'எப்போது தூங்கினேன்?' என்ற கேள்வி அவளுள் எழுந்தது. அதைத் தொடர்ந்து, 'இப்போது நான் விழித்துக் கொண்டிருக்கிறேனா?' என்ற கேள்வியும் வந்தது.
தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டாள் மதுவந்தி. வலித்தது. 'அப்படியானால், விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன்!'
'ஒருவேளை, இந்தக் கிள்ளிக் கொள்வது, வலியை உணர்வது எல்லாமே தூக்கத்தில் வரும் கனவில் நிகழ்வதாக இருந்தால்...?'
மதுவந்தி எழுந்து, நடந்து வாசலுக்கு வந்தாள்.
'ஏன் எல்லாம் மங்கலாகத் தெரிகின்றன?
ஒருவேளை, தூக்கத்தில் தெரியும் காட்சிகள் என்பதால்தான் எல்லாம் மங்கலாகத் தெரிகின்றனவோ?'
வாசல் திண்ணையில் அம்மா அமர்ந்திருந்தாள்.
"தூங்கி எழுந்தியா? ராத்திரி முழுக்க தூங்காம, மத்தியானம் உன்னை அறியாமலேயே தூங்கிட்டு, சாயந்திரம் எழுந்து வர! பகல்ல சரியா சாப்பிடக் கூட இல்ல. இரு. உனக்குச் சாப்பிட ஏதாவது எடுத்துக்கிட்டு வரேன்!" என்று கூறியபடியே உள்ளே போனாள் அவள் அம்மா.
அவளைக் கடந்து போனபோது, "உன் புருஷன் ஊருக்குப் போனதிலேந்து கண்ணெல்லாம் மங்கிப் போய் சோர்வாவே இருக்கே! அவன் எப்ப திரும்பி வரப் போறானோ, நீ எப்ப பழையபடி ஆகப் போறியோ?" என்று முணுமுணுத்துக் கொண்டே போனாள் அம்மா.
அம்மா சொன்ன பிறகுதான், அது மாலை நேரம் என்பது மதுவந்திக்குப் புரிந்தது.
'ஓ, இது மாலை நேரமா? அதுதான் இப்படி மங்கலாய் இருக்கிறாயா? நீ பகலைச் சேர்ந்தவளா, அல்லது இரவைச் சேர்ந்தவளா? பாவம், அது தெரியாமல்தானே நீ இப்படி மயங்கி நிற்கிறாய்? ஏன் இந்த மயக்கம்? உன் காதலனும் என் காதலனைப் போல் கொடியவனோ? உன்னைத் தனியே விட்டு விட்டுப் போய் விட்டானோ? அதனால்தான், நீயும் என்னைப் போல் கண் பார்வை மங்கி நிற்கிறாயோ?'
"மது, உள்ளே வா! பலகாரம் எடுத்து வச்சிருகேன்!"
உள்ளிருந்து அம்மாவின் குரல் கேட்டது.
'அம்மாவின் குரல் கேட்பது கனவிலா அல்லது நனவிலா?'
கற்பியல்
பொழுது கண்டிரங்கல்
பொருள்:
பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ?
No comments:
Post a Comment