"இவங்கள்ளாம் என் தோழிகள். உன்னைப் பார்க்கணும்னு வந்திருக்காங்க!" என்றாள் புஷ்பவல்லி.
'என்னை எதற்குப் பார்க்கணும்?' என்பது போல் தோழியைப் பார்த்தாள் பரிமளா.
"அஞ்சாறு மாசமா நீ உன் கணவனைப் பிரிஞ்சிருந்தாலும், உன் பிரிவுத் துயரத்தை வெளிக்காட்டாம அமைதியா இருக்க. அதை இவங்ககிட்ட சொல்லி, 'நீங்க மட்டும் ஏன் இப்படித் துயரமா இருக்கீங்கன்னு?' கேட்டேன். அதான் உன்னைப் பாக்கணும்னு சொன்னாங்க. அழைச்சுக்கிட்டு வந்தேன்!" என்றாள் புஷ்பவல்லி.
பரிமளா மௌனமாக இருந்தாள்.
"உன் கணவனைப் பிரிஞ்ச வருத்தம் உனக்கு இல்லையா?" என்றாள் வந்திருந்தவர்களில் ஒருத்தி.
"பிரிஞ்சு இருக்கற வருத்தம் எல்லாருக்கும்தான் இருக்கும். எனக்கு மட்டும் எப்படி இல்லாம இருக்கும்?" என்றாள் பரிமளா.
"உன் பிரிவுத் துயரை நீ வெளியில காட்டிக்காம இருக்கறது பெரிய விஷயம்தான்!" என்றாள் மற்றொரு பெண்.
"பிரிவுத் துயர் இருக்குதான். ஆனா, அவரை அடிக்கடி சந்திக்கறதால, அது அந்த அளவுக்கு என்னை அழுத்தறதில்ல!"
"அடிக்கடி சந்திக்கறியா? எப்படி?" என்றாள் மற்றொரு பெண், வியப்புடன்.
"தினமும் என் கனவில அவர் வராறே! வந்து, என்கிட்ட அன்பாப் பேசறாரே! அந்த மகிழ்ச்சியான அனுபவத்தாலதான், பிரிவுத் துயரோட அழுத்தத்தை என்னால தாங்கிக்க முடியுது!" என்ற பரிமளா, "ஆமாம், உங்களுக்குக் கனவு வரதில்லையா, அல்லது கனவில உங்க காதலர் வரதில்லையா?" என்றாள் அந்தப் பெண்களைப் பார்த்து.
கற்பியல்
கனவு நிலை உரைத்தல்
பொருள்:
கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.
No comments:
Post a Comment