Friday, July 7, 2023

1217. அன்புள்ள மன்னவனே, ஆசையில் ஓரு கடிதம்!

"பரிவாதினி! நம்ம முத்துப்பாண்டி உன் புருஷன் இருக்கற ஊருக்குத்தான் போறானாம். உன் புருஷனுக்கு ஏதாவது ஓலை கொடுக்கறதா இருந்தா அவன்கிட்ட கொடுத்தனுப்பு!" என்றாள் அன்னமயில்.

"வீட்டுக்குத் திரும்பணுங்கற சிந்தனையே இல்லாம வெளியூரிலேயே உக்காந்திருக்கிற மனுஷனுக்கு நான் என்ன ஓலை அனுப்பறது?" என்றாள் பரிவாதினி வெறுப்புடன்.

"அப்படின்னா ஓலை அனுப்பப் போறதில்லையா?"

"இல்ல, இல்ல. ஒரு ஓலை எழுதிக் கொடுக்கறேன் நான் ஒருத்தி இங்கே இருக்கேன்னு அவருக்கு ஞாபகப்படுத்த வேண்டாமா?"

ஓலையையும், எழுத்தாணியையும் எடுத்துக் கொண்டு உட்கார்ந்து என்ன எழுதுவதென்று யோசித்தாள் பரிவாதினி.

இரண்டு மூன்று முறை எழுதி, அடித்து ஓலைகள் கிழிந்ததுதான் மிச்சம். என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.

அலுப்பில் கண் அயர்ந்து தூக்கம் வருவது போல் இருந்தது.

தூக்கம்!

ஓலையில் என்ன எழுதுவதென்று பரிவாதினிக்குத் தெரிந்து விட்டது!

உடனே புதிதாக ஒரு ஓலையை எடுத்து விறுவிறுவென்று எழுத ஆரம்பித்தாள்:

அன்புள்ளவரே!
எனக்கு தினமும் கனவு வருகிறது, கனவில் நீங்கள் வருகிறீர்கள். என்மீது அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் கனவு முடிந்ததும், 'இது கனவுதானா, அவர் உண்மையிலேயே வரவில்லையா?' என்ற உணர்வு எனக்கு அளிக்கும் ஏமாற்றத்தையும், மனவருத்தத்தையும் என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. எனவே நான் உங்களுக்கு வைக்கும் வேண்டுகோள் ஒன்றுதான். தயவு செய்து என் கனவில் வந்து என்னை வருத்தாதீர்கள். அடுத்த முறை நான் உங்களைச் சந்திப்பது நனவில் நிகழ்வதாக இருக்கட்டும்.

தாங்கள் தினமும் கனவில் வருவதால் வருந்தும்

பரிவாதினி!

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவுநிலையுரைத்தல்
குறள் 1217
நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது.

பொருள்:
நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?

குறள் 1218 (விரைவில்)
அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...