"எங்கேம்மா அவரு?" என்றாள் வசந்தி.
"யாரு? உங்கப்பாவா? வெளியே போயிருக்காரு."
"நான் 'உன் அவரை'க் கேக்கலம்மா. 'என் அவரை'க் கேக்கறேன்."
"ஏண்டி, தூக்கத்திலேந்து முழிச்சுட்டியா, இல்லை தூக்கத்தில நடந்து வந்து கேக்கறியா? உன் புருஷன் வெளியூர் போய் மூணு மாசம் ஆச்சு. காலையில எழுந்து வந்து அவர் எங்கேன்னு கேக்கற?" என்றாள் ருக்மிணி, எரிச்சலுடன்.
"இப்ப இருந்தாரேம்மா! என்னோட இத்தனை நேரம் பேசினாரே அம்மா!"
"முதல்ல போய் முகத்தைக் கழுவிக்கிட்டு வாடி. தூக்கக் கலக்கம் கலையாம பேசற குழந்தை மாதிரி பேசிக்கிட்டு!"
கண்களைத் தேய்த்துக் கொண்ட வசந்தி, "கனவுதான் போல இருக்கு. ஆனா, நேரில நடக்கற மாதிரியே இருந்தது. எங்கிட்ட எவ்வளவு அன்பாப் பேசினாரு! இந்த நனவுங்கற ஒண்ணு இல்லாம இருந்தா, கனவிலேயே அவரோட ஆனந்தமாப் பேசிக்கிட்டிருப்பேன் இல்ல?" என்றாள், விரக்தியுடன்.
கற்பியல்
கனவுநிலை உரைத்தல்
பொருள்:
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பார்.
No comments:
Post a Comment