எப்போது உறங்கினாள் என்று அவளுக்குத் தெரியாது.
திடீரென்று ஒரு காட்சி தோன்றியது.
மேகவர்ணன் மேலே எங்கிருந்தோ இறங்கி வருகிறான். சாந்தினியின் அருகில் வருகிறான். அவள் தோள்களைப் பற்றுகிறான். பிறகு அவள் தோள்களின் மேல் சாய்ந்து கொள்கிறான்.
பிறகு...
சாந்தினிக்கு எங்கோ பறந்து செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டது.
அந்த உணர்வு எவ்வளவு நேரம் நீடித்ததென்று தெரியவில்லை, திடீரென்று தன் தோள்களை அழுத்திய சுமை இறங்கி விட்டாற்போல் இருந்தது.
எங்கே மேகவர்ணன்?
அவள் கண்களுக்குப் புலப்படவில்லை.
எங்காவது ஒளிந்து கொண்டிருப்பானோ என்று அவள் யோசித்தபோதே, அவள் கண்கள் திறந்து கொண்டன.
விருட்டென்று படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டாள் சாந்தினி.
இத்தனை நேரம் தன் தோள் மீது சாய்ந்து கொண்டிருந்த காதலன் எங்கே?
சுற்றுமுற்றும் பார்த்த சாந்தினி, திடீரென்று நினைவு வந்தவளாகத் தன் நெஞ்சில் கைவைத்துப் பார்த்தாள்.
உடனே அவள் முகம் மலர்ந்தது. மேகவர்ணன் எங்கேயும் போய் விடவில்லை. அவள் நெஞ்சுக்குள்தான் அமர்ந்திருக்கிறான்.
கூட வந்த குழந்தையைக் காணோமே என்று ஒரு கணம் பதைபதைத்த ஒரு தாய்க்கு, குழந்தை தனக்கு அருகிலேயே இருப்பதைக் கண்டதும் ஏற்படும் நிம்மதி சாந்தினிக்கு ஏற்பட்டது.
கற்பியல்
கனவுநிலை உரைத்தல்
பொருள்:
தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், நான் கண் விழித்ததும், என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்.
No comments:
Post a Comment