Sunday, July 16, 2023

1221. இதுவல்ல மாலை!

 மாலைப் பொழுது என்றாலே கண்மணிக்குத் தனி மகிழ்ச்சிதான். 

கண்மணிக்கு மட்டுமல்ல, எல்லா இளம் பெண்களுக்கும்தான் - அதாவது காதலனுடன் சேர்ந்து வாழும் இளம் பெண்களுக்கு

மலர்ச் சோலைகளில் மலர்களுக்குப் போட்டியாகக் குழுமி இருக்கும் இளம் பெண்களும் அவர்களுடன் அன்புடன் உரையாடும் இளங்காளைகளும் என்று எத்தகைய களையுடன் இருக்கும் மாலைப் பொழுது!

மலர்ச்சோலைகள்தான் என்றில்லை, மரத்தோட்டங்ள், சாலை ஓரங்கள், நதிக்கரைகள், குளக்கரைகள், அல்லது விடுகளுக்குள்ளேயும் கூட உற்சாகத்தைக் கொண்டு வரும் பொழுதல்லவா மாலை!

என்னதான் நாள் முழுவதும் காதலரின் நினைவில் களிப்பாக இருந்தாலும், மாலைப் பொழுது அளிக்கும் இன்பம் தனிச் சுவை கொண்டதுதான். அவ்வாறு சிறப்பாக இன்பமளிக்க வேண்டுமென்று மாலைப் பொழுது இறைவனிடம் வரம் வாங்கிக் கொண்டு வந்திருக்கும் போலும்!.

சட்டென்று தலையை உலுக்கிக் கொண்டாள் கண்மணி.

'இதென்ன, இப்போது மாலைப் பொழுதைப் பற்றிய நினைவு -கடும் கோடையில் வசந்த காலத்தின் இனிமையைப் பற்றி நினைப்பது போல்? இப்போதுதான் மாலைப் பொழுது என்ற ஒன்று வருவதே இல்லையே!

மாலைப் பொழுதைப் பார்த்தே மாதங்கள் பல ஆகி விட்டன.

அவள் மணவன் அவளைப் பிரிந்து வெளியூர் செல்வதற்கு முதல் நாள் அவளுடன் இனிமையாகப் பேசிக் கொண்டிருந்தானே, அந்த நாளுக்குப் பிறகு அவள் மாலைப் பொழுதையே பார்க்கவில்லேயே!

"கண்மணி. பொழுது சாஞ்சுடுச்சு பாரு. விளக்கேத்தி வை!"

உள்ளிருந்து அம்மாவின் குரல் கேட்டது.

இல்லை இது மாலைப் பொழுதல்ல. அம்மா தவறாகக் கூறுகிறாள். தினமும் எனக்கு அதிகத் துன்பத்தைக் கொடுக்கும் இந்தப் பொழுதை மாலை என்று எப்படிக் கூற முடியும்?

நான் மட்டுமா? என்போல் காதலனைப் பிரிந்து வாழும் என் தோழிகளும் இந்தப் பொழுதைத் தங்கள் உயிரைக் கொடிக்கும் கொடிய பொழுது என்றுதானே கூறுகிறர்கள்?

என் கணவர் என்னை விட்டுப் பிரிந்து சென்றபோது மாலைப் பொழுதும் அவருடன் சென்று விட்டது. இனி அவர் திரும்பி வரும்போதுதான் மாலையும் வரும்.

இது மாலை அல்ல, மாலை என்ற வேடத்தில் வந்து என்னைத் துன்புறுத்தும் பொல்லாப் பொழுது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1221
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.

பொருள்:
பொழுதே! நீ மாலைக் காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கின்றாய்!.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...