சொற்பொழிவாளர் சொன்னாரு?"
மகள் இதைப் புரிந்து சொல்கிறாளா, அல்லது விரக்தியில் சொல்கிறாளா என்று புரிந்து கொள்ளும் முயற்சியில் கிரிஜாவின் முகத்தை உற்றுப் பார்த்தாள் லட்சுமி.
கற்பியல்
கனவுநிலை உரைத்தல்
பொருள்:
முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.
No comments:
Post a Comment