புலம்பிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள் செங்கமலம்.
"என்னம்மா ஆச்சு? என்ன பேசிக்கறாங்க?" என்றாள் கமலா.
"அது ஒண்ணுமில்லடி. உனக்கு அது தெரிய வேண்டாம்."
"எனக்குத் தெரிய வேண்டாம்னா, ஏன் எது காதுபடப் புலம்பிக்கிட்டே வந்தே? சொல்லும்மா!"
"புதுப் பொண்டாட்டியை விட்டுட்டு வெளியூர் போன புருஷன் இப்படியா மாசக்கணக்கா பொண்டாட்டியைப் பிரிஞ்சு இருப்பான், அவனுக்கு என்ன கல் மனசான்னு பேசிக்கறாங்க."
"அவ்வளவுதானே? நீ அவதூறாப் பேசறாங்கன்னதும், என்னவோ ஏதோன்னு நினைச்சேன்!"
"ஏன், இப்படிப் பேசறவங்க மேல உனக்குக் கோபம் வரலையா?"
"கோபம் வரலைம்மா. பரிதாபம்தான் வருது!"
"பரிதாபமா? எதுக்கு?"
"பின்னே? நான் என் புருஷனை தினம் கனவில பாத்துக்கிட்டு, அவரோட சந்தோஷமாப் பேசிக்கிட்டிருக்கேன். இது புரியாம, என்னைப் பிரிஞ்சு இருக்கார்னு இவங்க என் புருஷன் மேல குற்றம் சாட்டினா, இவங்க யாரும் தன்னோட புருஷனைப் பிரிஞ்சிருந்த காலத்தில, அவரை இவங்க கனவில பார்த்ததில்லேன்னுதானே அர்த்தம்? அந்தக் கொடுப்பினை கூட இல்லாதவங்களைப் பார்த்துப் பரிதாபப்படாம வேற என்ன செய்ய முடியும்?" என்றாள் கமலா.
கற்பியல்
கனவுநிலை உரைத்தல்
பொருள்:
என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?
No comments:
Post a Comment